Search This Blog

12.7.09

ஜீயர் கடத்தப்பட்டார் என்ற செய்தி ஏன் வந்தது? அதன் பின்னணி என்ன?




ஜீயர்


திருச்சி சீரங்கத்தில் மாயமான மடாதிபதி லட்சுமண ராமானுஜ சீடரை (வயது 84) மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காவல்துறையினர் கொண்டு வந்து நிறுத்தினார்களாம் ஆள்கொணர்வு மனுவின் அடிப்படையில்.

தன்னை யாரும் கடத்தவில்லை என்று ஜீயர் நீதிமன்றத்தில் கூறினாராம்.

பலே, பலே! ஜீயர்கள் சங்கராச்சாரியார்களின் நிலைமைகளைப் பார்த்தீர்களா? இப்படி செய்திகள் வருவதுகூட எந்த அளவுக்கு மரியாதைக்குரியது! ஜீயர் கடத்தப்பட்டார் என்ற செய்தி ஏன் வந்தது? அதன் பின்னணி என்ன?

நெருப்பு இல்லாமல் புகையுமா? சீரங்கத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் அவர் வெளியேறவேண்டிய அவசியம் என்ன? அதுவும் ஜீயர் ஆயிற்றே அவர்களுக்கெல்லாம் பக்தக் கோடிகள் உண்டே!

இவர் மாயமானது பற்றி பத்திரிகைகளில் எப்படி எப்படியெல்லாம் செய்திகள் வெளிவந்தன! அவரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட வேண்டிய அவசியம் என்ன?

சங்கராச்சாரியார்கள் கோர்ட்டுக்கும், மடத்துக்குமாக அலைகிறார்கள்.

அவர்கள்மீது கொலைக் குற்றங்கள், சிறைவாசம் அதற்குப் பின் ஜாமீனில் விடுதலை.

இவர்கள் எல்லாம் மக்களுக்குச் சொர்க்கவாசல்களைக் காட்டுபவர்களாம்! மற்றவர்களுக்குச் சொர்க்கவாசலைக் காட்டுவது அப்புறம் இருக்கட்டும்; முதலில் இவர்கள் சிறைவாசல் செல்லாமல் இருக்க முடிந்ததா?

பக்தி குறைந்ததால் நாட்டில் ஒழுக்கம் கெட்டுவிட்டது என்றும், பக்தி வளர்ந்ததால்தான் மக்களிடத்திலே நல்லொழுக்கம் நிலவும் என்றும் நீட்டி முழங்கும் சாஸ்திரிகளும், உபந்நியாசங்களும், ஆன்மீக மலர்களை வெளியிடும் பத்திரிகாதிபதிகளும், இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? ஜீயர்கள், சங்கராச்சாரியார்களின் கெதியே இப்படி சந்தி சிரிக்கிறதே_ இதற்குமேல் ஒழுக்கமும், நன்னடத்தையும் எந்த ஆன்மீகத்திலிருந்து பொத்துக்கொண்டு குதிக்கப் போகிறதாம்?

எந்தப் பாவத்தையும் செய்துவிட்டு, அதற்குரிய பிராயச்சித்தங்களைச் செய்துவிட்டால் நொடிப் பொழுதில் பாவங்கள் கரைந்துபோகும் என்கிற ஆன்மீகச் சரக்குகள் இருக்கும்வரை, இப்படி பிரச்சாரம் செய்வோர் இருக்கும்வரை ஒழுக்கமாவது மண்ணாங்கட்டியாவது!

---------------- மயிலாடன் அவர்கள் 1-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: