Search This Blog
22.7.09
திருவள்ளுவரும்-சர்வக்ஞரும்
இத்தாலிக்கு தாந்தே, ஜப்பானுக்கு ஹைக்கூ, ஆங்கிலத்துக்கு எஸ்ரா பவுண்ட், சமஸ்கிருதத்துக்கு பர்த்ரூ ஹரி, இந்திக்கு கபீர்தாஸ், மராத்திக்கு ராமதாஸ் என்பதுபோல பண்டைய செய்யுள் வடிவில் மக்களுக்குப் பொதுவான அறநெறிக் கருத்துகளைத் தமிழுக்குத் தந்து வான்புகழ் கொண்டவர் வள்ளுவர் என்றால் கன்னட மொழியில் இந்நிலையில் வைத்துப் போற்றப்படுபவர் சர்வக்ஞர்.
கர்நாடக மாநிலம் ஹிரே கெடூரு மாவட்டத்தில் உள்ள மடகமாசுரு கிராமத்தில் பிறந்தவர் சர்வக்ஞர் என்பது பொதுவான நம்பிக்கை. இது பற்றி உறுதியான கருத்து இன்னும் உருவாகவில்லை. இவரது பிறப்பிடம் தொடர்பாக மாறுபட்ட கருத்து இருப்பதால் வரலாற்றறிஞர்களும் மொழியறிஞர்களும் விவாதித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு மாசுருவில் சர்வக்ஞர் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி கேட்டுக் கொண்டார். திருவள்ளுவரின் பிறப்பிடம் பற்றியும் விவாதங்கள் நீடிப்பதை அறிவோம்.
திருவள்ளுவர் வாழ்ந்த காலம் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் அறிஞர்கள் பலரும் கூடி விவாதித்து கி.மு. 31 என இறுதி செய்து தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது. இந்த அடிப்படையிலேயே திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது.
சர்வக்ஞரின் காலம் 16 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி என்று கர்நாடக ஆய்வாளர்கள் எல். பசவராஜு, பேராயர் உத்தங்கி சென்னப்பா, வெளி நாட்டு ஆய்வாளர் இ.பி. ரைஸ் ஆகியோர் கூறுகின்றனர்.
திருவள்ளுவரின் பெற்றோர் யார் என்ற விவரம் இல்லை. ஆனால் இவரது மனைவி வாசுகி என்ற கதை உள்ளது. சர்வக்ஞரின் தந்தை பெயர் சபசவராஜா. இவர் சைவபிராமணர் என்றும் காசிக்குச் சென்று திரும்பும் போது குயவர் சமூகத்தைச் சேர்ந்த மாலி என்ற விதவைப் பெண்ணுடன் உறவு ஏற்பட்டு இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சர்வக்ஞர் என்றும் கூறுவர். இவரது இயற்பெயர் புஷ்பதத்தா என்று கூறப்படுகிறது. செய்யுள்கள் எழுதும் காலத்தில் சர்வக்ஞர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அனைத்தும் அறிந்த அறிஞர் என்பது இதற்குப் பொருளாகும்.
சிறுவயதிலிருந்தே கவிபாடும் திறனை இவர் பெற்றிருந்ததாகவும் உண்மை ஒன்றையே எழுதுவது என்பதில் இவர் தீர்மானமாக இருந்தார் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எந்த இடத்திலும் தங்கியிராமல் வாழ்நாள் முழுவதும் ஊர் ஊராச் சுற்றித் திரிந்து மக்களோடு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இடுப்பில் ஒரு துணியும், தோளில் ஒரு துணியும் நெற்றியில் திருநீறு பட்டையும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும் கையில் நீண்ட கம்பும், மறுகையில் உணவுப் பாத்திரமும், கால்களில் பாத அணிகளும் என்பதுதான் இவரது உருவத் தோற்றம்.
எந்தச் சமயத்தையும் சாராதவர் என்பதாகத் திருவள்ளுவரின் கருத்துகள் இருந்தாலும், எல்லா சமயத்தினரும் தங்களுக்குரியவர் திருவள்ளுவர் என்று கூறினாலும் இவரது நெற்றியிலும் திருநீறு பூசப்பட்டு விட்டதை நாம் அறிவோம். திருவள்ளுவர் 1330 அருங்குறட்பாக்களை எழுதினார் என்று அறுதி யிடப்பட்டுள்ளது.
சர்வக்ஞர் எழுதிய பாக்களின் எண்ணிக்கை 77,00,77,070 என்று நம்பப்படுகிறது. இவற்றுள் சில ஆயிரம் பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதுவரை 10 தொகுதிகள் பதிக்கப்பட்டுள்ளன. வடக்கு கர்நாடகத்தில் மக்கள் வாய்மொழியாக சர்வக்ஞரின் பாக்களைப் பாடுவதாகக் கூறப்படுவதால் மேலும் பல பாடல்களை தொகுக்கும் பணி நடைபெற்று வருகிறதாம்.
ஏழு சீர்களைக் கொண்ட ஒன்றே முக்கால் அடி குறள் வெண்பாக்களால் பலரும் வியக்கும் வண்ணமும் ஏற்கும் வண்ணமும் திருக்குறளை யாத்தார் திருவள்ளுவர். சர்வக்ஞரின் செய்யுள்களும் நீண்டு நெடிதானவை அல்ல. ஒவ்-வொன்றும் மூன்று அடிகளை மட்டுமே கொண்டதாகும். இதனால் இவரது பாக்கள் த்ரிபடி என்று கூறப்படுகிறது. முதல் வரியில் 20 மாத்திரைகளும் (எழுத்துக்களின் ஒலிஅளவு), 2 ஆவது வரியில் 18 மாத்திரைகளும், 3 ஆவது வரியில் 13 மாத்திரைகளும் கொண்டிருக்கும். ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் சர்வக்ஞர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக,
ஹசிவிலா துணாபேடா ஹசிது மாத்ரபேடா
பிசிபேடா தாங்குவால் வுபேடா வித்யனா
காசனியேபேடா சர்வக்ஞா
என்ற வடிவில் இருக்கும் இந்தப் பாடலின் பொருள்.
பசியில்லாக்கால் உண்ணாதே; பசியை ஒதுக்கியும் விடாதே
அதிக சூடு, அதிக குளிர்ச்சி, நாட்பட்ட உணவை உண்ணாதே
மருத்துவரின் தயவிலேயே வாழாதே சர்வக்ஞா
என்பதாகும்.
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு
என மருந்து அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதோடு சர்வக்ஞரின் கருத்து ஒத்திருப்பதைக் காணலாம்.
சர்வக்ஞரின் பாவடிவம் இத்தாலிக் கவிஞர் தாந்தேயின் டெர்சாரீமா என்ற பாடல் வடிவோடு ஒத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
சர்வக்ஞரின் பாடல்களில் திருவள்ளுவரின் திருக்குறள் போலவே தனிநபர் முதல் சமூகம் வரையிலும், வேளாண்மை முதல் வானியல் வரையிலும், தெய்விகம் முதல் சமூகவியல் வரையிலும், மெய்யியல் முதல் அறிவியல் வரையிலும் அனைத்தும் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்று வள்ளுவர் கூறுவது போலவே சர்வக்ஞரும் பிறப்பால் அனைவரும் சமம் என்கிறார். எல்லா மனிதர்களும் 7 தாதுக்கள் 5 பூதங்களின் கூட்டுறவால் பிறக்கிறார்கள். ஒரே பூமியை ஒரே நீரை, ஒரே நெருப்பை எல்லோருமே பயன்படுத்துகிறோம். பிறகு ஏன் ஜாதி வேறுபாடு என்பது இவரது கேள்வி. பிறப்பு ஜாதியைத் தீர்மானிக்கக்கூடாது. அவரவர் ஒழுக்க நெறிகளே மனிதர்களின் ஏற்றத்தாழ்வை முடிவு செய்யவேண்டும் என்கிறார் இவர்.
திருவள்ளுவரைவிட காலத்தால் பிந்தியவர் என்பதால் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் சர்வக்ஞர் பாப்புனைந்துள்ளார். செத்த மாட்டைத் தின்னும் ஹொலேயா (தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவின)வை விட உயிருள்ளவற்றைக் கொன்று தின்னும் மற்றவர்கள் மோசமானவர்கள் என்று எழுதுகிறார்.
உழவு என்ற அதிகாரத்தில் வேளாண்மையின் இன்றியமையாமையை மட்டுமன்றி, அத்தொழிலின் பல நுட்பங்களையும் வள்ளுவர் பதிவு செய்திருப்பார். அதேபோல சர்வக்-ஞரும் வேளாண்மையை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
கோடிகோடி துறைகளில் ஞானம் பெற்றிருந்தாலும், வேளாண்துறை ஞானமே ஆகச் சிறந்ததாகும். அந்த ஞானம் இல்லாமல் போனால் நாடு நலிந்து போகும் என்பது சர்வக்ஞரின் கருத்து.
உடல் நலத்திற்கு உணவே சிறந்த மருந்து என்பதை வள்ளுவர் அழுத்தமாக கூறுவார். இதே போன்ற கருத்துப் பதிவுகள் சர்வக்ஞரின் பாக்களில் நிரம்ப உள்ளன.
பெண்கள் மூலமே இக வாழ்வு சாத்தியம்
பெண்கள் மூலமே பரவாழ்வு சாத்தியம்
பெண்கள் மூலமே அமைதியும் செல்வமும் சாத்தியம்
பெண்களை வேண்டாமென்பார் எவரேனும் உண்டா?
என்பதுபோலப் பல பாடல்களை இயற்றியுள்ள சர்வக்ஞர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அதே சமயம் இவரது காலத்தில் மதக் கருத்துகளும், மூடநம்பிக்கைகளும் பலவிதமான பிற்போக்கு சிந்தனைகளும் பரவலாக சமூகத்தில் பற்றிப் படர்ந்து இருந்தன என்பதால் பெண்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு ஹஸ்தினி (யானை போல் பருத்தவள்), சித்தினி (பூனைக் கண் உடையவள்), சங்கினி (சங்குக் கழுத்துக்காரி), பத்மினி (தாமரை போன்ற அழகுடையவள்) என வகைப்படுத்தும் போக்கும் உள்ளது.
குரு (ஜூபிடர் கோள்) ரிஷப வீட்டுக்குள் சென்றால், நல்ல மழை பொழியும். குரு விருச்சிக வீட்டுக்குச் சென்றால் கடும் பஞ்சம் ஏற்படும், யுத்தம் வரும் என வானியலை சோதிடத்தோடு இணைக்கிற போக்கும் சர்வக்ஞரிடம் உள்ளது.
எல்லா சமயங்களும் வள்ளுவரைத் தங்களுக்கு உரியவர் என்று சொந்தம் கொண்டாடும் வகையில் திருக்குறள் கருத்துகள் அமைந்துள்ளன. ஆனால் சர்வக்ஞர் தாம் சைவ சமயத்தவர் என்பதையும், அதிலும் குறிப்பாக வீரசைவ மரபைச் சேர்ந்தவர் என்பதையும் தெளிவாகப் பாக்களில் பதிவு செய்துள்ளார்.
கி.மு. 31 க்கும் கி.பி. 1600 க்கும் இடைப்பட்ட சுமார் 1700 ஆண்டு கால இடைவெளியில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் கூடுதலான தாக்கங்களும் சர்வக்ஞரிடம் பிரதிபலித்தாலும் கர்நாடக மக்களால் பல துறை அறிஞராகவும் கன்னடமொழியில் கருவூலக் களஞ்சியம்போல் ஏராளமாக கருத்துகளை வழங்கியவராகவும்போற்றி மதிக்கப்படுபவர் சர்வக்ஞர்.
--------------நன்றி: "தீக்கதிர்", 20.7.2009
Labels:
பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment