Search This Blog

4.7.09

ஈழம் நிலவரம் கலவரம்




இலங்கைத் தீவு தமிழர்களுக்குரியது; அது சிங்கள இனத்துக்குக் கைமாறி தமிழர்கள் இரண்டாம் தரக் குடிகளாக ஆக்கப்பட்டனர்.

பல நாடுகளின் இராணுவத்துணையோடு தமிழினம் அழிவின் விளம்பிற்குத் தள்ளப்பட்டுவிட்டது.

எங்களுடைய போர் விடுதலைப்புலிகளோடுதானே தவிர ஈழத் தமிழர்கள் மீதல்ல என்று மேதா விலாசமாக பேசினார்.

அவர் சொன்ன அந்த யுத்தம் முடிந்து 45 நாள்கள் ஓடி விட்டன. அவர் சொன்னபடி விடுதலைப்புலிகளைத்தான் முடித்து விட்டாரே - ஈழத் தமிழர்களின் வாழ்வுக்கு அவர் நகர்த்திய காய்கள் என்ன?

இன்னும் கால் நூற்றாண்டுக்கு ஈழத் தமிழர்களில் இளைஞர்கள் இருக்கக் கூடாது என்ற திட்டமிட்டு, தமிழின இளைஞர்களைத் தனிமைப்படுத்திக் கசாப்புச் செய்வதுதானா?

இளம் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி தமிழினம் என்றாலே ஓர் கலப்பு இனம் என்கிற முத்திரையைக் குத்தத் துடிப்பதுதானா?

போரில் ஊனமுற்ற அந்தப் பரிதாபத்துக்குரிய தமிழர்களுக்கு மருத்துவ உதவி உண்டா? ஒரு வேளை ஒழுங்கான உணவுதான் உண்டா? குடிநீர் வசதியுண்டா? கழிப்பறைகள்தாம் உண்டா?

உண்டா, உண்டா, உண்டா என்று கேள்வியைக் கேட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒன்றும் தமிழரல்லர் சிங்களர்தான். பெயர் சரத்நந்தா சில்வா, போர் நடைபெற்ற இடம் முகாம்களில் முடங்கிக் கிடந்த தமிழர்களைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கவில்லையா! இந்தக் கொடுமையை எடுத்துக் கூற வார்த்தைகள் கிடைக்கவில்லை என்று குமுறினாரே! இந்த மக்களுக்கு மிகப் பெரிய கொடுமையினை இழைந்து விட்டோம் என்று கண்ணீர் விட்டாரே.

அய்.நா. செயலாளர் பான்கீமூன் இது போன்றதொரு பேரவலத்தை நான் இதற்குமுன் கண்டதில்லை என்று கண்ணீர் விடாத குறையாகக் கூறினாரே!

முகாம்களில் முடமாக்கப்பட்டுக் கிடக்கும் தமிழர்களில் 24 ஆயிரம் பேர்களுக்கு அம்மை நோயாம்; 4000 பேர்களுக்கு மஞ்சள் காமாலை நோயாம்; 5 பேர் தங்கக் கூடிய குடிசையிலே 20 பேர்களாம். இவர்களைக் கண்காணிக்க 1200 சிங்கள இராணுவத்தினராம்.

போராலும் நோயாலும் செத்து மடியட்டும் ஓர் இனம் என்ற ராஜபக்சே என்னும் இட்லர் முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. இவ்வளவும் செய்து விட்டு, மிகப் பெரிய உன்னதப் போரில் தாம் ஈடுபட்டதாக அங்கவஸ்திரத்தை இழுத்து விட்டுக் கொண்டு பேசுகிறார். பெரிய பெரிய வார்த்தைகளை அதற்காக பயன்படுத்துகிறார்.

“The Largest Humanitarian Rescue Operation in Human History” மனித குல வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கையில் கடத்தப்பட்ட மக்களைக் காக்கும் மகத்தான நடவடிக்கையை அவர் மேற்கொண்டாராம்.

கசாப்புக் கடைக்காரன் கடைக்குப் பெயர் கருணாமூர்த்தி நிலையமாம் அதனை நாம் நம்பித் தொலைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

இப்படிப்பட்ட உத்தமப்புத்திரன் சர்வதேச ஊடகக்காரர்களை உள்ளேவிட மறுப்பது ஏன்? மனித உரிமை நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் கால்கள் அந்தப் பூமியில் படக்கூடாதுஎன்று படபடப்பது ஏன்?

முகாம்களில் உள்ள தமிழர்கள் 180 நாள்களில் அவரவர் சொந்த இல்லங்களுக்குத் திரும்பிட ஏற்பாடு செய்வதாக சண்ட பிரசண்டம் செய்தாரே இத்திசையில் ஒரே ஒரு அங்குலம் முன்னேற்றம் உண்டா? தமிழர்கள் இல்லங்கள் எல்லாம் சிங்களவர்கள் ஆக்ரமித்துக் கொண்டுள்ளார்களே எப்படி அங்கு தமிழர்களைக் குடியமர்த்தப் போகிறாராம்? கிளிநொச்சி கிரானிக்கா என்றும், முல்லைத் தீவினை மூலதூவ என்றும் சிங்களப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளனவாம்.

வன்னிப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்யப் போகிறாராம் ஓகோ நல்ல புத்தி சுவர் ஏறிக் குதிக்கிறதோ!

19 பேர் கொண்ட குழு ஒன்றை அறிவித்துள்ளாரே பரவாயில்லையே அதிபர் அல்லவா _ திட்டம் தீட்டிச் செயல்படுகிறாரோ! அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் அல்ல.

அந்த 19 பேர்கள் யார் யார்?

அதிபரின் ஆலோசகர் உடன்பிறப்பு பசில் ராஜபக்சே தான் அந்த மீட்டுருவாக்கக் குழுத் தலைவராம்! ஆமாம், ஆட்டு மந்தைக்கு நரிதான் சட்டாம்பிள்ளை!

அப்புறம்! இன்னொரு உடன்பிறப்பு இருக்கிறாரே - இராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே குழுவில் ஓர் உறுப்பினர், இராணுவத் தளபதி பொன்சேகா உள்ளிட்ட பத்து பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.

ஓகோ! போர்க்கால அடிப்படையில் மீட்டுருவாக்கப் பணிகள் நடக்கும்போலும்! மொத்தத்தில் 19 பேர் கொண்ட அந்த குழுவில் 18 பேர் சிங்களர்கள் மற்றும் ஒருவர் முசுலிம். இந்தத் தமிழர் விரோதப் படைதான் வன்னிப் பகுதியை மீட்டுருவாக்கம் செய்யப் போகிறதாம்.

திட்டத்துக்குப் பெயர் என்னவாம்? வடக்கின் வசந்தம்! ஆம்! ஊமைக்குப் பெயர் தேன்மொழி குருடருக்குப் பெயர் கண்ணாயிரம். முடவனுக்கு பெயர் நடராஜன்! என்றிருப்பதில்லையா _ அதே போன்றதுதான்.

சரி... என்ன அரசியல் தீர்வு காணப் போகிறார்கள்? இதற்கு முன் பல திட்டங்கள் பேசப்பட்டு இருக்கின்றன. ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட 13 ஆவது சட்டத் திருத்தம்; திருமதி சந்திரிகாவால் முன் வைக்கப்பட்ட 2000 ஆவது ஆண்டு அரசரமைப்புச் சட்ட திருத்தம்; 64 நாடுகளும், சிறீலங்கா அரசும் தமிழ்ப் போராளிகளும் பங்கு கொண்டு இயற்றிய ஆஸ்லோ பிரகடனம் (5.12.2002) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேயால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் நிபுணர் குழாம் அதிகாரப் பரவலாக்கம் பற்றித் தயாரித்த அறிக்கை.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, பரிசீலிக்கப்பட்டு. உள்நாட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒன்றுபட்ட சிறீலங்கா ஒரு கூட்டாட்சி அமைப்புடையதாக இருக்கும்.

ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று

கல்வி, வேலை வாய்ப்புகளில் தமிழர்களின் எண்ணிக்கைக்குரிய விகிதாசாரம்

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு

அதிபர் மகிந்த ராஜபக்சே நியமித்த நிபுணர்குழு பரிந்துரைத்தபடி சிறீலங்கா பல இன பல மத பன்மொழி நாடாகயிருக்க வேண்டும். ஒரு இனத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாக இருந்தால் மற்ற இனங்களிலிருந்து (தமிழர், முசுலிம்) இரு துணை ஜனாதிபதிகள் இருக்க வேண்டும். நாடாளுமன்றம் மக்களவை, செனட்சபை என்று இருக்க வேண்டும். அந்த இரு துணை ஜனாதிபதிகளில் ஒருவர் மாநிலப் பிரதிநிதிகளை கொண்ட செனட் சபைக்குத் தலைமை வகிக்க வேண்டும். மற்றொரு ஜனாதிபதி பெரும் பதவிகளுக்கானஆணைக் குழுவின் தலைவராக இருக்க வேண்டும். என்றெல்லாம் நிபுணர் குழு கூறியிருக்கிறது.

அரசியல் தீர்வு என்றால் இவையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இன்றைய நிலையில் இது ஒரு தற்காலிக ஏற்பாடாக அமையலாம் என்றாலும், இனத்தின் அடிப்படையில் தனித்தனி நாடு என்பதே இயற்கையின் கட்டளை என்பதை நாளைய வரலாறு கூறும்.

------------------4-7-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: