Search This Blog
6.7.09
பகுத்தறிவிற்கு உலகத் தலைநகர் சென்னை
பகுத்தறிவிற்கு உலகத் தலைநகர் சென்னை
திருப்பூர் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் பேச்சு
பகுத்தறிவிற்கு உலகத் தலைநகர் சென்னை என்ற செய்தியை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
30.6.2009 அன்று திருப்பூரில் திருப்பூர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
வருவதற்கு முன் பலமுறை சிந்தியுங்கள்
அய்யா மிக அழகாகச் சொன்னார். இந்த இயக்கத்திற்கு வருகிற வரையில் தாராளமாக சிந்தித்துவிட்டு வாருங்கள். ஒரு தடவை அல்ல. பல முறை சிந்தித்துவிட்டு வாருங்கள். நிதானமாக வாருங்கள். ரொம்ப அவசரப்பட்டு வர வேண்டாம்.
அரசியல் கட்சி மாதிரி உறுப்பினர்களின் எண்ணிக்கை இங்கு இல்லை. உறுப்பினர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவாகத்தான் இருக்கும். இந்தியாவினுடைய ஜனத்தொகை 110 கோடி. இராணுவம் சில லட்சங்கள்தான். ஆனால் இராணுவத்தை நம்பித்தான் இந்தியாவினுடைய பாதுகாப்பு மக்களுடைய பாதுகாப்பு இருக்கிறது. அதே போலத்தான் இந்த பெரியாரின் இராணுவத்தை நம்பித்தான் இந்த இனத்தின் பாதுகாப்பும் எதிர்காலமும் இருக்கிறது.
இராணுவத்தளபதி ஒருவர்தான்
இராணுவத்தினுடைய சிறப்பு என்ன? இராணுவ தளபதி ஒருத்தர்தான் சிந்திப்பார். படைகள் சிந்திக்காது படைகளில் இருக்கக்கூடியவன் ஒவ்வொருவரும் சிந்தித்தால் அது படையல்ல. அது படையாக இருக்காது; அது தடையாகத் தான் இருக்கும்.
ஆகவே, அப்படிப்பட்ட நிலையிலே தந்தை பெரியார் அவர்களின் இயக்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களாக இருந்தாலும் அப்படித்தான் இருக்க முடியும்.
அரசியல் கட்சியில் உறுப்பினராக சேரவேண்டுமானால், என்னங்க தகுதி? நேற்று அந்தக் கட்சியில் இருந்தார். இன்றைக்கு இந்தக் கட்சியில் இருக்கிறார் அடுத்து அந்தக் கட்சிக்குப் போனார். அரசியல்கட்சியில் நேற்று அந்தக் கொள்கையில் இருந்தார். இன்றைக்கு இந்தக் கொள்கைக்கு வந்துவிட்டார்.
கட்சி வேறு; இயக்கம் வேறு
வெளிப்படையாகவே சொல்ல வேண்டுமானால் முதலில் கட்சியை உண்டாக்கிவிட்டான். கொள்கை என்ன என்று கேட்டால் அது பிறகு அறிவிக்கப்படும் என்று சொல்லுகிறார்கள். (சிரிப்பு) அதாவது கட்சியை முன்னாலே உண்டாக்கி கொள்கை என்ன என்பதை அதன் பிறகு கூட சொல்வதில்லை. ஆனால், கட்சி வேறு; இயக்கம் வேறு. இயக்கம் என்பது கொள்கையால் வந்த இயக்கம். இதற்கு மிகப்பெரிய அறிவு ஆயுதம் விடுதலை. அது பவள விழாவைக் கண்டிருக்கிறது. நாமெல்லாம் பெருமிதத்தோடு ஒன்றை நினைக்க வேண்டும்.
என்ன பெருமிதம் என்றால் விடுதலையினுடைய பவள விழா காலத்தில் நாம் வாழுகிறோம் என்பதில் தான் மகிழ்ச்சியடைகிறோம். (கைதட்டல்); அதைப் பார்க்கிறோம்.
சந்திர மண்டலத்திற்குச் சொன்றவர்களை
சந்திர மண்டலத்திற்குச் சென்றவர்களை பார்க்கும் பொழுது நமக்கு ஒரு மகிழ்ச்சிதான். நாம் சந்திரமண்டலத்திற்குப் போக வேண்டாம். சந்திரமண்டலத்திற்குச் சென்றவர்களை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது நமக்கு ரொம்ப மகிழ்ச்சி.
விடுதலையை சிறப்பாக நடத்த வாய்ப்பு
அது மாதிரி விடுதலையினுடைய பவள விழா காலத்தில் நாம் வாழுகிறோம். அந்த விடுதலை பவள விழாவிற்கு நாம் பங்களித்திருக்கின்றோம். விடுதலை ஏட்டை இன்னும் சிறப்பாக நடத்துவதற்கு வாய்ப்பளித்திருக்கின்றோம் என்று நினைக்கும் பொழுது நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் அடைய வேண்டும். ஏனென்றால் அந்த விடுதலை ஏடு இல்லையென்றால், இன்றைக்கு நாம் இப்படி உட்கார்ந்து பேச முடியாது.
தேர்தலைக் கூட நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள், நடப்பது ஆரிய திராவிடப் போராட்டம் என்று சொன்னார்கள் அல்லவா? அதிலே நாம் வெற்றி பெற்றோம்.
ஆரியம் தோற்றது; திராவிடம் வென்றது என்ற நிலை ஏற்பட்டது. (பலத்த கைதட்டல்). அதற்கு நம் கையில் உள்ள ஆயுதங்கள் ரொம்பக் குறைவு.
எந்த ஊடகம் நமக்கு ஆதரவாக இருந்தது?
எந்த ஏடு நம்மை ஆதரித்தது? ஊடகங்களில் எந்த ஊடகம் நமக்கு ஆதரவாக இருந்தது? இயக்க ஏடுகள் என்றால், விடுதலையைத் தாண்டினால் முரசொலி அவ்வளவுதான்.
இந்த இரண்டு ஏடுகள் தான் இயக்கத்திற்கு இந்த அணிக்கு கொள்கையோடு இருந்த ஏடுகள் மற்ற ஏடுகள் எல்லாம் நடுநிலை என்று சொல்லிக் கொண்டு எதிரிகளிடம் காசு வாங்க வேண்டும்; பத்திரிகை விற்க வேண்டும்; நாய் விற்ற காசு குறைக்காது _ கருவாடு விற்ற காசு நாறாது என்ற பழமொழி போல இருக்கக் கூடியவர்கள் பல பேர். அதைப்பற்றி நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.
நம்முடைய இயக்கமும், ஏடும் தான்
நம்முடைய இயக்கம், நம்முடைய ஏடு இது தான் மக்களுக்குத் தெளிவு உணர்ச்சியை ஏற்படுத்தும். நம்பிக்கை ஊட்டியது. தோழர்கள் களத்தில் இறங்குகிறபொழுது நம்பிக்கையோடு இறங்க வேண்டும். தன்னம்பிக்கை வேண்டும். அதுதான் தளராத நம்பிக்கை. நாம் கடவுள் மறுப்பாளர்கள்; கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். ஏன் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்? நாம் தன்னம்பிக்கை உள்ளவர்கள். ஆகவே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.-(கைதட்டல்)
ஏனென்றால், எல்லாம் அவன் செயல் என்பது கடவுள் நம்பிக்கைக்காரனுடைய வேலை. எல்லாம் அவன்செயல் என்பது அவனுடைய வேலை. எல்லாம் என் செயல் என்று சொல்லுவது நம்முடைய வேலை. (கைதட்டல்)
என்செயல் சரியாக இருந்தால்
என்னுடைய செயல் சரியாக இருந்தால் பாராட்டுக்கு நான் தயார். அதை ஏற்கத் தயார். என்னுடைய செயல் தவறாக இருந்தால் நான் திருத்திக்கொள்ளத் தயார், தண்டனையை ஏற்கத் தயார். இது தான் பகுத்தறிவுவாதியினுடைய அணுகு முறை.
ஆகவே, அப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கையையே தூக்கி எறிந்தவனுக்கு மற்ற சங்கதி எல்லாம் சாதாரணம். ஆனால், இன்றைக்கு எல்லோரும் நம்வழிக்கு வந்துவிட்டார்கள் பாருங்கள்.
கடவுள், மதம், ஜாதி, திருவிழா. கூட்டம் அங்கே சேருகிறது. இங்கே சேருகிறது. இது எல்லாம் ஒரு சடங்கு ஒரு புறத்தோற்றம்.
ஆனால், நாம்தான் வெற்றி பெற்றிருக்கின்றோம். யாராவது கடவுளை நம்புகிறவன் உள்ளபடியே அவனின்றி ஓரணுவும் அசையாது, எல்லாம் அவன் செயல் என்று தத்துவம் சொன்னான் பாருங்கள் அதுதானே கடவுளுக்கு இருக்கிற சிறப்பு. மனிதனுக்கு இல்லாத சக்தி, உயர்ந்த சக்தி, நம்மால் அறிந்து கொள்ள முடியாத சக்தி என்று வியாக்யானம் எல்லாம் சொல்கிறார்-களே. அந்தச் சக்தியை நம்பிக்கொண்டு இன்-றைக்கு எத்தனை கோவில்களில் பூட்டுப்போடாமல் இருக்கிறார்கள்?
எல்லா கடவுள்களும் தீவிரவாதிகளுக்குப் பயந்து
எல்லா கோவிலும், எல்லா கடவுளும் தீவிரவாதிகளுக்குப் பயந்து கொண்டிருக்கிறது. எல்லா கடவுளும் ஏ.கே 47 பாதுகாப்பில் தானே இருக்கிறது.
ஆளுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். தலைவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். அதையே கூட மறுபரிசீலனை செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார். அது சரியான முடிவு. அதற்காவது அர்த்தம் இருக்கிறது.
சர்வசக்தி படைத்த கடவுளுக்கு எதற்குப் பாதுகாப்பு? அவர் பார்த்து அம்பை விட்டால் அப்படியே கீழே வந்து பூவாக விழ வேண்டியது தானே அவனுக்கு சக்தி இருந்தால்! இருந்தாலும் பொடி போடுகிறவனாலே அதை எப்படி விட முடியாதோ, தண்ணீர் போடுகிறவனாலே சாராயம் குடிக்கிறவனுக்கு எப்படி அதை விட முடியவில்லையோ, சிகரெட் பிடிக்கிறவனுக்கு எப்படி அதை விட முடியவில்லையோ, அது மாதிரி அது பழக்கத்திற்கு வந்திருக்கிறது; பழக்கம் பிறகு வழக்கமாகியிருக்கிறது.
அதை சுலபமாக விடமுடியாது. நம்முடைய கருத்துகள் உள்ளே புகுந்தால் தான் இந்த வேலை செய்யும் இளைஞர்கள் இந்தச் சிந்தனைக்கு ஆளாக வேண்டும். அதற்கு எல்லாத் துறைகளிலும் இதை எடுத்துச்சொல்லக் கூடிய ஏடு நம்முடைய ஏடு.
இன்றைக்குக் கடவுள் மறுப்பை மக்கள் மத்தியிலே எடுத்துச் சொன்ன ஏடு எது?
உலகத்திலேயே ஒரே ஒரு ஏடு விடுதலை
உலக மனித நேய அமைப்பின் தலைவர் நார்வே நாட்டைச் சார்ந்த லெவிஃபிராகல் டெல்லியில் சொல்லியிருக்கிறார். உலகத்திலேயே ஒரு நாத்திக நாளேடு நடக்கிறது என்று சொன்னால், அது தந்தை பெரியார் அவர்களுடைய _ திராவிடர் கழகத்தினுடைய விடுதலை ஏடு. எங்களால் ஒரு வாரப்பத்திரிகை கூட நடத்த முடியவில்லை என்று சொன்னார்.
அங்கெல்லாம் அறைக்குள் தான் கூட்டம் போடுவார்கள். சென்னைக்கு வந்த ஓர் அம்மையார் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள்தான் அந்த நிகழ்ச்சியில் சொன்னார்கள்.
பகுத்தறிவுக்கு உலகத்தலைநகர் சென்னை
பகுத்தறிவுக்கு உலகத் தலைநகரம் சென்னை என்று பேசினார்கள் அந்த அம்மையார். செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நானும் தயார்படுத்திக் கொண்டு போனேன். அங்கே ஏழு, எட்டு வயதானவர்கள் இருந்தார்கள்.
நான் அந்த அம்மையாரிடம் சொன்னேன். கூட்டம் ஆரம்பிக்கும் பொழுதே நான் கேட்டேன். இன்னும் வரவேண்டியவர்கள் இருக்கின்றார்களா? என்று கேட்டேன். அந்த அம்மையார் சொன்னார். இது தாங்க இங்கு நடைபெறுகின்ற பெரிய கூட்டமே என்று சொன்னார்.
அறைக்குள் இருக்கும் பொழுது விவாதம் பண்ணுவார்கள். இந்த மாதிரி ஒரு மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தைக் கட்டிய பெருமை அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களையே சாரும் (கைதட்டல்) இது மக்கள் இயக்கம்.
நம்முடிவை மக்கள் ஏற்கிறார்கள்
அதுமட்டுமல்ல, நாம் என்ன முடிவு சொல்லுகிறோமோ அதை மக்கள் ஏற்கிறார்கள். காரணம் என்ன? நமக்கு ஆசாபாசம் கிடையாது. நம்முடைய கண்ணோட்டம் சுயநலமில்லா இன நலம், பொது நலம்.
தேர்தலில் கூட நாம் என்ன சொல்லுகிறோம் என்று கேட்டு முடிவு பண்ணுகிறார்கள். ஒரு காலத்தில் நாம் வந்தால் ஓட்டு போய்விடும் என்று சொன்னார்கள். இன்றைக்கு நாம் வந்தால்தான் வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் இன்றைக்கு வந்திருக்கிறது. அதற்குக் காரணம், இந்தக் கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது என்று அர்த்தம். நாங்கள் ஒன்றும் ஜோசியர் இல்லை. மற்றவர்களைப் போல இல்லை. காரணம் என்ன? அறிவுபூர்வமாக மக்களை எண்ணிச் சிந்திக்கின்றோம்.
--------------------தொடரும்...."விடுதலை" 5-7-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment