Search This Blog

19.3.09

ஈழத் தமிழர்களுக்கு எதிராக மருத்துவர்கள் முதல் மார்க்ஸிஸ்டுகள் வரை

மருத்துவர்கள் முதல் மார்க்சிஸ்டுகள்வரை

இந்தியாவிலிருந்து 52 மருத்துவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கை எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட், ஜே.வி.பி. கட்சியினர் இலங்கை நாடாளுமன்றத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்; அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். இலங்கை மருத்துவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அதிபர் ராஜபக்சே கூறிய பதில் என்ன?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை அளிக்க நமது மருத்துவர்களிடம் எவ்வளவோ கேட்டுக் கொண்டும், எடுத்துச் சொல்லியும் அது முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

தமிழர்கள் விடயத்தில் இலங்கை எப்படியிருக்கிறது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டே போதுமானது. அதிபர் சொன்னால்கூட அங்குள்ள மருத்துவர்கள் கேட்பதில்லை என்பது இதன்மூலம் அறிய முடிகிறது. (அதிபர் சொன்னதே ஆச்சரியம்தான்!)

உயிரைக் காக்கும் உன்னதமான தொழிலைச் செய்ய வேண்டிய மருத்துவர்களே இனவெறியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நாணயமாக மருத்துவ உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

இதுவரை இலங்கை மருத்துவமனைகளில் தமிழர்களின் உயிரோடு எப்படியெல்லாம் விளையாடியிருப்பார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

மருத்துவர்களே இந்தக் கதியில் இருக்கும்போது அங்கு தமிழர்கள் வாழ்வு எவ்வளவு பெரிய மோசமான - மனித இரக்கமற்ற பள்ளத்தில் தள்ளப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாமே!

இலங்கை சிங்கள இராணுவம்தான் இனவெறித் தீயில் மூழ்கி எழுந்து, தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பது என்கிற மூர்க்கத்தனத்தில் ஈடுபடுகிறது என்றால், மனிதநேயமும், தொண்டுள்ளமும் தவழ்ந்து விளையாட வேண்டிய மருத்துவர்களிடத்தில்கூட மட்ட ரகமான இனவெறி கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை உலக நாடுகள் கவனிக்கத் தவறக்கூடாது.

துப்பாக்கி ரவைகளாலும், பீரங்கித் தாக்குதல்களாலும், குண்டு மழையாலும் இலங்கை இராணுவம் தமிழர்களைக் குற்றுயிரும் குலை உயிருமாகச் சாய்க்கிறது என்றால், மீதி இருக்கின்ற மூச்சை இலங்கை சிங்களவெறி மருத்துவர்கள் முடித்துக் கெ()டுத்துவிடுவார்கள் என்றே தெரிகிறது.

இலங்கை மருத்துவர்களின் இந்த மனோபாவத்தை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களின் அமைப்புகள் கண்டிக்க முன்வரவேண்டும்.


சிங்கள இனவாத அரசுக்காகக் கொடி தூக்கும் இந்தியாவில் உள்ள பார்ப்பன சக்திகள், ஊடகங்கள் இவற்றையெல்லாம் கண்டிப்பாக இருட்டடித்துவிடும்.

போராளிகள் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஆயுதங்களைத் தூக்கினாலும் அதனைப் பயங்கரவாதம் என்று பயங்கரமான தலைப்புகளில் தங்களின் கற்பனா சக்தியையும் சேர்த்து செய்திகளை வெளியிடுகிறார்களே - மருத்துவர்களே இன வெறி மனநோயாளிகளாக இலங்கையில் செயல்படுகிறார்களே - இதற்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்?

போராளிகள் பயங்கரவாதிகள், அதனால் அவர்களை மருத்துவர்கள் கொல்லுவதிலோ, மருத்துவம் பார்க்க மறுப்பதிலோ தவறே கிடையாது என்று சொன்னாலும் சொல்வார்கள்.

நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொன்ன காஞ்சி சங்கராச்சாரியார்களின் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி) பக்த கே(ர)டிகள் ஆயிற்றே! அவர்கள் புத்தி வேறு எப்படித்தான் இருக்கும்?

ராஜபக்சே என்னும் நவீன இட்லரே வருந்தும்படி அங்கு மருத்துவர்கள் நடந்துகொள்கின்றனர் என்றால், அவர்களின் போக்கு எத்தனை டிகிரி வெப்பக் கொடுமை உடையதாக இருக்கும்!

இதில் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக்கூடாது. மார்க்ஸியம் பேசுகிற இலங்கைவாழ் கம்யூனிஸ்ட்கள், இந்திய மருத்துவர்கள் ஈழத்துக்குச் சென்று பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதை எதிர்த்து நாடாளுமன்றத்திலே முழக்கமிடுகிறார்கள் என்றால், அங்கே மார்க்ஸியம் என்ன பாடுபடுகிறது; அதன் நிறம் - குணம் எப்படி கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாமே!

இந்தியாவில் மார்க்ஸிய போர்வையில் உள்ளவர்கள் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம், இலங்கையில் காம்ரேடுகள் இப்படி நடந்துகொண்டு வருவதன் எதிரொலிதான்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான வன்மம் கொண்ட இவர்களைத்தான் இந்தியாவில் நடக்கும் கட்சி மாநாடுகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்து உச்சி மோந்து பொன்னாடை போர்த்தி மனங்குளிர்கிறார்கள் என்றால், அதன் தன்மையை விளங்கிக்கொள்ளலாமே.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக மருத்துவர்கள் முதல் மார்க்ஸிஸ்டுகள் வரை எப்படி இலங்கையில் நடந்துகொள் கிறார்கள் என்பதை உலகம் அறியட்டும்!

----------------"விடுதலை" தலையங்கம் - 19-3-2009

2 comments:

Unknown said...

மருத்துவர்களா? மரணத்தின் தூதுவர்களா?

மருத்துவ சமுதாயத்துக்க்க்கே இழுக்கு.

Anonymous said...

Hi,

Watch an interview with the artistes of a short film on Tamil Eelam here.

Thanks

Valaipookkal Team