Search This Blog
29.3.09
பெரியாரும் அண்ணாவும் பிரிந்திருந்தார்களா?
எப்பொழுதும் பெரியார் உள்ளத்திலே நானிருப்பேன் என் உள்ளத்திலே அவர் இருப்பார்
அண்ணா கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் பேச்சு
எப்பொழுதும் பெரியார் உள்ளத்திலே நான் இருப்பேன். என்னுடைய உள்ளத்திலே அவர் இருப்பார். எங்களை யாரும் பிரிக்க முடியாது என்று சொன்னவர்தான் அண்ணா என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சென்னைப்பல்கலைக் கழகத்தில் - ஈரோடு முதல் காஞ்சி வரை என்ற தலைப்பில் அண்ணா நினைவுநாளில் 3.2.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :-
அண்ணா அவர்களு டைய நினைவு நாள் 3.2.2009 இன்று. இந்த நாளிலே ஏதோ அண்ணா நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைப்பதோடு நம்முடைய பணி முடிந்துவிட்டது என்று நாம் கருதக் கூடாது. மக்களைச் சிந்திக்க வைக்கக் கூடிய பணியைத் தான் அண்ணா அவர்கள் மறைகின்ற வரையிலே தன்னுடைய எழுத்தாலே, பேச்சாலே நாடக ஆற்றலாலே, திரைப் படத்துறையிலே அவர்களுடைய கருத்துகளும் முழங்கின என்கின்ற அந்த வாய்ப்பினாலே தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்கள்.
அப்படிப்பட்ட அண்ணா அவர்கள் மிகச் சிறப்பான வகையிலே அவர்கள் எப்படி எல்லாம் கருத்துகளைச் சொல்லி உருவாக்கினார்கள் என்பதை நினைக்கின்ற நேரத்தில் மிகப்பொருத்தமானது அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவை ஒட்டிய விழாத் தொடர் நிகழ்வுகள் என்று 15.09.08 இலே தொடங்கி 15.09.09 வரையிலே சிறப்புச் சொற்பொழிவுகள் ஆய்வுச்சொற்பொழிவுகள் என்று அமைக்கக்கூடிய இந்த வாய்ப்பினை சென்னைப் பல்கலைக் கழகம் - அந்தப் பல்கலைக்கழத்தினுடைய பழைய மாணவராகத் திகழ்ந்த அண்ணா அவர்களுக்குப் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நாம் எல் லோருமே பெரும்பாலும் இந்தப்பல்கலைக் கழகத்தினுடைய மாணவராகத்தான் இருந்திருப்போம். நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகக்தினுடைய மாணவன் என்றாலும் கூட, சட்டம் பயின்ற காரணத்தாலே, இந்தப் பல்கலைக் கழகத்தினுடைய மாணவனாக இருந்தேன். அப்பொழுது தனியே சட்டப் பல்கலைக் கழகம் கிடையாது. ஆகவே இந்த சென்னைப் பல்கலைக் கழகத்தினுடைய பட்டத்தை நான் பெற்றவன் என்ற முறையிலே, பழைய மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து - நம்மிலே ஒளி பொருந்திய ஒரு வைரக்கல் என்றைக்கும் வரலாற்றிலே ஒரு சமூகப் புரட்சியை தந்தை பெரியாரைப் பின்பற்றி செய்த ஒரு அறிஞரை இன்றைக்கு ஆய்வு செய்கின்றோம். நினைவு கூர்கிறோம். வருங்காலச் சந்ததியினருக்கு அவர்களுடைய சிந்தனைகள் எப்படி எல்லாம் மலர வேண்டும் என்பதை நினைவூட்டுகின்ற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
இதற்கு வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் குறிப்பாக நம்முடைய துணைவேந்தர் அவர்களுக்கும், நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர்கள் மருத்துவ மனையிலே இருந்து ஓய்வு பெற்று இந்த நிகழ்ச்சியிலே தான் முதல் நிகழ்ச்சியாக கலந்து கொண்டார்கள். அவருடைய மனிதநேயமும், அண்ணா அவர்கள் மீது கொண்ட அன்பும் எங்கள் மீது கொண்ட பாசத்திற்கும், என்றென்றைக்கும் நாங்கள் நன்றி செலுத்தக்கடமைப் பட்டிருக்கின்றோம்.
இங்கே ஏராளமானோர் வந்திருக்கின்றீர்கள். எனக்கு ஒரு அற்புதமான தலைப்பை இங்கே கொடுத்திருக்கின்றார்கள் - ஈரோடு முதல் காஞ்சிவரை என்று. அண்ணா காஞ்சி என்றால், அவருக்கு முதலே ஈரோடு தான் என்பதை முதற்கண் தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.
அண்ணா அவர்களுடைய முதல் (capital) எது? அந்த முதலே பெரியார்தான் - அதுவே ஈரோடு தான். எனவே அந்த முதலுக்கு வட்டி தான் அண்ணாவே தவிர, தொடர் வட்டிதான் அண்ணாவை தவிர, வேறு தனியாக அண்ணா என்பது கிடையாது.
அண்ணா அவர்கள் ஒரு முறை ஒரு ஊரிலே பேசும் பொழுது 18 ஆண்டு காலத்திற்குப் பிறகு நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்திருக்கிறீர்கள் என்று ஒரு நண்பர் பேசினார். இப்படி தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஏற்பட்ட இடைவெளியை நினைவூட்டி, அவர்கள் சொன்ன பொழுது சொன்னார்கள்.
நான் இப்படிச் சொன்ன நண்பரை ஒன்று கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் ஏதோ பிரிந் திருந்தோம் என்று யாரும் நினைத்து ஏமாந்து விடாதீர்கள்.
இது அண்ணா அவர்கள் சொன்ன பதில். பெரியார் ஒரு சகாப்தம் என்ற நூலிலே தெளி வாகவே சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. அண்ணா அவர்கள் பேசும்பொழுது, அவருடைய உரையிலே, சொல்கின்றார். தர்மபுரி மாவட்டம் நாகரசம்பட்டி என்ற ஒரு சிறு ஊர், அந்த ஊரிலே ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சி அண்ணா அவர்கள் முதலமைச்சரானவுடனே அவர்கள் பத விக்கு வந்த அந்த கால கட்டத்திலே அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு பேசும் பொழுது, அண்ணா அவர்களைப் பற்றி மற்ற நண்பர்கள் பேசிய பொழுது அதற்கு அண்ணா அவர்கள் பதில் அளிக்கும் பொழுது சொன்னார்கள்.
நானும், பெரியார் அவர்களும் பிரிந்திருந்ததாக சொன்னார்கள். அது தவறு. ஒரு போதும் நாங்கள் அப்படி பிரிந்திருக்கவில்லை. எப்பொழுதும் பெரியார் உள்ளத்திலே நான் இருப்பேன். என்னுடைய உள்ளத்திலே அவர் இருப்பார். ஆகவே எங்களை யாரும் பிரிக்க முடியாது என்று அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.
அண்ணா அவர்களுக்கு எவ்வளவு ஈடுபாடு! எப்படி தந்தை பெரியாரை மூலதனமாக - முதலாகக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு கிடையாது.
அதுமட்டுமல்ல, தந்தை பெரியார் அவர் களிடத்திலே அண்ணா அவர்கள் வந்து எப்படி எல்லாம் அவர்கள் மிகப் பெரிய அளவுக்கு வந்தார்கள் என்பதை அவர்களே சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள்.
அய்யா அவர்களுடைய பிறந்த நாள் விழா வின் பொழுது அண்ணா அவர்கள் பழைய கதையை எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றார்கள்.
அதில் என்ன சிறப்பானது என்று சொன்னால், தான் (அண்ணா) தந்தை பெரியார் அவர்களிடத் திலே சென்றுவிட்ட நிலையிலே அப்பொழுது அவர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத் தார்கள் என்பதைச் சொல்லுகின்றார்.
இன்றைய தினம் பெரியாருடைய ஒரு பெரிய குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்து ஒவ்வொரு பிள்ளையும், ஒவ்வொரு திக்கிற்குச் சென்று தான் இந்தத் திக்கிலே போய் இதைக் கொண்டு வந்தான். அண்ணன் அந்தத் திக்கிலே போய் இதைக் கொண்டு வந்தான் என்று சொல்லு வதைப்போல அவர்களுடைய (பெரியார்) பிள்ளைகள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள். எல்லா கட்சியிலும் இருப்பார்கள்.
அண்ணா அவர்கள் மேலும் சொல்லுகிறார். எந்தக் கட்சியில் அப்படியில்லை?
எனவே, இந்த முதல் இருக்கிறதே ஈரோடு என்ற முதல். அதனுடைய வட்டி. அண்ணா அவர் களிடத்திலே மட்டுமில்லை. அது பல இடங்களிலே தொடர் வட்டியாக பல ரூபங்களிலே இருந்திருக்கிறது என் பதற்கு அடையாளமாக அண்ணா அவர்களே கூறுகிறார்கள்.
எனவே அண்ணா அவர்களையே பேச வைத்துக்கேட்போம்.
அந்த வகையிலே எந்த பிள்ளையும் ஒருவருக்கு ஒருவர் சோடைபோனவர்கள் அல்ல. அவர்கள் எதை எதைப்பெற வேண்டும் என்று கருது கின்றார்களோ - அதைப் பெற்று குடும்பத்தில் நடக்கின்ற விழாவில் அவர்கள் பெற்றவற்றைப் பெரியார் அவர்களிடத் திலேகாட்டி, இதோ பாருங்கள் நான் பெற்றது என்று ஒவ்வொருவரும் காட்டும் பொழுது தந்தை பெரியார் அவர்கள் உரிய புன்னகையோடு, (அதைத்தான் நம்முடைய போராசிரியர் அரங்கசாமி அவர்கள் உணர்ச்சி பூர்வமாக இங்கே குறிப்பிட்டார்கள்) அவற்றைப் பார்த்து நான் கேட்டது இது வல்லவே என்கிறார்கள். இவர்கள் ரொம்ப ஆசையாகக் கொண்டு வந்து அந்தப் பொருளைக் காட்டுகின்றார்கள். அய்யா நாங்கள் இதைப் பெற்றுவிட்டோம் என்று காட்டுகின்றார்கள். தந்தையிடத்திலே ரொம்ப பாசத்தோடு காட்டுகின்றார்கள்.
ஈரோடு முதல் காஞ்சி வரை என்று சொல்லுகின்ற நேரத்திலே, ஈரோட்டைப் பற்றி காஞ்சி எப்படிக் குறிப்பிடுகிறது என்பதை கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இது கொஞ்சம் அறிவார்ந்தது.
எனவே இந்த அவையிலே நாம் அதை சிந்திக்கக் கடமைப்பட்டிருக் கின்றோம். பெருமை யோடு கொண்டு போய் காட்டி இந்தப் பொருளை பெற்றுவிட்டோம், அடைந்துவிட்டோம் என்று சொல்லுகின்ற நேரத்திலே நான் கேட்டது இது வல்லவே என்கிறார் தந்தை பெரியார்.
அவர்கள் கேட்டதைப் பெற்றுத்தரத்தக்க ஆற்றல் யாரிடத்திலும் இல்லை. அப்படி பெற்றுத் தரும் பொறுப்பு அவர்களிடத்தில். இது தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எப்பொழுது சொல்லு கின்றார்கள்? அண்ணா அவர்கள் முதல்வராக வந்த பிற்பாடு இந்தக் கருத்தை அவர்கள் சொல்லுகின்றார்கள்.
நாங்கள் பெரும் பொறுப்பைப் பெற்று விட்டோம். நாங்கள் அதிகாரத்தை அடைந்து விட்டோம். நாங்கள் அரசியலிலே வெற்றி பெற்றுவிட்டோம் என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படுகின்ற நேரத்திலே, அண்ணாவை அழைத்து மறைந்த ஜீவா அவர்களுடைய இல் லத்து மணவிழாவிலே அவர்கள் பேசுகின்றார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசுகிறார். அடுத்து அண்ணா அவர்கள் பேசுகின்றார். எல்லா கட்சித்தலைவர்களும் அந்த விழாவிலே கலந்து கொள்கின்றார்கள்.
அய்யா அவர்களே முன்னின்று திருச்சியிலே அந்த மணவிழாவை நடத்துகின்றார்கள்.
அந்த மணவிழாவிலே அண்ணா அவர்கள் சொல்லுகின்றார். அவர்கள் கேட்டதைப் பெற்றுத் தருகின்ற ஆற்றல் யாரிடத்திலும் இல்லை. அப்படிப் பெற்றுத்தரும் பொறுப்பு அவர்களிடத் தில்தான் போற்றிப் பாதுகாத்துக் கொள்ள என்னாலே முடியும். அது கிடைத்தால் யாருக்கு என்ன பங்கு? என்று கேட்க சிலர் இருக்கலாம் என்று சொன்னார். இதிலே எவ்வளவு ஆழமான கருத்து இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். ஒரு வெற்றியைப் பெற்று அதை பெற்றுக்கொடுத்தால், என்ன சொல்ல வேண்டும்?
தமிழர்களுடைய இயல்பு, இங்கே தமிழர்களைப் பற்றிச் சொன்னார்கள் அல்லவா? எதையும் பெற்று விட்டால், பெற்றுவிட்ட பிற்பாடு - அது கிடைத்தால் - யாருக்கு என்ன பங்கு என்று கேட்க சிலர் இருக்கலாம்.
இது இயல்பாகவே ஒரு கூட்டுக்குடும்பத்திலே இருக்கக் கூடிய ஒரு தன்மை.
அய்யா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறி வுப்புரட்சி, சுலபத்தில் நிற்கப்போவதில்லை. அது போக வேண்டிய தூரத்திற்குப் போய் அடைய வேண்டிய சக்தியை - இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும். எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை அடைய வேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான் அதன் வேகம் நிற்குமோ அது போல் பெரியார் அவர்களிடத்திலே இருந்து பிறந்த அறிவுக்கணை எந்த இலக்கை அடைய வேண்டுமோ அதை அடைந்தே தீரும். அங்கிருந்து கிளம்பியிருக்கிறது.
நாண் ஏற்றியிருக்கிறார். வில்லிலிருந்து புறப்படுகின்ற அம்பு இலக்கை அடைந்தே தீரும். அதில் அய்யம் யாருக்கும் இல்லை. இதில் கால அட்டவணையைக் கூட, நாம் கருதத் தேவையில்லை.
இதற்கு ஒரு கால அட்டவணை போட முடியாது. ஏனென்றால் இது ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம்.
காலம் காலமாக இருந்த மூடத்தனத்தை முடைநாற்றத்தை அடிப்படையை மாற்ற வேண் டிய, புரட்டிப்போட வேண்டிய ஒன்று.
புரட்சி என்ற சொல்லே தந்தை பெரியார் அவர்கள் அழகாக எழுதினார்கள். புரட்டு என்ற சொல்லிலே இருந்து தான் வந்தது என்று சொன்னார்கள். அப்படிப்போடு, மாற்றிப் போடு, திருப்பிப்போடு, அதைத் தலை கீழாக ஆக்கு என்று சொன்னதிலே இருந்துதான் அந்தப் புரட்சி என்ற சொல்லுக்கு ஒரு மூலம் இருக்கிறது. வேர் அங்கே இருக்கிறது என்று அய்யா அவர்கள் சொன்னார்கள்.
அதைத்தான் அண்ணா அவர்கள் பிரதியெடுத்துச் சொல்லுகின்றார்கள். அந்த அய்யம் யாருக்கு இல்லை? இதில் கால அட்ட வணையைக் கூட நாம் கருதத் தேவையில்லை.
அந்தப் பாதையிலே நாம் நடைபோட்டுக் கெண்டிருக்கின்றோம் என்று சொல்லுகின்றார்கள்.
30 ஆண்டுகளுக்கு முன்னாலே, தமிழ் நாட்டில், தமிழகத்தில் பேசுவதற்குக் கூச்சப் பட்டுக் கொண்டிருந்த செய்திகளை இன்று நம் எட்டு வயது சிறுவன் வெகு தாராளமாகப் பேசுகிறான்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே நம் முடைய மனதில் பயந்து கொண்டிருந்த தத்து வங்கள் இன்றைய தினம் கேள்விக்குறியதாகும் என்று நாடே சொல் லுகிறது. இரண்டு நூற் றாண்டுகள் பாடுபட்டு உண்டாக்க வேண்டிய அறிவுப்புரட்சியை, இருபது ஆண்டுகளில் அவர் பாவித்துக் கொடுத்ததால் தான் நமக்கெல்லாம் எளிதாக இருக்கிறது.
ஆனால் இது எளிதாகும் அளவுக்கு பெரியார் அவர்கள் பட்ட கஷ்டங்கள் எத்தனையோ அவைகளெல்லாம் நன் றாக நினைவுக்கு வருகின்றன.
நானும், அவரும் (பெரியாரும் அண்ணாவும்) ஒரு முறை சிவகங்கை மாநாட்டிற்குச் சென்ற நேரத்திலே அந்த ஊர் முழுவதும் பழைய செருப்புகளை அங்கே தோரணமாகிக் கட்டித் தொங்க விட்டார்கள்.
சிவகங்கையிலே - அய்யா அவர்களையும் அண்ணா அவர்களையும் ஒரு திறந்த காரிலே வைத்து ஊர்வலமாக அழைத்துப் போகின்றார்கள்.
தோரணங்களைக் கட்டி வரவேற்பது தமிழ் நாட்டினரின் பண்பு. அதற்குப் பதிலாக அங்கே யிருந்த அரசியல் கட்சி நண்பர்கள் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளுக்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்பதற்காக, பழைய செருப்புகளை எல்லாம் தேடிப் பிடித்து அவைகளை எல்லாம் தோரணங்களாகக் கட் டித் தொங்க விட்டார்கள்.
உலகத்திலேயே இவ்வளவு மோசமான எதிர்ப்பை சந்தித்த ஒரு இயக்கம் உண்டென்றால் அது திராவிட இயக்கத் தைத் தவிர, சுயமரியாதை இயக்கத்தைத் தவிர, வேறு கிடையாது.
வெற்றியை நாட்டிய இயக்கமும், இந்த இயக்கத்தைத் தவிர, வேறு கிடையாது.
-------------------தொடரும் ..."விடுதலை"-23-3-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment