Search This Blog

26.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சாவோ டோம் மற்றும் பிரின்சிபி-சவூதி அரேபியா




சாவோ டோம் மற்றும் பிரின்சிபி


ஆளே இல்லாத சாவோடோம் மற்றும் பிரின்சிபி தீவுகளில் போர்த்துகீசியர்கள் 15 ஆம் நூற்றாண்டில் குடியேறினர். 16 ஆம் நூற்றாண்டில் தங்கள் நாட்டின் காலனியாக (குடியேற்ற நாடாக) மாற்றிக் கொண்டனர். அந்நாட்டில் போர்த்துகீசியர்கள் எடுத்த முயற்சிகளின் விளைவாக 17ஆம் நூற்றாண்டில் இந்நாடு உலகின் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தி நாடாக வளர்ச்சி பெற்றது. பின்னர் காபி, கோகோ பயிரிடப்பட்டன. 1908இல் சாவோ டோம் பிரின்சிபி தீவுகள் கோகோ உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தைப் பெற்றவை.

1951 இல் இத்தீவுகள் போர்த்துகீசிய நாட்டின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது அந்நாட்டின் கடல் கடந்த மாநிலமாக ஆக்கப்பட்டது. 1975 இல் போர்த்துகல் நாட்டிலிருந்து விடுதலை பெற்றன.

மேற்கு ஆப்ரிக்காவில் கினியா வளைகுடாவில் உள்ள தீவுகளாகும் இவை. நிலநடுக்கோடு (பூமத்திய ரேகை) பகுதியை ஒட்டி கபோன் நாட்டுக்கு மேற்கே உள்ளது. இதன் பரப்பளவு 1001 சதுர கி.மீ. மட்டுமே. மக்கள் தொகை 1 லட்சத்து 94 ஆயிரம். மக்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். பல பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். போர்த்துகல் மொழி பேசுகின்றனர். அதுவே ஆட்சி மொழி. 80 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்.

12-7-1975 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் குடியரசு நாடு. நாட்டின் அதிபராகக் குடியரசுத் தலைவரும் ஆட்சித் தலைவராக பிரதமரும் உள்ளனர்.

கோகோ, கொப்பறை, காபி, பனை எண்ணெய் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது. உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்கிறது. இருப்புப் பாதை கிடையாது. 320 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே சாலை வசதி உள்ளது.

சவூதி அரேபியா

அரேபியத் தீவுக் குறைப் பகுதியில்தான் முகமது நபி இசுலாம் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து உருவாக்கினார். இது நடந்தது 622ஆம் ஆண்டு. அதன் பின்னர் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்து-வதற்கான அதிகாரப் போட்டி பலராலும் மேற்கொள்ளப்பட்டது. 1517இல் ஒட்டோமான் வமிசம் இப்பகுதியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கியது.

1912இல் பிரிட்டன் இப்பகுதிக்குள் நுழைந்து சவூதி அரேபியாவைக் கைப்பற்றிக் கொண்டது. 1927 வரை பிரிட்டிஷாரின் ஆதிக்கம் நீடித்தது. அதன் பின்னர், ஹெஜாஸ் மற்றும் நஜ்ட் அரசுகளின் உரிமையை அங்கீகாரம் செய்தது பிரிட்டிஷ் அரசு. இவ்விரு அரசு களும் ஒருங்கிணைந்து 1932 இல சவூதி அரேபிய அரசை நிறுவிக்கொண்டன.

மத்திய கிழக்குப் பகுதியில் பாரசீக வளைகுடா வுக்கும் செங்கடலுக்கும் இடையில், ஏமன் நாட்டுக்கு வடக்கே உள்ள நாடு சவூதி அரேபியா. மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட தீவுக்குறை (தீபகற்பம்) நாடு. இதன் பரப்பு 19 லட்சத்து 60 ஆயிரத்து 582 சதுர கி.மீ. ஆகும். பெரிதும் மணல் நிறைந்த பாலை நிலங்களைக் கொண்டும், மனிதக் குடியேற்றம் இல்லாமலும் உள்ள நாடு. ஆனால் பெட்ரோல், எரிவாயு, இரும்புத் தாது, தங்கம், செம்பு போன்ற கனிம வளங்கள் ஏராளமாக நிறைந்த பகுதி.

மக்கள் தொகை 2 கோடி 71 லட்சம் . நூற்றுக்கு நூறு இசுலாமியர்கள். அரபி மொழி பேசுபவர்கள். 79 விழுக்காடு மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள். மன்னராட்சி நடக்கும் நாடு. 23-9-1932 இல் இரு மன்னர்களும் இணைந்த நாளையே விடுதலை நாளாகக் கொண்டாடுகின்றனர். இசுலாமிய ஷரியத் சட்டப்படி நீதி நிருவாகம் நடைபெறுகிறது. மன்னர்தான் அதிபராகவும் ஆட்சித் தலைவராகவும் உள்ளார்.

உலகின் எண்ணெய் இருப்பில் 26 விழுக்காடு இந்நாட்டில் உள்ளது. பெட்ரோலை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் நிதியில் 75 விழுக்காடு வருமானம் கிடைக்கிறது. நாட்டில் சுமார் 40 லட்சம் வெளிநாட்டினர் பணி புரிகின்றனர். தனியார் துறை யின் வளர்ச்சிக்குத்தான் முன்னுரிமை. மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு ஆகியவை தனியாருக்குத் தரப் பட்டுள்ளது.

தண்ணீர் கிடைக்காத நாடு. கல்வி, குடிநீர், கழிவு நீரகற்றல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை தந்து செலவு செய்கிறது. தங்கம்விளைந்து எண்ணெய் மூலம் தங்கம் கொழித்தாலும் இந்நாட்டில் வேலை கிட்டாதோர் 25 விழுக்காடு உள்ளனர் என 2004 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன.

1392 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை போடப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் ரியாத். நாட்டின் நாணயம் ரியால்.

--------------"விடுதலை" 25-7-2009

2 comments:

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/

தமிழ் ஓவியா said...
This comment has been removed by the author.