Search This Blog

4.3.09

திராவிட இயக்கத்துத் திருஞானசம்பந்தன் வீரமணி




பொதுவாழ்க்கையில் நுழைவோர் கற்க வேண்டிய பாடம்

தமிழர் தலைவரின் 'அய்யாவின் அடிச்சுவட்டில்' நூலை விளக்கி,
மதுரை - கல்லூரிப் பேராசிரியர் நம். சீனிவாசன் பாராட்டு


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டின் நூல் - பொது வாழ்வில் நுழைபவர்கள் கற்க வேண்டிய பாடம் என்று பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் கூறி விளக்கவுரை யாற்றினார்.

தஞ்சை (22.2.2009), மதுரை (23.2.2009) ஆகிய ஊர்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூலைப் பற்றி பேராசிரியர் நம்.சீனிவாசன் ஆற்றிய ஆய்வுரை வருமாறு:

தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில் என்னும் இந்நூல் தன் வரலாறு நூலாகும்.

புதிய பார்வையில் தொடராக வந்தது

ஒரே இயக்கம், ஒரே கொள்கை, ஒரே கொடி, ஒரே தலைவர் என்று தடம் மாறாமல் வாழ்ந்த தலைவனின் வரலாறு சொல்லும் நூல்.

புதிய பார்வை இதழில் தொடராக வெளி வந்தது.

வீரமணியின் வரலாறுதான். ஆனால் திராவிடர் கழக வரலாறும், தமிழக வரலாறும், அரசியல் போக்கும், அய்யாவின் தொண்டறமும் பக்கத் திற்குப் பக்கம் மிளிர்வதைக் காண முடிகிறது.

350க்கும் மேற்பட்ட சம்பவங்கள்

தமிழர் தலைவர் வீரமணியின் 76 ஆண்டு கால வாழ்க்கையில் பொது வாழ்வுக்கு வயது 66. இந்நூலில் 350க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.


1933-இல் பிறந்த தலைவர் வீரமணி அவர்கள் தமது 11-ஆவது வயதில், 1944-இல், அய்யா தந்தை பெரியார் அவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சந்தித்த முதல் சந்திப்பை இந்நூலில் எடுத்துரைத் திருக்கிறார்.

அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம், என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒரு புறம். அய்யாவிடம் சென்று வணக்கம் தெரி வித்தேன் என்று 65 ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற ஒரு சம்பவத்தைக் கூட்டியும் எழுதாமல், குறைத்தும் எழுதாமல் நம் மனக்கண்முன் படமாக விரித்துக் காட்டுகிறார்.

திராவிட இயக்கத்துத் திருஞானசம்பந்தன்

இன்றைக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் நாயகர் பேரறிஞர் அண்ணா அவர்கள், 1944 திருப்பாதிரிப்புலியூரில் தென்னாற்காடு மாவட்டத் திராவிடர் மாநாட்டில் 11 வயதுச் சிறுவன் வீரமணியின் பேச்சாற்றலைப் புகழ்ந்து திராவிடர் இயக்கத்துத் திருஞானசம்பந்தன் என்று புகழாரம் சூட்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. தமிழர் தலைவர் எழுதிய, அய்யாவின் அடிச்சுவட்டில் என்னும் வரலாற்று நூலினைப் படிக் கின்றபோது - தலைவர் வீரமணியின் வரலாறும் தெரிகிறது. தந்தை பெரியாரின் வரலாறும் தெரிகிறது. அய்யா பெரியாரிடம் தலைவர் வீரமணி கற்றுக் கொண்ட பாடத்தையும் நமக்கு உணர்த்தி விடுகிறார்.

ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்

ஒரு சம்பவத்தைச் சொல்கிறார். கடலூர் முத்தையா திரைஅரங்கில் மாநாடு நடக்கிறது. அய்யா பெரியார் உரையாற்றுகிறார். திடீரென்று கதர்ச்சட்டை இளைஞர் எழுந்து, ராமசாமி பேசாதே! திரும்பிப் போ! என்று கூச்சலிடுகிறார். இந்நூலில் வீரமணி எழுதுகிறார். கூடியிருந்த இயக்கப் பிரமுகர்கள், தோழர்களுக்கு ஆத்திரம், கோபம் எல்லாம் பொங்கி அவரைத் தாக்கச் சூழ்ந்துவிட்டனர். தோழர்களைச் சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கச் சொல்லி ஆணை பிறப்பித்துவிட்டு, பெரியார், வெண்கலநாதக் குரலில், சிலிர்த்த சிங்கமாகிக் கர்ஜிக்கிறார் என்று அந்தச் சம்பவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார். என்ன நிதானம்! கொள்கை உறுதி! அஞ்சாமை! பதற்றப் பட்டவர்களைப் பக்குவப்படுத்திய பண்பாட்டுப் பொழிவு என்று தன்னுடைய சுயசரிதையில் தம் தலைவரின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.

பொதுவாழ்வில் பலரும் ஏற்கத் தயங்கும், கசப்பான கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யும் போது ஏற்படும் எதிர்ப்புகளை எப்படிச் சந்திப்பது, எதிரிகளை எப்படி வெற்றி காண்பது என்ப தற்கு இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஒத்திகையாகவும் அடித்தளமாகவும் அமைந்திருந்ததை தலைவர் வீரமணி இந்நூலில் வெளிப்படுத்துகிறார்.

பெரியார்மீது செருப்பு வீச்சு

திருப்பாதிரிப்புலியூர் கெடிலம் நதி பழைய பாலம் அருகில் பெரியார் ரிக்ஷாவில் வரும்போது, செருப்பு ஒன்று வீசப்படுகிறது. பெரியார் என்ன செய்தார் என்பதை 11 வயதுச் சிறுவனாக அருகிலிருந்து பார்த்த தலைவர் வீரமணி இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று கவிஞர் கருணானந்தம் எழுதிய அற்புதமான கவிதையையும் இந்நூலில் பொருத்த மாக இணைத்திருக்கிறார்.

எல்லா வரலாற்று நூல்களும் பிறப்பிலிருந்து தொடங்கும். ஆனால், தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தம் சுயசரிதையைத் தொடங்குவதிலே புதுமை செய்திருக்கிறார்.

தான் பிறந்த வரலாறை எப்பொழுது குறிப்பிடுகின்றார்?

பெரியார் தொண்டன் என்ற அறிமுகத்துடன் தொடங்கும் நூல் - பெரியாருடன் முதல் சந்திப்பு, பெரியாரிடம் கற்ற பாடம் என்று மூன்று அத்தியாயங்கள் முடிந்த பிறகுதான் 1933 டிசம்பர் 2ஆம் தேதி பிறந்த வரலாற்றை எடுத்துரைக்கிறார்.

தலைவர் வீரமணி அவர்களின் தந்தையார் பற்றி குறிப்பிடுகிறார். புறா வளர்ப்பது, பந்தயம் விடுவது, சேவல் சண்டையில் நடுவராக இருப்பது, மல்யுத்தப் போட்டிகள், சிலம்பப் போட்டிகளில் முன்னிலை ஏற்பது என்று தலைவர் சுயசரிதை எழுதிச் செல்லும் போது வியப்பாகவும் இருக்கிறது - சுவையாகவும் இருக்கிறது.

தலைவரின் கொள்கை உணர்வு

புறாக்களைப் பற்றி எழுதும்போது தலை வருக்கு புரட்சிக்கவிஞரின் அழகின் சிரிப்பு நினைவுக்கு வருகிறது. புறாக்களைப் பற்றி பாரதிதாசன் சொல்லும் சொல்லோவியத்தை எடுத் துரைக்கிறார்:

உயிருள்ள அழகின் மேய்ச்சல்!

இட்டதோர் தாமரைப்பூ, இதழ் விரித்திருத்தல் போலே

வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்;

அவற்றின் வாழ்வில் வெட்டில்லை;

குத்துமில்லை; வேறுவேறு இருந்தருந்தும் கட்டில்லை

கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்கமில்லை

என்னும் கவிதையை எடுத்துக்காட்டும்போது தலைவரின் கொள்கை உணர்வு வெளிப்படுகிறது.

சாதி ஒழிப்புப் பணிக்கு - பொது வாழ்க்கைக்குப் போ என்று அனுப்பி வைக்கப் புறாவும் தூது வனாக அமைந்திருக்குமோ என்று எழுதும் போது இலக்கியவாதியின் எழுத்துவன்மை பளிச்சிடுகிறது.

சாரங்கபாணி - வீரமணியாக மாறிய வரலாறு

தலைவர் அவர்கள் அந்தக் காலத்தில் மேடையில் பாடுவார் என்ற செய்தி, தலைவர் அவர் களுக்குப் பூனைகளைப் பிடிக்காது என்ற செய்தி, தோழர்கள் கவிட்டுப்புள்ளு, கோலி விளை யாட்டு, சடுகுடு விளையாட்டு விளையாடும்போது ஜெயகாந்தனுடன் மரக்கிளையில் அமர்ந்து பல்வேறு சங்கதிகளை விவாதித்துக் கொண்டிருப்பார் என்ற தகவல், சாரங்கபாணி என்ற பெயர் வீரமணியாக ஆறாம் வகுப்பில் மாற்றப்பட்ட வரலாறு, 11 வயதில் மணவிழா உரை. 11 வயதில் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை, என்னை இந்தக் கொள்கைக்குக் கொண்டு வந்தவர் எனக்குப் பள்ளியில் ஆசிரியராக இருந்த திராவிட மணி என்ற பிரகடனம் எல்லாம் இந்நூலில் காணக் கிடக்கின்றன.

திடீரென்று உச்சத்திற்கு வந்தவரல்ல...!

அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற இந்த நூல் ஒரு தொண்டன் படிப்படியாக அணு அணுவாக முன்னேறி வளர்ந்து வந்ததை எடுத்துரைக்கிறது. ஒரே நாளில் - ஒரே பொழுதில் திடீரென்று உச்சத்திற்கு வந்த தலைவர் அல்லர் வீரமணி. ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்னும் நூலில் எழுதுகிறார் - கடலூரில், கடைத்தெருவில், கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள திடலில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் 12 வயது நிரம்பாத அந்தச் சிறுவன் ஏறி நின்று பிராமணர்களையும், நமது புராணங்களிலுள்ள ஆபாசங்களையும், கடவுள்களையும் கிழி கிழி என்று கிழிப்பதை வாயைப் பிளந்து கொண்டு நானும் பார்த்தேன். பேசி முடித்துவிட்டு அவரோ மார்பை விறைத்துக் கொண்டு தைரியமாக நடந்து போவார் என்று பதிவு செய்திருக்கிறார். இளமையிலே பொது வாழ்வில் நுழைந்து, 65 ஆண்டு காலம் பட்டி தொட்டி - ஊர் உலகு எல்லாம் சுயமரியாதைக் கொள்கையினை முழங்கி வருபவர் வீரமணி.

மணக்க மணக்க இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்

இந்த சுயசரிதை நூலில் தலைவர் வீரமணி அவர்கள், தம்முடன் பள்ளியில் படித்த, பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவ நண்பர்களை எல்லாம் மறவாமல் கவனத்துடன் பட்டியல் இட்டிருக் கிறார். தமிழக சமூக, இலக்கிய, அரசியல் வரலாற்றில் அவர்களும் முக்கிய இடம் பெற்றிருப்பதால், குறிப்பாக டிஜிஎஸ் தினகரன், பூவராகவன், பண்ருட்டி ராமச்சந்திரன், டாக்டர் ராஜசேகரன், குழந்தைவேலு, பரதராஜன், ராஜு, சாபு, விசுவநாதன் என்று எஸ்பிஜி தயாரிப்புகளை மண் வாசனை மணக்க மணக்க இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

பள்ளியில் படிக்கும்போதே வீரமணி அவர்களின் எழுத்துச் சீர்திருத்தம்

தந்தை பெரியாரின் கொள்கைகளை 10 வயதிலே, அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டு நடை போடுபவர் வீரமணி. பெரியார் 1935-இல் எழுத்துச் சீர்திருத்தத்தை தமது இதழ்கள் குடிஅரசு, விடுதலையில் பயன்படுத்தத் தொடங் கினார். சட்டமானது 1979இல். ஆனால் தலைவர் வீரமணி பள்ளியில் படிக்கும் போதே ஊடிஅயீடிளவைடி ஊடயளள கட்டுரை வகுப்பில் எழுத்துச் சீர்த்திருத் ததைப் பயன்படுத்தியதையும் ஆசிரியர் சொன்ன அறிவுரையையும் இந்நூலில் எடுத்துரைத்திருக் கிறார்.

தோழர்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்

திராவிடர் கழகத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படவேண்டும் என்பதில் தலைவர் வீரமணி அவர்கள் தீவிரமாக இருப்பார்கள். இயக்க வரலாறு, கொள்கைகள், அணுகு முறைகள் அனைத்தும் தோழர்களுக்குத் தெளிவாக தெரிய வேண்டும். இளம் நாற்றுகள் வளமாக அமைய வேண்டும் என்று வற்புறுத்துவார். தலைவர் வீரமணி அவர்களே தமது 12, 13, 14 வயதில் 1945, 1946, 1947 காலக் கட்டங்களில் திருச்சி, ஈரோடு முதலிய இடங்களில் பெரியார் நடத்திய பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.

உழைப்பால் - திறமையால் உயர்ந்தவர் வீரமணி

உழைப்பால் உயர்ந்தவர் வீரமணி. திறமையால் வளர்ந்தவர் வீரமணி. யாருடைய பரிந்துரை யாலும் பட்டத்திற்கு வரவில்லை. எவருடைய சிபாரிசினாலும் சிகரம் எட்டவில்லை. குடும்பப் பாரம்பரியம் குன்றின் மேல் ஏற்றவில்லை. நண்பர்களே! 1945-ல் முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் திருவாரூரில் நடத்திய திராவிட மாணவர் மாநாட்டில், போர்க்களம் நோக்கி என்னும் தலைப்பில் பேசியவர் வீரமணி. 12 வயதில் திருவாரூர் புகைவண்டி நிலையத்தில் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டவர் வீர மணி. இந்த நூலை வாங்கிப் படிங்க! எவ்வளவு செய்திகள்! உண்மையாக இருக்குமா? என்ற சந்தேகம் எதிரிகளுக்குக் கூட வராது. ஏனென்றால், எதையும் ஆதாரமில்லாமல் வீரமணி பேச மாட்டார். குடிஅரசு இதழ் - எந்த ஆண்டு? எந்த தேதி? எந்த பக்கத்தில் இருக்கிறது செய்தி என்ற விவரங்களை எல்லாம் இந்நூலில் எடுத்துப் போட்டிருக்கிறார்.

பசியைப் போக்க - பெரியாரின் தந்தி மணியார்டர்

பல்வேறு ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களை இந்நூலில் தலைவர் விவரித்திருக்கிறார். சூலூரில் கூட்டம் முடித்து, கோவையில் தங்கி இருந்த போது ஏற்பட்ட பொருளாதார நெருக் கடி - பசியினை இந்நூலில் குறிப்பிட்டு தந்தை பெரியார் அவர்கள் தந்தி மணியார்டர் மூலம் தொகை அனுப்பிய மனிதநேயத்தை அழகுறச் சித்தரித்திருக்கிறார். மாணவப் பருவத்தில் இயக்கப் பிரச்சாரம் என்பது மலர்ப்பாதை அல்ல. அது ஓர் எதிர் நீச்சல் வேலை என்பது இந்நூலினைப் படிக்கும்போது உணரலாம்.

ஆசிரியர் திராவிடமணியிடம் அடிவாங்கியதை

இந்த நூல், வரலாற்றை மட்டும் சொல்லவில்லை. வரலாற்றுடன் உயர்ந்த படிப்பினையும் உணர்த்து கிறது. எந்தப் பணிக்கு நம்மை அனுப்பு கிறார்களோ, அந்தப் பணியை முறையாகச் செய்து திரும்ப வேண்டும். இடையில் திசை திரும்பினால் அது எத்தனை பேருக்கு எவ்வளவு சங்கடம் உருவாகும் என்பதை தலைவர் வீரமணி அவர்கள், பொன்மலை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு நேரே வீடு திரும்பாமல், ஆக்கூர் பாட்டி வீட்டிற்குச் சென்றதால் ஏற்பட்ட குழப்பத்தை துயரத்தை - ஆசிரியர் திராவிடமணியிடம் அடி வாங்கியதை ஒளிவு மறைவு இல்லாமல் இந்நூலில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கலைஞர் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்

1945-ஆம் ஆண்டு புதுச்சேரியில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது நடைபெற்ற கலவரம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. புரட்சிக் கவிஞர் சென்ற ரிக்ஷா மீது செருப்பை வீசினார் கள். கலைஞர் வாழ்வில் மறக்க முடியாத இந்தச் சம்பவத்தை தலைவர் வீரமணி நேரில் பார்த்து சுயசரிதையில் எழுதியிருக்கிறார். கலைஞரை ஓட ஓட விரட்டி அடித்த கோரத்தினை கண்ணால் பார்த்த கொடுமைக்கு ஆளானவன் நான் என்று இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.

சுயமரியாதை இயக்கம் - நீதிக் கட்சி இணைந்து திராவிடர் கழகமாகத் தோற்றம் பெற்ற ஆண்டு 1944. அப்போது வீரமணிக்கு வயது 11. அந்தச் சின்ன வயதில் சேலத்திற்கு சென்றது வியப்பு; மாநாட்டில் கலந்து கொண்டது ஆச்சரியம்.

திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாட்டில் வீரமணி உரை

திராவிடர் கழகப் பெயர் மாற்ற மாநாட்டில் வீரமணி உரையாற்றினார் என்பது மகத்தான செய்தியாகும். உலகில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கின்றன. கட்சிகள் இருக்கின்றன. அதன் தலைவர்களாக பின்னாளில் வருபவர்கள் கட்சி - இயக்கத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்கள் என்ற செய்தி எங்கும் காண முடியாத அரிதினும் அரிதாகும்.

கலந்து கொள்ள முடியாத இரண்டு மாநாடு

இந்த நூலிலே ஓர் அருமையான குறிப்பு கிடைக் கிறது. வீரமணிக்கு வயது 76. பத்து வயதிலிருந்து இயக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கடந்த 66 ஆண்டுகளில் திராவிடர் கழகம் எத்தனையோ மாநாடுகளை நடத்தியிருக்கிறது. தலைவர் வீரமணி அத்தனை மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக் கிறார். அவரால் கலந்து கொள்ள முடியாத மாநாடு இரண்டுதான். தூத்துக்குடி மாநாடு, மதுரை மாநாடு. இந்தச் செய்தி இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.

எடைக்கு எடை தங்கம்

தலைவர் வீரமணிக்கு தமிழக மக்கள் நன்றியோடு விதவிதமான பொருட்களை வழங்கியிருக்கிறார்கள். எடைக்கு எடை நாணயத்தை வழங்கியிருக்கிறார்கள். வெள்ளியை வழங்கியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் உலகத்திலேயே எந்தத் தலைவருக்கும் கொடுத்ததில்லை. வீரமணிக்கு மட்டும்தான் மக்கள் எடைக்கு எடை தங்கம் வழங்கியிருக் கிறார்கள். அந்தத் தங்கத்தில் ஒரு குன்றிமணி அளவு கூட அவர் வீட்டிற்குக் கொண்டு செல்லவில்லை. அப்படியே இயக்கத் திற்குக் கொடுத்துவிட்டார்.

இந்தப் பழக்கம் - இந்தப் பண்பு எப்போது வந்தது என்ற வினாவிற்கு இந்த நூலிலே விடை கிடைக் கின்றது.

சப்-இன்ஸ்பெக்டர் ராமையா கொடுத்த பரிசு

1946 - திருத்துறைப்பூண்டியில் தலைவர் வீரமணியின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமையா 10 ரூபாயை புதிய மணிபர்ஸ் வாங்கி அதில் வைத்து வழங்குகிறார். அந்த அன்பளிப்பை நாவலர் நெடுஞ்செழியன் தான் மேடையில் வழங்குகிறார். தமிழர் தலைவர் வீரமணி அப்போதே 13 வயதிலே அந்தத் தொகையினை ஆசிரியர் திரவிடமணியிடம் ஒப்படைக்கிறார்.

தூத்துக்குடி மாநாட்டில் அண்ணா கலந்து கொள்ளாமை - ஆகஸ்ட் 15 துக்க நாள் என்ற அய்யாவின் கருத்துக்கு மாறாக அண்ணா, திராவிட நாடு இதழில் எழுதியது, இயக்கத்திற்கு 50,000 ரூபாய் நிதி திரட்ட முனைந்தபோது அண்ணா எதிர்த்து எழுதியது முதலிய வரலாற்று நிகழ்வுகளை தலைவர் வீரமணி இந்நூலில் சுட்டிச் சொல்கிறார்.

--------------தொடரும்....நன்றி:- -"விடுதலை" 3-3-2009

0 comments: