தமிழ்நாட்டின் சமூக மாற்றத்தில் மிக முக்கியப் பங்காற்றியது பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணங்கள்தான். தமிழினத்தின் தன்மான உணர்வை இழிவுபடுத்தும் வைதிகத் திருமணங்களைப் புறந்தள்ளி தன்மானத் திருமண முறையை பெரியாரின் தொண்டர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர்.
அது தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் தொடங்கி, ஜாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற கொள்கைகளைத் தீவிரமாய்ப் பிரச்சாரம் செய்து வந்த காலகட்டம்.
பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்! பார்! என்று தமிழகத்தில் புரட்சிப் பூபாளம் பாடி குடும்பம் குடும்பமாய் தந்தை பெரியாரோடு தன்மானத் தமிழர்கள் இணைந்தபோது, பச்சை அட்டை குடியரசை வாங்கிப் படித்து இந்த இயக்கத்தில், தான் சேர்ந்ததோடு இல்லாமல் தன் உடன்பிறந்த ஆறு பேர்களையும் சேர்த்து தாராசுரம் சுயமரியாதைக் குடும்பம் என்ற பெயர் பெற வைத்தவர் மறைந்த சக்கரபாணி. பழுத்த வைதிகரான வை.கோவிந்தசாமி (செட்டியார்) அவர்களின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் திரு.சக்கரபாணி. கோவிந்தசாமி அவர்கள் தனது மூன்று மகன்களுக்கு மட்டுமே திருமணம் செய்து வைத்த நிலையில், தமது வீட்டில் இனிமேல் பார்ப்பனரை வைத்து எந்த நிகழ்ச்சியும் நடத்துவதில்லை என்ற கொள்கை முடிவை சக்கரபாணியும் அவர் உடன்பிறந்தவர்களும் எடுத்தார்கள்.
தங்கள் உறவினர்தம் ஒத்துழைப்பின்மை, ஊராரின் எதிர்ப்பு, சனாதனிகளின் கலவரம், சுயமரியாதைத் திருமணம் செய்தால் ஜாதியைவிட்டு நீக்கப்படுவீர்கள் என்ற அச்சுறுத்தல் போன்ற அனைத்தையும் புறந்தள்ளி 1936ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் அமாவாசை தினத்தன்று தன் தம்பி வரதராஜனுக்கும், புனிதவல்லி என்ற அம்மையாருக்கும் தாராசுரத்தில் முதல் சுயமரியாதைத் திருமணத்தை குடந்தை திரு.சின்னத்தம்பி அவர்கள் தலைமையில் ஒரு மாநாடு போல் நடத்தினார். அந்தத் திருமணப் பந்தலில்,
"பெண்ணுக்கு உரிமை தரவில்லையேல்
பின்னிந்த உலகினில் வாழ்க்கையில்லை"
"பெண்ணடிமை பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே"
போன்ற பதாகைகள் கட்டப்பட்டிருந்தன.
தனது அடுத்த தம்பி ராமானுஜத்திற்கு 1940ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் குஞ்சம்மாள் என்ற அம்மையாரைத் திருமணம் செய்து வைத்துள்ளார். இன்று ராகுகாலத்திலோ அமாவாசையிலோ திருமணம் செய்வது என்பது மிகமிக எளிது. ஆனால், 1936, 1940களில் இது எப்படி சாத்தியமாயிற்று? சுயமரியாதைத் கொள்கைகளின் மீது அவர்கள் வைத்திருந்த பற்றும் பிடிப்புமே அதற்குக் காரணமாகும். அன்று ஜாதி நீக்கம் போன்று அச்சுறுத்தியவர்களெல்லாம் பின்னாளில் போட்டிபோட்டுக் கொண்டு சம்பந்தம் செய்து கொள்ள முன்வந்தார்கள். இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.
ஒரே மேடையில் ஒரு திருமணத்திற்குமேல் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்தால் அந்த மணமக்கள் சிறப்பாக வாழமாட்டார்கள் என்பது ஒரு மூடநம்பிக்கை. அப்படியே செய்ய நேர்ந்தாலும் ஒன்றுக்குப்பின் மற்றொன்று என்றுதான் செய்வார்கள். ஆனால், தாராசுரம் சக்கரபாணி தன் குடும்பத்தில் இரண்டு, மூன்று, ஏன் நான்கு திருமணங்கள்கூட ஒரே மேடையில் ஒரே நேரத்தில் சர்வசாதாரணமாக நடத்திக் காட்டியுள்ளார். இதனால் திருமணச் செலவுகுறைவு, உறவினர்களுக்கு ஏற்படுகின்ற பொருளாதாரச் செலவு குறைவு, பயண அலைச்சல்கள் குறைவு என்பது அவரது கணக்கு அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதேபோன்று திருமண ஏற்பாடுகள் முடிவுற்ற நிலையில் ஏதேனும் இயற்கை இடர்பாடு எற்பட்டாலும் எப்படி நாணயத்திற்கு இரு பக்கமோ அதுபோல் வாழ்க்கையிலும் இன்பமும், துன்பமும் இருபக்கங்கள் என்ற கொள்கை அடிப்படையிலே நிகழ்ச்சிகளைத் தள்ளி வைக்காமல் நடத்திக் காட்டியதும் ஒரு சாதனைதான்.
அன்று தொடங்கி இன்று வரை சுமார் 81 திருமணங்கள் இந்தக் குடும்பத்தில் நடைபெற்றுள்ளன. அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகின்றனர்.
இத்திருமணங்களில் பல ஜாதிமறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பதிவுத் திருமணம் மற்றும் சிக்கனத் திருமணங்களும் அடங்கியுள்ளமை கூடுதல் சிறப்பாகும். மணமக்களின் பெயர்களோ தனித்தமிழிலும், புரட்சியாளர்களின் பெயர்களாகவும் இருக்கின்றன. மாஸ்கோ, தமிழ்க்கொடி, அறிவுக்கொடி, மணியரசு, ஸ்டாலின், செங்கொடி, பூங்கொடி, மின்னல்கொடி, சிறைவாணி, ரஷ்யா, லெனின், வாலண்டினா, இங்கர்சால், ரூசோ எனப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
குடந்தை கே.கே.நீலமேகம், தி.பொ.வேதாசலம், தமிழர் தலைவர் கி.வீரமணி, ஈ.வெ.கி.சம்பத் உள்ளிட்ட பல திராவிட இயக்கத் தலைவர்கள் திருமணங்களுக்குத் தலைமையேற்றுள்ளனர்.
இந்தக்குடும்பத்தில் அண்மையில் நடந்த 81ஆவது சுயமரியாதைத் திருமணத்தில் ஒரு சிறு கையேட்டை வெளியிட்டுள்ளனர். அதில் 81 மணமக்கள் பெயர்கள், மணநாள் மற்றும் சுயமரியாதைத் திருமணம் குறித்த தந்தை பெரியார், அன்னை மனியம்மையார், முதலமைச்சர் கலைஞர் ஆகியோர் கருத்துகளையும் இணைத்து அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு சுயமரியாதைத் திருமணத்திலும் இதுபோன்று சிறு கையேடுகளை வழங்கினால், இன்னும் இது போன்ற தன்மான மணமுறை அதிகரிக்கும். அந்த வகையில் வழிகாட்டும் குடும்பமான தாராசுரம் சுயமரியாதை வீரர் கோ.சக்கரபாணி குடும்பத்திற்கு பாராட்டைத் தெரிவிப்போம்.
----------------------"உண்மை" மார்ச் 15-31 2009
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment