Search This Blog

19.7.09

பெரியார்-அண்ணா-கலைஞர்-வீரமணி





கலைஞர் எந்தக் கொள்கையைப் பின்பற்றி வருகிறாரோ, அந்தக் கொள்கையை மக்களிடம் பரப்புவதுதான் அவருக்குச் செய்யும் சிறப்பு!

செங்கோட்டையில் கலைஞருக்குத் தமிழர் தலைவர் சூட்டிய புகழாரம்


தந்தை பெரியார் அவர்கள் தன் வாழ்க்கையையே தமிழனத்திற்கு ஒப்படைத்தார்.கலைஞர் அவர்கள் எந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறாரோ, அந்தக் கொள்கையை மக்கள் மத்தியிலே பரப்புவதுதான் அவருடைய பிறந்த நாளை ஒட்டி அவருக்கு நாம் செய்யும் சிறப்பு என்று கூறி விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

குற்றாலத்திற்கு அருகிலுள்ள செங்கோட்டையில் 19-6-2009 அன்று கலைஞரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:

கலைஞரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள்

சிறப்பு வாய்ந்த நம்முடைய இனமானத் தலைவர், திராவிடர் இனத்தின் பகைவெல்லும் இராவணன் என்ற பெருமைக்குரிய நம்முடைய அருமை மானமிகு, மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய 86 ஆம் பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பான அரியதோர் கொள்கை விழாவாகக் கலைஞர் தமிழ்ச் சங்க நிருவாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தனிச்சிறப்பு என்னவென்று சொன்னால் நாங்கள் எல்லாம் பேசுவது, கலைஞருடைய தொண்டறத்தைப் பற்றி எடுத்துச்சொல்வது, சாதனைச் சரித்திரத்தை எல்லாம் விரித்துச் சொல்வது என்பதை எல்லாம்விட, இந்த நிகழ்ச்சிக்கே ஒரு மகுடம் சூட்டியதைப்போல சிறப்பான அமைப்பு நம்முடைய பழைய தோழர்கள் இந்த இயக்கத்திற்காக அடிநாளிலே உழைத்தவர்கள் அவர்களை எல்லாம் அன்று இளைஞராக இருந்து இன்று முதியவர்களாக இருக்கக்கூடிய அவர்களை எல்லாம் இங்கே அழைத்து மேடையில் சிறப்புச் செய்த அந்தப் பெருமையிருக்கிறதே அதுதான் ஒரு தனிச்சிறப்பு.

தியாகச் செம்மல்களுக்கு

மற்றவர்கள் எல்லாம் பின்பற்ற வேண்டிய ஒரு அருமையான முறை என்று சொல்லக்கூடிய வகையிலே கலைஞர் அவர்களுடைய பெயராலே அந்த தன்னலம் மறுத்த தொண்டறத் தியாகச் செம்மல்களுக்கு இங்கே சிறப்பு செய்திருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். அது மட்டுமல்ல இரட்டைக்குழல் துப்பாக்கி என்றால் அது எப்படி ஒலிக்க வேண்டும் என்பதற்கு அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி என்பதிலே எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகின்றது.

குற்றாலத்திற்கு வரும்பொழுது என் நினைவில்...

நான் இந்தப் பகுதிக்கு குற்றாலம் பயிற்சி முகாமுக்கு வரும்பொழுதெல்லாம் நினைக்கக்கூடிய இருவரைத் தவறாமல் சந்திப்போம். இன்றைக்கும் எங்களுடைய நினைவிலே இருந்து நீங்காதவர்கள்.

ஒருவர் நம்முடைய மேநாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து என்றைக்கும் அமைதியின் வடிவமாகத் திகழ்ந்து கொண்டிருந்த நம்முடைய அருமைச் சகோதரர் கதிரவன் அவர்கள். அவர்கள் இன்றைக்கு நம்-டையே உருவமாக இல்லை.

உணர்வாக இருக்கிறார். ஆனால் அவருடைய இடத்தை காலியாக வைக்காமல், அந்தப் பணியைச் செய்ய நானிருக்கிறேன் என்று சொல்லி அவருடைய வாழ்விணையர் இங்கே வந்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த ஆறுதலை, பெரிய தேறுதலைத் தருகின்றது.

குற்றாலம் பயிற்சி முகாம் இந்த ஆண்டு நடப்பது 32ஆம் ஆண்டு. இந்த 32 ஆண்டு காலத்திலே பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெறுகின்ற காலத்தில் எல்லாம் தொடர்ந்து வந்து அதிலே பயிற்சியாளராக இல்லாவிட்டாலும், ஒரு வழிகாட்டியைப் போல ஒரு பாதுகாவலரைப் போல இருப்பவர் மதிமுகன் அவர்கள் ஆவார்கள்.

கோதண்டராமன் என்பது அவருடைய இயற்பெயராக இருந்தாலும்கூட, அவர்கள் எங்களுடைய முகாமிற்கெல்லாம் வருவார்கள்.

திராவிடர் இயக்கத்தினுடைய முன்னோடிகள் அவர்கள். நிறையப் படிப்பார்கள். விடுதலை, உண்மை இவைகளிலே எழுதுவார்கள்.

அப்படிப்பட்ட அந்த இருவரையும் நான் நினைத்துக் கொண்டு இந்த மேடையிலே அமர்ந்திருந்தேன்.

அதற்கு நாளைய நிகழ்ச்சியாக இங்கே பல்வேறு நிகழ்வுகளை எல்லாம் எடுத்துத் தெளிவாகச் சொன்னார்கள். குறிப்பாக அவர்களுடைய தொண்டிற்கு வீரவணக்கம் செலுத்தி என்னுடைய உரையை நான் இங்கே தொடங்குகின்றேன்.

பொதுவாக இந்த நிகழ்ச்சியிலே கலைஞர் அவர்களுக்கு சிறப்பு செய்தல், அவருடைய பிறந்த நாள் விழாவைப் பொருத்தமாகக் கொண்டாடுவது என்று சொன்னால் அதை நம்முடைய செயல்வீரர் சாட்டையடி சக்திவேல் அவர்கள் மிக அருமையாகத் திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள்.

இந்த வட்டாரத்தில் யார் யாரெல்லாம் பாடுபட்டார்களோ? இந்த வட்டாரத்திலே யார் யாரெல்லாம் இயக்கத்திற்குப் பாடுபட்டார்களோ? யார் யாரெல்லாம் இளமைக் காலத்திலே தங்களுடைய உழைப்பைத் தந்து இன்றைக்கு முதுமையிலே இருக்கிறார்களோ? அவர்களை எல்லாம் அடையாளம் கண்டு, அவர்களுடைய தொண்டுக்கு நல்ல அளவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்குச் சிறப்பு செய்கின்ற இந்தப் பணியை செய்திருப்பது மிக, மிகப் பாராட்டத் தகுந்தது. மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. இது எப்படி என்று சொன்னால், வேர்களை மறக்காத விழுதுகள் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் இது. இந்த இயக்கத்திற்கு அவர்கள் வேர்கள். அப்படிப்பட்ட வேர்கள் சரியாக இருந்தால்தான் அதை விழுதுகள் புரிந்து கொண்டால்தான் வேர்களுக்கும் நல்லது. விழுதுகளுக்கும் சிறப்பானது. அந்த வகையிலே பழுதில்லாத விழுதாக நம்முடைய விழுதுகள் இருக்கின்றன. சக்திவேல் போன்றவர்கள் இங்கு இருக்கின்றார்கள். இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்ற பொழுது உள்ளபடியே நம்முடைய கொள்கை ஆயிரம் காலத்துப் பயிராக இருக்கும் என்று யாருக்கும் அய்யம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

கலைஞர் கொண்டிருக்கின்ற கொள்கையை மக்கள் மத்தியில் விதைக்க...

இன்றைக்கு கலைஞர் அவர்களுடைய 86-ஆம் ஆண்டு பிறந்த நாள் என்ற பெயராலே நாம் இந்த விழாவைக் கொண்டாடுகின்றோம். பொதுவாகப் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது என்பது அவர்களுக்குச் சிறப்புச் செய்வது என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும்கூட, மக்கள் மத்தியிலே அவர்கள் எந்தக் கொள்கையைக் கொண்டிருக்கின்றார்களோ, அதை மக்கள் மத்தியிலே விதைக்க வேண்டும்; பரப்ப வேண்டும்; காக்க வேண்டும். அதுதான் பிறந்தநாள் விழாவினுடைய தத்துவமேகூட. அது ஒரு பிரச்சார நிகழ்ச்சி. எனவே அந்தப் பிரச்சார நிகழ்ச்சியிலே கலைஞர் அவர்களுடைய சிறப்புகள் என்ன? அவர்களுடைய சாதனைகள் என்ன? அவர்களுடைய கொள்கையின் வீச்சு என்ன? தாக்கம் என்ன?

அதனாலே பலன் அடைந்திருக்கின்ற சமுதாயம் காட்ட வேண்டிய நன்றி எப்படிப்பட்டது? என்பதை எல்லாம் நினைவூட்ட இந்த நிகழ்ச்சி பயன்படக்கூடிய ஓர் அற்புதமான நிகழ்ச்சி-யாகும்.

பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுளுக்கு விழா!

தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள். பிறப்பும், இறப்பும் இல்லை என்று சொன்ன கடவுளுக்கேகூட பிறந்த நாள் விழா கொண்டாடுவது நம்முடைய நாட்டில் வழமை. ஏனென்று சொன்னால் அதையே ஒரு பிரச்சாரத்திற்காகத்தான் பயன்படுத்துகின்றார்கள்.

அப்படியிருக்கும்பொழுது பிறந்து, நம் கண் முன்னாலேயே சாதனைகள் செய்து சரித்திரம் படைக்கக்கூடியவர்களுக்குப் பிறந்தநாள் விழாக்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொண்ட பல பிறந்தநாள் விழாக்களில்கூட, எடுத்துச் சொல்வார்கள்.

அந்த வகையிலே பார்க்கும்பொழுது நம்முடைய கலைஞர் அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நானிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறதென்று சொன்னால் அதனால் இனிமேல் அவருக்குப் புதுப்பெருமை கிடையாது.

ஆனால், அதே நேரத்திலே நாமும் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றோம். இந்த இடத்திலே நம்முடைய இயக்கம் எப்படிப்பட்ட சோதனைகளை தாண்டியிருக்கிறது. எப்படிப்பட்ட நெருப்பாற்றில் நீந்தியிருக்கிறது? எப்படிப்பட்ட துன்ப இயலையெல்லாம் துவளாமல் சந்தித்திருக்கிறது? என்பதை எடுத்துக் காட்டுவதற்கு கலைஞர் அவர்களுடைய பிறந்த நாள் விழா ஓர் அற்புதமான இயக்கத்தின் கொள்கை பரப்பல் என்று சொல்லக்கூடிய நிகழ்ச்சியாகும் இது.

அவர்களைப் பொறுத்த வரையிலே கலைஞர் அவர்களுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதை தந்தை பெரியாரும், அண்ணாவுமே மிக அருமையாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

மூன்றாவது தலைமுறை என்று இங்கே எடுத்துச் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஒருவரை எப்படி அடையாளம் கண்டார்கள் நம்முடைய தலைவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் என்பதை அருள் கூர்ந்து நாம் நினைவூட்டிக் கொண்டாலே அவருடைய சிறப்புக்கு நாம் எவ்வளவு பெரிய பெருமைகளை சேர்த்துச் சொன்னால்கூட இதற்குப் பிறகுதான் வரமுடியுமே தவிர இதற்கு முன்னோடியாகவோ, இதைத் தாண்டியோ வரமுடியாது.

கலைஞருக்கு பெரியார் பாராட்டு!

தந்தை பெரியார் அவர்கள் பேசுகிறார். கலைஞர் அவர்களைப் பற்றிச் சொல்கின்றார். அய்யா அவர்கள் வாழ்ந்தபொழுது கலைஞர் முதலமைச்சராக இருக்கின்றார். அவருடைய பணிகளைப் பாதுகாக்கக்கூடிய அளவிலே தந்தை பெரியார் இருக்கிறார். அப்படியிருக்கும்பொழுது எழுதுகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னாலே தந்தை பெரியார் எழுதினார். தந்தை பெரியார் அவர்கள் 1973லே மறைந்தார். இன்றைக்கு கணக்குப் போட்டுப் பாருங்கள். அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்திலே கலைஞருடைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற நேரத்திலே வாழ்த்துச் செய்தியாக அவர்கள் கொடுத்த செய்தியிலே மிக முக்கியமான ஒரு பகுதியைச் சுட்டிகாட்டினாலே எப்படித் தலைவர் அவர்களுடைய தந்தை பெரியார் அவர்களுடைய ஈரோட்டு குருகுலத்திலே அவர்கள் எல்லாம் சேர்ந்து படித்தார்களே, அந்த குருகுலத்திலேயே அவர்களுடைய பாராட்டை அவர்கள் எவ்வளவு அற்புதமாகப் பெறுகிறார்கள், பெரியார், அவர்களை எப்படிக் கணித்திருக்கின்றார்கள் என்பதை இதிலிருந்தே நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெறலாம். பெரியார் பேசுகிறார், கேட்போம்.

ஆட்சியினை ஆதரிக்க வேண்டும்.

இன்றைய நிலையில் வேறு யார் இருந்தாலும்கூட, இவ்வளவு திறமையாக எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டு காரியமாற்றி வரமுடியாது. இப்படிப்பட்ட முதல்வரை நாம் பெற்றிருப்பது ஒரு நல்ல வாய்ப்பு என்று மக்கள் உணர வேண்டும். இவ்வளவு அரிய, பெரிய காரியங்களை எல்லாம் நமது நலன் கருதிச் செய்கின்ற இந்த ஆட்சியினை ஆதரிக்க வேண்டும்.

இதுதான் பெரியாரின் கட்டளை. இன்றைக்கும் கலைஞருக்கு எதிர்ப்புதான்.

கலைஞருடைய சிறப்பு என்ன? அவரை ஒருமுறை கேட்டார்கள். அதாவது நெருக்கடி காலம் இருந்த நேரத்தில் கேட்டார்கள்.

நான் ஈரோடு போனவன் - நீரோடு போகவேண்டிய அவசியமில்லை!

தேசிய நீரோட்டத்தில் நீங்கள் கலக்கவில்லை என்று சொல்கின்றார்களே என்று கேட்டபொழுது துணிந்து பட்டென்று கலைஞர் பதில் சொன்னார்.

பொதுவாக ஈரோட்டுக் குருகுலத்திலே படித்தவர்களுக்கு யார் கேள்வி கேட்டாலும் உடனே பதில் சொல்வார்கள். அதுவும் பளிச்சென்றிருக்கும். அப்படிப்பட்ட நிலையிலே கலைஞர் அவர்கள் அந்தச் செய்தியாளர்களிடம் சொன்னார்.

நான் ஈரோடு போனவன். எனவே, நீரோடு போகவேண்டிய அவசியமில்லை எனக்கு. எதிர்-நீச்சல்தான் எனக்குப் பழக்கம் என்று தெளிவகச் சொன்னார். இப்படி எதிர்நீச்சல் அடிக்கக்கூடிய ஆற்றல் அவருக்கு எப்பொழுதும் உண்டு. ஏனென்றால் நீரோடு போவதற்கு யாரும் தேவையில்லை. தூக்கிப்போட்டால் அதில் சேர்ந்து ஓடிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால், எதிர்நீச்சல் போடுபவருக்குத்தான் அதிகச் சிரமம் உண்டு. கரை எது? இலக்கு எது? எங்கே போய்ச் சேரவேண்டும் என்று சொல்கின்ற நேரத்திலே அன்று அவர்கள் தொடங்கிய அந்தக் காலகட்டத்திலேயிருந்து அண்மைக்கால தேர்தல் வரையிலே அந்த எதிர் நீச்சலில்தான் இருக்கிறார்கள். இன்னமும் அவருக்குப் பத்திரிகைகளினுடைய துணை உண்டா? கிடையாது.

ஆனாலும் மக்கள் மத்தியிலே அவரைக் கொஞ்சம்கூட அசைக்க முடியாத அளவிற்கு அவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுடைய ஆற்றல் அவர்களுடைய மதியூகம் அவர்களுடைய சிறப்பு இடையறாத உழைப்பு 86 வயதிலே அவர்கள் 26 வயது இளைஞர்கூட வெட்கப்படக்கூடிய அளவிற்கு உழைத்துக் கொண்டே யிருப்பார்கள்.

ஒரே நேரத்தில் 10 பணிகள்

அது மட்டுமல்ல! கொஞ்ச நேரத்திலே அவர்களிடம் அமர்ந்து பேசுகிற நேரத்திலேகூட அவர்கள் அஷ்டாவதானமாக செயல்படுவார்கள். ஒரே நேரத்திலே பத்து பணிகளை ஆற்றக்கூடியவர்.

அவர்கள் பத்துப் பணிகளைச் செய்வார். ஒருவருக்கு ஒரு கருத்தைச் சொல்வார்கள். அடுத்து ஒருவரிடம் தொலைபேசியில் பேசுவார். அடுத்து இன்னொருவரிடத்திலே இன்னொரு கருத்தைச் சொல்வார்கள்.

அப்படிப்பட்ட நிலையிலே அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், கலைஞர் அவர்களால் உருவாக்கப்படக் கூடிய ஆட்சியை ஆதரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொல்கிறார்.

அதுகூட அந்த ஆட்சியை எதற்காக ஆதரிக்க வேண்டும்? இவ்வளவு அரிய, பெரிய காரியங்களை எல்லாம் நமது நலன் கருதி (நம்முடைய இனத்தின் நலன் கருதி, நம்முடைய மக்களின் நலன் கருதி) அவருடைய ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவருக்காக அல்ல, அவரது கட்சிக்காக அல்ல.

இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காக, மான வாழ்விற்காக என்று சொல்லுகின்றார். இதை எல்லாம் தெளிவாக நினைத்துப் பார்க்க வேண்டும்
.

அடுத்தபடியாக அண்ணா அவர்களுடைய பார்வையிலே கலைஞர் அவர்கள் எப்படி கணிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

தம்பி கருணாநிதியினுடைய ஆற்றல்


அண்ணா அவர்கள் பேசுகிறார்: தம்பி கருணாநிதியினுடைய ஆற்றல் காரணமாகப் பெற்ற வெற்றிகள் பற்றியும் வெற்றிகள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்பட்டன என்பன பற்றியும் அந்த ஆற்றலும், வெற்றியும் நாட்டுக்கு என்றும் நல்ல முறையில் பயன்படும் என்பது பற்றியும் யாருக்கும் அய்யப்பாடில்லை.

எவ்வளவு அழகாக அண்ணா அவர்கள் சொல்கின்றார்கள் பாருங்கள். எவ்வளவு பெரிய ஆற்றல்? அந்த ஆற்றல் காரணமாகப் பெற்ற வெற்றி அந்த வெற்றிகள் காரணமாக ஏற்பட்ட நாட்டு முன்னேற்றம். இந்தச் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியது. இப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவரைப் பெற்றிருப்பது நமக்குரிய மிகப்பெரிய வாய்ப்பு!

- தொடரும்....."விடுதலை" 18-7-2009

0 comments: