Search This Blog

7.7.09

அரசு அலுவலக வளாகங்களுக்குள் மத நடவடிக்கைகள் மதச் சின்னங்கள் இருக்கலாமா?


முடிவு?

சட்டப்படியான நிலையைப் பாதுகாப்பது என்ற ஒரு நிலை இருக்கிறதே அது எவ்வளவு பெரிய வருந்தத்தக்க நிலை!

நம் நாட்டில் இதுபோன்ற அதிசயங்கள் நடப்பது சாதாரணமானதே!

இந்திய அரசமைப்புச் சட்டம் 340 பிரிவின்படி அமைக்கப்பட்ட மண்டல் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பது ஒரு சட்டப்படியான நிலைதான்.

ஆனால், நம் நாட்டில் என்ன நடந்தது? மண்டல் குழுப் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டும் என்பதற்காகவே திராவிடர் கழகம் மாநாடு நடத்த வேண்டியிருந்தது;
போராட்டங்களை நடத்தவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

இது வேறு எந்த நாட்டிலும் கேள்விப்படாத விசித்திரமான நிலைப்பாடு!

பார்ப்பனர்களுக்கு அவர்களின் வசதிக்குக் கேடாக இருக்கும் எதுவும் இத்தகைய தூக்குக் கயிற்றில் தொங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும்.


42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தித்தானே மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றை (வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு) செயலாக்க முடிந்தது.

பார்ப்பனர்களுக்குச் சாதகமான நிலை உருவாக்கப்படவேண்டும் என்றால், சட்டத்தின் குடலை உருவிக்கூட காரியம் சாதித்துக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். அய்.ஏ.எஸ். தேர்வில் திறந்த போட்டியில் வெற்றி பெற்று பிற்படுத்தப்பட்டோரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விழுக்காட்டில் ஒதுக்கித் தள்ளி, திறந்த போட்டியில் உள்ள அத்தனை இடங்களையும் சுளை சுளையாக விழுங்கியதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

அரசு அலுவலக, வளாகங்களுக்குள், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எந்த மத சம்பந்தமான மத நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது; மதச் சின்னங்களை நிறுவக்கூடாது என்று திட்டவட்டமான ஆணையே இருக்கிறது; மத்திய அரசின் சுற்றறிக்கைகளும் இருக்கின்றன. ஆனால், அவற்றை யார் பொருட்படுத்துகிறார்கள்? நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே இந்த சட்ட மீறல் இருக்கிறதே நீதிபதியே அந்த வளாகத்துக்குள் இருக்கும் குழவிக்கல்லுக்குமுன் (கோயில் சாமிக்கு) பஸ்கி எடுக்கிறாரே இந்த நிலையில் சட்டத்தை யார் மதிப்பார்கள்?

ஒவ்வொரு ஊரிலும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கோயில் கட்டுவதும், திராவிடர் கழகத்தினரும், பகுத்தறிவாளர் கழகத்தினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து அரசு ஆணையைக் காட்டுவதும், வழக்கறிஞர் மூலமாக தாக்கீதுகளை அனுப்புவதுமாகத்தானே நடப்பு இருக்கிறது.

பட்டுக்கோட்டையில் நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா அரங்கு வளாகத்தில் கோயில் கட்டுகின்றனர். நகர திராவிடர் கழகத் தலைவர் மானமிகு எஸ். சின்னகண்ணு கழக வழக்கறிஞர் அண்ணாதுரை ஆகியோர் தடுக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர். கோட்டாட்சியருக்கும் எழுத்துமூலமாகவே தெரிவித்துள்ளனர்.

ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். தந்தை பெரியாரின் மண் அமைதிப் பூங்காவாக இருப்பதை மதவெறியர்கள் விரும்பல்லை. பிரச்சினையை ஊதிவிடுகிறார்கள்.
இதனை அரசு புரிந்துகொண்டு மாவட்ட ஆட்சியர்கள்மூலம் உரிய சுற்றிக்கைகளை மீண்டும் அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி சட்டத்தின் நிலையை உறுதிப்படுத்தவேண்டுமாய் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.


------------ மயிலாடன் அவர்கள் 5-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: