Search This Blog

12.7.09

தமிழகத்தினுடைய பொதுப்பிரச்சினையில் ஒன்றுபட்டு நில்லுங்கள் !




தமிழர்களே! தமிழ்நாட்டுத் தலைவர்களே! தமிழகத்தினுடைய பொதுப்பிரச்சினையில் ஒன்றுபட்டு நில்லுங்கள் தமிழர் தலைவர் வேண்டுகோள்!

_
தமிழர்களே! தமிழ்நாட்டுத் தலைவர்களே! தமிழ்நாட்டினுடைய பொதுப்பிரச்சினையில் ஓரணியில் நில்லுங்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்து விளக்கவுரையாற்றினார்.

30.6.2009 அன்று திருப்பூரில் திருப்பூர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இன்னொரு இயக்கத்தில் என்ன சொல்லுகிறார்கள்? இன்னொரு இயக்கத்தில் என்ன சொல்லுகிறார்கள்? தொண்டர்கள் என்னுடைய கட்டுப்பாடு என்ன என்பது தெரியாததாலே அவர்கள் தவறாக நடந்துகொண்டார்கள்.

இன்னும் யாருக்காவது குழப்பம் என்றால், யார் விடுதலை படிக்க வில்லையோ அவர்களுக்குக் குழப்பம் இருக்கும். யார் நமது கருத்து கேட்கவில்லையோ அவர்களுக்குக் குழப்பம் இருக்கும்.


விடுதலை படித்தால் குழப்பம் வருவதற்கு வாய்ப்பே இல்லையே. உலகத் தமிழர்களில் பல பேருக்குத் தெரியவில்லை. கலைஞர் ஒண்ணும் செய்யவில்லை, கலைஞர் ஒண்ணும் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

கலைஞர் பதவியை விட்டுவிட்டு வரவேண்டியதுதாங்க. நம்மிடமே வெளிநாட்டில் இருக்கின்ற தமிழன். கலைஞர் பதவியை விட்டு, விட்டு தீவிரமாக இறங்க வேண்டும்ங்க மக்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று சொல்லுவார்கள்.

ஒரே ஒரு கேள்வி, கோபித்துக்கொள்ளாதீர்கள்!

ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், நீங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் நமக்கென்ன தயவு தாட்சண்யம் இருக்கிறது? இவ்வளவு பேர் வீரம் பேசுகிறவர்கள் ஏன் கனடாவுக்குப் போயிருக்கிறீர்கள்? இவ்வளவு வீரம் பேசுகிறவர்கள் ஏன் வெளிநாட்டிற்குப் புலம் பெயர்ந்தீர்கள்

நீங்கள் தானே முதல் ஆளாகப் போயிருக்க வேண்டும் அங்கே. இப்பொழுதாவது அங்கே போகாமல் எங்களை முதலில் போகச் சொல்லுகிறீர்களே, முதலில் நீங்கள் போங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம்.

இல்லிங்க, எங்களுக்கு சில சிக்கல்கள் இருக்கிறது என்று சொல்லுகின்றார்கள். உனக்கே அவ்வளவு சிக்கல் இருக்கிறதென்றால், நேரடியாகப் பலன் பெறுகிறவர்கள் எங்களுக்கு எவ்வளவு சிக்கல்கள் இருக்கும்? எங்கள் நாட்டில் எங்கள் கொள்கைக்கு விரோதமாக இல்லாத ஓர் அரசாங்கம் வரவேண்டும் என்று பார்த்துக்கொண்டுதானய்யா ஆதரிக்க முடியும்.

ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவுவது? அய்யா அவர்கள் ரொம்ப அருமையாகச் சொன்னார். ஈழத் தந்தை செல்வா தந்தை பெரியார் அவர்களை சந்தித்து எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்.

அய்யா சொன்னார். ஓர் அடிமை இன்னொரு அடிமையை எப்படி காப்பாற்ற முடியும்ங்க? என்று கேட்டார். அதில் எல்லாமே அடங்கிப்போய் விட்டது. இருந்தாலும் எல்லாவற்றையும் நாம் எடுத்துக்கொண்டு செய்கின்றோம்.


884 டன் உணவுப் பொருள்கள் உள்ள வணங்காமண் கப்பல் நடுக்கடலில் நிறுத்திக் கொண்டு விட மறுக்-கிறார்கள். பொருள்கள் வீணாகிப் போய்விடுமோ மருந்துகள் வீணாகிப் போய்விடுமோ என்ற நிலையிலே கலைஞர் அவர்களிடம் போய் பேசினோம் நாங்கள். நாம் என்ன செய்யலாம் என்று கேட்டார். மறுபடியும் முயற்சி எடுங்கள் என்று எல்லாவற்றையும் சொன்னோம்; செய்தார். காரணம் என்ன? அவர் அடிப்படையில் தமிழர்; மனத்தால் தமிழர். அந்த உணர்வு ஜெயலலிதாவுக்கு வருமா? தமிழ்நாட்டுத் தலைவர்கள் முதலில் ஒன்று படவேண்டும்

திராவிடர் கழகம் தெளிவாக ஓர் உணர்வை உண்டாக்க வேண்டும்.

தமிழர்களே! தமிழ்நாட்டுத் தலைவர்களே! பொதுப்பிரச்சினைகள் அது சேது சமுத்திரகால்வாய் திட்டமாக இருந்தாலும், அது போல முல்லை பெரியாறு அணைத் திட்டமாக இருந்தாலும், காவிரி பிரச்சினையாக இருந்தாலும், பாலாற்றுத் திட்டமாக இருந்தாலும், அல்லது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமாக இருந்தாலும், அது போல பொதுப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், தமிழர்கள் தமிழ்நாட்டு நலனுக்காக இருக்கக் கூடிய திட்டங்கள் எல்லாம் ஆந்திரர்கள், கர்நாடகத்தவர்கள், கேரளத்தவர்கள், எப்படி எதிர்கட்சி ஆளுங்கட்சி என்று வித்தியாசம் பார்க்காமல் ஒரே குரலில் ஒரே அணியில் நிற்கிறார்களோ அதே போல தமிழ்நாட்டுத் தலைவர்களே நீங்கள் நிற்க வேண்டும் என்பதை திராவிடர் கழகம் வலியுறுத்திக்கொண்டே வருகிறது.

கேட்பதற்குத் தயாராக இல்லை. அப்படியானால் யாருக்குப் பெருமை என்று தனிப்பட்ட முறையில் நினைத்தால் என்ன லாபம்?

ராஜபக்சே தம்பி வருவதற்குள்...

கலைஞர் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இங்கிருந்து தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியை கலைஞர் அவசரமாக டெல்லிக்கு அனுப்பினார்.

எவ்வளவு தெளிவாக கலைஞர் பார்த்தார் என்றால் ராஜபக்சேவின் தம்பி, மற்றும் இலங்கை இராணுவ அமைச்சர் எல்லாம் டெல்லிக்கு வந்தார்கள். அவர்கள் வந்து நமது மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு போய் சொல்லுங்கள் என்று சொன்னார்.

இன்னொரு கடிதத்தை மத்திய அமைச்சர் ஆ.இராசாவிடம் கொடுத்து கொள்கை ரீதியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவிடம் பேசச் சொன்னார். இது தான் அந்த உணர்வு. அந்த உணர்வு வீணாகி விடக்கூடாது என்று சொல்லி விளக்கினார். இந்திய அரசுக்குப் புரிந்து போய் விட்டது

இப்பொழுது இந்திய அரசுக்கும் புரிந்து போய் விட்டது. சைனாகாரனை வைத்து நமக்குப் பெரிய தொல்லை கொடுக்கிறான் என்பது நாம் சொன்ன கருத்து இப்பொழுது தான் கொஞ்சம், கொஞ்சமாக விளங்குகிறது. இந்தியாவினுடைய இறையாண்மையைப் பற்றி இப்பொழுது மற்றவர்கள் பேசக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. துறைமுகத்திற்கு நமது அமைச்சர் கூட இல்லை. இப்பொழுது காங்கிரஸ் அமைச்சர் இருக்கின்றார். அப்படி இருந்தாலும் வணங்காமண் கப்பலுக்குள் இருப்பவர்களுக்குத் தண்ணீர் அனுப்பு, உணவு அனுப்பு, என்று சொன்னார். காரணம் நமது அணுகுமுறைதானே.

இன்றைக்கு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருப்பதால் தானே எதையாவது சொல்ல முடிந்தது. நமது அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்ததை ஒட்டித் தானே சொல்ல முடிந்தது. அதற்குத் தெளிவாக நீங்கள் வாக்களித்த காரணத்தினால் தானே உரிமை கொண்டாட முடிந்தது. எனவே அறிவு பூர்வமான சிந்தனை என்பது மிக முக் கியம்.
தி.மு.க., தி.க பணி உணர்ச்சி பூர்வமானது என்ன? உடனே தூக்கி எறிந்துவிட்டு வா என்பதா? நம்மோடு வந்து நிற்பது என்றால் நம்மோடு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாமே!

---------தொடரும் ....."விடுதலை" 10-7-2009

************************************************************************************************

புதிதாக எதையும் உருவாக்க முடியும்

தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத கட்சி ஒரு கட்சியாக இருக்க முடியுமா? கட்சிக்குத் தலைமைதான் இருக்க முடியுமா? எங்கள் கட்சியில் அவ்வளவு பேரும் தலைமைக்கு விரோதமாகப் போகிறார்கள் என்றால் போங்கள் என்று தான் சொல்லுவோமே தவிர, அய்யய்யோ இருங்கள் என்று சொல்லமாட்டோம். ஏனென்றால் புதிதாக எதையும் உருவாக்கிக் கொள்ளக் கூடிய தைரியம் இந்தத் தலைமைக்கு உண்டு. (கைதட்டல்)-அய்யா ரொம்பத் தெளிவாகச் சொல்லுவார். நாங்கள் அய்யா அவர்களிடம் கற்ற பாடம் தான். அய்யா என்ன சொன்னார் என்று கொஞ்சம் உரசிப் பார்த்தால் போதும். அய்யா அவர்களிடம் கேட்டார்கள், என்னங்க முக்கியமானவர்கள்மீது நட வடிக்கை எடுத்தால் என்ன ஆவது?
பட்டென்று அய்யா அவர்கள் பதில் சொன்னார்: எத்தனையோ ஊரில் என் கட்சி இல்லை. அதிலே இந்த ஊரில் என் கட்சி இல்லை. அவ்வளவுதானே தவிர இந்த இயக்கம் கட்டுப்-பாட்டோடு இந்தக் கொள்கைக்காக இருக்கும் என்று சொன்னார். நான் நிறைய சொல்லவேண்டியதில்லை. நீங்கள் தெளிவடைய வேண்டியவர்கள்.

(30.6.2009 திருப்பூர் கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தமிழர்தலைவர் பேச்சு)

--------------------------------------------------------------------------------------



தோழர்களே! இயக்கத்தை முன்னிலைப்படுத்துங்கள் உங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதீர்! தமிழர் தலைவர் வேண்டுகோள்!


ஆகவே தான் யார் எந்தப் பணியை செய்ய வேண்டுமோ அவர்கள் அந்தப் பணியிலே இருக்க வேண்டும்.

தி.மு.க இராணுவப் படை போல இருக்கிறது. திராவிடர் கழகம் சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ் என்று சொல்லக்கூடிய தூசிப்படை மாதிரி இருக்கிறது. எனவே இந்தப் பணியை செய்வதற்குரிய வாய்ப்பு எல்லா துறையினருக்கும் இருக்கலாம். இதற்கு மேலும் நம்மாள்கள் யாருக்காவது குழப்பம் என்றால் நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
நமது கழகத்திற்கு இரண்டு வழிகள் இருக்கிறது.Way in, Way out உள்ளே வருகிற வழி இருக்கின்றது. வெளியே போகிற வழி இருக்கிறது;

உள்ளே வருகிற வழி குறுகலாக இருக்கும். வெளியே செல்லுகிற வழி ரொம்ப அகலமாக இருக்கும். ஆகவே தாராளமாக யார் வேண்டுமானாலும் போகலாம். யாரையும் நாம் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த இயக்கம் யார் போனாலும் இருக்கும். தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டது போக இருக்கும். நாளை நாம் பாதை போட்டு இந்த இலட்சியத்தினுடைய தேவையும், கட்டுப்பாடும் மக்களை சிந்திக்க வைக்கும்.

விடுதலை கருவியை பாதுகாக்க வேண்டும்

நாளை 22 ஆம் நூற்றாண்டாக இருந்தாலும் 23ஆம் நூற்றாண்டாக இருந்தாலும் தந்தை பெரியாரின் கொள்கை வெற்றியின் நூற்றாண்டு-களாகத்தான் இருக்கும். ஆகவே விடுதலை அதற்கு ஒரு நல்ல கருவி. அந்தக் கருவியை நாம் பாதுகாக்க வேண்டும். தோழர்களே, யோசிக்காதீர்கள். 3000த்திலிருந்து 4000 சந்தாக்களை சேகரிக்கலாம். அய்யா சொல்லுகிற மாதிரி நீங்கள் தைரியமாய் கேளுங்கள். நான்கு பேர், அய்ந்து பேரை அழைத்து கொண்டு போய் கேளுங்கள். மக்களிடத்திலே இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற நிலைக்கு வாருங்கள். இங்கே மாவட்ட செயலாளர் பழ.அன்பரசு சொன்னார். நீங்கள் அடிக்கடி ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்படி வந்தால் வசதியாக இருக்கும் என்று சொன்னார்.
நான் என்ன ஊர் சுற்றாமல் இருக்கின்றேனா? நான் வருவதற்கு தயாராக இருக்கின்றேன். உங்களை சந்திப்பதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களை சந்தித்தால் என் பேட்டரி சார்ஜ் ஆகிறது. உங்க பேட்டரியும் ரீ சார்ஜ் ஆகிறது. அது நல்லது தான். அதனால் ஒன்றும் இல்லை. ஆனால், ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்திக்கச் சொல்லுகின்ற தலைவர்கள், செயலாளர்கள் எல்லாம் நீங்கள் தயவு செய்து மாதத்திற்கு ஒரு தடவையாவது அந்தந்த ஒன்றியத் தலைவர்கள் மற்றவர்களைப்போய் சந்திக்க வேண்டும். முதலில் எனக்கு கணக்கை எழுதி அனுப்புங்கள். (கைதட்டல்)

அய்ந்து நாள்கள் இயக்கத்திற்காகத் தொழிலை விட்டுவிடுங்கள் என்று சொல்லமாட்டோம். அய்ந்து நாள் உங்கள் சொந்த வேலையைப் பாருங்கள். ஆறாவது நாள் குடும்பத்தோடு செலவழியுங்கள்.

ஏனென்றால் குடும்பத்துக்காரர்களுக்கு கோபம் இருக்கக் கூடாது. ஏழாவது நாள் கழகக்-குடும்பத்தோடு செலவழியுங்கள். அந்தப் பணிகளை நீங்கள் சிறப்பாகச் செய்யுங்கள்.

தெருமுனைப் பிரச்சாரம்


கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் தெருமுனைப் பிரச்சாரத்தை நடத்துங்கள். காவல்துறையிடம் ஏதாவது சிக்கல் இருந்தால் உடனடியாக நீங்கள் தலைமைக் கழகத்திற்குத் தெரிவியுங்கள். நாங்கள் அதை சரிப்படுத்துவோம். ஏனென்றால் சில இடங்களில் அதற்கு முன்னால் சிக்கல் இருந்தது. தெரிந்த பின் சிக்கல் தீர்க்கப்பட்டது.

ஏராளமான தோழர்கள், தோழியர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்-சியைப் போல இவ்வளவு சிறப்பாக குறுகிய காலத்திலே நல்ல ஏற்பாட்டைச் செய்த அனைவருக்கும் என்னுடைய பாராட்டுதலையும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எப்பொழுதுமே நம்முடைய கழகத் தோழர்களிடம் தன்முனைப்பு இருக்கக் கூடாது, ஈ.கோ இருக்கக் கூடாது. குறிப்பாக பொறுப்பாளர்களிடம், யார் என்னை கேட்டார்களா? உன்னை கேட்டார்களா? என்று இருக்கக் கூடாது. இயக்கம் வளர வேண்டும். இயக்கத்தை தயவு செய்து முன்னிலைப்படுத்துங்கள். உங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ளாதீர்கள். நான் என்ற வார்த்தையே அய்யா அவர்களிடம் வராது. நாம் என்ற வார்த்தையைத் தான் அய்யா அவர்கள் பயன் படுத்துவார்கள்.

எனவே தயவு செய்து ஒருவருக்கு ஒருவர் நீங்கள் ஒத்துப்போக வேண்டும். ஒவ்வொருவரிடமும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-----------------------"விடுதலை" 11-7-2009

0 comments: