Search This Blog
7.7.09
ரகசியமில்லா ஒரே தலைவர்
அய்யா அவர்களுடைய விருப்பப்படி விடுதலை
சந்தாக்களை வசூலிக்க நானே கிராமம் கிராமமாகச் சென்றேன்
திருப்பூர் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் பேச்சு
விடுதலை சந்தா வசூலிக்க நானே கிராமம் கிராமமாகச் சென்றேன் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
30.6.2009 அன்று திருப்பூரில் திருப்பூர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
விடுதலை மலர் கருத்துச்சுரங்கம்
விடுதலை மலரை வாங்கிப் பார்த்தால் தெரியும். அய்யா அவர்கள் ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். அதை அப்படியே எடுத்துப் போட்டிருக்கின்றோம். இது ஒரு கருத்துச் சுரங்கம். 2.9.1937 இல் அய்யா எழுதுகிறார்: விடுதலை பத்திரிகை முதலில் தினசரி பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டது. அது நாளேடு அல்ல, வாரம் இருமுறை. தினசரி நாளேடாக ஆக்க வேண்டும் என்று அய்யா அவர்கள் ஈரோட்டுக்குக் கொண்டு வருகின்றார். விடுதலை பற்றி அய்யா எழுதியது
அய்யா எழுதுகிறார்: தமிழ் மக்கள் விடுதலையைப் படிப்பதில் பேரார்வம் காட்டினாலும் ஈரோட்டிலிருந்து வெளியிடப்பட்ட விடுதலையின் பராமரிப்பு நடப்பு செலவுக்காக இதழ் மாதம் ரூ.500 இழப்பிலேயே நடத்தப்படுவதாக 2.9.1937 இல் ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
அந்தக் காலத்தில் 5000 விடுதலை
விடுதலை தினசரி பத்திரிகை 5000 பிரதிகள் வெளியாகின்றன. (அந்த காலத்தில் 5000 பத்திரிகைகள் விற்பனையானது பெரிய விசயம். அது அய்யா அவர்களுடைய முயற்சியின் வெற்றியைக் காட்டுகிறது)
அய்யா அவர்களை விட சிக்கனக்காரர் உலகத்தில் கண்டு பிடிக்க முடியாது. அய்யா அவர்கள் ஒரு முறை எங்களிடம் பேசிக்கொண்டிருக்கின்ற பொழுது சொன்னார்.
பச்சை அட்டை குடிஅரசு பத்திரிகையை வியாழக்கிழமை அன்றைக்கு நாங்கள் அச்சடித்து விடுவோம். வெள்ளிக்கிழமைக்குள் தபாலில் கொண்டு போய் போட்டு விடுவோம்.
வியாழக்கிழமை அன்று வெளியூர் சுற்றுபயணத்திற்கு நான் தேதி கொடுக்க மாட்டேன்.
ஈரோட்டில் பத்திரிகை ஒழுங்காகப் போக வேண்டும் என்பதற்காக நானே உட்கார்ந்திருப்பேன். லேபிளோடு கூடிய முகவரியை பேப்பரை மடித்து நானே உட்கார்ந்து ஒட்டுவேன் அப்பொழுது பக்கத்தில் உட்கார்ந்திருந்த புதிதாக சேர்ந்த ஒரு நண்பர் கேட்டார்.அய்யா, நீங்கள் போய் உட்கார்ந்து எதற்கு இதை ஒட்ட வேண்டும் என்று.
என்னைப் பார்க்க வருபவர்கள் சும்மா இருப்பார்களா?
அட போய்யா, நான் எதற்காக இங்கு உட்கார்ந்து ஒட்டுகிறேன் என்றால், நானே உட்கார்ந்து ஒட்டினால், என்னைப் பார்க்க வருபவர்களும் கூட உட்கார்ந்து அவரவர்களும் பத்து, பத்து பேப்பரை மடித்து ஒட்டுவார்கள் (சிரிப்பு-கைதட்டல்) (அய்யாவைப் பார்க்க வருகிறவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் சேர்ந்து ஒட்டினால் வேலை சீக்கிரம் முடிந்து போய் விடும்) அதற்காகத்தான் இப்படி உட்கார்ந்து ஒட்டுகிறேன்) என்று சொன்னார். இப்படி அய்யா அவர்களுடைய அணுகுமுறை ஒவ்வொன்றிலும் சாதாரணமான அணுகுமுறை அல்ல. இப்படி சின்னச் சின்ன செய்திகள் கூட ரொம்ப சுவையாக இருக்கும் பத்திரிகை நடத்துவதில் எவ்வளவு சிக்கனமாக நடத்தியும், மாதம் ரூ.500 வீதம் நஷ்டமாகிறது.
இனி நஷ்டம் அதிகமாகுமே தவிர, குறையாது. ரகசியமில்லா ஒரே தலைவர் (ஆக பத்திரிகை அதிகம் போனால் நட்டம் அதிகமாகும் அய்யா அவர்கள் எப்பேர்ப்பட்ட ராஜவாழ்க்கை வாழக்கூடியவர். எவ்வளவு பெரிய வசதியாளர். ஈரோட்டிலேயே அதிகமான சொத்துகள் பெரியாருடைய சொத்துகள். இவர் கொடுக்கிற வரிதான் முனிசிபாலிடிக்கே முக்கியமான வருமானம். அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் எழுதுகிறார்)
காலை 7.30 மணிக்கு ஆபிசுக்கு வந்தால் இரவு 10 மணிக்கு வீட்டுக்குப் போவேன். இதன் மத்தியில் சுற்றுப் பயணம். இந்த நிலைமையில் (அய்யா அவர்கள் எவ்வளவு பகுத்தறிவு சிந்தனையோடு சொல்கிறார் பாருங்கள். அய்யா அவர்களிடம் ரகசியம் என்பதே கிடையாது. எல்லா செய்திகளையும் மனம் திறந்து பகிர்ந்து கொள்வார். ரகசியமே இல்லாமல் வாழ்ந்த ஒரு தலைவர் உலகத்தில் உண்டென்றால் அவர்தான் தந்தை பெரியார் அவர்கள் என்பது அவருடைய வரலாற்றைப் புரிந்தவர்களுக்குத் தெரியும்) ரோஷம் என்னை அடிமையாக்கிக்கொண்டு இந்த மாதிரி தொல்லையில் இறக்கி விட்டது. (நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்றால் ரோஷம் என்னை அடிமையாக்கிக்கொண்டது என்று அய்யா அவர்கள் சொல்லுகிறார்.) காசு, பணம் எதிர்பார்த்து இவற்றை நான் எழுதவில்லை என்று அய்யா அவர்கள் ஆர்.கே.எஸ் அவர்களுக்கு எழுதியிருக்கின்றார்.
சந்தா வசூல் செய்ய கிராமங்களுக்குச் சென்றேன்
1964இல் என்னை ஆசிரியராக அமர்த்திய பிறகு அய்யா, நீங்கள் எழுதுங்கள்; சந்தாவைத் தோழர்கள் திரட்டித் தருவார்கள் என்று சொன்னேன். நான் பொறுப்புக்கு வந்தவுடனே ஆயிரம் சந்தாக்களாவது சேர்க்க வேண்டும் என்று அய்யா அவர்கள் அறிக்கை எழுதிக்கொடுத்தார். அது வெள்ளி விழாவை ஒட்டி வந்தது. இந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு நீங்களே போய் வசூல் பண்ணுங்கள் என்று சொன்னார். தஞ்சை மாவட்டம் நமக்கு நன்செய் மாவட்டம். தஞ்சை மாவட்டத்தில் நானே ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றேன். நம்முடைய தோழர்களை அழைத்துக்கொண்டு.
பெரியாரே அனுப்பியிருக்கிறார் என்று சொன்னேன். என்னை அப்பொழுது தெரியாது. நான் இளைஞர் ஒரு கிராமத்தில் மிராசுதார் இதைக் கேட்டு அப்படிங்களா! எவ்வளவு சந்தா கொடுக்க வேண்டும் என்று கேட்டார். நூறு ரூபாய், இரு நூறு ரூபாய் என்று சொல்லுவோம். அப்படி எல்லாம் அன்றைக்கு விடுதலைக்கு சந்தாக்களை சேர்த்தோம். அதன் பிறகு அய்யா எழுதினார்.
வியாபாரத்திற்காக அல்ல; கொள்கைக்காக
விடுதலை ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வந்ததால் அது மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் நஷ்டத்தில் நடத்தப்பட வேண்டியதாய் இருந்து வருகிறது. அந்த நஷ்டத்திற்குக் காரணம் கடவுள், மதம், புராணம், ஜோசியம் போன்ற மூடநம்பிக்கை கள்சம்பந்தமான விளம்பரங்களையும், சினிமா முதலிய ஒழுக்கக் கேடு மூடநம்பிக்கை கதைகளையும் பத்திரிகையில் போடாமல் பகிஷ்கரித்து வந்ததேயாகும். (நான் வியாபாரத்திற்கு நடத்தவில்லை. கொள்கைக்காக நடத்துகிறேன் என்று சொல்லுகின்றார்.) பொருள் நஷ்டம் இந்த அளவில் இருந்தாலும் அதன் பலன் அலட்சியப்படுத்தக் கூடியதாய் அல்லாமல், பாராட்டத்தக்கதாய் இருந்து வருகிறது என்பதில் அய்யமில்லை. அய்யா அவர்கள் கடைசியாக முடிக்கும் பொழுது வேண்டுகோள் வைக்கின்றார். (இன்றைக்கும் அது பொருந்தும் பெரியார் பேசுகிறார் கேளுங்கள். என்னுடைய வேண்டுகோளாக அல்ல, அய்யாவின் வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றேன்)
நமது பணிகளை மக்களிடம் சொல்லுங்கள்
நமது இயக்கம், நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள். இது மறைந்தால் என்ன ஆகும்? என்பதை விளக்குங்கள். அதிகாரிகளை, அரசாங்க சிறிய உத்தியோகஸ்தர்களை வியாபாரிகளை, விவசாய பொது மக்களை, தைரியமாய் அணுகுங்கள். வெட்கப்படாதீர்கள் என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார்.
(நமது ஆட்களுக்கு என்ன கோளாறு என்பதை அய்யா அவர்கள் கண்டு பிடித்திருக்கின்-றார்கள் பாருங்கள். நம்மாள் போய்கேட்டால் எல்லோரும் கொடுப்பார்கள். நாம் போய் எப்படிங்க கேட்பது என்று வெட்கப்படுவது. பொது வாழ்க்கைக்கு வெட்கமே கூடாது. மக்கள் நம்மை நம்புகிறார்கள். விடுதலை தான் விடியல் என்று பல்வேறு காரணங்களினாலே நினைக்கிறார்கள். பன்முனைப்பட்ட பலனை அனுபவிக்கக் கூடியவர்கள். அடுத்த வாக்கியம் சொல்லுகிறார் பாருங்கள். அய்யா அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும் கணித்து எழுதக்கூடியது. அலங்காரத்திற்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அவர்கள் எழுதவில்லை)
தமிழ்நாட்டு மக்களின் இன உணர்ச்சியையும், சமுதாய நலன் உணர்ச்சியையும் பரிட்சை பார்ப்பதில் நமக்குக் கவுரவக் குறைவு ஏற்பட்டுவிடாது என்று சொன்னார்.
குன்றக்குடி அடிகளார் சொன்ன செய்தி
(ஆகவே இந்த சந்தா கேட்பது என்பது ஒரு டெஸ்ட் நாடி பிடித்துப் பார்க்கின்ற மாதிரி. இவருக்கு சமுதாய நலன் உணர்ச்சி இருக்கிறதா? இன உணர்ச்சி இருக்கிறதா? விடுதலை புது பணிமனையை பெரியார் திடலில் அய்யா தலைமையில் குன்றக்குடி அடிகளார்தான் திறந்து வைத்தார்.
அப்பொழுது அவர் அழகாகச் சொன்னார்: தமிழன் இல்லம் என்பதற்கு ஒரு அடையாளம் என்றால், அங்கே விடுதலை வருவதுதான் தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் (கைதட்டல்)
காரணம் அந்த அளவிற்கு இந்த இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய இயக்கம்.
பா.ஜ.க ஆட்சி செய்த கேடுகள்
நண்பர்கள் இங்கே சொல்லிவிட்டார்கள். நான் அதிகமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் எவ்வளவு பெருமிதத்தோடு உட்கார்ந்திருக்கின்றோம். மத்தியில் காவி நிற முள்ள அரசு, பாரதீய ஜனதா கட்சி அரசு ஒரு பத்து வருடம் இந்த நாட்டை ஆண்டது. கூட்டணியை வைத்துக்கொண்டு. பாஜக ஆட்சியில் எவ்வளவு பெரிய கேட்டை உண்டாக்கினார்கள்.
பா.ஜ.க ஆட்சியில் வரலாற்றையே மாற்றினார்கள். கல்வியை காவி மயமாக்கினார்கள். பொடா சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். திராவிட வரலாற்றை மாற்ற அடிப்படையில் கைவைத்தார்கள். மேலெழுந்தவாரியாக செய்யவில்லை. மற்ற கட்சிக்காரர்கள் எல்லாம் ஏதோ வாய்ப்புள்ள வரை சம்பாதிக்கலாம் என்று நினைப்பார்கள். பா.ஜ.க வினர் அது மாதிரி இல்லை. மூளையில் உள்ள மூடநம்பிக்கை விலங்கை உடைக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். பா.ஜ.க வினர் அந்த விலங்கு அப்படியே இருக்கு வேண்டும் என்று கருதினார்கள்.
ஆரியர்கள் பூர்வீக மக்களாம்!
ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் திராவிடர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். அது மாதிரி அடிப்படையையே நொறுக்கி வரலாற்றைத் தலைகீழாக மாற்றினார்கள். மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? திராவிட என்ற ஒரு சொல் வெளிவந்திருக்குமா? தமிழ் பல்கலைக் கழகத்திற்கு முதல் துணை வேந்தராக வந்த நமது மரியாதைக்குரிய வி.அய்.சுப்பிரமணியம் நேற்று இயற்கை எய்தினார். இன்னும் கேட்டால் இரங்கல் தீர்மானத்தில் கூட அதை சேர்த்திருக்க வேண்டும்.
குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம்
அவர் செய்த மிகப்பெரிய தொண்டு என்னவென்றால், நமது திராவிட இயக்கம் செய்ய வேண்டிய ஒரு வேலையை ஆந்திராவிலே வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் தனித்து நின்று செய்தார்.
ஆனால், கலைஞர் அவர்கள்தான் அதற்கு பெரு உதவியாக இருந்தார். அதற்குப் பிறகுஅவருடைய பங்களிப்பைச் செய்தார். முதல்வர் என்ற முறையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம் என்பதை உருவாக்கினார். அதைவிட மிகப்பெரிய அளவிலே திராவிட களஞ்சியம் தொகுதிகளை (என்சைக்ளோபீடியா) போட்டிருக்கிறார். அதே போல திராவிட வரலாற்றை எழுதியிருக்கிறார். இதை எல்லாம் அரசுகள் செய்திருக்க வேண்டும்.
அரசுகள் செய்யத் தவறியதைக் கூட ஒரு தனிமனிதராக இருந்து அவர் சிறப்பாக செய்தார். அன்றைய மத்திய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம் சென்றிருக்கின்றார்; அவரிடம் இதைக் கொடுக்கின்றார்.
இதைப் பார்த்து-விட்டு, (முரளி மனோகர் ஜோஷியினுடைய புத்தி எப்படி இருக்கிறது பாருங்கள்; பார்ப்பான் புத்தி எப்படியிருக்கிறது பாருங்கள். காவி புத்தி ஆர்.எஸ்.எஸ் புத்தி எப்படியிருக்கிறதென்றால், வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் கொடுத்ததைப் பார்த்து விட்டு) நன்றாகப் பண்ணியிருக்கின்றீர்கள். திராவிட என்பதை எடுத்துவிடுங்கள்
இதில் திராவிட என்பதை விட்டுவிட்டுப் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே. பல்கலைக் கழகமே திராவிட பல்கலைக் கழகம். திராவிடக் களஞ்சியம் பண்ணியிருக்கிறார்கள்.
முரளி மனோகர் ஜோஷி இப்படி கேட்டவுடனே வி.அய்.சுப்பரமணியம் அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் மத்திய கல்வி அமைச்சர். இவர் சாதாரணமாக திருவனந்தபுரத்தில் தனியாக இன்ஸ்டிடியூட் வைத்து நடத்துகிறார்.
இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறேன் என்று சொல்லி கொடுக்கிறார். மற்ற ஆள்களாக இருந்திருந்தால் முதுகெலும்பு இல்லாத ஆள்களாக இருந்திருந்தால் சரிங்க, யோசிக்கிறேங்க என்று சொல்லி சும்மா திரும்பியிருப்பார்கள்.
ஆனால், வி.அய். சுப்பிரமணியம் அதைச் செய்யவில்லை. உடனே என்ன செய்தார் தெரியுங்களா? அப்படிங்களா! திராவிட என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? செய்யலாம். ஒரே ஒரு காரியம் செய்தால் நீக்கலாம் என்று சொன்னார்.
என்ன செய்யனும் சொல்லுங்க? என்று மத்திய அமைச்சர் ஜோஷி கேட்டார்.
ஏன், இப்படி செய்யுங்களேன்
ஜனகணமன என்ற தேசிய கீதத்தில் திராவிட உத்கல வங்கா என்பதில் திராவிட என்ற வார்த்தையை அதில் எடுத்துவிடுங்கள் அப்புறம் நான் இதை எடுத்துவிடுகிறேன் என்று சொன்னார் (கைதட்டல்).
நம் மண்ணில் எப்படிப் பட்டவர்கள் மலர்ந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்கெல்லாம் அடித்தளம் எது? சுயமரியாதை இயக்கம்.
----------------தொடரும்..."விடுதலை"-7-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment