Search This Blog
12.7.09
உலக நாடுகள் தூரப்பார்வை -மெக்சிகோ-மைக்ரோனேசியக் கூட்டு நாடுகள்-மால்டோவா-மொனாக்கோ
மெக்சிகோ
பழங்கால நாகரிகங்களான ஓல்மெக், டோல்டெக், மயன் மற்றும் அஜ்டக் ஆகியவற்றின் பிறப்பிடமாக மெக்சிகோ திகழ்கிறது. அஸ்டன் பேரரசு தன் எல்லையை விரிவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், 1519 இல் ஸ்பெயின் நாட்டினர் அப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஸ்பெயின் நாட்டுத் தளபதி ஹெர்மன் கோர்டஸ் என்பார் போரிட்டு அஸ்டெக் தலைநகரம் டெனோச்சிட்டிடியனை 1521 இல் கைப்பற்றியதால், அஜ்டெக் பேரரசின் சகாப்தம் முடிவடைந்தது. ஸ்பானியர்கள் மயன் நாகரிகம் பரவியிருந்த ஏனைய பகுதிகளையும் கைப்பற்றி 1681 ஆம் ஆண்டில் மெக்சிகோ நாடும் ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியானது. புதிய ஸ்பெயினின் ராஜ்யப் பகுதியாகி விட்டது.
1810இல் ஸ்பெயின் நாட்டை எதிர்த்து முதல் விடுதலைக் குரல் எழுப்பப்பட்டது. மெக்சிகோவின் விடுதலை பற்றிய பேச்சுகள் 1821இல் தொடங்கப் பட்டு 1823இல் விடுதலை அளிக்கப்பட்டது. 1846 முதல் 1848 வரை நடந்த மெக்சிகன் போரின் விளைவாக, டெக்சாஸ் மாகாணத்தை அமெரிக்க அய்க்கிய நாடுகளிடம் பறிகொடுக்க நேர்ந்தது. போர் முடிந்த பிறகு நடந்த பேச்சு வார்த்தை உடன்படிக்கைகளின் படி, இன்றைக்கு அமெரிக்காவின் மேற்கு, தென்மேற்குப் பகுதிகளில் உளள ஏராளமான பகுதிகளை அமெரிக்காவுக்குத் தாரை வார்க்க நேர்ந்தது.
மத்திய அமெரிக்கப் பகுதியில் அமைந்துள்ள இந் நாட்டின் பரப்பளவு 19 லட்சத்து 72 ஆயிரத்து 550 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள் தொகை ஒரு கோடியே 75 லட்சம் ஆகும். ஸ்பானிஷ் மொழியும் மயன் காலப் பழைய மொழிகளும் பேசப்படுகின்றன. 92 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள். 16-9-1810 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இந்நாட்டில், கூட்டாட்சிக் குடியரசு ஆட்சி முறை உள்ளது. அதிபர் மட்டுமே நாட்டின் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் உள்ளார்.40 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளனர். 25 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.
மைக்ரோனேசியக் கூட்டு நாடுகள்
வடபசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களில் பாலினேசியர்களும் மைக்ரோ னேசியர்களும் வாழ்ந்து வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் வந்து சேர்ந்த ஸ்பெயின் நாட்டினர் இத் தீவுகளைத் தங்கள் நாட்டின் குடியேற்றப் பகுதியாக அறிவித்துக் கொண்டனர். பசிபிக் தீவுகள் பற்றி அய்.நா. மன்றம் அறிவித்த முறையின்படி மார்ஷல் தீவுகளில் செய்தது போன்றதொரு முறையில் அய்.நா. மன்ற ஆளுகைக்கு இத் தீவுகள் எடுத்துக் கொள்ளப் பட்டன.
1979இல் கைமரோனேசியன் தீவுகள் கூட்டமைப்பு சுயாட்சி அடைந்தது. 1983 இல் அமெரிக்காவுடன் சுதந்திரமாக இணைந்து ஒருங்கிணைந்த முறைக்கு ஒப்புதல் அளித்தது. 1986 இல் விடுதலை அடைந்தது. 1991 இல் மைக்ரோனேசியன் கூட்டமைப்பு அய்.நா. மன்றத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்தது.
மொத்தமே 702 சதுர கி.மீ.பரப்பு உள்ள இந்நாட்டில் போன்பெய், சூக், யாப், கோஸ்ரே ஆகிய நான்கு வகைத் தீவுக் கூட்டங்கள் சேர்ந்தவை. இவற்றில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். பாதிப்பேர் ரோமன் கத்தோலிக்க மதத்தையும் 47 விழுக்காட்டினர் புரொடஸ்டன்ட் மதத்தையும் பின்பற்றுபவர்கள். 89 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்கள். நாட்டின் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் அதிபரே உள்ளார்.27 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். 16 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.
மால்டோவா
19ஆம் நூற்றாண்டில் மால்டேவியா ஒட்டாமான் துருக்கியர்களின் ஆட்சிக்குக்கீழ் 16 ஆம் நூற்றாண்டில் இருந்தனர். 1791, 1812 ஆகிய ஆண்டுகளில் இந்த நாட்டின் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. மீதியிருந்த பகுதிகளை 1918 இல் ரோமேனியா கைப்பற்றிக் கொண்டது.
1924இல் சோவியத் சோஷலிசக் குடியரசு அமைக்கப்-பட்ட போது மால்டோவியா தன்னாட்சிக் குடியரசாக அமைக்கப்பட்டது. 1991இல் சோவியத் நாடுகள் உடைந்த பிறகு மால்டேவியக் குடியரசு சுதந்திரப் பிரகடனம் செய்து தனித்த நாடாகியது. தன் நாட்டின் பெயரை ரோமானிய உச்சரிப்புக்கு ஏற்றவாறு மால்டோவா எனவும் மாற்றிக் கொண்டது.
அய்ரோப்பாவில் மிகவும் ஏழை நாடு மால்டோவா. முன்னாள் சோவியத் ஒன்றிய உறுப்பு நாடான இந்நாட்டில்தான் கம்யூனிஸ்ட் ஒருவரைக் குடியரசுத் தலைவராக 2001 இல் தேர்ந்தெடுத்துள்ளது.
33 ஆயிரத்து 83 சதுர கி.மீ. பரப்பு உள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 45 லட்சம் ஆகும். 98 விழுக்காடு மக்கள் கீழைப் பழமைவாத நம்பிக்கை கொண்டவர்கள். ஒன்றரை விழுக்காடு அளவுக்கு யூதர்கள் உண்டு.
மால்டோவிய மொழிதான் ஆட்சி மொழி. மக்கள் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்கள். 80 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 8 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.
மொனாக்கோ
இத்தாலியைச் சேர்ந்த ஜெனோவா நகரின் புகழ் பெற்ற கிரிமால்டி குடும்ப வழியைச் சேர்ந்த பிரான்காய்ஸ் கிரிமால்டி என்பவர், மொனாக்கோவை 1297இல் கைப்பற்றிக் கொண்டார். பிறகு 1524 முதல் 1641 வரை கிரிமால்டி குடும்பம் ஸ்பெயின் நாட்டுடன் கூட்டும் உறவும் வைத்துக் கொண்டதால் மொனாக்கோ நாடு ஸ்பெயின் நாட்டின் பாதுகாப்பில் அடங்கியதாகிவிட்டது.
மொனாக்கோவின் மன்னர் இரண்டாம் லூயி 1949இல் மறைந்த பிறகு இளவரசரான மூன்றாம் ரெய்னியர் ஆட்சிக்கு வந்தார். 1956இல் ஹாலிவுட் நடிகையான கிரேஸ் கெல்லி என்பாரை மணந்து கொண்டார்.
குடிக்கோனாட்சி நடக்கும் இந்நாட்டின் பரப்பளவு 2 சதுர கி.மீட்டருக்கும் குறைவு. மொனாக்கோ நகரம்தான் நாடே. இதில் 33 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்கர். பிரெஞ்ச் ஆட்சி மொழி. இங்கிலீசும் இத்தாலி மொழியும் பேசப்படுகின்றன. மக்களில் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்கள். 22 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.இந்த நாட்டில் 1. 7 கி.மீ. நீள ரயில் பாதையும் 50 கி.மீ. சாலைகளும் உண்டு.
--------------------"விடுதலை"8-7-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment