Search This Blog

20.3.09

படிப்பு வேறு, அறிவு வேறு - எப்படி? ஏன்?


அறிவும் படிப்பும்

அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புதிதாகப் படிப்பையும், குருட்டு உருப்போட்டுத் தேர்வுகளில் தேறிவிடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர்களையும் தமிழ்ச் சங்கத்தில் படித்து வித்துவான் பரீட்சை பாஸ்பண்ணி பட்டம் பெற்றவர்களையும் கல்வியாளர் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு வித்தையில், அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக் கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில் தேர்ந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதாவது, அலமாரியில் உள்ள புத்தகங்களைப் போல், இவர்களும் தங்கள் மனத்தில் பல விஷயங்களைப் பதிய வைத்திருக்கும் ஒரு நகரும் அலமாரி என்றுதான் சொல்ல வேண்டும்.

படிப்பு வேறு, அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள். படித்த மூடர்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். உதாரணமாக, பூகோள சாஸ்திரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற ஓர் உபாத்தியாயர் பிள்ளைகளுக்குச் சூரிய, சந்திர கிரகணத்தைப் பற்றி வானசாஸ்திர பாடம் சொல்லிக் கொடுக்கும்போது, பூமியும் சூரியனும், சந்திரனும் ஒன்றுக்கொன்று சுற்றுவதன் பயனாய் ஒன்றால் ஒன்று மறைக்கப்படுவதால் அதன் ஆகிருதியும் ஒளியும் மறைவுபடும். அதைத்தான் சந்திரகிரகணம் என்றும் சூரியகிரகணம் என்றும் சொல்லுவது என்று பாடம் சொல்லிக் கொடுப்பான். ஆனால், சந்திரகிரகணமோ, சூரிய கிரகணமோ வந்துவிட்டால், சூரியன் என்கின்ற ஒரு தேவதையை இராகு, கேது என்கின்ற தேவதைகள் துன்பப்படுத்துவதாகவும், இது அவைகளுக்கு ஏற்பட்ட சாபத்தீடு என்றும், அதற்காக மக்கள் தோஷ பரிகாரம் செய்ய வேண்டுமென்றும் சொல்லி கொண்டு, கிரகணம் பிடிக்கும்போது ஒரு ஸ்நானமும், விடும்போது ஒரு ஸ்நானமும் மத்தியில் மந்திரங்களும் ஜபங்களும் செய்வாள்; சாப்பிடாமல் பட்டினியாகவும் இருப்பான். மற்றும் தான் பிறந்த நேர கிரக நட்சத்திரமும் கிரகண நேர நட்சத்திரமும் ஒன்றாயிருந்தால் நெற்றியில் பட்டங் கட்டிக் கொண்டு முழுகுவான். ஆகவே, அவனது படிப்பு வானசாஸ்திரப் பரீட்சையில் தேறத்தான் உபயோகப்பட்டதே தவிர, அந்த எம்.ஏ. பட்டம் பெற்றவனுக்கு அது அறிவுக்குச் சற்றும் பிடிக்கவேயில்லை. ஆனால், நமது தமிழ்ப் பண்டிதர்கள் நிலையோ அப்படிக்கூட இருக்க முடிவதில்லை. அவர்களுக்கு உள்ள படிப்பே முட்டாளாவதற்கு முதல் தர மருந்து போன்றது. புராணங்களைத் தவிர, அவர்களுக்கு வேறு படிப்பே கிடையாது. இலக்கணம், நீதிநூல் என்று சிலவற்றைப் படிப்பார்கள். ஆனால், அவைகளும் ஆரம்பமும் மூடத்தனமாகவே இருக்கும்; முடிவும் மூடத்தனமாகவே இருக்கும். மத்திய பாகமோ உலக வாழ்க்கைக்குப் பயன்படாததாகவும் அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமானதாகவுமிருக்கும்.

ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் என்பவர்களுக்காவது அறிவாளர்-களாவதற்கு ஏற்ற பல நூல்கள் உண்டு. தமிழ்ப் பட்டதாரிகளுக்கோ மடையவர்-களாவதற்கேற்ற நூல்கள் உண்டு. அதாவது, அவை பெரிதும் வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்பன போன்றவைகளைத் தவிர இலக்கணம், இலக்கியம் என்று சிலவும் கூட்டி இவைகளை உருப்போட்டுப் பரீட்சை கொடுத்தவர்களாவார்கள். ஆகவே, ஆங்கிலப் பட்டதாரிகளிடம் எதிர்பார்க்கும், அதாவது அறிவியல் புத்தகங்கள் படிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்த அளவுகூடத் தமிழ்ப் பட்டம் பெற்ற பண்டிதர்கள் என்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, மனிதன் முழுமூடனாக வேண்டுமானால் புராணங்களையும் இதிகாசங்களையும் படித்துப் பண்டிதனாக வேண்டியதுதான் என்பதற்கிணங்கித்தான் நமது படிப்பும், அறிவும் இருக்கின்றது. தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்களுடைய யோக்கியதையை நான் பார்த்த பிறகு, மக்களை அறிவுக்காக தமிழைப் படி என்று சொல்லுவது மிக்க மோசமான காரியம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. ஏனென்றால், அவர்களுக்குப் பொது அறிவு ஏற்படும்படியான படிப்புக்குத் தமிழில் ஆதாரங்களே இல்லை என்பதுதான். வடமொழி ஆதாரங்களேதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுப் பல வேஷங்களுடன் திகழ்கின்றனவேயன்றி, மக்களுக்கு அறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உண்டாகும்படியானவைகள் அல்ல.

ஆகவே, மக்களுக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், உலக இயலை அறியச் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஆதாரங்கள் பத்திரிகைகள் படிக்கவும், பல மக்களிடம் சேர்ந்து பழகிப் பேசவும் சவுகரியமுள்ளதுமான வாசகசாலைகளேயாகும்.

------------------கொடைக்கானலில், 20.7.1930-ஆம் நாள் காஸ்மாபாலிட்டன் வாசகசாலைத் திறப்பு விழாவில் தந்தைபெரியார் ஆற்றிய சொற்பொழிவு - "குடிஅரசு" 27.7.1930

2 comments:

santa said...

Iyya.
Nengallum paditha muttal than
Meendu oru murai ezhuthiathai thirumbi padikavum.
Tamil has lot of uniqueness.
First study about tamil and tamil people.
Naan bramanan endu enna vendam
Anbudan
Nanban

நிகழ்காலத்தில்... said...

\\கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புதிதாகப் படிப்பையும், குருட்டு உருப்போட்டுத் தேர்வுகளில் தேறிவிடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கின்றனர்.\\

\\படிப்பு வேறு, அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்.\\

சரியே...