Search This Blog
8.7.09
மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தது எதற்கு? -8,9,10
மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.
இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.
மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டிகாவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.
*****************************************************************************
8. பலராம அவதாரம்
கதை: பூமாதேவியானவள் பசு மாடு உருவத்துடன் விஷ்ணுவிடம் வந்து `பூமியில் உள்ள துஷ்டர்களையும், கொலை பாதகர்களையும் என்னால் சுமக்க முடியாது; அதனால் அவர்களையெல்லாம் அழித்துவிட வேண்டும், என்று முறையிட்டாள். அதனை ஏற்று பலராம அவதாரம்.
கேள்வி: துஷ்டர்களைத் திருத்திட கடவுளிடம் நற்சிந்தனைகளும், நல்லுபதேசங்களும் கிடையாதா? அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு இரண்டு மொந்தை போடு என்பதுபோல, கொலை பாதகர்களை அழிக்கவேண்டும் என்பதற்காகக் கடவுளே கொலை பாதகத்தில் ஈடுபடுவது எந்த ஊர் நியாயம் - தர்மம்?
சரி, இப்பொழுது நாட்டில் எத்தனை எத்தனையோ துஷ்ட காரியங்கள் நடந்துகொண்டு இருக்கின்றனவே, பூமாதேவியின் கடமை என்ன? தன் புருஷனிடம் சென்று விண்ணப்பம் ஏன் போடவில்லை?
9. கிருஷ்ணாவதாரம்
கதை: மதுரை மாநகரில் கம்சன் என்னும் அரசன் செய்து வந்த கொடுமைகளையும், அஸ்தினாபுரியை அரசாண்டு வந்த துரியோதனாதிகள் செய்த கொடுமைகளையும் பொறுக்க முடியாமல், பூதேவி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டதால், அவள் கஷ்டத்தைப் போக்க வாசுதேவருக்கும், ரோகிணிக்கும் புத்திரனாய் பிறந்து, தாய் மாமனாகிய கம்சனையும் கொன்று, பாண்டவர்களையும், கவுரவர்களையும் சூதினாலும், தந்திரத்தினாலும் அவர்களுக்குள்ளேயே சண்டையிடுமாறு செய்து குருசேத்திரப் போரில் பதினெட்டு நாளில் ஆயிரக்கணக்கானோரை மடியச் செய்து பூமிப் பாரத்தைத் தீர்த்து வைத்தான்.
கேள்வி: சூதினாலும், தந்திரத்தாலும் ஒருவரை ஒருவர் மோதவிடுவது கீழ் மக்கள் செயல் அல்லவா? இவனை கிருஷ்ணபரமாத்மா என்று போற்றுகிறவர்களின் யோக்கியதைதான் என்ன?
இந்தக் கிருஷ்ணனின் யோக்கியதை இதோடு போய்விடவில்லையே! சின்ன வயதில் வெண்- ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்களைத் திருடிய கள்வனாயிற்றே.
இவன் கடவுளா? காமாந்தகாரனா?
10. பவுத்த அவதாரம்
கதை: அசுரர்கள் சிவ பக்தர்களாக இருப்பதாலும், அவர்களின் மனைவிமார்கள் கற்புக்கரசிகளாக இருப்பதாலும், அவர்களை வெல்ல முடியவில்லையாம். அதனால் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டார் களாம்.
மகாவிஷ்ணு புத்தன் வேடமிட்டு அர்ச்சகர்களை சிவ பக்தர்களாகவிருக்கும் தன்மையிலிருந்து விடுவித்து, ஏமாற்றி அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.
கேள்வி: கந்த புராணத்துக்கு விஞ்சியது எந்த புராணத்திலும் கிடையாது என்கிற பழ மொழியே கூட இருக்கிறது. வருணாசிரம ஹிந்து மதத்தை கொலைவேள்வி ஹிந்து மதத்தின் ஆணி வேரையே அசைத்துத் தூக்கி எறிந்த புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் ஆக்குகிறார்கள் என்றால், அயோக்கியத் தனத்துக்குப் பிறந்த மோசடிக்காரர்கள் இவர்கள் என்பதல்லாமல் வேறு என்ன?
சிவ பக்தர்களாக இருந்தாலும் அசுரர்களை அழிக்கவேண்டும் என்று சூது செய்கிறார்கள் என்றால், பார்ப்பனர்களின் எண்ணமெல்லாம் அசுரர்களை (திராவிடர்களை) அழிக்கவேண்டும் என்பதுதான் என்று இதன்மூலம் விளங்க வில்லையா?
இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு புத்த மார்க்கம் தழுவினார் அண்ணல் அம்பேத்கர். அந்தப் புத்தரையே இவர்கள் இந்து மதத்தின் அவதாரம் ஆக்குகிறார்கள் என்றால், எத்தகைய அறிவு நாணயமற்ற கீழ்மக்கள்?
விஷ்ணு என்பது பொய்; அவதாரம் என்பது கற்பனை; அறிவுக்குப் பொருத்தமற்றது என்பது பக்தர்கள் உள்பட அனைவருக்கும் தெரிந்தது தான். பூமியைப் பாயாகச் சுருட்டுவது, மேருமலையை மத்தாகப் பயன்படுத்துவது என்பதெல்லாம் பைத்தியக்காரனின் உளறல் என்று தெரியாதா?
அதேநேரத்தில் இதன் பின்னணி என்ன? வரலாற்றுப் பார்வையோடு அணுகினால் ஒன்று தெரியாமற் போகாது.
ஆரியர்களுக்கும் - திராவிடர்களுக்கும் நடைபெற்ற போராட்டங்களை மையப்படுத்தி, பக்தியின் பெயரால் திராவிடர்களை காலா- காலத்திற்கும் இழிவுபடுத்தி அடக்க நினைத்து, ஆரியப் பார்ப்பனர்களால் புனையப்பட்ட குப்பைகள்தான் இவை.
பக்தி என்கிற காரணத்தால் புத்தியைப் பயன்படுத்த மறுத்து, ஆரியத்திற்கு அடிமை யானதுதான் திராவிடர் வரலாறு.
இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் என்கிற மாபெரும் புரட்சியாளர் தோன்றி, ஆரியத்தின் மூல பலத்தை உலுக்கி எடுத்து, தன்மான வீர உணர்ச்சியையூட்டி புத்துணர்வால் திராவிடர்களை உருக்கி எடுத்தார் என்பதுதான் புதிய வரலாறு.
தீபாவளி என்பது திராவிடர்களை ஆரியர்கள் வீழ்த்தியதை நிரந்தரமாகப் பதிய வைக்கும் ஓர் ஏற்பாடு. இதனைத் திராவிடர்கள் உணரவேண்டாமா?
அசுரன் (திராவிடன்) மலர் வெளியிடுவதன் நோக்கமும் இதுதான்.
----------------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment