Search This Blog

4.7.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - லீச்டென்ஸ்டீன்-லிதுவேனியா-லக்சம்பர்க்-மாசிடோனியா

லீச்டென்ஸ்டீன்

லீச்டென்ஸ்டீன் எனும் இச்சிறு நாடு 1719இல்தான் உருவாக்கப்பட்டது. பண்டைக் கால ரோமப் பேரரசின் பிரபுத்வப் பகுதிகளான வாடஸ் மற்றும் ஷெல்லன்பர்க் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து இந்த நாடு உருவாக்கப்பட்டது. 1815 இலிருந்து 1866 வரையிலான காலகட்டத்தில், லீச்டென்ஸ்டீன், ஜெர்மனி கூட்டாட்சியில் அங்கம் வகித்தது. பிறகு 1866 இல் தனிநாடாக விடுதலை பெற்றது.

அய்ரோப்பாவின் மய்யப் பகுதியில் ஆஸ்திரியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நாடு வெறும் 160 சதுர கி.மீ. பரப்பு உடையது. 34 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

ரோமன் கத்தோலிக்கர்கள் 76 விழுக்காடு, புரொடஸ்டன்ட்கள் 7 விழுக்காடு உள்ளனர். மீதிப் பேர் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக உள்ளனர். ஜெர்மன் மொழி ஆட்சி மொழி. நூற்றுக்கு நூறு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள்.

இளவரசர் இரண்டாம் ஹான்ஸ்ஆடம் 1984 ஆகஸ்ட் 26 இல் நாட்டின் அதிகாரப் பொறுப்பில் அமர்ந்தார். ஆட்சித் தலைவராக ஓட்மர் ஹாசியர் 2001 முதல் இருந்து வருகிறார்.

இந்நாட்டில் சுமார் 18 கி.மீ. தூரத்திற்கு இருப்புப் பாதையும் 323 கி.மீ. தூரத்திற்குச் சாலைகளும் போடப் பட்டுள்ளன.

லிதுவேனியா

அய்ரோப்பாவின் வலுவான பேரரசுகளாக 14 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை லிதுவேனியாவும் போலந்தும் விளங்கி வந்தன. இவை இரண்டும் கூட்டாட்சி அமைத்து 200 ஆண்டுகளுக்கு நீடித்தன. 1795 இல் போலந்து பிரிக்கப்பட்டபோது லிதுவேனியாவுக்கு ரஷியா சொந்தம் கொண்டாடியது. முதல் உலகப் போரின் முடிவில், ரஷியாவின் வலுக்குறைவைப் பயன்படுத்திக் கொண்ட லிதுவேனியா 1918 இல் சுதந்திரப் பிரகடனம் செய்தது.

சுதந்திர நாடாக இருந்த நாட்டை 1940 இல் சோவியத் ஒன்றியம் தன்னுடன் இணைத்துக் கொண்டது. 11-3-1990 இல் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த முதல் நாடாக லிதுவேனியா, விடுதலையை அறிவித்துக் கொண்டது. ஆனால் மாஸ்கோ அதிகார மய்யம் இதனை ஒப்பவில்லை. 1991 இல் சோவியத் ஒன்றியம் உடைபட்ட பிறகுதான் விடுதலைப் பிரகடனத்தை ஏற்று 1993 இல்தான் தன் போர்ப்படைகளைத் திரும்பப் பெற்றது.
அதன் பிறகு லிதுவேனியா, தன் நிதி ஆதார நிலையைச் சீர் செய்யத் தொடங்கியது. அய்ரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. நாட்டோ அமைப்பில் சேர்ந்தது.
லாட்வியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே பால்டிக் கடல் எல்லையில் அமைந்துள்ள லிதுவேனியா, 65 ஆயிரத்து 260 சதுர கி.மீ. பரப்பு உள்ளது. அதன் மக்கள் தொகை 36 லட்சம் ஆகும். பெரும்பான்மை மக்கள் கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

ஆட்சி மொழியாக லிதுவேனிய மொழி இருக்கிறது. போலிஷ் மொழியும் ரஷிய மொழியும் பேசப்படுகின்றன. மக்கள் தொகை முழுவதும் கல்வியறிவு பெற்றவர்கள். நாட்டின் தலைமைப் பொறுப்பில் பிரதமர் உள்ளார்.
5 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாத நிலையில் உள்ளனர்.

லக்சம்பர்க்

963 ஆம் ஆண்டில் லக்சம்பர்க் சுதந்திர நாடாகியது. ஆர்டன்னஸ் பிரபு தனக்குச் சொந்தமான நிலங்களை ரோமானியக் கோட்டையான லுசிலின்பர்தக்கிற்குப் பதிலாக பரிவர்த்தனை செய்து கொண்டதால், லக்சம்பர்க் விடுதலை பெற்ற பகுதியானது. இந்தக் கோட்டைதான் லக்சம்பர்க் ஆகப் பிறப்பெடுத்தது.

2 ஆயிரத்து 586 சதுர கி.மீ. பரப்பு உள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 5 லட்சம் ஆகும். 87 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்கர்கள். மீதிப் பேர் புரொடஸ்டன்ட், யூத, முசுலிம் மதத்தினர்.

லக்சம்பர்கிஷ் என்ற மொழியைத் தேசிய மொழியாகவும், ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகளை ஆட்சி மொழியாகவும் வைத்துக் கொண்டுள்ளனர். மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள்.

குடிக்கோனாட்சி நடக்கும் இந்நாட்டின் மன்னர் டியுக் ஹென்றி. அரசுத் தலைவராகப் பிரதமர் இருந்து வருகிறார். 5 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

மாசிடோனியா


பொது ஆண்டுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு மகா அலெக்சாண்டர் வெற்றி கொண்ட நாள் முதல் மாஸ்டன் புகழ் பெறத் தொடங்கியது. பிறகு ரோமப் பேரரசின் அங்கமாக மாசிடோனியா ஆனது. தொடர்ந்து பைஜான்டைன் பேரரசு, ஒட்டோமரன் பேரரசு ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் நிலை ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில், மாசிடோனியாவைக் கைப்பற்ற பல போராட்டங்களும் போட்டிகளும் உண்டாகின. காரணம், அந்நாட்டின் வளமும் இருப்பிடத்தின் முக்கியத்துவமுமே!

1991 இல் மாசிடோனியா விடுதலையைப் பிரகடனப் படுத்தியது. அந்நாட்டில் வசித்து வந்த அல்பேனிய இனத்தவர் தங்களுக்குத் தனிநாடு கேட்டனர். தன் நாட்டின் ஒரு மாகாணத்திற்கு மாசிடோனியா என்ற பெயர் இருப்பதால், இந்த நாடு அந்தப் பெயருடன் விளங்குவதையும் கிரீஸ் நாடு எதிர்த்தது. ஆனாலும் யுகோஸ்லேவியாவிலிருந்து பிரிந்துவிட பொது வாக்கெடுப்பின் முடிவுகள் அமைந்திருத்ததால், 8-9-191 இல் விடுதலை அறிவிக்கப் பட்டது.
கிரீசுக்கு வடக்கே, தென்கிழக்கு அய்ரோப்பாவில் அமைந்துள்ள இந்த நாட்டின் பரப்பு 25 ஆயிரத்து 333 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 21 லட்சம். மக்களில் 32 விழுக்காட்டினர் மாசிடோனியப் பழமை வாத மதத்தினர். முசுலிம்கள் 16 விழுக்காட்டினர். 50 விழுக்காடு மக்கள் மதம் ஏதும் இல்லாதவர்கள்.

மாசிடோனிய மொழியை 68 விழுக்காடு மக்களும் அல்பேனிய மொழியை 25 விழுக்காடு மக்களும் பேசுகின்றனர். நாட்டின் அதிபராக குடியரசுத் தலைவரும் ஆட்சித் தலைவராகப் பிரதமரும் உள்ளனர்.

29 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். 38 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

-------------------------"விடுதலை" 4-7-2009

0 comments: