
"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க".
என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட
தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------------------------
12. நமது இலக்கியம்
தமிழர்கள் - தொட்டதற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம் பழமைப்பெருமை பேசுவதென்பது காட்டுமிராண்டித்தனமேயாகும். அதிலும் நமது “பழம்பெரும் இலக்கியம்” என்பவற்றை அதற்கு ஆதாரமாகக் காட்டுவது என்பது அக்காட்டுமிராண்டித் தனத்திற்கு உண்மை நடப்பை ருஜுப்படுத்துவது போலும்.
நமது இலக்கியங்களின் காலம் சுமார் கிபி 500க்கு அல்லது 1000க்கு மேற்பட்ட காலமாக இருக்கலாம் என்பதாக வைத்துக் கொண்டாலும், அவற்றின் கர்த்தாக்கம் சமய சம்பந்தமான பெரியவர்களே தவிர, அறிவு சம்பந்தமான பெரியவர்கள் அறவே கிடையாது.
குறளின் புதுமை ஏது?
அறிவுத்துறைப் பெரியவர்கள் வள்ளுவரை பலர் காட்டலாம். அதற்கு இரண்டாயிரம் ஆண்டு ஆயுள் சொல்லுகிறார்கள். என் கருத்துப்படி அதற்கு 1500 ஆண்டுகளுக்கு மேல் சொல்லுவதற்கு இட மில்லை; என்றாலும், அதிலும் எவ்விதப் புதுமையையும் காணமுடியவில்லை என்பதோடு, தற்கால நிலைமைக்கு அல்லாமல், எதிர்காலத்து வளர்ச்சிக்கு வழி காட்டும் துறை எதுவும் காண முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
காட்டுமிராண்டி ஆரியர்கள்
குறள், ஆரியர் காட்டுமிராண்டித்தனங்களை பல இடங்களில் கண்டித்திருக்கிறது என்பதல்லாமல், குறளாரும் பல காட்டுமிராண்டித் தனத்திற்கு ஆளாகியிருக்கிறார். வேண்டுமானால், தமிழரைவிட ஆரியர் மாபெரும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்கள்என்பதாகச் சொல்லி ஒரு அளவுக்கு குறளைப் பற்றித் திருப்தி அடையலாம்.
இதில் ஒரு குறிpபிடத்தக்க விஷயம் என்னவென்றால் நமது பழங்கால நிலை; அதாவது கி.பி.க்கு முன்னுள்ள சரித்திரம், நடப்பு, அடையாளம் ஒன்றும் நிச்சயமாய் தெரிவதற்கில்லை. ஆதலால்தான் நம்மை விட ஆரியர்கள் மகா காட்டுமிராண்டிகளாய் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லுகிறோம். காரணம், அவர்களால் புகுத்தப்பட்ட கடவுள், கடவுள் கதைகள் மற்றும் ஜோசியம், சகுனம், ராசிகள், யாகம், யோகம், தேவர்கள், அசுரர்கள் முதலியவர்கள் விஷயங்களைப் பார்க்கிறபோது ஆரியர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாய் இருந்தார்கள் என்பது நல்லவண்ணம் விளங்குகிறது.
காட்டுக் கற்பனைகள்
நமது புலவர்களும், பக்தர்களும் அந்த ஆரியக் காட்டுமிராண்டிக் கற்பனைகளை அடிப்படையாய்க் கொண்டே “நமது இலக்கியங்” களை உண்டாக்கி இருக்கிறார்கள். ஆதலால், அந்த
இலக்கியங்களைக் கொண்ட நமது பழங்கால நிலை என்பதைக் காட்டுமிராண்டித்தனம் என்கிறேன்.
நமது புலவர்கள் எவ்வளவு பெரிய காட்டுமிராண்டிகள் என்பதற்கு கம்பனையும், இளங்கோவையும் எடுத்துக் கொண்டாலே போதும்; இவர்களதும் மற்றும், பழங்காலம் புலவர்களதும் இலக்கியங்களையும் (நூல்களை) எடுத்துக் கொண்டு, அதன் இலக்கண - கற்பனை அமைப்பு முறை ஆகியவற்றை நீக்கிவிட்டு, அதிலுள்ள கற்பனைக் கதை வடிவங்களை எடுத்துக் கொண்டு பார்ப்போமானால் - அவற்றின் காட்டுமிராண்டித்தனம் எவ்வளவு குறைந்த அறிவுள்ளவர்களுக்கும் நல்லவண்ணம் விளங்கும்.
இந்நிலையில் நம்மை நாம் – பழங்காலப் பெருமை பேசும் காட்டுமிராண்டிகள் என்பதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது.
தமிழர்களான கவிஞர்கள், கட்டுரையாளர்கள், அறிவுரைப் பிரச்சாரம் செய்பவர்கள், எழுத்தாளர்கள், மற்றும் நடிப்புத் துறையில் உள்ளவர்கள் முதலிய யாவரும் தங்கள் கலைகளை மக்களுக்குப் பயன்படும் தன்மையில் அவற்றைக் கையாள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள் புரட்சிகரமான மாறுதலடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
கைதூக்கிவிட ஆள் இல்லை
தமிழர்களை கைதூக்கிவிட இன்று எந்தக் கலையும் எந்தக் கவிஞரும் இல்லை உள்ளவர்கள் எல்லோரும் “பத்தாம் பசலிக்காரர்கள்” என்று சொல்லும்படி பழமையைக் கையாண்டே தங்கள் கலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழர்களைத் தாழ்த்தியதும், தலைதூக்கவொட்டாமல் அழுத்தியதும், தமிழ் அறிஞர், கலைஞர், கவிஞர், புலவர் முதலியவர்கள் கையாண்ட சமய இலக்கியமும், முன்னோர்களைப் பின்பற்றி வந்த நடப்புகளும், தமிழர்கள் உழைத்து உருவாக்கிய
அரசியலுந்தான்.
தமிழன் வளர்ச்சிக்கு, அறிவுக்கு, கலைகளுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்கு, பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர ஒரு தமிழன் காட்டிய வழி என்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நமது கலைஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், அரசியலார்கள், பார்ப்பானை குறை மாத்திரம் சொல்லிக் கொண்டு இவன் கலாச்சாரத்தில் மூழ்கி, அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கிறவர்களாகத்தான் இருந்துவந்தார்கள்; வருகிறார்கள் என்பதல்லாமல், தமிழர் நலனுக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீக்கத்திற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலையாவது நீட்ட முடிகிறதா?
சமுதாய அளவிற்கு விரியவில்லை
எல்லா தமிழ் உணர்ச்சியாளரும், எம்படிப்பட்ட பார்ப்பன “வெறுப்பாளரும்” தனது நலத்திற்கு வேண்டுமான அளவுதான் வெறுப்பைக் காட்டிக் கொள்ளுகிறார்களே தவிர தமிழர் நலத்திற்கு, தமிழர் சமுதாய நலத்திற்கு என்பதாகக் காட்டிக் கொண்டவர்கள் தமிழர்களில் மிக மிக அரிதாகவே இருந்து வருகிறார்கள்.
தமிழ்ப் பெரியோர்கள், கல்வியாளர்கள், மேதாவிகள், பெரும் பதவியாளர்கள் யாவரும் தமிழர்களின் கேட்டிற்கும், இழிவிற்குமே பார்ப்பனர்களால் கற்பனை செய்து உண்டாக்கப்பட்ட கதைகள், காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவைகளில் புகுத்தப்பட்ட கடவுள்கள், கந்தன், சிவன், விஷ்ணு, கணபதி, ராமன், கிருஷ்ணன் முதலியவற்றைக் கும்பிடுபவர்களாகவும், இவர்களது பெண்டு, பிள்ளைகளையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் இருக்கிறார்களே தவிர, அறிவைப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ, இன நலத்தைப் பற்றியோ சிந்தித்தவர்கள் என்று சொல்லி ஒருவரையும் குறிப்பிட முடியவில்லையே.
எப்படி முன்னேறுவான்?
எந்த பெரிய மனிதன், அறிஞர், கவிஞர், வித்துவான், மேதாவி என்பவர் யாரானாலும் அவர் “திவசம்” “திதி” முதலிய பார்ப்பனக் காரியங்களைச் செய்பவரும், இவை சம்பந்தமாக நெற்றியில் சாம்பல், செம்மண், சுண்ணாம்பு, பூச்சுப்பட்டை அடித்துக்கொள்பவர்களும், கடவுள் சமயப் பற்றும் உடையவர்களுமாகத்தான் இருக்கிறார்களே ஒழிய இவை எதற்கு? இவற்றில் பலன் என்ன என்று சிந்தித்தவர்கள். சிந்திக்கிறவர்கள் ஒருவரையும் காணமுடியவில்லையே.
இன்றும் தமிழன் சூத்திரனாக இருக்கிறான் என்றால், இருந்துகொண்டு திவசம், திதி செய்து கொண்டு சாம்பல்மண்ணை நெற்றியில் அடித்துக் கொண்டு கோவில் குளங்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறான் என்றால், தமிழன் எந்தவகையில் முன்னேறத்தக்கவன் என்பது புரியவில்லை. பார்ப்பானைக் கூப்பிட்டு திதி கொடுக்கிற தமிழன் எப்படித் தன்னை சூத்திரன் அல்ல என்று சொல்லிக்கொள்ள முடியும்?
இன்னும் தமிழனுக்கு மானம் - வெட்கம் பகுத்தறிவு வரவில்லையென்றால் மற்ற எந்த நூற்றாண்டில் வரமுடியும்?
----------------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-30-33
2 comments:
//இன்றும் தமிழன் சூத்திரனாக இருக்கிறான் என்றால், இருந்துகொண்டு திவசம், திதி செய்து கொண்டு சாம்பல்மண்ணை நெற்றியில் அடித்துக் கொண்டு கோவில் குளங்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறான் என்றால், தமிழன் எந்தவகையில் முன்னேறத்தக்கவன் என்பது புரியவில்லை. பார்ப்பானைக் கூப்பிட்டு திதி கொடுக்கிற தமிழன் எப்படித் தன்னை சூத்திரன் அல்ல என்று சொல்லிக்கொள்ள முடியும்?
இன்னும் தமிழனுக்கு மானம் - வெட்கம் பகுத்தறிவு வரவில்லையென்றால் மற்ற எந்த நூற்றாண்டில் வரமுடியும்?//
திதி கொடுப்பது எதற்காக என்று இந்த பிளாக்கில் படித்தபிறகுதான் தெரிந்து கொண்டேன். இது போல் மற்றவர்களும் அறிந்து கொள்வார்கள்.
பெரியாரின் கருத்துக்களை படிப்பவர்கள் சிந்தித்தாலே போதும் திருந்தி விடுவார்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு
Post a Comment