Search This Blog
2.3.09
அச்சத்தையே அறியாதவர் பெரியார்
மாணவர்களாகிய நீங்கள் எல்லாம் இன்பமயாமாக இருக்கும் இந்த மாலைநேரத்தில், நான் யாரைத் தலைவராக்க் கருதி இருக்கிறேனோ, யாரை மனிதருக்கெல்லாம் மனிதராகப் போற்றுகின்றேனோ, மகான் என்று செல்லமாட்டேன் காரணம் அவர் ஒரு பகுத்தறிவுவாதி-அந்தத்தலைவரின் படத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். என்னைச் சந்திக்க வந்த மாணவர்களும் அழைப்பிதழினிலே, நீங்கள் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைக்க இருப்பதைப் போடலாமா? என்று கேட்டார்கள். தாராளமாகப் போடுங்கள் என்று நான் சொன்னேன். இப்படி அவர்கள் ஒரு கேள்வியை ஏன் கேட்டார்கள் என்று கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஒன்று நான் வகிக்கும் பதவி காரணமாக இருந்திருக்கும். அல்லது இப்படிப் பட்ட தலைவரின் படத்தைத் திற்ந்து வைத்தால் அது ஒரு பிரச்னையாக ஆகிவிடும் என்று கருதக்கூடும் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்.
பெரியாரால் அச்சமின்றி வாழ்கிறோம்!
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி இப்படி ஒரு நிகழ்ச்சிகு வருகிறார் என்றால் சலசலப்புகள் வரும்; சஞ்சலங்கள் ஏற்படும்; படபடப்புகள் ஆயிரம் இருக்கும்; ஏளனக்காரர்கள் இருப்பார்கள். இன்றைய சூழ்நிலையில் இழந்த பேச்சுரிமைகள், எழுத்துரிமைகள் மீண்டும் கிடைத்திருக்கின்றன. அச்சமின்றி அனைவரும் வாழும் சூழ்நிலையில் இழந்த பேச்சுரிமைகள், எழுத்துரிமைகள் மீண்டும் கிடைத்திருக்கின்றன. அச்சமின்றி அனைவரும் வாழும் சூழ்நிலையை ஏற்பட்டிருக்கிறது. அச்சத்தையே அறியாத தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைக்க நான் திறந்த மனத்தோடு இங்கே வந்திருக்கின்றேன். என்னுடைய அருமைத் தலைவருகு எனது காணிக்கையைச செலுத்த வந்திருக்கிறேன்.
சட்டக் கல்லூரி மாணவர்களால்தான் அவர் பெருமையை அறிய முடியும். டாக்டர்களாக இருப்பவர்களுக்குக் கூட அவர் பெருமை தெரியாததற்குக்காரணம், ஆப்பரேஷன் தியேட்டரில் கூட தம்மேல் நம்பிக்கையில்லாமல் வெங்கடேசப்பெருமாள் படத்தை மாட்டி வைத்திருக்கும் டாக்டர்களை நாம் பார்த்திருக்கிறோம். தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைவிடக் கடவுள் நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். ஆனால், சட்டக்கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் வழிபடும் தெய்வம் சட்டப் புத்தகமகத்தான் இருக்கமுடியும். அது ஆண்டவன் கணபதியாக இருக்குமானால் அதனால் ஒரு பயனும் இல்லை.
படித்தவர்களிடம் மூடநம்பிக்கை!
நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இங்கே என் நினைவுக்கு வருகிறது. தேர்வு எழுதுவதற்காக நான் “ஹால் டிக்கெட்” வாங்கச் சென்றிருந்தேன். வழியில் ஒரு நண்பர், என்ன ராகுகாலத்தில் போகிறீர்களே, அதுவும் 13-ஆம் எண் ராசி இல்லாத எண் ; இன்று 13-ஆம் தேதியாயிற்றே, இன்று வாங்கினால் நீங்கள் பரீட்சையில் தேற முடியுமா? என்று கேட்டார்; இருக்கட்டும். பரவாயில்லை என்று சொல்லி ஹால் டிக்கெட் வாங்கினேன். அந்த ஆண்டுத் தேர்வில் நான் எல்லோருக்கும் முதன் மாணவனாகத் தேறினேன். அதற்காகத் தங்கப் பதக்கம் பெற்றேன்.
நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் “நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை” என்று பழமொழியாகக் கூறுவார்கள். அதே கருத்தைத் தந்தை பெரியார் சொன்னால் இவர் பகுத்தறிவுவாதி; கடவுளை எதிர்க்கிறார் என்று எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அண்ணா சமாதியில் சூடம் கொளுத்துவதா?
நான் தந்தை பெரியார் அவர்களைத் தெய்வம் என்று சொல்ல மாட்டேன். காரணம், இன்று அண்ணா சதுக்கத்திலே சூடம் சாம்பிராணி கொளுத்துவதைப்பார்க்கின்றோம். அண்ணாவை 64-வது நாயன்மார் என்றுகூட ஆகிகவிடுவார்கள் போலிக்கிறது. அண்ணா தன் எழுத்தாற்றலால், பேச்சாற்றலால், ஆட்சியை சாமான்ய மக்களின் கைக்குக் கொண்டு வந்தார்; அகற்ற முடியாது என்ற ஆட்சியை அகற்றிக் காட்டினார்.
நாம் எவ்வளவோ உலக விஷயங்களைப் பேசுகிறோம். விஞ்ஞானங்களைப் படிக்கிறோம். ஆனாலும், ஸ்ரீராம ஜெயம் எழுதிக்கொண்டிருக்கிறோம்; பிள்ளையார் சுழி போடாமல் எழுத ஆரம்பிப்பதில்லை! இந்த அவலநிலை ஏன்? தன்னம்பிக்கை இல்லாததுதான் இதற்குக்காரணம். அவ்வளவு பயபக்தியோடு தேர்வை எழுதிவிட்டுச் சும்மா இருந்து விடுகிறார்களா? விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியரிடம் படை எடுக்கிறார்கள். அந்த ஆசிரியரின் அண்ணன் யார், தம்பி யார்? அவருக்கு மாம்பழம் பிடிக்குமா? மல்கோவா பிடிக்குமா? என்றெல்லாம் அறிந்து, எப்படியாவது மார்க்கை வாங்கும் அவல நிலை இருக்கிறது. இன்றையக் கல்வி அப்படி இருக்கிறது.
சமுதாயச் சுரண்டல்கள்!
“தொட்டனைந்தூறும் மணற்கேணி”
என்றார் வள்ளுவர். கல்வி என்பது வேறு; அறிவு வேறு, எனவே கல்வியைக் கறபதோடு நில்லாமல் அறிவைப் பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கல்லூரிப் பருவத்தில் குறும்புத்தனமாக இருப்பது எல்லோருக்கும் இயற்கையான ஒன்றுதான். நான் கூடக் கல்லூரி மாணனாக இருந்தபோது அப்படித்தான் இருந்தேன். கல்லூரியை முடித்து விட்டு வெளியே வரும்போது தான் உலகம் புரிகிறது.
இன்றைக்குச் சமுதாயத்தின்பெயரால் பல்வேறு சுரண்டலகள்; சாதியின் பெயரால் சமுதாயத்தில் நிகழும் சுரண்டல்களைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார்."ஜாதி இரண்டொழிய வேறில்லை” என்று அவ்வையாரும் கூறியிருக்கிறார். அதே கருத்தைத் தந்தை பெரியார் கூறும்போது, இவர்பகுத்தறிவுவாதி என்று எதிர்க்கிறார்கள். அந்தப் பகுத்தறிவு மேதை, பகலவன் போல் கதிரொளி வீசிய தலைவர், பெரியார் இல்லை என்று சொன்னால் இன்று உயர்நீதி மன்றத்திலே இத்தனைபேர் நம்மவர்களாக வந்திருக்க முடியாது! அறிவுக கண்களைத் திறந்துவிட்ட ஒரே தலைவர் பெரியார். அவர் எந்த லட்சியங்களுக்காகப் போராடினாரோ அதற்காக நாமும் பாடுபடுவோம்! போராடுவோம்!
--------------1-4-78 அன்று சென்னை எம்.யூ. எஸ். சி. மாணவர் விடுதியின் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு மோகன் அவர்கள் ஆற்றிய உரை. -நூல்:- "நீதிபதிகள் கண்ணோட்டத்தில் பெரியார்"- பக்கம்:- 42-45
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//இன்றைக்குச் சமுதாயத்தின்பெயரால் பல்வேறு சுரண்டலகள்; சாதியின் பெயரால் சமுதாயத்தில் நிகழும் சுரண்டல்களைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார்."ஜாதி இரண்டொழிய வேறில்லை” என்று அவ்வையாரும் கூறியிருக்கிறார். அதே கருத்தைத் தந்தை பெரியார் கூறும்போது, இவர்பகுத்தறிவுவாதி என்று எதிர்க்கிறார்கள். அந்தப் பகுத்தறிவு மேதை, பகலவன் போல் கதிரொளி வீசிய தலைவர், பெரியார் இல்லை என்று சொன்னால் இன்று உயர்நீதி மன்றத்திலே இத்தனைபேர் நம்மவர்களாக வந்திருக்க முடியாது! அறிவுக கண்களைத் திறந்துவிட்ட ஒரே தலைவர் பெரியார். அவர் எந்த லட்சியங்களுக்காகப் போராடினாரோ அதற்காக நாமும் பாடுபடுவோம்! போராடுவோம்!//
நீதிஅரசர் பெரியாரை மிகச் சரியாகவே மதிப்பீடு செய்துள்ளார்.
பெரியார் ஏன் பெரியார் என்பதை நன்கு உணர்ந்து விட்டேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment