Search This Blog

7.7.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - மால்தீவ்ஸ்-மாலி-மால்டா

மால்தீவ்ஸ்

மாலத்தீவு எனக் கூறப்படும் மால்தீவ்ஸ் இந்திய மாக்கடலில் உள்ள தீவுகளின் கூட்டம். பழங்காலத்தில் இத்தீவுப் பகுதிகளில் கவ்ரி கிளிஞ்சல்கள் பிடிக்கப்பட்டன. இந்த வகைக் கிளிஞ்சல்கள் இந்தியாவில் நாணயமாகப் பயன் படுத்தப்பட்டன. தெற்கு ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் கூடப் பணப் பரிவர்த்தனைக்குப் பயன் பட்டன. இந்தக் கிளிஞ்சல்கள் சிந்து வெளி நாகரிகப் பகுதி-களில் கண்டெடுக்கப்பட்டன என்பது இதன் சிறப்புக்கு அடையாளம்.

இந்தியாவின் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்தான் இத்தீவுகளில் முதன் முதல் குடியேறியவர்கள். தென் இந்திய வரலாற்று ஆவணங்களில் இத்தீவுகள் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன.

16.-12.-1887 இல் இந்நாட்டின் மன்னரான சுல்தான் முய்னுதீன்_மிமி என்பவர் இலங்கையில் பிரிட்டிஷ் ஆளுநர் ஒருவரோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி இந்நாட்டைப் பாதுகாக்கும் பணி இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது.

26-.7.-1965 இல் மால்தீவ்சுக்கு விடுதலை வழங்கப் பட்டது. 11.-11.-1968 சுல்தான்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டு நாடு குடியரசு ஆனது.

இந்திய மாக்கடலில் 300 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள சிறு தீவுகளின் கூட்டம் மால்தீவ்ஸ். வெண் மணல் பரப்புடன் கூடிய கடற்கரை நாடு. மீன் மட்டுமே நாட்டின் வளம். இங்கே 3 லட்சத்து 60ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். மக்கள் சன்னி முசுலிம் மதத்தினர். சிங்களமும் அரபியும் கலந்த கலவையான திவேகி என்ற மொழி பேசப்படுகிறது. இங்கிலீசும் நிருவாக அலுவலர்களிடையே உண்டு. 97 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்.
நாட்டில் இருப்புப் பாதை இல்லை.


மாலி

5000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்களின் சிதைவுகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் தங்கக் கனிம வளமும், பல்வேறு பொருள்களை வணிகம் செய்து வந்த விதமும் டிம்பக்டு மற்றும் ஓஜென்ன ஜெனோ போன்ற வணிக இடங்களை வளர்த்-தன. பொது ஆண்டுக்கு முந்தைய 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சஹாரா பாலை நிலத்தில் இருந்த ஒட்டக வணிகப் பாதையில் இந்நாடு அமைந்துள்ளதால் வணிக வாய்ப்புகள் பெருகின.

19 ஆம் நூற்றாண்டின் முடிவில் இந்நாடு பிரான்சின் ஆதிக்கத்தில் வீழ்ந்தது. 1904இல் பிரெஞ்சு குடியேற்ற நாடாகிப் போனது. 1920இல் நாட்டின் பெயரே, பிரெஞ்சு சூடான் என மாற்றப்பட்டு விட்டது. 1958 நவம்பரில் நாட்டுக்குச் சுயாட்சி உரிமை வழங்கப்பட்டு பிரெஞ்ச் சமுதாயத்தில் ஓர் அங்கம் ஆகியது. சூடான் குடியரசு என்று வழங்கப்பட்டது. பிறகு 1960 செப்டம்பர் 22 ஆம்நாள் குடியரசு நாடானது. மாலி என்ற பெயர் அறிவிக்கப்பட்டது.
மேற்கு ஆப்ரிக்காவில் அல்ஜீரியா, நைஜர் நாடுகளுக்கு அருகில் உள்ள இந்நாட்டின் பரப்பளவு 12 லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை ஒரு கோடி 10 லட்சம் ஆகும். இசுலாமியர்கள் 90 விழுக்காடும் மீதிப்பேர் ஆப்ரிக்கப் பழங்குடி நம்பிக்கைகளுடனும் உள்ளனர். ஒரு விழுக்காடு கிறித்துவர்கள் உள்ளனர்.

பிரெஞ்ச் மொழிதான் ஆட்சி மொழி. பாம்பரா எனும் மொழி 80 விழுக்காடு மக்களால் பேசப்படுகிறது. மீதியுள்ள மக்கள் ஏராளமான இனக் குழு மொழிகளைப் பேசி வருகின்றனர். நாட்டுக்குக் குடியரசுத் தலைவரும் பிரதமரும் உண்டு. 64 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 15 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர். இவ்வளவுப் பெரிய நாட்டில் 729 கி.மீ. நீளத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை வசதி உண்டு.


மால்டா

மால்டா நாட்டை அரபியர்கள், நார்மன்கள் மற்றும் பல பிற்போக்கு இனத்தவர்கள் ஆண்ட வரலாறு உண்டு. 1530 ஆம் ஆண்டில், ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் ஒரு பிரிவான செயின்ட் ஜான் மருத்துவ மனை அதிகாரம் என்ற மத, ராணுவத்தினர் இந்தத் தீவுகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியில் அடங்கினர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், அச்சு நாடுகளின் கடுமையான தாக்குதலுக்கு மால்டா ஆளான போதும், அச்சு நாடுகளின் முயற்சி பலன் தரவில்லை. இதனால், இங்கிலாந்து அரசு அதன் உயரிய ராணுவ விருதான ஜார்ஜ் கிராஸ் விருதினை மால்டா நாட்டு மக்கள் அனைவருக்கும் அளித்து அவர்களைப் பெருமைப்-படுத்தியது. இன்றைக்கும் அந்நாட்டின் கொடியில் ஜார்ஜ் கிராஸ் அடையாளத்தைப் பொறித்துப் பெருமைப்பட்டுக் கொள்கிறது.
21-.9-.1964இல் விடுதலை அடைந்த மால்டா, காமன்-வெல்த்தில் அங்கம் வகிக்கிறது.13.-12.-1974இல் குடியரசு நாடாகியது. அய்ரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக 2004 மே மாதத்தில் இணைந்தது.

அய்ரோப்பாவுக்குத் தெற்கே மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள இரு தீவுகள். இத்தாலியின் சிசிலித் தீவுக்குத் தெற்கேஅமைந்துள்ளவை. இவற்றின் பரப்பு 316 சதுர கி.மீ. நாட்டின் மக்கள் தொகை 4 லட்சத்-திற்-குச் சற்றுக் கூடுதல். மக்களில் 98 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்கர்.

மால்டீஸ் மொழி ஆட்சிமொழி. இங்கிலீசு மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது. 93 விழுக்காடு மக்கள்-கல்வியறிவு பெற்றவர்கள். 8 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

------------------------"விடுதலை" 6-7-2009

0 comments: