Search This Blog

3.3.09

இலங்கை என்ன செய்யப்போகிறது?




இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணைக் குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடை பெற்றது; அதில் சில முக்கிய கருத்துகள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

(1) மருத்துவமனையில் இருந்தபோதே இதுபோன்ற குழு ஒன்றை முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவித்தது தொலைநோக்குப் பார்வை கொண்டது என்பது நிரூபணம் ஆகிவிட்டதால், அதற்காக முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது மிகவும் நியாயமே!

(2) இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் (28.2.2009) தெரிவித்த கருத்தும், அதே அடிப்படையில் டில்லியில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையும் இந்தக் காலகட்டத்தில் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும்கூட முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் அய்யமில்லை.

இதுவரை மத்திய அரசு கூறி வந்த கருத்துகள் போதுமானவையல்ல; வெறும் மேலோட்டமாகவே இருந்து வந் திருக்கின்றன என்ற குற்றச்சாற்று பரவலாக இருந்த நிலை யில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இப்பொழுது கூறியிருப்பதில்தான் அழுத்தமும், தெளிவும் காணப்படுவ தாக இருக்கிறது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை சரண் செய்தால் தான் அடுத்தகட்ட நடவடிக்கை என்று இலங்கை அதிபர் கூறி வந்த நிலையில், அதனையும் கவனத்தில் கொண்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானதாகும்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க முன்வரவில்லை என்றாலும்கூட, போர் நிறுத்தத்திற்கு முன்வந்துள்ளதை இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டு போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்து அமைதிக்கு வழிவகுக்கவேண்டும் என்ற கருத்து மிக முக்கியமானது.

உலக நாடுகள் பலவும், அய்.நா. மன்றமும்கூட இந்தத் திசையில் கருத்துகளைக் கூறிவந்துள்ள நிலையில், இந்திய தரப்பிலும் அதே கருத்து வற்புறுத்தப்படுவது என்பது மிகவும் பயனுள்ளதாகும்.

இந்தக் கண்ணோட்டத்தில் தான் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணைக் குழு இதனை வரவேற்றுள்ளது.

இதற்கு மேலும் இலங்கை அரசு பிடிவாதப் போக்கைக் கடைப்பிடித்தால், உலக நாடுகளை ஒன்றிணைத்து இந்திய அரசு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மற்றொரு முக்கிய கருத்தினை துணைக்குழு வெளி யிட்டு இருக்கிறது.

(3) இலங்கையில் போர்க்களப் பகுதியில் சிக்குண்டு தவிக்கிற அப்பாவி மக்களை மீட்கவேண்டுமென்று இந்திய அரசு சார்பில் தெரிவித்திருக்கிற கருத்தை இக்குழு வரவேற் கின்ற அதேவேளையில், அப்படி மீட்கப்பட்ட மக்களை மீண்டும் சிங்கள இராணுவத்தின் பாதுகாப்பில் உள்ள பகுதிகளுக்கு அனுப்புவது - தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்று இக்குழு அய்யுறுவதால், வவுனா பகுதியில் அய்க்கிய நாட்டுச் சபையின் மேற்பார்வையில் ஒரு பாதுகாப்புப் பகுதியை உருவாக்கி (Safety Zone) அங்கு அந்த மக்களைத் தங்க வைப்பதுதான் சிறந்ததாக இருக்க முடியும். எனவே, மத்திய அரசு இலங்கை அரசோடும், அய்க்கிய நாடுகள் சபையோடும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆவன செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இலங்கை அரசு இராணுவத்தின் அழைப்பினை ஏற்று பாதுகாப்பான பகுதிக்கு வந்த ஈழத் தமிழர்களும் இலங்கை இராணுவத்தால் தாக்குதலுக்கு ஆளாகி நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், இப்படி ஒரு பாதுகாப்பான பகுதியை உருவாக்கவேண்டும் என்று தெரிவித்திருப்பது மிகவும் சரியான யோசனையாகும்.

இலங்கை அரசோடும், அய்.நாவுடனும் தொடர்பு கொண்டு இந்திய அரசு இதனைச் செய்யவேண்டும் என்று தெளிவான கருத்து, திட்டவட்டமான முறையில் கூறப்பட் டுள்ளது.

இதில் இலங்கை அரசு சரியாக நடந்துகொள்ள வேண்டும். அப்படி நடந்துகொள்ளவில்லையென்றால், மத்திய அரசு தன் கடமை இத்தோடு முடிந்துவிட்டது என்று கருதாமல், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தவிர்க்கப்பட முடியாததாகும்.

விடுதலைப்புலிகளைத்தான் தாக்குகிறோம் - மக்களையல்ல என்று இதுவரை இலங்கை அரசும், இராணுவமும் சொல்லி வந்தது எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்தியாவும், உலக நாடுகளும் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு இப்பொழுது ஏற்பட்டு இருக்கிறது. நல்லதையே எதிர்பார்ப்போம்.

--------------- "விடுதலை" தலையங்கம் -3-3-2009

0 comments: