Search This Blog
6.7.09
திருவள்ளுவரும்-சர்வக்ஞரும்!
உலகுக்கே ஒளி தந்த ஒப்பரிய சிந்தனையாளர் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதற்குத் தடை இருக்கிறது அதுவும் இந்தியாவில் என்கிறபோது, அதைவிட தலைக்குனிவு வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.
அதுவும் தேசியம் பேசும் கட்சிகள் ஆட்சி செய்யும் கருநாடக மாநிலத்தில், அதன் தலைநகரமான பெங்களூருவில் கடந்த 18 ஆண்டுகாலமாக திருவள்ளுவர் சிலை திறக்கப்பட முடியாமல் மூடிக் கிடக்கிறது என்பது இந்த 2009 ஆம் ஆண்டிலும் அம்மக்கள் எவ்வளவு பிற்-போக்குத்தனத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள் இன வெறிப் போதையில் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பதற்கான அளவுகோலாகும்.
பெங்களூரு மாநகராட்சி ஆணையர், பெங்களூரு தண்டுப்பகுதியில் கங்காதாரச் செட்டி சாலை ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடம் எதிரில் உள்ள முக்கோணப் பூங்காவில் 12_க்கு 12 அடி இடம் ஒதுக்கி அங்கு திருவள்ளுவர் சிலை நிறுவிட அனுமதியளித்தார் (25.4.1991). அதன்படி திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டது (30.8.1991). தமிழ், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருவள்ளுவரைப்பற்றிய குறிப்புகளும் பீடத்தில் செதுக்கப்பட்டன.
சிலை திறப்புக்கான நாளும் அறிவிக்கப்பட்டது (1.9.1991). அம்மாநில முதலமைச்சர் பங்காரப்பா, பெங்களூரு மேயர், முன்னாள் மத்திய இரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீப் முதலியோர் பங்கேற்கும் அழைப்பிதழ்கள் எல்லாம் வெளியாகிவிட்ட அந்த காலகட்டத்தில் புலிகேசி கன்னட சங்கம் என்ற அமைப்பு கருநாடக உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று விட்டனர். பின்னர் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டாலும், திருவள்ளுவர் சிலை திறக்க அனுமதி கொடுத்த பெங்களூர் நகராட்சி அதனை ரத்து செய்துவிட்டது என்பது எத்தகைய கொடுமை! அதனை எதிர்த்தும் பெங்களூரு தமிழ்ச்சங்கம் வழக்குப் போட்டுள்ளது.
இரவு பகலாக சிலையைச் சுற்றி காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களே கூட கருநாடக மாநில அரசுக்குக் கடிதம் எழுதியதுண்டு. அதனையும் பொருட்படுத்தத் தயாராகவில்லை கருநாடகத்தினர்.
எத்தனையோ போராட்டங்களை நடத்திப் பார்த்தாகிவிட்டது. இனந்தெரியாத ஒரு இன வெறுப்பு என்னும் சகதியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, பெங்களூருவில் மூடிக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறந்திட தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு அழைப்புக் கொடுத்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.
மூடிக்கிடக்கும் இருளை நீக்க வந்த ஒரு சிந்தனைச் செல்வரின் சிலை மூடிக்கிடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
அதேநேரத்தில் கருநாடகத்தைச் சேர்ந்த சர்வக்ஞரின் சிலையை சென்னையில் திறப்பதற்கும் அனுமதி கேட்டுள்ளார் கருநாடக முதலமைச்சர்.
திருவள்ளுவர் சிலை திறப்பு பண்டமாற்று முறையில் அமைகிறதே என்பது ஒருபுறத்தில் வருத்தமாக இருந்தாலும், பதினெட்டு ஆண்டுகாலப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கிறதே என்கிற ஆறுதல் ஏற்படுகிறது.
சர்வக்ஞர் மூடத்தனங்களை மிகத்தீவிரமாகக் கண்டித்த சீர்திருத்த சிந்தனையாளர்.
எடுத்துக்காட்டுக்குச் சில:
ஹாட்டி சுவனு ஆஜனு
எம்பகஷ்ட தனுடி யேசே!
ஹுட்டி சுவனு தன்ன
சிர ஹரியெ மத்தொந்த
ஹுட்டி சனு அதேகெ?
சர்வக்ஞ
இதன் பொருள்: அய்ந்து தலைகளைப் பெற்றிருந்ததாகப் பிரமன் தன்னுடைய ஒரு தலை அறுபட்டுப் போனபோது (சிவன்தான் பிரம்மன் தலையைக் கொய்தான் என்பது புராணம்) அந்தத் தலையை மீண்டும் படைத்துக் கொள்ள முடியாதபோது, அவன்தான் உலகத்தைப் படைக்கிறான் என்று நம்புகிறீர்களா? வேண்டாம். இவ்வளவு கடினமான (தொல்லை) காரியத்தை அவன் தலையில் சுமத்தாதீர்கள் என்று கூறுகிறார் கன்னட நாட்டுக்கவி சர்வக்ஞர்.
எப்பொருள் யார் சொல்லியதாகவிருந்தாலும் எத்தன்மை உடையதாக இருந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதன் உண்மையைச் சிந்தித்து அறியவேண்டும் என்று இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்குமுன் ஒருவர் சொன்னார் என்றால், சந்தேகமில்லாமல் அவர் ஒரு பேரறிஞர்தான் பகுத்தறிவாளர்தான்.
இரு சிலைகளும் பொருத்தமாக இரு மாநிலங்களில் அமை-வது பொருத்தமானதுதான். கருநாடக முதலமைச்சர் சொன்னது எவ்வளவு விரைவில் நிறைவேற்றப்பட இயலுமோ, அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.
----------------"விடுதலை" தலையங்கம் 6-7-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment