Search This Blog

6.7.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - மடகாஸ்கர்-மாலவி-மலேசியா


மடகாஸ்கர்

ஆப்ரிக்காவின் கிழக்குப் பக்கத்தில் தனித் தீவான மடகாஸ்கரில் வந்திறங்கிய முதல் அய்ரோப்பியர் டியாகோ டயஸ் எனும் போர்த்துகீசியர். 1500 ஆம் ஆண்டில் வந்தார். அதன் பிறகு பிரெஞ்ச் நாட்டினர் பின்தொடர்ந்தனர்.

இத் தீவின் அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து நாடு ஒன்று உருவானது. ராடாமா எனும் மன்னர் தன் ராஜ்யத்தை இத்தீவில் நிறுவினார். அவரை மடகாஸ்கரின் மன்னர் எனப் பட்டம் தந்து அங்கீகரித்து பிரான்சு நாட்டினரிடமிருந்து காத்துக் கொள்ள பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. மடகாஸ்கருடன் இணைந்து பிரிட்டன் செயல்பட்டது. ஆனாலும் பிரான்சு தீவு நாட்டின் காவல் நாடாக ஆகி வெற்றி பெற்றது.

1960 இல் மடகாஸ்கர் சுதந்திரம் பெற்றது. ஃபிலிபர்ட் டைரனானா என்பவர் அதிபரானார்.
5 லட்சத்து 87 ஆயிரத்து 40 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை ஒரு கோடியே 86 லட்சம் ஆகும். 41 விழுக்காட்டினர் கிறித்துவர்கள், 4 விழுக்காட்டினர் முசுலிம்கள். மீதிப் பேர் பழங்குடி நம்பிக்கையினர். பிரெஞ்ச் ஆட்சி மொழி. கூடவே மலகாசி மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது.

69 விழுக்காடு மக்களே கல்வியறிவு பெற்றவர்கள். பாதிப்பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்.

நாட்டின் அதிபராகக் குடியரசுத் தலைவரும் ஆட்சித் தலைவராகப் பிரதமரும் உள்ளனர்.


மாலவி

டேவிட் லிவிங்ஸ்டோன் இந்த நாட்டில் ஆய்வு நடத்திய முதல் அய்ரோப்பியர். 1884 ஆம் ஆண்டில், இந்தப் பகுதியை வளர்ச்சியடையச் செய்யும் பணி செசில் ரோட்சின் பிரிட்டிஷ் தென் ஆப்ரிக்கக் கம்பெனி எனும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இந்நிறுவனத்தினருக்கும் அந்தப் பகுதியில் வணிகம் செய்து வந்த அரபு அடிமைகளுக்கும் போட்டிகள் ஏற்பட்டன.

1891இல் பிரிட்டன் இந்நாட்டைத் தன் சாம்ராஜ்யத்-துடன் இணைத்துக் கொண்டு நியாசாலாண்டு மாவட்-டங்களின் பாதுகாப்பகம் என்பதை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் மத்திய ஆப்ரிக்க காப்பகம் என அது 1893 முதலும் பின்னர் 1907 முதல் நியாசாலாண்டு என்றும் அழைக்கப்பட்டது. 1964இல் நியாசாலாண்டு பெயர் மாற்றம் பெற்று மாலவி எனும் பெயரில் விடுதலை பெற்றது.

ஆப்ரிக்காவின் தென்பகுதியில் ஜாம்பியாவுக்குப் பக்கத்தில் உள்ள இந்நாட்டின் பரப்பு 1 லட்சத்து 18 ஆயிரத்து 480 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை ஒரு கோடி 31 லட்சம் ஆகும்.

80 விழுக்காடு மக்கள் கிறித்துவர்கள். இசுலாமியர்கள் 13 விழுக்காடு உள்ளனர். ஆட்சி மொழியாக சிஷேவா மொழி உள்ளது. ஆப்ரிக்க இனக் குழுக்களின் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. 63 விழுக்காடு மக்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள்.
நாட்டின் தலைவராகவும் ஆட்சியின் தலைவராகவும் அதிபரே இருந்து வருகிறார். மக்கள் தொகையில 55 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்கும் கீழ் உள்ளனர்.


மலேசியா

6000 முதல் 8000 ஆண்டுகளாக மலாயா நாட்டில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இந்நாட்டில் பல சிறுசிறு அரசுகள் ஆட்சி நடத்தி வந்தன. அந்தக் கால கட்டத்தில் இந்தியா-விலிருந்து படையெடுப்பு நடந்தது. சோழ மன்னர்கள் தம் கப்பற்படையுடன் சென்று கடாரம் வென்றனர் எனத் தமிழக வரலாறு கூறும். இந்தக் கடாரம் என்பது இன்றும் மலேசியாவில் ஒரு மாநிலமான கெடார் என்பதுதான். சுமத்திராவில் இருந்து வந்து 1400இல் குடியேறிய பகுதியான மலாக்காவை போர்த்துகீசியர்கள் 1511இல் கைப்பற்றிக் கொண்டனர். அதையடுத்து 1641இல் இப்பகுதியை டச்சுக்காரர்கள் கைப்பற்றி ஆண்டனர்.

1867இல் இந்தப் பகுதிகள் பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டன. தொடர்ந்து சிங்கப்பூர், மலேயா, பினாங்கு ஆகிய பகுதிகளைக் கொண்ட நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கினர். 19 ஆம் நூற்றாண்டில் சீனர்கள் இப்பகுதிக்கு வரத் தொடங்கினர். 1941இல் இப்பகுதியை ஜப்பான் படையெடுத்துக் கைப்பற்றியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மீண்டும் பிரிட்டனின் பிடிக்கு வந்தது.

1948 இல் நாட்டில் சுதந்திர வேட்கை தலையெடுக்கத் தொடங்கியது. பிரிட்டிஷார் அதற்கேற்ப, பகுதி சுயாட்சி கொண்ட மலாய் கூட்டரசை உருவாக்கினர். 1957இல் மலேயா விடுதலை பெற்றது.

3 லட்சத்து 29 ஆயிரத்து 750 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 2 கோடியே 44 லட்சம் ஆகும். இசுலாம், பவுத்தம், தாவோ, இந்து, கிறித்துவம் எனப் பல மதத்தவர்களாக மக்கள் உள்ளனர். பாஷா மலாய் மொழிதான் ஆட்சி மொழி. இங்கிலீசு, தமிழ் உள்பட பல மொழிகளும் பேசுகின்றனர். 89 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். குடிக்கோனாட்சி முறை. மன்னர் அரசுத் தலைவர், பிரதமர் ஆட்சித் தலைவர்.
8 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். 4 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

---------------------"விடுதலை" 5-72009

0 comments: