
ஈழத் தமிழர்களை முற்றாக ஒழிக்க இலங்கை அரசு ரகசிய சதி!
இந்திய அரசுக்கு இலங்கை சவாலா?
முதல்வர் தலைமையில் தமிழர்களே அணி திரள்வீர்!
சிங்கள அரசு ஈழத் தமிழர்களை முள் வேலிக்குள் அடைத்து கொடுமைப்படுத்தும் நிலை தொடர் கதையாகி வருகிறது. தமிழர்களை அடியோடு கொல்ல இராஜபக்சே அரசு சதித் திட்டம் தீட்டுகிறது. இந்திய அரசுக்கே இலங்கை அரசு சவால் விடும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இதை இந்திய அரசு உணர வேண்டும். ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட முதல்வர் கலைஞர் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் தமிழர்கள் ஓரணியில் நிற்பது காலத்தின் கட்டாயம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:
கண்ணீர் விட்டு அழச் செய்கிறது
இலங்கையில் போர் முடிந்து உள்நாட்டுத் தமிழர்களுடன் தான் போர் வெளிநாடுகளுடன் அல்ல ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குமேல் ஆகிறது!
ஆனால், போரில் சிங்கள இராணுவம் விஷ வாயு, கொத்துக் குண்டுகளைப் போட்டு அழித்துக் கொன்ற தமிழர்கள் போக, எஞ்சியுள்ள எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் இன்னமும் ஏதிலிகளாக, சொந்த மண்ணிலேயே சோற்றுக்குப் பரிதவித்து, முள் வேலிக்குள் ஆடுமாடுகளைவிடக் கேவலமான கொடுமையின் கோரத் தாண்டவத்தில் பிடிபட்டு நித்தம் வேதனையால், வெட்கத்தால், அவமானத்தால், செத்தொழிந்து வரும் செய்தி எம்மை ரத்தக் கண்ணீர் விட்டு அழச் செய்கிறது! பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை
நேற்றும் முன்னாளும் வரும் செய்திகள் நிலைமை, நாளுக்கு நாள் மேலும் மோசமாகி வருகிறது என்பதையே சொல்கின்றன!
ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் தி ஆஸ்திரேலியா என்ற பத்திரிகையில் வெளி வந்துள்ள செய்தி நம்மை வெந்தணலில் தள்ளி வேக வைக்கிறது!
(இலங்கை) புல் மொட்டையில் உள்ள அகதிகள் முகாமில் பெண்களை அதிகாரிகளே, கட்டாய விபச்சாரத்தில் தள்ளுகின்றனர். இதுபற்றி மேல் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு போகப்பட்டது; ஆனால் அவர்கள் இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை!
விடுதலைப் புலிகள் என சந்தேகித்து
அகதிகள் முகாம்களில் உள்ள ஒவ்வொரு கூடாரத்திலும் 3 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறுகிய இடத்தில் 3 குடும்பங்கள் தங்கி இருப்பதால் ஒருவருக்கொருவர் இடையூறாக உள்ளது. முகாம்களில் உள்ள குடும்பத்தினர் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் என சந்தேகப்படும் ஆண்களும், பெண்களும் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களைப்பற்றிய எந்த விவரங்களும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அவர்களை அழைத்துச் சென்றதற்கான அடையாளச் சீட்டு போன்றவைகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறு ஆஸ்திரேலியா ஏடு கூறுகிறது!
அதிர்ச்சியூட்டக் கூடிய இரு செய்திகள்
அதற்கு அடுத்து வந்துள்ள இரண்டு செய்திகளும் இதைவிட அதிர்ச்சியூட்டக் கூடிய செய்திகள்:
1.சிறைக் கைதிகளைவிட மோசமான நிலையில், ஆடு மாடுகளை அடைத்துள்ள பட்டிகளைப் போல் தற்போது முள்வேலிகளுக்குள் இருக்கும் தமிழர்கள் அந்நாட்டுக் குடி மக்கள் அவர்களது இரத்தமும் வியர்வையும்தாம் இலங்கையை வளங்கொழிக்கும் நாடாக ஆக்கின; அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்களை ஏதோ pow போல் (pirisoners of war) போர்க் கைதிகள் போல அடைத்து வைத்ததோடு அம்முகாம்களை நிரந்தரமாக்கிட, சுவர்கள் எழுப்பும் ரகசியமான கட்டுமானப் பணிகள் மூலம் நிரந்தரமாகவே அவர்களை அடைத்து அழித்துவிட திட்டம் தீட்டுகிறதாம் இலங்கையின் இராஜபக்சே அரசு!
பலர் பைத்தியமாகி விட்டனர்
மன அழுத்தத்தால் பைத்தியம் பிடித்தவர்கள்போல பலர் ஆளாகி விட்ட பரிதாப நிலை அங்கு தொடர் கதையாகி வருகிறது!
முகாம்களில் உள்ளவர்களை விரைவில் அவரவர்கள் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பிட வேண்டும் என்று நமது இந்திய அரசு, இலங்கை அரசுக்கு கண்டிப்புடன் கூறியதே அது என்னவாயிற்று?
இதுபற்றிக் கவலைப்படாமல் ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற நிலைதான் தொடர்கிறது!
இந்திய அரசுக்கு சவால் விடும் நிலையில் இலங்கை
அதுமட்டுமா? இந்திய அரசுக்கே சவால் விடும் நிலைக்கு இலங்கை அரசு வந்து விட்டது!
இலங்கையின் வெளிஉறவுத்துறை அமைச்சர் ரோகித போகலாகம, சீன நாட்டுக்கு 5 நாள் பயணமாகச் சென்று பீஜிங்கில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இலங்கை அரசுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சீனாதான் உதவியாக இருந்தது! எங்களுக்கு எல்லாவித ஒத்துழைப்பும் கொடுப்பது சீனா மட்டும்தான். சீனா மட்டும்தான் எங்களுக்கு வாழ்நாள் நண்பனாக உள்ளது வேறு எந்த நாடும் அப்படி இல்லை.
இதை சுவர் எழுத்துகளாக, இலங்கைக்கு உதவிய இந்தியப் பேரரசு மத்திய அரசு படித்துப் பாடம் பெற்றால் ஒழிய, உருவாகும் பெரும் ஆபத்தினை தடுத்திட இயலாத நிலை ஏற்படும்!
செயத்தக்க செய்யாமையானும் கெடும் என்ற வள்ளுவனின் வாய் மொழியை நன்கு உணர வேண்டும்!
முதல்வர் பின்னால் ஒரே அணி - காலத்தின் கட்டாயம்!
மனிதநேயமுள்ள உலக நாடுகளை (இந்திய அரசு உள்பட) வற்புறுத்தி அழுத்தம் கொடுத்து முகாம்களில் முடக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வற்புறுத்திட வேண்டும்.
வணங்காமண் கப்பலின் பொருள்களை வற்புறுத்தி அனுப்பி வைத்து, ஈழத் தமிழர்கள்பால் தனக்குள்ள கவலை, இனமான அடிப்படையிலானது; இயல்பானது; தேர்தல் அரசியலை வைத்து திடீரென முளைத்துக் கிளம்பி, பிறகு காணாமற் போகும் உணர்வு அல்ல; நிரந்தரமானது என்பதை சட்டமன்றத்திலும் உணர்த்திய நமது முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர் முயற்சியாக, ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு தகுந்த வழி காண, மத்திய அரசினை வற்புறுத்திடும் வகையில் அவர்களுக்குத் தோன்றும் எல்லா வழிகளையும் திறந்து நிற்க வேண்டுகிறோம்; முதல்வர் பின்னால் ஒரே அணியில் தமிழர்கள் நிற்பது காலத்தின் கட்டாய-மாகும்!
--------------------"விடுதலை" 5.7.2009


3 comments:
ஆஹா...என்ன ஒரு நடிப்பு...
புதுசா கண்டுபிடிச்சு....யாருக்குமே தெரியாத விஷயத்தை சொல்லி இருக்கீங்க...
உங்க ஆட்சி தானே நடக்குது....போலிகளே....
எங்கள் தம்பிகளைக் கொன்று, தங்கையரைக் கற்பழிப்பதை, வேடிக்கைப் பார்க்கும் போலிக் கும்பலே!
வீரமணியும், கருணாநிதியும் மாறி மாறி, கலைஞர் விருது, பெரியார் விருதுன்னு வாங்கிட்டு இருக்கும் போலி தியாகச் செம்மல்களே!
ஒரு வார்த்தை இப்போழுது சொல்லுங்களேன் பந்த் என்று!
இப்பொழுது சொல்லுங்களேன் கலைஞர் உண்ணாவிரதம் என்று?
தந்தி அடியுங்கள், மனிதச் சங்கிலி சொல்லுங்களேன்....நாங்கள் வரத் தயார்!
பதவி பிச்சை போட்ட சோனியாவின் காலடியில் விழுந்து கிடக்கும் உங்களுக்கு அறிக்கை மட்டும் விடத் தெரியும்!
UN security council இல் ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டு போது எங்கே போனது உங்கள் போலி வார்த்தைகள்!
மேடையில் பேசுவதும், ஏடுகளில் எழுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.. ...ஏற்கனவே....போலிகளை தமிழ் உலகம் கண்டு கொண்டது...
மனசாட்சிப் படி பேசுங்கள்....இந்த எழுத்துக்கள் உண்மையா...நீங்கள் கலைஞரிடம் பேச முடியாதா....அழைப்பு விடுங்கள் பந்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்...
பெரியார் டிரஸ்டின் கல்வி நிறுவனங்கள் நன் கொடை விடயத்தில் மாட்டிக் கொள்ளும் என்ற பயமா?
இதற்கு பதில் சொல்லி விடுங்கள் நண்பர் ஓவியா...! கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொன்ன பிறகு என்னைத் திட்டுங்கள்..!
கபிலன் உங்களின் அறியாமையை நினைத்து வேதனைப் படத்தான் முடியும். என்ன செய்வது உண்மையை அறியாத லோக்கல் தமிழனை நினைத்து.
ஈழத்தமிழர்களுக்காக 2008 செப்டம்பர் 23 ஆம் தேதி தி.க அறிவித்த ரயில் மறியல் போராட்டத்தில் இருந்து வரும் 10 ஆம்தேதி நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டம் வரை தொடர்ச்சியாக தி.க. போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கிறது.
இதில் எந்தப் போராட்டத்தில் கபிலன் கலந்து கொண்டார்?
செப்டம்பர் 23, 2008 முதல் நடந்த போராட்டமாவது தெரியுமா?
கபிலன் உங்களிப் போன்று திடீர் ஆதரவாளர்களல்ல நாங்கள்.
தயவுசெய்து உண்மையை அறிந்து பின்னூட்டம் அளிக்கவும்.
நன்றி.
Post a Comment