
நைஜீரியா
14 ஆம் நூற்றாண்டிற்கும் 15 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கானெம் பேரரசு நைஜீரியப் பகுதியைத் தன் ஆளுமைக்குள் வைத்திருந்தது. 13 ஆம் நூற்றாண்டில் இசுலாம் மார்க்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1851 இல் பிரிட்டன் லாகோஸைக் கைப்பற்றியது. நைஜீரியாவின் துறைமுகத்தைப் பிடித்த பிரிட்டிஷார் மெல்ல தம் அதிகாரத்தை விரிவுபடுத்தி முழுப் பரப்பையும் 1886 ஆம் ஆண்டு வாக்கில் தம் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டனர். நைஜீரியக் குடியேற்றப் பாதுகாப்புப் பகுதி என்று பெயரிட்டு வைத்துக் கொண்டனர். உள்ளூர்த் தலைவர்களுடன் ஒத்துழைப்புடன் அவர்களை முன்னிறுத்தி பிரிட்டிஷார் பின்னிருந்து செயல்பட்டு ஆட்சி செலுத்தி வந்தனர்.
1960 இல் நைஜீரியா விடுதலை அடைந்தது.
மத்திய ஆப்ரிகாவில் பெனின் நாட்டுக்கும் கேமரூன் நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கினியா வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள நைஜீரியாவின் நிலப்பரப்பு 9 லட்சத்து 23 ஆயிரத்து 768 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 13 கோடியே 19 லட்சம் ஆகும். மக்களில் பாதிப்பேர் இசுலாமியர்கள். 40 விழுக்காட்டினர் கிறித்துவ மதத்தினர். மீதிப்பேர் பழங்குடிக் கொள்கையினர்.
இங்கிலீஷ் ஆட்சி மொழி. ஆப்ரிக்க மொழிகளான ஹவ்சா, யொருபா, இக்போ போன்றவை பேசப்படுகின்றன. மக்களில் 68 விழுக்காடு படிப்பறிவு பெற்றோர். குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார்.
60 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர். 3 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர்.
வடகொரியா
பொது ஆண்டுக்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோஸோன் பேரரசு நிறுவப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பொது ஆண்டுக்கு 108 ஆண்டுகளுக்கு முன் கொரியாவை சீனா கைப்பற்றிக் கொண்டது. 1392 முதல் 1910 வரையிலும் யி (லு) பேரரச வமிசம் இந்நாட்டை ஆண்டது. கொரியா நாடு முழுவதையும் ஜப்பான் 1910 இல் கைப்பற்றிக் கொண்டது.
இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில் 1945 இல், ஜப்பானின் பிடியில் இருந்து கொரியாவை நேச நாடுகள் விடுவித்தன. கொரியாவின் வடக்குப் பகுதியை சோவியத் யூனியன் தன் கைப்பற்றில் வைத்திருந்தது. தெற்குப் பகுதியை அமெரிக்கா தன் ஆளுகையில் வைத்திருந்தது.
வடகொரியாவின் பொது உடைமைக் கட்சியான கொரிய தொழிலாளர் கட்சி 1946 இல் தொடங்கப்பட்டது. கிம் உல்சுங் போன்ற தலைவர்கள் சோவியத் நாட்டின் ஆதரவுடன் கட்சியின் பொறுப்புக்கு வந்தனர். 1948 இல் சோவியத் படைகள் திரும்பிச் சென்று கொரிய வடபகுதிக்கு விடுதலை கிடைத்தது. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு நாடு உதயமானது. கொரிய நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக ஜுஷே என்கிற தன்நிறைவுக் கொள்கையை வழி காட்டும் நெறியாக கிம்உல்சங் அறிமுகப்படுத்தினார்.
அவரே பிரதமராக 1948 முதல் 1972 வரை இருந்து வந்தார். அதன் பின்னர் 1972 முதல் தாம் இறக்கும் வரை ( 1994 இல்) கொரியக் குடியரசின் குடியரசுத் தலைவராக இருந்து வந்தார்.
1950 இல் கொரியாவின் தென்பகுதி தன் விடுதலையை அறிவித்தது. வடகொரியக் குடியரசு தென் கொரியா மீது படையெடுக்கவே, கொரிய யுத்தம் தொடங்கியது. போர் எந்த விதப் பலனையும் தராத நிலையில் 1953 இல் இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் கொரிய யுத்தத்தில் சுமார் 40 லட்சம் மக்களும் போர்ப் படையினரும் கொல்லப்பட்டனர் எனக் கருதப்படுகிறது.
ஆசியக் கண்டத்தின் கிழக்குப் பகுதியின் கொரிய குடாக்கடலுக்கும் ஜப்பான் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள கொரிய தீபகற்பத்தின் வடபகுதியில் சீனாவையும் தென் பகுதியில் தென் கொரியாவையும் எல்லை நாடுகளாகக் கொண்ட நாடு. இதன் பரப்பளவு 1 லட்சத்து 20 ஆயிரத்து 540 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 2 கோடியே 32 லட்சம்.
மக்கள் அனைவரும் பவுத்தர்கள். 99 விழுக்காடு படித்தவர்கள். 15-.8.1945இல் விடுதலை நாள் கொண்டாடப்படும் இந்நாட்டின் அதிபரும் ஆட்சித் தலைவராக பிரதமரும் உள்ளனர். ஒரு கட்சி ஆட்சி நடக்கும் கம்யூனிச நாடு.
ஓமன்
தற்போது ஓமன் என அழைக்கப்படும் நாட்டில் பொது ஆண்டுக்கு முன்பு 19ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் இடம் பெயர்ந்து வந்து குடியேறினர். 7ஆம் நூற்றாண்டில் நாட்டில் இசுலாம் பரவியது. இபாடி இமாம்கள் எனும் இசுலாமிய மதத் தலைவர்களே, அக்கால வழக்கப்படி ஆட்சி செய்து வந்தனர். இந்நிலை 11 54 ஆம் ஆண்டு வரை நீடித்தது. அதன் பின்னர் அரச வமிசம் உருவாக்கப்பட்டது.
நாட்டின் கடலோரப் பகுதியில் போர்த்துகீசியர் கள் வந்து இறங்கத் தொடங்கி வசித்த காலம் 1507 முதல் 1650 முடிய இருந்தது. 1650இல் அவர்கள் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டனர். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அல்பு செய்த் அரச வமிசமும் உருவாக்கப்பட்டு அவர்களே இதுநாள் வரை ஓமன் நாட்டை ஆண்டு வருகின்றனர்.
இந்த நாட்டில் எண்ணெய் வளம் இருப்பது 1904 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அரேபியத் தீபகற்பத்தின் தென்கோடியில் உள்ள இந்நாட்டின் பரப்பளவு 2 லட்சத்து 12 ஆயிரத்து 460 சதுர கி.மீ.ஆகும். மக்கள் தொகை 31 லட்சத்திற்கும் சற்றுக் கூடுதல்.மக்களில் 75 விழுக்காட்டினர் இபாதி இசுலாமியப் பிரிவைச் சேர்ந்தவர்கள். மீதிப்பேர் சன்னி, ஷியா பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அரபி மொழி ஆட்சி மொழி. 76 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்.
முடியாட்சி முறை அமலில் உள்ள நாடு 15 விழுக்காடுப் பேர்கள் வேலை கிட்டாத மக்கள். நாட்டில் இருப்புப் பாதை கிடையாது.
--------------------"விடுதலை" 13-7-2009
0 comments:
Post a Comment