Search This Blog

31.3.09

திருக்குறள் பற்றி பெரியார் சொன்னது சரியான கருத்தா?




தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம்
என்று மமதை கொள்ளாமல் பெற்ற வெற்றிக்கனியை
பெரியாருக்குக் காணிக்கையாக்கியவர் அண்ணா!

தமிழர் தலைவர் தெளிவான விளக்கவுரை


தான் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்று மமதை கொள்ளாமல் 200 மைல்களுக்கு அப்பால் சென்று வெற்றிக்கனியை தன்னுடைய தலைவரான தந்தை பெரியாருக்கு நன்றிக் காணிக்கையாக்கியவர் அண்ணா என்று திராவிடர்கழகத்தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னைப்பல்கலைக் கழகத்தில் - ஈரோடு முதல் காஞ்சி வரை என்ற தலைப்பில் அண்ணா நினைவுநாளில் 3.2.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

அதிலே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு என்னவென்று அண்ணா சொல்லுகின்றார்.

ஈரோட்டை முதலாகக் கொண்டிருக்கின்ற காஞ்சி அண்ணா நன்றி யுணர்ச்சியோடு சொல்கின்றார்.

எவ்வளவு மரியாதையோடு - அந்த குருகுலத் தினுடைய பயனை அவர்கள் எப்படிச்சுட்டிக் காட்டுகிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

லட்சக்கணக்கானவர்களில் ஒருவனாக இருக் கிறேன் என்று அண்ணா அவர்கள் சொல்கின்றார்.

இப்படிச்சொல்லும் பொழுது அவர்கள் முதலமைச்சர். தமிழ்நாட்டின் தன்னிகரற்ற முதலமைச் சர். இன்னும் கேட்டால் தன்னுடைய தந்தை தன்னுடைய வழிகாட்டி அவர் தன்னை எதிர்த்த பிற்பாடு, அதையும் மீறி வெற்றி பெற்று, இரு நூறு மைல்களுக்கு அப்பாலே சென்று அவரு டைய வெற்றிச்சாதனையை - வெற்றிக்கனியை அய்யா அவர்களிடம் கொண்டு சென்று காட்டி ஒரு தனி வரலாற்றை உருவாக்கி, நன்றி உணர்ச்சியை காட்டிய ஒரு முதலமைச்சர் அண்ணா அவர்கள் ஆவார்கள்.

மற்றவர்களாக இருந்தால் என்ன நினைப்பார்கள்? தன்னுடைய தலைவரையே எதிர்த்துக் காட்டி வெற்றி பெற்று விட்டோமே என்பதை அண்ணா அறியாதவர். அண்ணா அவர்களு டைய எளிமை, அண்ணா அவர்களுடைய நன்றி அப்படிப்பட்டது என்பதை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். இது நமக்கு. அண்ணா - பெரியார் உறவுக்காக அல்ல, வாழ்க்கையிலே தெரிந்து கொள்ளக் கூடிய வாழ்வியல் தத்து வங்களிலேயே இது தலை சிறந்த சான்றாகும்.

அண்ணா அவர்களுடைய தன்மை எப்பொழுதுமே அப்படித்தான்.

அண்ணா அவர்கள் வெற்றிபெற்ற நேரத்திலே ஒன்றைச் சொன்னார்கள். வெற்றி பெற்றவர்கள் எப்படியிருக்க வேண்டும். முற்றிய நெற்கதிர் எப்படி தலை சாய்ந்து இருக்கிறதோ அதுபோல வெற்றி பெற்றவர்கள் அடக்கத்தோடு இருக்க வேண்டுமே தவிர, ஆர்ப்பரிக்கக் கூடி யவர்களாக இருக்கக் கூடாது என்று அவர்கள் சொன்னார்கள்.

அண்ணா அவர்களுக்கு எப்பொழுதுமே அந்ந அடக்க உணர்வு உண்டு. அந்த அடக்க உணர்ச்சிக்கு யார் வழி காட்டி என்றால் - அதற்கும் முதல் தந்தை பெரியார் அவர்கள் தான்.

காரணம், தந்தை பெரியார் அவர்களே மிகுந்த அடக்கத்தோடு தான் எல்லாவற்றையும் சொல்லுவார்கள்.

அய்யா அவர்கள்- ஒரு திருமணத்திலே கலந்து கொள்கின்றார்கள். திருக்குறளைப் பற்றி, வள்ளுவரைப் பற்றி அங்கே விவாதம் வருகிறது. மனதிலே பட்டதை யாருக்காகவும் மறைக்காமல் அப்படியே சொல்லுகின்ற உணர்வு அய்யா அவர்களுக்கு உண்டு.

அந்த பிரபலமான திருமணத்திலே பிரபலமான குன்றக்குடி அடிகளார் இருக்கிறார். பல கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள்.

அதோடு திருக்குறள் முனுசாமி அவர்களும் இருக்கின்றார்கள். பெண்ணடிமையைப் பற்றி வள்ளுவர் கருத்து என்ன என்று ஒரு பிரச்சினை வந்தது.

பெரியார் அவர்கள் பேசிக் கொண்டு வருகின்ற பொழுது சொன்னார்கள் - ரொம்பவும் கோப மாகச் சொன்னார்கள்.

மற்ற இடங்களில் நான் வள்ளுவரைப் பற்றிச் சொன்னாலும் கூட, இந்த பெண்ணடிமைத் தனம் என்று வருகின்ற பொழுது வள்ளுவரை நான் மன்னிக்கத் தயாராக இல்லை என்று வேகமாகச் சொன்னார். பெண்ணடிமைத்தனத்தை வள்ளுவர் வற்புறுத்தியவர் தான் என்று சொல்லிவிட்டு தற்காத்துத் தற் ொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்

என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே என்று கேட்டார்.

இதை மாற்றி எங்கேயாவது இருக்கிறதா? வள்ளுவர் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்கவில்லையே.

இன்னொரு குறளையும் அய்யா அவர்கள் எடுத்துச்சொல்கின்றார்.

தெய்வந்தொழஅள் கொழுநன் தொழுதெழு வாள் பெய்யெனப் பெய்யும் மழை

என்று சொன்னால் கற்பு பெண்ணுக்குத்தான் உண்டு என்று வள்ளுவர் சொல்லியிருக்கின்றாரே என்று சொல்லுவார்.

கற்புள்ள பெண் மழை பெய்யும் என்று சொன்னால் பெய்யும் என்றால் இங்கே இருக்கின்ற தாய்மாரை கேட்கின்றேன். இங்கே மழையில்லை. மழைபெய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னால் மழை பெய்ய வேண்டும். அப்படி மழை பெய்யவில்லை என்று சொன்னால் உங் களுடைய நிலை என்னாவது? உங்களுடைய கற்பு என்னாவது? அப்படியானால் வள்ளுவர் சொல்வது சரிஎன்று ஏற்றுக் கொள்ள முடியுமா? இது அறிவுப்பூர்வமாக இருக்க முடியுமா?

கற்பு என்றால் இரண்டு பேருக்கும் சொல்லியிருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் சொல்ல வில்லையே வள்ளுவர் கூட!

கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தான். அதுவும் ஒரு சாராருக்கு மட்டும் தான் என்று வள்ளுவர் எழுதிவைத்திருக்கின்றாரே. எனவே வள்ளுவரே தவறு இழைத்திருக்கிறாரே.

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு

என்று சொல்லி விட்டுச் சொன்னார், இவ்வளவும் நான் ஏன் பேசுகிறேன் என்றால் வள்ளுவத்தில் ஊறிப் போன அறிஞர்கள் இங்கே இருக்கின்றார்கள்.

என்னுடைய கருத்து தவறாக இருந்தால், நான் தவறு செய்தால் என்னைத் திருத்துவார்கள் என்பதற்காகத்தான் நான் இந்த அரங்கத்திலே சொல்லுகின்றேன்.

அவர்கள் என்னைத் திருத்துவார்கள் என்று கருதுகின்றேன். திருக்குறளார் என்ன சொல்லு கிறார் என்று அய்யா அவர்கள் கேட்டார். திருக்குறளார் என்னைத் திரும்பிப் பார்த்தார். அவர் ரொம்ப நகைச் சுவையாகப் பேசக்கூடியவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

என்னிடம், என்னப்பா ரொம்ப சங்கடத்தில் விட்டு விட்டாரே என்று சொன்னார். அய்யா திரும்பி என்னிடம் கேட்டார். என்ன அவர் பதில் சொல்கிறார் என்று கேட்டார். வள்ளுவரைக் காப்பாற்ற திருக்குறள் முனுசாமி இல்லையா? பிறன்மனை நோக்காப் பேராண்மை என்று ஒரு திருக்குறள் இருக்கிறது. வள்ளுவரை காப்பாற்றுவதற்காக திருக்குறள் முனுசாமியார் சொன்னார். அய்யா அவர்கள் பட்டென்று பதில் சொன்னார். கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. கம்ப்யூட்டரைத் தட்டி னால் கூட கொஞ்சம் லேட்டாகும்.

அய்யா அவர்கள் உடனே சொன்னார். சரிங்க நானும் படித்திருக்கின்றேன். அது திருட்டுங்க.

அடுத்தவன் பொருளைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கின்றான். (சிரிப்பு - கைத்தட்டல்)

விதவைக்கு சொல்லியிருக்கின்றானா? என்று கேட்டார் (சிரிப்பு - கைத்தட்டல்)

திருமணம் ஆகாத பெண்ணுக்குச் சொல்லியிருக்கின்றானா? என்று கேட்டார். அது இன் னொருவருடைய மனைவியைப் பற்றிச் சொல்லி யிருக்கின்றான்.

பிறன்மனை நோக்காப் பேராண்மை இன்னொருவருடைய பொருளைத் திருடாதே என்று சொல்லியிருக்கின்றார். திருமணம் ஆகாத பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கின்றாரா? ஆகவே திருட்டைப் பற்றிச் சொல்லியிருக்கின்றாரே - தவிர, திருமணம் ஆகாத பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கின்றாரா? அல்லது விதவையான வர்களைப் பற்றிச் சொல்லி யிருக்கின்றாரா? என்று கேட்டார். உடனே திருக்குறளார் இல்லீங்க! இல்லீங்க! அய்யா சொல்லுவது சரிதாங்க! சரிதாங்க! என்று சொன்னார்.


என் உளம்கனிந்த நன்றி! பெரியாருக்குக் காணிக்கை. மேலும் அண்ணா சொல் கின்றார். பெரியார் அவர் கள் இன்னும் பன்னெடுங் காலம் நம்மோடு வாழ்ந் திருந்து யாரும் தாழ்ந்து விடாமல் என்று சொல்லி இவ்வளவு பெரிய வாய்ப்பு எனக்கு ஒருவனாக இருந்து கிடைத்ததிலே மிகுந்த மகிழ்ச்சியடை கின்றேன்.

என்னுடைய உளம் கனிந்த நன்றியைப் பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கிக் கொள்கின்றேன். அவருடைய அன்பினையும், ஆதரவினையும் பெற்றவன் என்ற முறையிலே இன்றைய தினம் (இது பல பேருக்குத் தெரிய வேண்டிய செய்திகள். அண்ணா அவர்கள் அவ் வப்பொழுது பதிவு செய்த நேரத்திலே இந்தப் பதிவுகள் முக்கியம். இந்தப் புத்தகம் சிறிய நூலாக இருக்கலாம். ஆய்வுக்குரியவை அண்ணா அவர்களுடைய நூல்களைப் பற்றி தனித்தனியே ஆய்வு செய்யுங்கள். அதில் பல பகுத்தறிவுப்பண்புகள் மட்டுமல்ல - மனிதநேயம் வளரும். எங்களைப் போன்றவர்களை அழைத்தால் நாங்கள் வந்து எப்பொழுதும் வகுப்பெடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் கட்டணம் வாங்காமலேயே. இதனால் நம்முடைய துணைவேந்தருக்குப் பொருளாதாரச்சிக்கல் கூட இருக்காது. ஆகவே அப்படிப்பட்ட ஒரு நிலையிலே இந்தக் கருத்துகள் ரொம்ப ஆழமானது. எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார்கள் பாருங்கள். அடுத்து அண்ணா சொல்கிறார்.) என்னுடைய உளம் கலந்த நன்றியை நான் பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கிக் கொள்ளுகின்றேன்.

அண்ணா அவர்கள் போடுகின்ற சொல் ஒவ்வொன்றும் ஆழமானது. அய்யா அவர்களைப் போல, அண்ணா அவர்களைப் போல சொற்களைப் பயன்படுத்தியவர்கள் வேறு யாருமே கிடையாது. அய்யா அவர்களுடைய கடுமொழியைக் கேட்காதவர். அவர்களுடைய அன்பினையும், ஆதரவினையும் பெற்றவன் என்கின்ற முறையில், என்றைய தினமும் அவர் களுடைய கடுமொழியைக் கேட்காதவன் என்ற முறையிலே சொல்லுகிறேன் என்று சொல் கின்றார்.

அய்யா அவர்களிடத்திலே அண்ணா அவர்கள் சம்பளம் வாங்கிய ஊழியராக இருந்தார். ஆனால் அந்தக் காலகட்டத்திலே கூட, கடுமொழியை அய்யா அவர்களிடமிருந்து அவர்கள் பெற்றதில்லை. அய்யா அவர்களிடத்திலே பணியாற்றியவர்கள் சிலர் - அல்லது பலர் கடுமொழியைப் பெற்றிருக்கின்றார்கள். அந்த ஆராய்ச்சி இப்பொழுது தேவையில்லை. மற்றவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லியிருக் கின்றார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் திருச்சி ஊர்வலத்தில் அய்யா அவர்களின் தனிப்பட்ட பாசத்திற்கு என்னுடைய இதயம் கலந்த கனிவு நிறைந்த முதலமைச்சராக இருக்கின்ற நிலையிலே அண்ணா அவர்கள் சொல்லியிருக்கின்றார் எவ்வளவு அற்புதமான சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறார்கள் பாருங்கள்.

17.09.1967 இலே திருச்சியிலே முதலமைச்சர் அண்ணா அவர்கள் - இப்படிப் பேசுகின்றார். நாங்கள் தான் அழைத்தோம். 18 ஆண்டுகளுக்குப் பின்னாலே அய்யாவும், அண்ணாவும் ஒன் றாக ஊர்வலத்தில் வருகிறார்கள்.

திருச்சி நகரத்திலேயே ஒரு கலகலப்பு. அதை எதிர்பார்க்கவே இல்லை யாருமே.

இருவரும் ஒன்றாக ஊர்வலத்திலே வருவார்கள் என்று கூட நினைக்க முடியாத ஒரு நிலை. அதிலே எனக்கு ஒரு பெரிய அனுபவமும் உண்டு. ஒரு பெரிய பங்கும் உண்டு.

அதையே உங்களுக்குச் சொன்னால் சுவையாக இருக்கும். இப்படி எவ்வளவு நேரம் வேண்டு மானாலும் சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.) என்னுடைய தூய்மை நிறைந்த வணக்கத்தை, மரியாதையை என்னிடமிருக்கின்ற தனிப்பட்ட பாசத்திற்கு, என்னுடைய இதயம் கலந்த, கனிவு நிறைந்த நட்பு மிகுந்த தூய்மை நிறைந்த (இப்படி எத்தனைச் சொற்கள் இருக்கிறது பாருங்கள்). வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித் துக்கொள்கிறேன் என்று சொல்லுகின்றார். மிக அழகாக எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி. அண்ணா அவர்கள் 1967 இல் முதலமைச்சரான நிலை, ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.


மக்களாட்சி ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முன்னாலே ஆட்சியில் இருந்தவர்கள் மக்களோடு தொடர்பு இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக ஆனவுடனே எங்கே பார்த்தாலும் அண்ணா அவர்களைப் பார்க்க ஒரே கூட்டம். அண்ணா ஏன் உதய சூரியனைத் தேர்ந்தெடுத்தார்? அண்ணா அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு இந்தப் பதவி வாழ்க்கை என்பது பொருந்தாத ஒன்று. அண்ணா அவர்களு டைய வாழ்க்கை முறை என்ன? இரவெல்லாம் படிப்பார். இரவெல்லாம் எழுதுவார். அண்ணா அவர்கள் விடியற்காலை 4 மணிக்குப் படுப்பார். பிறகு எழுந்து 11 மணிக்கு எழுதுவார். நாங்களெல்லாம் கூட வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

அண்ணா அவர்கள் ஏன் உதய சூரியன் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்று சொன்னால் அப்பொழுதுதாவது தேர்தல் சின்னமாகப் பார்க்கலாம் என்பதற்காக உதயசூரியன் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார் போலிருக்கிறது என்று நகைச்சுவையாக, வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஏனென்றால் அண்ணா அவர்கள் இரவு படிக்கப் புத்தகத்தை எடுத்தால் அதை முடிக்காமல் படுக்க மாட்டார்.


எழுதும் பொழுதுகூட சாதாரணமாக பெரியார் அவர்களுடைய சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார். அய்யா அவர்களுக்கு சாதாரணமாக யாராவது கடிதம் எழுதினால் - அவர்களே பொறுமை யாக இருந்து அந்தக் கடிதத்தின் கவரைக் கிழித்த உடனே போட மாட்டார். நாமாக இருந் தால் அந்தக் கவரைக் கிழித்து குப்பையிலே போட்டு விடுவோம். இது அவருடைய சிக்கனத் திற்கு ஓர் அற்புதமான உதாரணம். அய்யாவின் சிக்கனம் அந்த கவர் களைப் பிரித்து நன்றாக மடித்து ஒரு கிளிப்பை எடுத்து அதற்குள் வைப்பார்.

---------------தொடரும் .... "விடுதலை" 31-3-2009

1 comments:

Unknown said...

பெரியாரின் திருக்குறள் சம்பந்தமான விவாதத்தைப் படிக்க படிக்க பெரியார் பற்றி அறிந்து கொள்ள ஆவல் அதிகரிக்கிறது.