Search This Blog
8.3.09
மார்ச் 8 - உலக மகளிர் நாள் பெரியார் - கலைஞர் - தமிழர் தலைவர் பாராட்டுக்குரியவர்கள்
மார்ச் 8 - உலக மகளிர் நாளாகும். இன்றைய தினத்தில் மகளிர் உரிமைகளை எடுத்துக் கூறிடவும், அவர்களுக்காகப் பாடுபட்டு வருகின்ற தலைவர்களைப் போற்றுவது மகளிர் தலையாய கடமையாகும்.
தந்தை பெரியார் அவர்கள் 1929-ஆம் ஆண்டு செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் ஒரு மிக முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றினார். பெண்கள் போலீஸ் பணியில் சேர வேண்டும்; பெண்கள் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
அன்றைக்குத் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தைக் கேள்விப் பட்டு, படித்துப் பார்த்து இது எங்கேயாவது நடக்குமா?
பெண்கள் எப்படி ஆண்களைப் போல உடுப்புகளை மாற்றிக்கொள்ள இயலும்? அவர்களுடைய வாழ்க்கைநிலை அதற்கு ஒத்து வருமா?
பெண்கள் வெளியே வரவே, பெண்களை வெளியே அனுப்பவே தயங்குகிற இந்தக் காலத்தில் போய் இப்படி எல்லாம் பெண்கள் வேலை பார்க்க வேண்டும் என்று பெரியார் சொல்வது நடைமுறைக்கு உதவாது என்று கேலி, கிண்டல் பேசினார்கள்.
ஆனால், தந்தை பெரியார் அவர்கள் அதை எல்லாம் லட்சியம் செய்ய வில்லை. இன்றைக்கும் கண்கூடாக நாம் காணுகின்றோம். எப்பொழுது?
ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை இன்றைய காலகட்டத்தில் நாம் நடைமுறையில் காண்கின்றோம்.
பெண்கள் இன்றைக்கு காவல் துறையில் பணியாற்றுகின்றார்கள். பெண்கள் விமானங்கள் ஓட்டுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, சென்னை எழும்பூரில் செயினை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை பெண்போலீசார் வேகமாக ஓடிப்பிடித்து, அடித்து சிறையில் அடைத்தார்.
இன்றைக்குப் பெண்கள் இராணுவத்தில் பணியாற்றுகின்றார்கள்.
தந்தை பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இன்றைக்கு நம் கண்முன்னாலே நடை முறையில் காண்கின்றோம்.
அதேபோல, ஆண்களைப் போலவே பெண் களுக்கும் சம சொத்துரிமை கிடைக்க வேண் டுமென்று செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் அன்றைக்குத் தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார். அந்தத் தீர்மானத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சிக் காலத்திலே (1990) சட்டமாகக் கொண்டு வந்து பெண்களுக்குச் சமஉரிமைப் பெற்றுத் தந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க பெண்களின் வாழ்வில் என்றென்றைக்கும் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒரு அருஞ்செயலைச் செய்து காட்டியவர் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆவார்கள்.
இம்மாபெரும் சாதனையை உணர்ந்த காரணத்தால்தான் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர் என்ற மாபெரும் பட்டத்தையும், ஒரு மாபெரும் நினைவுச் சின்னத்தையும் திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் அவர்களுக்கு அளித்துப் பாராட்டினார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் சமுதாயத்தில் சரிபகுதி யான பெண்குலத்திற்குச் சமஉரிமை, சமவாழ்வு, சம நுகர்ச்சி என்று எதில் எடுத்தாலும் ஆண் குலத்திற்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவ்வளவும் கிடைக்க வேண்டுமென்று தமது பொது வாழ்க்கையில் 60 ஆண்டு காலத்திற்கு மேலாகப் பிரச்சாரம் செய்துகொண்டு வருகின் றவர். பெரியார் அவர்களுடைய கொள் கைகளை அல்லும், பகலும் அயராமல் பிரச் சாரம் செய்துகொண்டு வருகின்ற திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்கள் பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் 50 சதவிகித உரிமை கிடைக்க வேண்டும்.
இல்லையென்றால் பெண்களே வீதிக்கு வந்து போராடுங்கள்.
ஆண்கள் ஒரு போதும் உங்களுக்கு உரிமை தரமாட்டார்கள். நீங்களேதான் அந்த உரிமையை ஆண்களிடமி ருந்து தட்டிப் பறிக்க வேண்டும் என்று உலகப் பெண்களினத்திற்கு வாதாடக்கூடிய வழக்கறிஞர்போல் நின்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நின்று முழங்கி பெண்ணினத்திற்காகக் குரல் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆவார்கள்.
அந்தப் பிரச்சாரத் தினுடைய எதிரொலி என்ன?
தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றங்களில் 33 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கி பெண்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்ற அரிய செயலைச் செய்தார். அதையும் இன்றைக்கு நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
இன்னமும் நாடாளு மன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவர முடியவில்லை. பல பிரத மர்கள் மாறிவிட்டார்கள். ஆனால், ஆதிக்க வாதிகளான ஆண்களின் மனம் மாறவில்லை. பெண்கள் உரிமைபெற குறுக்கே நிற்கின்றார்கள்.
அது மட்டுமல்ல மகளிர் தேசிய ஆணையம் ஒன்றை தற்பொழுது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அமைத்தார்.
அதனுடைய பணி, சாராம்சம் என்ன? மகளிர்க்கு எந்தக் கொடுமையாவது நிகழ்ந்தால் அதைத்தனியே இந்த மகளிர் ஆணையத்திடம் புகார் செய்யலாம்.
கணவன் மனைவியை அடித்தார் என்பதல்ல, மனைவியின் கையை முறிப்பேன் என்று கண வன் சொன்னால்கூட போதும். இதனால் பாதிக்கப்பட்ட பெண் மகளிர் தேசிய ஆணையத்தில் புகார் கொடுத்தாலே போதுமானது. மகளிர் காவல் நிலையம் தனியே இருந்தாலும் அங்கு சென்று புகார் கொடுக்கக் கூச்சப்படுகின்றவர்கள், அஞ்சுகின்றவர்கள் இந்த ஆணையத்திடம் புகார் கொடுத்தாலே போதுமானது மிரட்டிய கணவனை சிறையில் தள்ளுவதற்கு இந்த மகளிர் ஆணையத்திற்கு அதிகாரமுண்டு.
இப்படி ஒரு மகளிர் ஆணையத்தைக் கலைஞர் அவர்கள் ஏற்படுத்தியதற்கு அடிப்படைக் காரணமென்ன?
மகளிர் துன்பப்படக் கூடாது. அவர்கள் உரிமையுள்ளவர்களாக நிம்மதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று கலைஞர் அவர்கள் மகளிர்பால் கொண்ட பேரன்பே காரணமாகும்.
மனித குல வாழ்க்கையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எல்லாத் துறைகளிலும் சம உரிமை கிடைத்தால் தான் இந்த நாடு முன்னேறும். இந்த சமுதாயம் முன்னேறும். உலகம் முன்னேறும்.
பெண்களின் உரிமைகளுக்காக, வாழ்வுக்காக, முன்னேற்றத்திற்காகப் போராடிக் கொண்டி ருந்த, இருக்கின்ற தலைவர்களான தந்தை பெரியார், முதலமைச்சர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் மாபெரும் பணிகளைப் பெண்டிர்குலம் நினைத்துப் பார்த்து அவர்களைப் போற்ற வேண்டும். திராவிட இயக்கத்தவர்களின் வழியைப் பின்பற்ற வேண்டும்.
-------------- சிங்.குணசேகரன் ------"விடுதலை"8-3-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
பெரியாரின் மறுமணம்?
கலைஞரின் திருமணங்கள்?
வீரமணியின் குடும்பம்?
புரியவே மாட்டெங்குதே?
Post a Comment