Search This Blog

20.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை -ரொமேனியா-ருவாண்டா


ரொமேனியா

துருக்கியின் ஆளுகைக்கு ஆட்பட்டிருந்த ரொமேனியா 1877 மே மாதத்தில் தனது

விடுதலையைப் பிரகடனப்படுத்தியது. 1881 மார்ச் மாதத்தில் ரொமேனிய அரசு அறிவிக்கப்பட்டது. மன்னராட்சி நடைபெற்று வந்தது.

1930இல் பாசிசக் கொள்கையுடைய இயக்கமான இரும்புக் காவலர்கள் இயக்கம் ரொமேனியாவில் எழுந்தது. 1938இல் மன்னர் இரண்டாம் கரோல் அரச சர்வாதிகாரத்தை அமல்படுத்தினார். இரண்டாம் உலகப் போரின் போது ரொமேனியா அச்சு நாடுகளுடன் சேர்ந்து கொண்டது. 1940இல் சோவியத் மீது நடந்த படையெடுப்பில் பங்கெடுத்தது.

1944இல் சோவியத் நாட்டின் செஞ்சேனை ரொமேனியாவின் மீது தாக்குதலைத் தொடுத்தது. அதனைத் தோற்கடித்துப் புதிய அரசை நிறுவி அதற்குத் தனது ஆதரவை அளித்தது. 1947இல் ரொமேனிய மக்கள் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1865இல் நிக்கோலஸ் சியாசெஸ்கு என்பவர் பொது உடைமைக் கட்சித் தலைவரானார். சோவியத் நாட்டின் நிலைப்பாட்டிற்கு மாறான அயலுறவுக் கொள்கையை அவர் கடைப்பிடித்தார். 1968இல் செக்கோஸ்லேவேகியா நாட்டின் மீது சோவியத் நாடு படையெடுத்த செயலை ஏற்காமல் கண்டித்தார். இதன் விளைவாக மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற நிலையை ரொமேனியாவுக்கு 1975இல் அமெரிக்கா அளித்தது. எனினும் நாளடைவில் சியாகெஸ்குவின் ஆட்சி கடுமையான போலீஸ் ராஜ்யமாக விரைவில் உருவெடுத்தது.

நாட்டில் உருவெடுத்த புரட்சியின் விளைவாக, சியா செஸ்குவும் அவரின் மனைவியும் கைது செய்யப் பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்தது. 1989 கிறிஸ்துமஸ் நாளில் அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.

பொது உடைமைக் கொள்கையை எதிர்த்தவர்கள் தேசிய சீரமைப்பு முனையம் என்கிற இயக்கத்தைத் தொடங்கி நாட்டை வழிநடத்தத் தொடங்கினர். இயன் இலியஸ்கு என்பவர் இதன் தலைவரானார்.

தென்கிழக்கு அய்ரோப்பியப் பகுதியில், கருங்கடலின் அருகில் பல்கேரியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 2 லட்சத்து 37 ஆயிரத்து 500 சதுர கி.மீ. இதன் மக்கள் தொகை 2 கோடியே 23 லட்சம் ஆகும்.

பல்வேறு கிழக்கிந்திய பழமைவாதப் பிரிவுக் கிறித்துவத்தைச் சேர்ந்தவர்கள் 87 விழுக்காடு உள்ளனர். புரொடஸ்டன்ட், கத்தோலிக்கப் பிரிவினர் மீதிப்பேர். ரொமேனியன் மொழிதான் ஆட்சி மொழி. ஜெர்மன் மொழியும் ஹங்கேரியன் மொழியும் பேசப் படுகின்றன. 99 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்.

குடியரசு நாடான ரொமேனியாவுக்கு அதிபரும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மக்களில் 25 விழுக்காடுப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 7 விழுக்காட்டுப் பேர் வேலை கிட்டாதோர்.

ருவாண்டா


ஜெர்மனி நாடு ஆப்ரிகாவின் மத்தியப் பகுதியைக் கைப்பற்றி ஜெர்மனி கிழக்கு ஆப்ரிக்கா எனும் குடியேற்ற நாட்டை 1890இல் நிறுவியது. 1916இல் பெல்ஜியம் நாடு இதனைக் கைப்பற்றியது. நாட்டை டுட்சி அரசர்கள் மூலம் பெல்ஜியம் மறைமுகமாக ஆண்டு வந்தது. 1962இல் ருவாண்டா விடுதலை அடைந்தது.

புருண்டி நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் தொடர்பாக 1988இல் 50 ஆயிரம் ஹுடு இன மக்கள் ருவாண்டாவுக்குத் தப்பியோடி வந்தனர். 1994 ஏப்ரல் மாதத்தில் ருவாண்டா, புருண்டி நாடுகளின் அதிபர்கள் பயணம் செய்த வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டு அதிபர்கள் இருவருமே கொல்லப் பட்டனர். தொடர்ந்து டுட்சி மக்களை ஹுடு இன ராணுவம் தாக்கத் தொடங்கியது. விளைவாக இரு தரப்பிலும் 8 லட்சம் பேர் 100 நாள்களில் கொன்று குவிக்கப்பட்டனர்.

2001 டிசம்பரில் ருவாண்டா நாடு தனக்குப் புதிய கொடியையும் நாட்டுப் பாடலையும் வடிவமைத்துக் கொண்டது. 2002 ஜூன் மாதத்தில் ருவாண்டா மீதும் அதன் கூட்டு நாடுகள் மீதும் சர்வதேச நீதிமன்றத்தில் காங்கோ ஜனநாயகக் குடியரசு வழக்கு தொடர்ந்தது. மனித உரிமைகள் மீறலுக்காகவும், இனப்படு கொலைகளுக்காகவும், ஆயுதந்தாங்கிய அத்து மீறலுக்கும் வழக்கு தொடரப்பட்டது.

2003இல் நடத்தப்பட்ட நாடாளுமன்ற அதிபர் தேர்தல்களில் பால் ககமா என்பவர் பெரும் வெற்றியைப் பெற்றார். அவர்தான் ருவாண்டா, புருண்டி நாடுகளின் அதிபர்கள் பயணித்த வானூர்தியைச் சுட்டு வீழ்த்த ஆணையிட்டார் என்பதை பிரெஞ்ச் நாட்டின் அறிக்கை முடிவு செய்தது.

மத்திய ஆப்ரிக்காவில் காங்கோ நாட்டுக்குக் கிழக்கேயுள்ள இந்நாட்டின் பரப்பு 26 ஆயிரத்து 338 சதுர கி.மீ. மக்கள் தொகை 87 லட்சம். மக்களில் 56 விழுக்காடு ரோமன் கத்தோலிக்-கர்கள். புரொட்டஸ்டன்ட்கள் 26 விழுக்காடு. முசுலிம்கள் 5 விழுக்காடு. அட்வென்ட் கிறித்துவர்கள் 11 விழுக்காடு.

கிளியர்வாண்டா எனும் மொழிதான் ஆட்சி மொழி. பிரெஞ்ச், இங்கிலீஷ் ஆகிய மொழிகளும் ஆட்சி மொழிகள். 70 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர். 60 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். நாட்டில் இருப்புப் பாதையே கிடையாது.

1-.7.-1962இல் விடுதலை நாள் கொண்டாடும் இந்நாட்டிற்குக் குடியரசுத் தலைவரும் பிரதமரும் உண்டு.

--------------------"விடுதலை" 19-7-2009

0 comments: