Search This Blog

30.3.09

பெரியார் பிறர் உணர்வுகளை மதிக்கின்ற சமுதாய சீர்த்திருத்தவாதி.





முத்தையா முதலியாரும், அவருடைய துணைவியார் திருமதி இராஜம் அம்மையாரும் தங்கியிருந்தது மயிலாப்பூரில், எண் 10, வடக்கு மாடவீதி, மயிலாப்பூர் என்னும் முகவரியில். மாணவராக, அமைச்சராக, வழக்கறிஞர் தொழிலில் ஓய்வு பெற்ற காலத்திலும் அவர் அந்த வாடகை வீட்டிலேயேதான் சுமார் அய்ம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.

இந்த வீடு இருந்த இடத்தில்தான் இப்போது மயிலாப்பூர் தெப்பக்குளம். குளக்கரை எதிரே வேலூர் லட்சுமி அம்மாள் திருமண மண்டபம் உள்ளது. அவர் குடியிருந்த வேளையில் அந்த வீட்டின் முன் வாயிலிலிருந்து பார்த்தால் கொல்லைப்புறம் தெரியும்.

இங்கே ஒரு குறிப்பிடத்தக்க செய்தி, அவர் ஏறக்குறைய அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருந்த இந்த வீடு அவருடைய சொந்த வீடு அல்ல வாடகை வீடுதான். அவ்வளவு செல்வம் படைத்தவராயிருந்தும், வசதியிருந்தும் ஏனோ சென்னையில் அவர் வாழ்ந்த வரையில் அவருக்கெனச் சொந்த வீடு வாங்கவில்லை. வாடகை வீட்டில் வாழ்ந்தவராகவே மறைந்தார்.

ஆனால் அந்த வீட்டிற்குப் பெரியார், அண்ணா, பி.டி.ராஜன், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என்று பலரும் வந்து விருந்தினராகத் தங்கிச் சென்றிருக்கின்றனர்.

அரசியல் தலைவர்களில் முத்தையா முதலியார், பெரியாருடன் கொண்டிருந்த நட்பு மிகவும் ஆத்மார்த்தமான நட்பு, மிகவும் குறிப்பிடத்தக்க நட்பு. அந்நாளில் பெரியார் ஒரு தலைவரான போதிலும் முத்தையா முதலியாரை அவருடைய சீர்த்திருத்த உணர்விற்காகப் போற்றுவதுடன் இல்லத்திற்கு வருகை புரிவதுண்டு. திண்ணையில் உட்கார்ந்து அளவளாவிய நாட்களும் இருந்தன.

***

பெரியாரை மிக உயர்வாகப் போற்றியது போல் பெரியாரும் தன்மனத்தில் முத்தையா முதலியாருக்கு உயர்வான இடம் கொடுத்து இருந்தார். பெரியார் எந்த அளவிற்கு முத்தையா முதலியாருடன்அன்பும், பாசமும் கொண்டிருந்தார் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது.

இதில் குறிப்பிடத்தக்கது பெரியார் பகுத்தறிவுவாதி, முரட்டுத்தனமான தோற்றம், பிடிவாதம், கொண்டவர் என்றே பலர் நினைத்தாலும் பெரியார் பிறர் உணர்வுகளை மதிக்கின்ற சமுதாய சீர்த்திருத்தவாதி.

1950 அல்லது 1951இல் முத்தையா முதலியாரின் மனைவி ராஜம் அண்ணி அவர்கள் இறந்துவிட்டார்கள். அவர் இறந்தபோது இந்துச்சமய வழக்கப்படியான இறந்தவருக்-கான சடங்குகள் நடைபெற்றன. பெரியார் இந்தச் சடங்குகள் நிறைவு அடையும்வரை திண்ணையில் உட்கார்ந்திருந்து, அம்மையாருடைய உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உடலுடன் இடுகாடு வரை பெரியார் தம் அந்த 60 வயதுக் காலத்தில் நடந்து சென்றார் என்றால் இருவரிடையே நிலவிய அந்த நட்பின் ஆழம் மட்டுமல்லாது பெரியாரின் பண்பு நலனும் வெளிப்படும்.


தம்முடைய வழக்கறிஞர் தொழிலில் நேர்மை, கட்டுப்பாடு, ஒழுங்கைக் கடைப்பிடித்-திருக்கிறார். இவரைத் தேடி வரும் கட்சிக்காரர்கள் பங்கில் நியாயம் இருந்தால் நியாயமான வழக்கு என்று தெரிந்தால், வழக்கை எடுத்துக் கொண்டு வழக்கறிஞராக, வந்தவர் பொருட்டு வாதாட ஒப்புக்கொள்வார்.

வழக்கில் நியாயமில்லை என்றால் வழக்காட முடியாது என்று வந்தவரைத் திருப்பியனுப்பி விடுவார். வருபவர் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முன்வந்தாலும் மறுத்து விடுவார்.

***

1926 நவம்பரில் தேர்தல் நடந்தது. வியக்கும் முறையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் சட்டசபையில் முட்டுக்கட்டை முளைக்கவில்லை. சுயேச்சைக் கட்சி மந்திரி சபை அமைத்தது. காங்கிரஸ் அதைத் தாக்கியது. காங்கிரஸ் தயவால் அதே மந்திரிசபை நிலவியது. சைமன் கமிசன் வந்தபோது சுயேட்சை மந்திரி சபை நடந்தது. அதன் முதல் அமைச்சர் டாக்டர் சுப்பராயர். பனகல் பக்கம் சார்ந்து வேறொரு மந்திரிசபை கண்டு அதிலும் தலைமை அமைச்சரானார். காங்கிரஸ் முத்தையா முதலியாரும் மந்திரி சபையில் அங்கம் பெற்றார் என்று திரு.வி.க. எழுதியுள்ளார்.

இது நிலைமையைப் புரியச்செய்யும். அதன் பின் திரு.வி.க.விடம் உறுப்பினர் கட்டணம் ஏதும் காங்கிரஸ் பெறவில்லை.

சந்தா செலுத்தாமலேயே நான் காங்கிரஸ்காரனாகக் காலம் கழித்தேன் என்று எழுதியிருக்கிறார் திரு.வி.க. பெரியாரும் 1927 வரையில் அப்படித்தானே இருந்தார்.

இதேபோன்ற மனநிலையே முத்தையா முதலியாருக்கும் இருந்தும் இவருடைய பொருத்தமான இலட்சியத்தையும் மனத்துணிவையும் பார்த்து அந்நாளைய அரசியல்வாதிகள் வியப்புற்றனர்.

சுப்பராயன் அமைச்சரவையில் சிக்கல் ஒன்று உருவாயிற்று. சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஏற்றிருந்த இருவர், டாக்டர் ரங்கநாதம், டாக்டர் ஆரோக்கியசாமி இரட்டை ஆட்சி செயல்படாது, சுயமரியாதை உள்ள அமைச்சர் யாரும் அதனைச் செயல்படுத்த இயலாது என்று கூறி, நாட்டுப்பற்று என்பதன் பேரில், பத்திரிகைகளின் பாராட்டு-களுக்கிடையில் சுப்பராயன் அமைச்சரவையிலிருந்து விலகினார்கள்.

சுப்பராயன் மட்டும் தனித்து விடப்பட்டார். கைகொடுத்து விட்டுக் காங்கிரசின் கை கழுவிவிடும் பண்பாடு, இங்கே தொடங்குகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுவர்.

இந்நாளில் இது போன்றவை பலஅமைச்சரவைகளுக்கு மய்ய அரசில் நேர்ந்திருப்பதைக் காண்கிறோம் எனவும் அரசியல் விமர்சகர்கள் விளக்குகின்றனர்.

ஜேம்ஸ் வில்லியம்ஸ் என்பவர் சிலர் மட்டுமே பதவி வகிப்பதற்கு இயல்பான திறன் உடையவர்களாக இருக்கின்றார்கள். என்று குறிப்பிட்டார். முத்தையா முதலியார் அத்தகு இயல்பான திறன் உடையவர்களில் ஒருவர் என்று கூறலாம்.

மிகவும் முதன்மை வாய்ந்த துறைகளுக்கு அவர் அமைச்சராக விளங்கினார். தம் வாழ்வில் மிகச்சிறப்பான பணிகளை ஆற்றிய-தால் இரண்டு ஆண்டுக்காலமேஅமைச்சர் பதவி வகித்தாலும் ஈராயிரம் ஆண்டுக்கால, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை மக்களின் விதிநிலை போக்கிட அவர் ஆற்றிய பணியினால் என்றும் நினைக்கப் பெறுவதுபோல இன்றும் நினைக்கப்பெறுவர்.

இரட்டையாட்சியை விமரிசித்து அவருக்கு முன்னாலே பதவி வகித்த அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், அதே இரட்டையாட்சி அமைப்பின் கீழ் பொறுப்பேற்ற முத்தையா முதலியார் தம் பொறுப்புகள் மிகுதியானவை என்று உணர்ந்து தெளிந்தார்.

குறைந்த விளைவுகளுடன் நிறைந்த பயனை இரட்டையாட்சி முறையில் பெற்றுத் தந்தவர் என்று வரலாறு முத்தையா முதலியாரைச் சிறப்பித்துக் கூறுகிறது.

ஒரு மனிதனின் உண்மையான இயல்பை வெளிப்படுத்தக்கூடிய அடிப்படை சில அதிகாரத்தைக் கொண்ட பதவியை கொண்டிருப்பது வெளிப்படுத்தும் என்று எட்மண்டு பர்க் கூறினார். அது முத்தையா முதலியாரைப் பொருத்தமட்டில் உண்மையாயிற்று.

ஏனென்றால், பதவி அவரை, அவருடைய போக்கை, எளிமையை, வாழ்க்கையின் தனிப்பட்ட இயல்புகளையும் பண்புகளையும் மாற்றிவிடவில்லை.

மயிலாப்பூரில் எந்த வாடகை வீட்டில் குடியிருந்தாரோ அதே வாடகை வீட்டில் அமைச்சரான பிறகும் குடியிருந்தார். அமைச்சராயிற்றே மாளிகை பெரியது இருக்கட்டும் என்று மாற்றிக் கொள்ளவில்லை, என்பதை இவரைப்பற்றி அறிந் அனைவரும் குறிப்பிடுகிறார்கள்.

தன் அமைச்சர் பதவியை மிகவும் பொறுப்புடன் நிருவகித்துக் கடுமையாக உழைத்தார். ஆனால், அதே நேரத்தில் அதற்கு வேண்டிய பொறுமையையும் வலிமையையும் கொண்டு செயல்பட்டார்.

தம்முடைய பதவியை அவர் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியது இல்லை. அதுபோல அவர் ஒருபோதும் பிறரைக் காயப்படுத்தியது இல்லை. நண்பர்களிடம் தாராளமாக நடந்து கொண்டவர். தன் எதிரிகளை மன்னிக்கவும் தயங்கியது இல்லை.

***

எல்லாருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை என்ற நீதிக்கட்சிக் கோட்பாட்டை நிலைநிறுத்திய அவர் தன் ஜாதிக்காரர்களுக்கு என்று எந்தச் சலுகையும் காட்டவில்லை.

அவர் கொண்டுவந்த வகுப்புரிமை ஆணை அவர் சார்ந்த அவர் பிறந்த தொண்டை மண்டல சமுதாயத்திற்கு என எவ்விதத் தனியான பயனையும் அளிக்கவில்லை. ஏனென்றால், அச்சமூகத்திற்கு முற்பட்ட வகுப்பினராக கருதப்படுபவர்கள்.

அன்றைய நாளில் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் தொண்டை மண்டல வேளாளர் பிரிவைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கவேண்டும் என்று அவரிடம் வேண்டியபோது அவர்களுடைய கருத்தை ஏற்க மறுத்து விட்டார். இது ஒன்றே பதவியில் எந்த அளவிற்கு அவர் நேர்மையாக நடந்துக்கொண்டார் என்று காட்டும்.

அன்றைய நாள் நிலைமை அது. இன்று அச்சமூகத்தினர் பெயரளவில் முற்பட்ட வகுப்பினராக விளங்கிய போதிலும், ஒருசிலர் தவிரப் பெரும்பான்மையோர் மிகவும் பின்தங்கிய நிலையிலேதான் இருக்கின்றார்கள். பிற சமூகங்கள் முன்னேறிப் பொருளாதார வாய்ப்பும் வசதியும் பெற்றுள்ள அளவிற்கு இன்று அவருடைய சமூகத்தினர் பெற்றிருக்க-வில்லை என்பது உண்மையே.

அவர் எரிமலையின் உச்சியில் அமர்ந்து வகுப்புரிமை ஆணையை வெளியிட்டார். தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகிக்கவேண்டும் என்று ஆசைப்படும் எவரும் அன்று முத்தையா முதலியார் மேற்கொண்ட துணிவு மிக்க வகுப்புரிமை ஆணை வெளியிட்ட செயலைச் செய்ய முன்வருவார்களா என்பது சந்தேகமே.


இந்தத் துணிவான முயற்சியினை மேற்கொண்ட முத்தையா முதலியாருக்குத் தமிழகம் மட்டும் அல்லாமல் அன்றையச் சென்னை மாநிலம் முழுவதுமே கடமைப்பட்டுள்ள. இந்த வகுப்புரிமை என்பது ஏதோ ஒரு நிருவாகச் சீர்த்திருத்தம் என்பதாக எவரும் எண்ணி-விடக்கூடாது.

அன்றைய நாளில் முத்தையா முதலியாரின் வகுப்புரிமை ஆணையின் தனிச்சிறப்பை, அதன் முழு மதிப்பை உணர்ந்தவர் ஒருவர் இருந்தால் என்றால் அவர் தந்தை பெரியார் ஒருவர்தான்!

அதனை உணர்ந்த இயக்கம் என்று சொன்னால் அது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான்!

***

முத்தையா முதலியாரின் சாதனைகளைப் பாராட்டி முத்துலட்சுமி ரெட்டி குறிப்பிட்டவை இவை

அப்போதைய அமைச்சர் திரு.முத்தையா முதலியாருக்கு பெண்டிர் பெரிதும் கடமைப் பட்டவர்கள். ஏனென்றால் அவர் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ வசதிகள் செய்வதன் பொருட்டு, பொதுநலத்துறை பெண்கள் இயக்குநரை நியமிக்க ஏற்பாடு செய்தார். தாய்மை, சேய்நலப் பணியாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். அவர் ஒதுக்கீடு செய்த நிதியைக் கொண்டு செஞ்சிலுவைச் சங்கப்பள்ளி உருவாக்கப்பெற்றது.

---------------பேரா.முனைவர் ந.க.மங்கள முருகேசன் - நூல்: வகுப்புரிமைச் சிற்பி எஸ்.முத்தையா (முதலியார்)

1 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதரமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவி.காம்