Search This Blog
5.7.09
பெரியார் தந்த புத்திக்கும் சொந்த புத்திக்கும் உள்ள வேறுபாடு
பெரியாரின் கட்டுப்பாடு இராணுவக் கட்டுப்பாட்டையும் விஞ்சியது திருப்பூரில்
கழகத் தோழர்களிடம் தமிழர் தலைவர் விளக்கவுரை
பெரியாரின் கட்டுப்பாடு இராணுவக் கட்டுப்பாட்டை விட மிகப்பெரியது விஞ்சியது என்று திருப்பூர் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
30.6.2009 அன்று திருப்பூரில் திருப்பூர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி-.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
தமிழ் நாடெங்கும் ஒரு நல்ல எழுச்சியைக் காணக் கூடிய ஒரு நல்ல சூழல் ஏற்பட்டிருக்கிறது.
விஷப்பரிட்சை தான்
இந்த சுற்றுப் பயணத்தில் என்னைப் பொறுத்தவரையில் என் உடல் நிலையைப் பொறுத்த வரையில் ரொம்பக் கடுமையாக நான் மேற்கொண்ட ஒரு விஷப் பரிட்சைதான். ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், அதையும் தாண்டி நம்முடைய தோழர்களை எல்லாம் சந்திக்கின்ற பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியை நான் பெறுகிறேன். அதையே நான் மருந்தாகவும் உட்கொண்டிருக்கின்றேன். அதுவே எனக்கு உற்சாகத்தைத் தருகிறது.
ஆகவே, நான் அதைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை. ஆனால், நான் எந்தப் பொறுப்புக்காக 1962இல் அய்யா அவர்களிடத்திலே நெருக்கமாக ஒரு அணுக்கத் தொண்டராக மாறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது? சாதாரண ஒரு பேச்சாளனாக இருந்தேன். அதற்குப் பிறகு பெரிய அளவிலே மாணவர் கழகத்திலே ஈடுபட்டவனாக நான் இருந்தேன். பிறகு வழக்கறிஞர் தொழிலிலே ஈடுபடவேண்டும்; அதன் மூலமாக கொஞ்சம் சுதந்திரமான வாய்ப்பைப் பெறலாம், சட்ட அறிவையும் பெறலாம் என்று கருதி சேர்ந்து பெற்றேன்.
அய்யா அவர்களுடன் தேர்தல் பிரச்சாரம்
அய்யா அவர்களுடன் ஒரு தேர்தல் பிரச்சாரத்திலே ஈடுபட்டோம். 1962இல் காமராஜரை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம். அய்யா அவர்களுக்கு முன்பு நான் பேசுவேன். எனக்குப் பின்னாலே அய்யா அவர்கள் பேசுவார்கள்.
பல தொகுதிகளிலே பேசிவிட்டு வந்த நிலையிலே அய்யா அவர்கள் தன்னுடைய உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து விட்டு, உடல் நலக்குறைவு காரணமாக அய்யா அவர்கள் சென்னை பொது மருத்துவமனையிலே சேர்ந்தார்கள்.
தேர்தல்வரை தனது உடல் நலிவைப் பொறுத்துக்கொண்டிருந்து, தேர்தல் முடிந்தவுடனே அய்யா அவர்கள் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார்கள்.
அப்படிச் சென்ற நிலையிலேதான்அய்யா அவர்கள் என்னை அழைத்தார்கள். இப்படி ஒரு திட்டத்தை அய்யா அவர்கள் மனதிலே வைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
அய்யா சொன்னதை தட்டமாட்டேன்
அப்பொழுது அய்யா அவர்கள் என்னை அழைத்துக் கேட்ட பொழுது, அய்யா அவர்கள் எதைச் சொன்னாலும் நான் தட்டமாட்டேன்; ஏற்றுக் கொள்கிறேன் என்ற முடிவை நான் யாரிடமும் கலங்காமல் சொன்னேன்.
அதற்கு முன்னாலேயே அய்யா அவர்கள் எனக்கு வாழ்க்கைத் துணையை ஏற்பாடு செய்துவிட்டார்கள். திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்கள்.
திருமணம் கூட தந்தை பெரியார் அவர்களுடைய கழக செயல் திட்டங்களிலே ஒன்றாக இருந்ததே தவிர, என்னுடைய தேர்வாகவோ அல்லது என்னுடைய முடிவாகவோ இல்லை.
அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற நூலில் கூட நான் எழுதியிருந்தேன். இரவு தந்தி கொடுத்து ஒரு முறை திருச்சி பெரியார் மாளிகைக்கு அய்யா அவர்கள் வரச்சொன்னார்.
இவர்தான் மாப்பிள்ளை; பிடித்திருக்கிறதா?
என்னுடைய மாமனாரையும்அருகில் அமர வைத்திருந்தார். இவர்தான் மாப்பிள்ளை பிடிக்கிறதா? என்று கேட்பதற்காக என்னை அழைத்திருந்தார்கள். ஏன் உன்னை வரச்சொன்னேன் தெரியுமா? என்று கேட்டார். தெரியாதென்றேன். உனக்குத் திருமணம் செய்து வைக்க ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.
உடனே நான் சொன்னேன், எனக்கென்ன அவசரம்? நான் இன்னும் சட்டக் கல்லூரியே முடிக்கவில்லை. எனக்கு அது மாதிரி ஓர் எண்ணமும் இல்லையே, நான் இயக்கப் பணி அல்லவா செய்து கொண்டிருக்கின்றேன் என்று சொன்னபொழுது அய்யா அவர்கள் உடனே குறுக்கிட்டுச் சொன்னார். இதுவும் இயக்கப் பணிக்காகத் தான் நான் இந்த ஏற்பாட்டையே செய்கிறேன் என்று அவர்கள் சொன்னார்கள். (கைதட்டல்).
பெண்ணைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை
அதுதான் உங்களுடைய முடிவாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னேன். பெண்ணைப் பார்த்திருக்கிறாயா? என்று கேட்டார். பார்க்க வேண்டிய அவசியமில்லை நீங்கள் முடிவு செய்துவிட்டால் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இயக்கம் தான் முக்கியமே தவிர, தனி வாழ்க்கை என்று எனக்கு ஒன்றும் இல்லை என்று தெளிவாகச் சொன்னவுடனே அம்மா அவர்கள் உங்கள் வீட்டில் என்ன சொல்லுவார்கள் என்று கேட்டார்கள். அய்யா அவர்கள் மணியம்மையார் அவர்களை உங்கள் வீட்டில் சொல்லிவிட்டு வரச்சொல்லுகிறேன் என்றும் அய்யா அவர்கள் சொன்னார்கள்.
கொள்கை இலட்சிய ஏடு விடுதலை
எனக்குத் திருமணம் நடந்த பிற்பாடுதான் அதற்குப் பிறகுதான் அய்யா அவர்கள் 1962 இல் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டார்கள். தேர்தல் சுற்றுப் பயணத்திற்குப் பிறகு இந்தப் பொறுப்பை என்னிடத்திலே ஒப்படைத்தார்கள்.
அன்றிலிருந்து இன்று வரையிலே கொள்கைப் பிரச்சாரத்தை ஓர் அறைகூவலாக, ஒரு கொள்கை வீச்சாகக் நடைபெற வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதே போல விடுதலை ஏடு பல சோதனைகளை சந்தித்திருக்கின்றது. சாதாரண மானதல்ல; இந்த மலரை நீங்கள் வாங்கிப் பார்த்தால் தெரியும்.
இது ஒரு கொள்கையை இலட்சியத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஓர் ஏடு. அது நடந்த பாதை கடந்த பாதை இவைகளை எல்லாம் பார்ப்பீர்களேயானால், ரொம்ப வியப்பாக இருக்கும்.
விடுதலை மலரைப் பார்த்தால் பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். அரசாங்-கத்தினுடைய கணைகள் பலவற்றை சந்தித்திருக்கிறது; கழகத்தில் துரோகத்தை சந்தித்திருக்கிறது.
இதே கோவையைச் சார்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கடிதம். அந்தக் கடிதத்தின் முழு நகலையும் விடுதலைமலரில் போட்டிருக்கின்றோம். எல்லோரும் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய இயக்கத்தின் பிரச்சாரத் திட்டங்களை அருமையாக அமைத்திருக்கின்றீர்கள். எல்லோரும் ஒரு மனப்பட்டு நாம் கூடியிருக்கின்றோம்.
தோழர்கள் சொன்ன மாதிரி, கட்டுப்பாடுதான் இந்த இயக்கத்தின் தனித் தன்மை. கொள்கையைப் பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யார் வேண்டுமானாலும் தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்.
மருத்துவமனையை துவக்க முடியாது கட்சியைத் துவக்கி விடலாம்.
அதுவும் நம்முடைய நாட்டிலே உச்சவரம்பு இல்லாத ஒரு செய்தி எது என்று சொன்னால், எளிதாக ஒரு மருத்துவமனையைத் துவக்க முடியாது; பள்ளிக் கூடத்தைத் துவக்க முடியாது; அல்லது கல்லூரியைத் துவக்க முடியாது; ஒரு கடையைக் கூடத் துவக்க முடியாது. ஆனால், கட்சியைத் துவக்கிவிடலாம் (கைதட்டல்) அதற்கு குறைந்த பட்சம் இரண்டு பேர் இருந்தால் போதும் அல்லது மூன்று பேர் இருந்தால் போதும் என்கின்ற அளவிற்கு இருந்தால் போதும். ஒரு கட்சி இருந்து கொண்டிருக்கும். ஆனால் கொள்கை என்பதைவிட கட்டுப்பாடு என்பதுதான் முக்கியம். இராணுவக் கட்டுப்பாடு என்பது தான் இந்த இயக்கத்திற்கே உரிய தனிப்பெருமை.
இந்த இயக்கம் இவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறது. அய்யா அவர்களுடைய காலத்தில் மட்டுமல்ல; பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா-? என்று கேட்டார்கள். இயங்குமா? என்று கேட்டார்கள்.
கொள்கையை முன் நிறுத்தக் கூடிய இயக்கம்
அதுவும் அய்யா அவர்கள் மறைந்த ஏறத்தாழ 37 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு பெரிய நிலையிலே அந்த இயக்கம் இருக்கிறது என்பது மட்டுமல்ல.
உலகளாவிய நிலையிலே இந்த இயக்கம் இருக்கிறது. இன்று மாலை நாம் விடுதலை படிக்கத் தவறியிருக்கின்றோம். காரணம் நமக்கு இன்னும் வந்து கிடைக்கவில்லை.
ஆனால், அமெரிக்காவில் மற்ற வெளிநாடுகளில் இருக்கக் கூடியவர்கள் இன்று மாலை விடுதலையைப் படித்து விட்டார்கள். உடனே அங்கிருந்து அவர்கள் பேசுகிறார்கள். எல்லா செய்திகளைப் பற்றியும் அந்த அளவிற்கு இந்த இயக்கம் கொள்கையை முன்னிறுத்தக் கூடிய இயக்கம். சாதாரணமான இயக்கமல்ல.
எனவே, கொள்கையை முன்னிறுத்தக்கூடிய இயக்கம். இவ்வளவு சிறப்பான அளவுக்கு வளர்ந்து வருகிறதென்றால் அதற்குக் காரணம் நம்முடைய தோழர்கள் மத்தியிலே இருக்கின்ற கட்டுப்பாடு, கட்டுப்பாடு, கட்டுப்பாடு!
கட்டுப்பாட்டை கடைப் பிடிக்கின்ற காரணத்தால்
ஆகவே அந்தக் கட்டுப்பாட்டை நாம் கடைப்பிடிக்கின்ற காரணத்தால்தான் எவ்வளவு பெரிய மலையாக இருந்தாலும் இந்த சிறு உளி அதனை கெல்லி எறியக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது (கைதட்டல்).
அதை எல்லோரும் தோழர்கள் நன்றாக மனதிலே வைத்துக்கொள்ள வேண்டும். என்றைக்குக் கட்டுப்பாடு இல்லையோ, அது எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் அது இலட்சக் கணக்கிலே கோடிக் கணக்கிலே இருந்தாலும் கூட, அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இராணுவத்தினுடைய பெருமையே அந்தக் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் கட்டுப்பாடு என்று சொல்லுகின்ற நேரத்திலே இராணுவக் கட்டுப்பாடு என்று சொல்லுவார்கள். இராணுவக் கட்டுப்பாட்டுக்கு மேலே ஒரு கட்டுப்பாடு உண்டா என்றால் உண்டு. அதுதான் பெரியார் கட்டுப்பாடு (கைதட்டல்).
பெரியாரின் கட்டுப்பாடு
பெரியாரின் கட்டுப்பாடு இராணுவக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. நான் அடிக்கடி சொல்வேன். கேள்வி பதிலில் சொல்லிருக்கின்றேன். குற்றாலத்தில் மற்ற இடங்களில் கூட சொல்லியிருக்கின்றேன்.
என்னை சிலர் கேலி பண்ணினார்கள். அதிக பகுத்தறிவுவாதிகள் இவர் சொல்லுகின்றார். எனக்கு சொந்த புத்தியில்லை, பெரியார் தந்தை புத்திதான்; என்று சொலுகிறாரே. இவர் பகுத்தறிவாளர் இப்படி சொல்லலாமா? என்று கேட்டார்கள்.
அதற்கு நான் விளக்கம் சொன்னேன், ஆம்! எனக்கு சொந்த புத்தியில்லை, பெரியார் தந்த புத்திதான் எனக்கு உண்டு. காரணம் சொந்த புத்திக்கு சபலம் உண்டு, சொந்த புத்திக்கு சுயநலம் உண்டு, சொந்த புத்திக்கு கோளாறு வரும் (கைதட்டல்).
பெரியார் தந்த புத்திக்கு சுயநலம் கிடையாது. (கைதட்டல்). சபலம் கிடையாது (கைதட்டல்) அதற்கு இலக்கு உண்டு.
அந்த இலக்கை அடைய எந்த விலையையும் கொடுக்க அது தயாராக இருக்கும். ஆகவே அந்தக் கட்டுப்பாட்டை நாம் தெளிவாக உணர வேண்டும்.
அய்யா அவர்கள் சொன்னதை அண்மைக்காலத்தில் இந்த கலந்துரையாடல் கூட்டங்களில் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். நேற்று கரூரில் கூட தோழர்கள் துண்டறிக்கையாக அழகாக அச்சடித்துக் கொடுத்-திருக்கின்றார்கள்.
-----------தொடரும்.. "விடுதலை"4-7-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment