Search This Blog

8.3.09

வெற்றி பெற்ற (நிறைவேறிய)பெரியார் சிந்தனைகள்


பெண்களுக்கு (அ)நீதி சொன்னவர்கள் ஆண்களே!
பெண்ணுரிமைக் குரலை உரத்து எழுப்பியவர் பெரியார் மட்டுமே!


மனித சமுதாயத்தில் சரிக்குச் சரியாக இருக்கும் பெண் சமுதாயமானது மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலும் பயன்படாத சமுதாயமாக இருப்பதால், நாட்டில் நடைபெறவேண்டிய முன்னேற்றங்களில் பாதிக்கு மேல் நடைபெற முடியாமற் போன தோடு, அடைய வேண்டிய வளர்ச்சி அடையாமல், உலக நாடுகளில் நம்நாடு இந்த 20ஆம் நூற்றாண்டிலும் இருக்க வேண்டியதாயிற்று.

நம் நாடு முன்னேற்றமடையவும், வளர்ச்சி அடையவும், பெண்கள் சமுதாயமானது விடு தலை பெற்று ஆண்களைப் போல், சகல துறைகளிலும் சுதந்திரமாக ஈடுபடவேண்டும். அப்போதுதான் நம் நாடு முழு வளர்ச்சியினைப் பெற முடியும் என்பதால் பெண் விடுதலையை முதன்மையாகக் கொண்டு இக்காரியத்தில் இறங்கியிருக்கின்றோம் என்று அறிவித்துவிட்டுப் பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்த ஒரே ஆண் - தந்தை பெரியார் அவர்கள்.


நீதிநெறிகள், கட்டுப்பாடுகள் என்கிற பெயரில், பெண்களுக்கான போதனைகளைச் செய்த வர்கள் அனைவரும் ஆண்களே என்பதைச் சுட்டிக்காட்டி, அதனால்தான் அவை, ஆணாதிக்கத் திற்கே வழிகோலுபவையாக அமைந்தன எனச் சுட்டிய பெருமையும் பெரியாரையே சாரும்.
அவ்வையார் கூறிய கருத்தையும் கண்டித்த பெரியார் - பெண்ணாக இருந்து அவ்வை இப்படிக் கூறலாமா எனக் கண்டித்த பெண்ணுரிமைப் போராட்ட வீரர் அவர்!


அவர் காலங்காலமாகக் கூறி வந்த பெண்ணுரிமைக் கருத்துகள், காலப்போக்கில் சமுதாய மும் ஏற்றுக் கொண்டது; அரசின் சட்டங்களும் இயற்றப்பட்டன. அப்படியொரு மாற்றம் எற்பட்டதற்குக் காரணம் அவருடைய போராட்டங்களில் இருந்த துணிவும் கொள்கைகளில் இருந்த நேர்மையுமே!

திருமணச் சடங்குகளில் அர்த்த மற்ற பழக்கங்கள் இருப்பதைக் கண்டித்தார்.
இன்று அவை இல்லாத, சீர்திருத்தத் திருமணங்கள் நாள் தோறும் நாடு முழுவதும் நடக் கின்றன.

மூன்று நாள்கள் முதல், அய்ந்து நாள்கள் வரை நடந்து வந்த திருமண ஆடம்பரங்கள் அகற்றப்பட வேண்டும் என்றார்.
இன்று, புரோகிதத் திருமணங்களாக இருந்தாலும் அவை ஒரு நாள் மட்டுமே நடக்கின்றன.


குழந்தை மணம் செய்து வந்த நிலையைக் கண்டித்தார்.

இன்று, வடநாட்டில் பலபகுதி களில் நடந்தாலும்கூட, தமிழ் நாட்டில் நடப்பதில்லை.


பெண்களுக்குச் சொத்துரிமை, ஆண்களைப் போலவே சமமாக, வழங்கப்பட வேண்டும் என்றார். 1929 செங்கற்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டிலே தீர்மானம் நிறைவேற்றினார்.
இன்று அதற்கான சட்டமே 1989இல் கொண்டுவரப்பட்டுப் பெண்களுக்குச் சொத்துரிமை வந்துவிட்டது!


பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்று தங்களைக் காத்துக் கொள்வதோடு, தாக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

இன்று சிலம்பம், ஜுடோ, கராத்தே போன்ற வீரக் கலை களைக் கற்றுச் சிறந்து விளங்கு கிறார்கள்.


காவல்துறையிலும் மகளிர் பணி செய்திடவேண்டும் என்றார்.
இன்றோ காவல்துறை மட்டுமல்ல - தரைப்படை, கப்பல் படை, வான்படை என முப்படை களிலும் பணிபுரிகின்றார்கள். அத்துடன், சவால்கள் நிறைந்த நீர்மூழ்கிக் கப்பல்களிலும் பணி புரியத் தயாராகியுள்ளனர்.


அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் சிறு குடும்பம் - சீரான வாழ்வு என்ற நாட்டிலேயே முதன்முதலில் கூறி - அதற்காகக் கருத்தடை அவசியம் என்றார்.
இன்று அறுவை சிகிச்சையின் மூலம், குழந்தைப் பிறப்பை நிரந்தரமாகவே தடை செய்து கொள்ளும் நிலையைப் பெண்கள் ஏராளமான அளவில் செய்துகொள்கின்றனர்.


கோயில்களில் தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
1929இல் கூட்டம் கொண்டு வரப்பட்டு சில ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. இன்றும்கூட ஆந்திரா, கருநாடகா மாநிலங்களில் இப் பழக்கம் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.


பெண்களுக்குத் தாலி கூடாது - அது அடிமைச் சின்னம் எனக் கூறினார். (1930)
இன்றோ தாலி கட்டாத திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடக்கின்றன. ஏற்கனவே தாலி கட்டிக் கொண்டவர்கள் அதனை அகற்றும் நிலையும், பொது நிகழ்ச்சிகளில் அதனை அறுத்து, அகற்றுவதும் ஏராளம் நடக்கின்றன.


மக்கள் தொகையில் சரி பாதியினர் மகளிர் வேலை வாய்ப் புகளில் மகளிர்க்கு 50 விழுக்காடு அளித்திடல் வேண்டும் என்றார் தந்தை பெரியார். (1965)
இன்று வேலைவாய்ப்புகளில் மகளிர் சுமார் 20 விழுக்காடு அமர்ந்திருக்கும் நிலையைக் காண்கிறோம். தனியாகவே மகளிர் காவல் நிலையங் களிருக்கும் நிலையும் தமிழ் நாட்டில் உண்டு. மகளிர் கமாண் டோக்களே, காவல் சிறப்புப் பிரிவில் உள்ளனர் எனும் சிறப்பும் தமிழகத்திற்கு உண்டு.


பெண்களைப் படிப்பாளியாக்குங்கள் என்றும் தொழிற்கல்வியை அளித்திட வேண்டும் என்றும் தந்தை பெரியார் கூறினார். (1966)

இன்று மகளிரில் கல்வியறிவு பெற்றோர் 60 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது. கட்டடப் பொறியாளர், எந்திரப் பொறியாளர், மின்னணுப் பொறியாளர் எனப் பொறியாளர் துறையில் எல்லாப் பக்கங்களிலும் பெண்கள் பணிபுரிவதைப் பார்க்கிறோம்.

பெண்ணடிமைத்தனம் போக வேண்டுமானால் பெண்கள் சம்பாதித்துத் தம் காலில் நிற்க வேண்டும் என்றார். (1966)
இன்று மகளிர் எல்லாத் துறைப் பணிகளிலும் பெருமளவில் பணியாற்றி தன்னிறைவு பெற்றவர்களாகவும் தம் குடும்பத்தைக் காப்பவராகவும் உள்ளனர்.


21 வயதுக்குமேல்தான் பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
இன்றைக்கு அதுவே சட்ட மாகிவிட்டது. படித்துப் பட்டம் பெற்று பணியில் சேர்ந்து திருமணம் எனும் நிலையில் 25 வயதில் திருமணம் செய்துகொள்ளும் நிலை வந்துள்ளது.

உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேணடும என்றார். சமையல் செய்வ திலேயே பெண்களின் காலமும், நேரமும் கழிவதால் தயாரிக்கப் பட்ட உணவை உண்ணும் பழக்கம் வரவேண்டும் என்றார்.
பிட்சா, ரொட்டி போன்ற வற்றை உண்ணும் பழக்கம் பெரும்பாலான பணி செய்யும் மகளிரிடம் வந்துவிட்டது. அதனையே அவர்தம் குடும்பத்தினரும் கைக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.

பெண்களை அடிமைப் படுத்தப் புகுத்தப்பட்ட பல சடங்குகளில் காது குத்துவதும் ஒன்று என்றார். காதில் ஓட்டை போட்டுக் கம்மல் அணிய வேண்டும் என்பது கடவுளின் விருப்பமானால் - காதில் ஓட்டையுடன் அல்லவா படைத்திருக்க வேண்டும்? என்று கேட்டார்!
சடங்கு நடத்தாமலே காது குத்திக் கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது. அதுவும் தேவைப் படாமல் மேலை நாட்டினரைப் போல் காதில் அமுக்கி அணிந்து கொள்ளும் கம்மல் அணி கிறார்கள், இன்று!


கணவன் - மனைவி முறை, ஜாதி முறையைவிடக் கேடானது என்றார். தந்தை பெரியார்.
இன்றோ, திருமணம் என்ற வகையில் இணையாமல், நண்பர்களாகச் சேர்ந்து வாழ்ந்துவரும் இணையர்கள் நாடு முழுவதும் பெருகியுள்ளனர்.


பெண்களுக்கு விதவைத் தன்மையே இருக்கக்கூடாது என்றார் தந்தை பெரியார்.
இன்று, கணவனை இழந்த பலர் அதனை வெளிப்படையாகவே விளம்பரப்படுத்தித் துணையைத் தேடிக்கொள்ளும் துணிவும் பழக்கமும் மகளிர்க்கு வந்துவிட்டது. விதவை ஆகி விட்ட பார்ப்பன மகளிர்கூட மறுமணம் செய்து கொள்கின்றனர்.


ஆண்களைவிடப் பெண் கள் அதிகம் படிக்கவேண்டும் என்றார் தந்தை பெரியார்.
ஆண்களுக்குச் சமமாகப் பல மாவட்டங்களில் பெண்கள் கல்வி யறிவு பெற்றுள்ளனர். சிறப்பாகவும் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

பெண்கள் கிராப் வெட்டித் தலை மயிரைக் குறைத்துக் கொண்டு, சட்டை, பாண்ட் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
இன்று படித்த பெண்களில் பெரும்பான்மையோர், பாய் கட் வெட்டிக்கொண்டு பாண்ட், சட்டை அல்லது டீசர்ட் அணிந்து வசதியாகக் காட்சியளிக்கின்றார்கள்.


தந்தை பெரியாரின் தத்துவங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் பரப்பப்பட்டதோடு நிறுத்தி விடாமல் அவர் உடலால் மறைந்துவிட்ட இந்த 36 ஆண்டுக் காலமும் அந்தக் கொள்கைகளை அவரின் தத்துவ வழித்தோன்றல் தமிழர் தலைவர் அவர்கள் இடைவிடாது எடுத்துக்காட்டிப் பரப்பி வருவதால் மக்கள் தெளி வடைந்து அதனைக் கடைப் பிடித்துப் பின்பற்றும் உன்னத நிலை உருவாகியுள்ளது.

அந்த நிலையில், சில வெற்றித் துளிகள் மேலே.


---------------------நன்றி:- "விடுதலை" 8-3-2009

1 comments:

Unknown said...

பெரியாரின் சிந்தனைகள் அனைத்தும் மக்கள் நலன் நோக்கிய சிந்தனைகள். கண்டிப்பாக பெரியாரின் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். நிறைவெறும்.