Search This Blog
15.3.09
தாழ்த்தப்பட்ட மக்களும் - தேர்தலும்
தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசுக்கு எதிராக. ‘ஷெட்யூல்ட் வகுப்பு பெடரேஷன்’ மூலமாகவோ, தனியாகவோ தேர்தலுக்கு நிற்கலாமா என்று பலர் நம்மைக் கேட்கிறார்கள்.
இவர்கள் தேர்தலுக்கு நிற்பதானது இன்றையத் தேர்தல் முறையைத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒத்துக் கொண்டுவிட்டதாக உலகம் கருதப்படத்தான் உதவி அளிக்குமே தவிர, மற்றப்படி வேறு எந்தக் காரியத்திற்கும், பயன்படாது என்பது நமது கருத்தாகும்.
திராவிட மக்கள் நிலைபோலவே, நம் மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்களின் நம்பிக்கையை ஒரு முகமாகப் பெற்ற தலைவர்கள் இல்லை. “தியாகம்” என்ற பக்கம் திரும்பிப் பெற்ற தலைவர்களும் இல்லை. அல்லது காங்கிரஸ் - ஆரியம் வேறு, தாழ்த்தப்பட்ட மக்கள் தன்மை வேறு தன்மை வேறு என்பதற்கான குறிப்பிட்ட கொள்கையும் இல்லை.
தாழ்த்தப்பட்ட மக்களில் பெருவாரிப்பேர் திராவிடர்கழகத்தாரைப் போலவே, இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு இந்துமத சம்பிரதாயப்படி, கடவுள், ஜாதி, பண்டிகை, நாள், கோள் பாரட்டுகிறவர்களாவார்கள். இந்தப் படியான மக்கள் யாராய் இருந்தாலும், காங்கிரசைக் குற்றம் சொல்லுவதும், காங்கிரசை எதிர்ப்பதும்,உண்மையாகவோ, அறிவுடைமையாவோ, இருப்பது அதிசயமேயாகும், அவர்களுக்கு ஏற்பட்ட இன்றைய தேர்தல் முறையானது மிக மிக மோசமும், சாதாரணத்தில் வெற்றி பெற முடியாததுமாகும். இவைகளைத் திருத்தி அமைப்பதற்குச் சர்க்காரோடுஒத்துழையாமை செய்து, அல்லது போராடித் தேர்தலைப் பகிஷ்கரித்துச் சண்டித்தனத்தின் மூலம் கிளர்ச்சி செய்வதே தகுந்த வழியாகுமேயல்லாமல் தேர்தலுக்கு நிற்பது பயன்தராது.
இன்றைய நிலையில் இச்சமுதாயத்தில் தேர்தலுக்குக் காங்கிரசின் மூலம் நிற்பவர்களைவிட, காங்கிரசைவிட்டு விலகி நிற்பவர்கள் எந்த விதத்திலும் அச்சமுதாயத்திற்கு எந்தவித நலனையும் செய்பவர்களாக மாட்டார்கள்.
ஏனெனில் முன்னையவர்கள் நிற்பதன் மூலம் சட்டசபை சென்றாலும் ஒன்றும் செய்யக் காங்கிரசாரால்அனுமதிக்கப்படமாட்டார்கள். பின்னவர்கள் நிற்பதன் மூலம் சட்டசபை ஸ்தானம் பெறுவது அசாத்யமானதாகும். சாத்தியமானாலும், பெருமை பெறுவது தவிர ஒன்றும் செய்யமுடியாதவர்கள். ஆகவே அடிப்படைத் தத்துவத்தையே மாற்றி அமைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறவர்கள், அற்ப நலத்திற்கு அதுவும் பெரிதும் பொதுநலமற்ற காரியத்திற்கு இணங்குவதோ அதில் இறங்குவதோ பரிதபிக்கத்தக்க காரியமென்பது நமது கருத்து.
குறிப்பாகவும் முக்கியமாகவும், அச்சமுதாயத்திற்கு ஒன்று சொல்லுவோம். அதாவது தாழுத்தப்பட்ட மக்கன் நலத்திற்குத் தலைவர்களாய் இருப்பவர்கள், பதவியில் இல்லாதவர்களும் பதவியில் பற்று, மோகம், அவசியம் இல்லாதவர்களுமாகவே இருக்கவேண்டும். தலைமையில் இருப்பவர் தவிர மற்றவர்கள் அச்சமுதாயத்தின் பேரால், பதவி, பட்டம், அதிகாரம், சம்பளம், சன்மானம் பெறலாம். ஆனால் தலைவர்கள் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது. சர்க்கார் இம்மாதிரியாகத் தலைவர்களுக்குப் பதவி பட்டம், உத்தியோகம், சம்பளம் சன்மானம், கொடுப்பது அனேகமாக அவ்வகுப்பு மக்களை வஞ்சித்து அடக்கித் தங்களுக்கு அனுகூலமாகவும், தங்கள் எதிரிகளுக்கு எதிரிகளாகவும், ஆக்கி வருவதற்கே அல்லாமல், வேறு கருத்து 100 க்கு 90 காரியங்களில் இருக்காது.
கடைசிப் பட்சம் பதவி பெற்றவர்கள் தலைமைப் பதவியை வேறு ஒருவருக்கு விட்டுவிட்டாவது, பதவி பார்க்கவேண்டும். தலைமைப் பதவியும், அதிகாரம், பட்டம், சம்பளம், பதவியும் இரண்டும் ஒருவரே பார்த்தால், சர்க்காரிலும் பொதுமக்களிடத்திலும், அப்படிப் பட்டவருக்கு, அந்த வகுப்புக்கு மதிப்பு, மரியாதை, நம்பிக்கை இருப்பது மிகக் கஷ்டமாகும்.
ஆகவே இப்போது சட்டங்களையும், திட்டங்களையும் மட்டுமரியாதை இல்லாமல் வெறுத்து உதாசீனம் செய்து போராட வேண்டிய மிக நெருக்கடியான காலமாகும். இந்த சமயத்திற்கு வேண்டியது சட்டசபையும், சட்டசபையில் இருக்கும் தன்மையும், நமக்கு முடியாததும், முடிந்தாலும் பொருத்தமற்றதாகும். 20 ஆண்டு தொடர்ந்த அனுபவத்தின் மீது இதைச் சொல்லுகிறோம். ஆகவே ஒரு அளவுக்காவது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள், பட்டம், பதவி, சட்டசபை, ஆகியவைகளை அதில் நம்பிக்கையோ,அவசியமோ உள்ளவர்களுக்கு வுட்டுவிட்டு, வெளியில் நின்று போராடுவதற்குத் தயாராய் இருக்கவேண்டுமென்று, உண்மையும், உரமும் உள்ள தோழர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
இதுதான் நம்மைச் சட்டைசபைத்தேர்தலைப் பற்றிக் கேள்விகேட்டதோழர்களுக்கு நம் விடையாகும்.
------------------------பெரியார் ஈ.வெ.ரா கட்டுரை -‘குடிஅரசு’ 2-2-1946- நூல்:-"பெரியார் களஞ்சியம்" தொகுதி -9 ("ஜாதி -தீண்டாமை" பாகம் -3) பக்கம் 5-7
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
// தாழுத்தப்பட்ட மக்கன் நலத்திற்குத் தலைவர்களாய் இருப்பவர்கள், பதவியில் இல்லாதவர்களும் பதவியில் பற்று, மோகம், அவசியம் இல்லாதவர்களுமாகவே இருக்கவேண்டும். தலைமையில் இருப்பவர் தவிர மற்றவர்கள் அச்சமுதாயத்தின் பேரால், பதவி, பட்டம், அதிகாரம், சம்பளம், சன்மானம் பெறலாம். ஆனால் தலைவர்கள் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது.//
சரியான ஆலோசனை. தாழ்த்தப்பட்ட தலைவர்களுக்கு என்றில்லாமல் மற்றவர்களுக்கும் இந்த அறிவுரை பொருந்தும்.
தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி திருநாவு
Post a Comment