Search This Blog

25.3.09

பாபர் மசூதியை இடித்ததால் ராமருக்குத்தான் துன்பம்




ராமரை பிச்சைக்காரர் ஆக்கிவிட்டார்கள்!



தேர்தல் வந்தால் போதும்... அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று முழக்கமிட ஆரம்பித்துவிடும் பி.ஜே.பி. இந்த முறை கூட்டணிக் குழப்பங்களே தலைவர்களை தூக்கமிழக்க வைத்திருப்பதால், அயோத்தி ஞாபகம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை. ராமர் கோயில் விஷயத்தை பி.ஜே.பி. வெறும் அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்ற விஷயம் பாமர வாக்காளனுக்குக்கூடத் தெரியும். ராமஜென்ம பூமியின் தலைமை அர்ச்சகரான சத்யேந்திர தாஸ் இன்னும் ஒரு படி மேலே போய், பி.ஜே.பி. இந்த விஷயத்தைப் பற்றி பேசும்வரை பிரச்சினை தீராது எனக் கடுமையாகப் பேசியிருக்கிறார். தெஹல்கா இதழுக்கு சத்யேந்திர தாஸ் தந்திருக்கும் பேட்டியில் நிஜமாகவே பச்சை மிளகாய் காரம். பாபர் மசூதியை இடித்ததால் ராமருக்குத்தான் துன்பம் என்றிருக்கிறார் அவர். மசூதி இருந்தவரை ராமர் பாதுகாப்பாக இருந்தார். இப்போது இடிபாடுகளுக்கிடையே இருக்கும் தற்காலிகக் குடிலில்தான் ராமர் விக்கிரகம் இருக்கிறது. வெயிலிலும், மழையிலும் கிடந்து அல்லாடுகிறார் அவர். மழை பெய்தால் நான் ஒரு குடையோடு அருகே நின்று அவரை நனையாமல் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே அலங்காரமோ, அபிஷேகமோ செய்வதில்லை. கிட்டத்தட்ட ஒரு பிச்சைக்காரர் மாதிரி சிதிலங்களுக்கு மத்தியிலே நிற்கிறார் ராமர்.

மசூதி இருந்த வரையிலாவது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தார்கள். பக்கத்தில் நின்று அவரது அழகை ரசிக்க முடிந்தது. இப்போது பாதுகாப்புக் கெடுபிடியால் 50அடி தள்ளி நின்றுதான் தரிசனம். வரும் பக்தர்களை பாதுகாப்புப் படையினர் உரிக்காத குறையாக சோதனை செய்து உள்ளே அனுப்புகிறார்கள். இதனால் மிரண்டு போகும் பலரும் கோயிலுக்குத் திரும்ப வருவதற்கே யோசிக்கிறார்கள்.

மந்திர உச்சாடனங்களோ, பூஜைகளோ நடத்த அனுமதி இல்லை. பிரசாதங்கள் கொண்டு வரவும் அனுமதி இல்லை. நிசப்தமான அந்த சூழல் ஒரு கோயிலுக்கு உரித்ததான தெய்வீக உணர்வைத் தரவில்லை. ராமபக்தர்கள் கிட்டத்தட்ட ராமஜென்ம பூமி ஒரு பாலைவனம் போலானதாக நினைக்கிறார்கள் என்கிறார் சத்யேந்திர தாஸ். அயோத்தியில் வாழும் முஸ்லிம்கள்தான் ராமருக்கு உடைகள் நெய்து தந்தார்கள்; அலங்கார மாலைகள் செய்து தந்தார்கள். விழா நாட்களுக்கான பட்டாசு சப்பை செய்வதும் அவர்களே! ராமர் இங்கு இருக்க வேண்டாம் என்று அவர்கள் நினைத்திருந்தால், அந்த பட்டாசில் சிம்பிளாக வெடிகுண்டுகளைக் கலந்து தந்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அரசியல்வாதிகளால் பிரச்னையைத் தீர்க்க முடியாது. இங்கே இருக்கும் நாங்களும் முஸ்லிம்களும் உட்கார்ந்து பேசினால் ஒரே நாளில் தீர்த்துவிட முடிகிற விஷயம் இது . . . ஆனால் இதை எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டுமே! என்று ஆதங்கப்படுகிறார் சத்யேந்திர தாஸ்.


சம்பந்தப்பட்டவர்கள் காதில் இது விழுந்தால் சரி!

--------------- நன்றி:- எஸ். உமாபதி, "குங்குமம்", 26.3.2009

0 comments: