Search This Blog
6.3.09
அரசு ஊழியர்களும் கலைஞரும் --2
கோரிக்கை வைப்பதற்கு முன்பே 24 மணி
நேரத்தில் நிறைவேற்றினார் "நாம் செய்யாமல்
அவர்களுக்கு வேறு யார் செய்வார்?"
முதலமைச்சர் கலைஞர் சொன்ன செய்தியை -
செய்த சாதனையை விளக்கி கடலூர் என்.ஜி.ஜி.ஓ.
மாநாட்டில் தமிழர் தலைவர் பேச்சு
அரசு அலுவலர்கள் மாநாடு கூட்டி கோரிக்கை வைப்பதற்குள் 24 மணி நேரத்தில் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றியவர் முதலமைச்சர் கலைஞர்அவர்களுக்கு நாம் செய்யாமல் வேறு யார் செய்வது? என்ற கேள்வியையும் உரிமையுடன் கேட்டார் முதலமைச்சர் கலைஞர் என்ற மிக முக்கிய செய்தியை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கடலூரில் 28.2.09 அன்று நடைபெற்ற மாநாட்டில் - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பல நூறாண்டு காலப் பிரச்சினை அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது பல நூறாண்டுகளாக - மாறுதல் செய்ய முடியாத இருந்த ஒரு பிரச்சினை. ஆனால் அதை ஒரே ஒரு வரி உத்தரவிலே ஒரு சட்டத்தின் மூலமாக அதைச் செய்த பெருமை கலைஞர் அவர்களையே சாரும். காலம் காலமாக அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவர் கள் உண்டு. தாழ்த்தப்பட்டவர்களிலும், ஒடுக்கப் பட்டவர்களிலும், ஒடுக்கப்பட்டவர்கள் உண்டு என்று இருந்தவர்களுக்கு இதோ உங்களுக்கும் முன்னுரிமை என்று சொல்லி நீங்கள் எதையோ சுமந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் காலம் காலமாக தலையில் மலக்கூடை சுமப்பது இழிவு.
அந்த இழிவைத் துடைத்தெறியக் கூடிய ஒரு பெருமை முதல்வர் கலைஞர் அவர்களைச் சார்ந்தது என்று சொல்லும் பொழுது இவைகள் எல்லாம் காலம் காலமாக இருந்தவை.
உங்களுடைய தேவைகள் உணரப்படும்
எனவே, காலம் காலமாகப் பூர்த்தி செய்ய முடியாத அவைகள் எல்லாம் இந்த ஆட்சியிலே பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லும் பொழுது உங்களுடைய குறைபாடுகள் அப்படிக் காலம் காலமாக இருக்கின்ற குறைபாடுகள் அல்ல.
உங்களுடைய துன்பங்கள், உங்களுடைய தேவைகள் என்பவைகள் அவர்களாலே உணரப்படும். அதை நீங்கள் பிரதிபலிக்கின்றீர்கள். அதுதான் மிக முக்கியம்.
54 தீர்மானங்கள்
நான் கூட நினைத்தேன். அருமைச் சகோதரர் சூரியமூர்த்தி அவர்கள் தன்னுடைய வயதைச் சொன்னார். அந்த வயதை ஒட்டித் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ என்னமோ தெரியவில்லை.
ஏறத்தாழ அதற்குக் கிட்டே நெருங்கக் கூடிய அளவிற்கு 54 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றீர்கள். இந்தத் தீர்மானத்தை ஏற்க இருக்கின்றீர்கள். இப்படிப் பார்க்கின்ற நேரத்திலே நன்றி தெரிவித்துத் தீர்மானம். உடல் நலன் தேறி வருகின்ற நிலையிலே நன்றி தெரிவித்துத் தீர்மானம். தீர்மானம் துவக்கும் பொழுது வாழ்த்து. முதல்வர் அவர்கள் நல்ல உடல் நலன் பெற்று வரவேண்டுமென்று. ஒரு நல்ல மனிதர்களுக்குள்ள மனித நேயம் என்றால் என்ன? என்பதை இந்த மாநாடு சிறப்பாகக் காட்டியிருக்கிறது.
நீங்கள் அவ்வளவு பெரிய அளவுக்கு இந்த வாய்ப்பை அருமையாக உருவாக்கியிருக்கின்றீர்கள். நீங்கள் நன்றி உணர்ச்சியோடு இருக்கின்ற காரணத்தால் - பலருக்கு இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? என்று நினைக்க வேண்டிய அளவிற்கு அவசர அவசரமாக தங்கள் நிதானத்தை இழந்து கூட, இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று எங்கே போய் எந்தக் கதவைத் தட்டுவது என்று தெரியாமலே போய், எங்கோ ஒரு இடத்திலே போய் அதாவது உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அங்கே தலையிலே குட்டு வாங்கித் திரும்பக்கூடிய ஒரு கோரமான நிகழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.
இந்த ஆட்சியை நீடிக்க விடக்கூடாது என்று சிலர்
நீங்கள் நன்றி காட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். இன்னொரு பக்கத்திலே இந்த ஆட்சியை நீடிக்க விடக்கூடாது என்ற முயற்சியும் நடக்கிறது.
அதற்கு எந்த ஆயுதம் கிடைக்கும். மின்வெட்டு கிடைக்குமா? நம்பினோம். ஆனால் பயன்பட வில்லை என்ற நிலைக்கு ஆளானார்கள்.
அது நீடிக்கவில்லை. அது போல வேறு ஏதாவது ஆயுதம் கிடைக்குமா? என்று பார்க்கிறார்கள். ஈழப் பிரச்சினை. அதை வைத்துக் கொண்டாவது பார்க்கலாமா, முன்னேறலாமா? என்று பார்த்தார்கள்.
முதல்வர் கலைஞர் மேலும் வாழ்ந்தால்தான் முதலமைச்சர் அவர்களும் அதற்கு இடம் கொடுக்காத அளவிற்கு உலகளாவிய நிலையிலே, தான் என்னென்ன செய்ய முடியுமோ அதற்குரிய வழியைச் செய்தார்.
நீதிபதிகள் போன்ற சட்ட அறிஞர்களை எல்லாம் ஒன்றாக்கிக் கொண்டு வரக்கூடிய நிலையை அங்கே உருவாக்கி விட்டார்கள்.
எனவே சட்டம், ஒழுங்கு இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நண்பர்களே இந்த முதல்வர் மேலும் பல ஆண்டுகாலம் வாழ்ந்தால்தான் நாட்டிலே சிறப்பான நிர்வாகம் நடக்கும்.
ஆட்சியைக் கலைக்க முடியாது
பொதுவாக ஒரு ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அவ்வளவு சுலபமாக கலைக்க முடியாது.
எந்திரம் சரியாக ஓடிக் கொண்டிருக்கின்ற பொழுது குற்றம் சொல்ல முடியாது. எந்த ஆட்சி யாக இருந்தாலும் எவ்வளவு கெட்டிக்காரர்களாக இருந்தாலும், அந்த ஆட்சிக்கு எந்திரமாகப் பயன்படக்கூடிய மூலாதாரம் - அரசு அலுவலர்கள் என்ற உண்மையை யாரும் மறைத்துவிட முடியாது. மறந்துவிட முடியாது. எனவே கலைஞருக்குத் தெரியும்.
வண்டியிலே கடையாணி சரியாக இருக்க வேண்டும். அதற்கு எப்பொழுதுமே வண்டிமையை சரியாகப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதைப் போட்டால்தான் நாமும் வண்டியை ஓட்ட முடியும்.
சமூக நீதியினாலே இடம் பெற்றவர்கள்
அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஏனென்றால் அரசு ஊழியர்களிலே இன்றைக்கு யார் இருக்கிறார்கள்? சமூக நீதியினாலே இடம் பெற்ற அத்துணைப் பேரும் இருக்கின்றார்கள். ஆகவேதான் அவர்கள் பயன்பெற வேண்டும் என்று நினைத்த காரணத்தால்தான் இத்தனை சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.
இங்கே குறிப்பிட்டார்களே - ஆறாவது ஊதியக் குழுவினுடைய பரிந்துரைகள். மய்ய அரசு அலுவலருக்கு உரியன. அவற்றை அப்படியே மாநில அரசுக்குப் பொருந்துமாறு ஆணையிடப்படும் என்று கலைஞர் முன்னாலேயே அறிவித்துள்ளார்.
அது செயலாக்கத்திற்குரிய பரிந்துரை தருமாறு நிதித்துறை, பொதுத்துறைப் பணியாளர் துறை, அதிகாரிகள் கொண்ட குழுவை அவர்கள் அமைத்தார்கள்.
இன்ப அதிர்ச்சியோடு சொன்னார்கள்
எல்லா சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து, குழு பேச்சு வார்த்தை நடத்தியது. அதன் அறிக்கை தரப்பட வேண்டிய நிலையிலே இருக்கிறது.
அதைத்தான் அவர்கள் மிகுந்த பெருமிதத்தோடு இன்ப அதிர்ச்சியோடு ரொம்ப வேகமாக எடுத்துச் சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னாலே முதல்வர் கலைஞர் அவர்களை நான் சந்தித்த பொழுது. என்னுடைய தொண்டு நன்றி பாராட்டாத தொண்டு. நன்றியை எதிர்பார்த்தால் ஒன்றும் செய்ய முடியாது
நன்றியை எதிர்பார்ப்பதில்லை. நன்றியை எதிர்பார்த்தால் இந்த சமுதாயத்திலே ஒரு பணியையும் செய்ய முடியாது. காரணம் அவர் பழகியது தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம்.
இந்த குருகுலத்திலே நாங்கள் எல்லோரும் படித்த மாணவர்கள் இன்னமும் படித்துக் கொண்டிருக்கின்றவர்கள்.
இடைக்கால நிவாரணமாக மூன்று மாதச் சம்பளம்
எனவேதான் இதைச் செய்யக் கூடிய வாய்ப்பிலே இந்நிலையிலே நிலுவைத் தொகையிலே ஒரு பங்கை இடைக்கால நிவாரணமாக மூன்று மாத சம்பளம் அளித்திட, இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆணையிட்டார். அதைத்தான் நன்றியுணர்ச்சியோடு நீங்கள் சொன்னீர்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆணையிட்டார் கலைஞர்.
அதன்படி பலருக்கு ரூபாய் அய்ம்பதாயிரம் முதல் ரூபாய் எண்பதாயிரம் வரை தொகை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவர்களும் சுட்டிக் காட்டினார்கள். நம்முடைய அரசு அலுவலர் ஒன்றியத்தினுடைய தலைவர் அவர்களும், சுட்டிக் காட்டினார்கள்.
எதிர்பார்க்காத மகிழ்ச்சி
4247 கோடி போய் இதற்கு மட்டுமே செலவாகி யிருக்கிறது. எதிர்பார்க்காத ஒரு பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றார்.
சிலபேருக்கு இந்த அதிர்ச்சியே மிகப் பெரிய அளவுக்கு சங்கடத்தை உருவாக்கியிருக்கு அவர்களே சொன்னார்கள். இந்த மாதிரி சம்பளத்தை நான் மொத்தமாகப் பார்த்ததில்லை என்று சொன்னார்.
1-ஆம் தேதியும், 21-ஆம் தேதியும்
ஏனென்றால் ஒன்றாந் தேதி என்றவுடன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய பாட்டு நினைவுக்கு வரும். 1-ஆம் தேதி என்பது சம்பள நாள். 21-ஆம் தேதியிலிருந்து கடன் வாங்கக் கூடிய நாள்.
இதுதான் அரசு ஊழியர்களுக்கு இருந்த பழைய கால வரலாறு. ஆனால் இப்பொழுது அப்படியல்ல. மொத்தமாக இந்தத் தொகையைப் பார்க்கக் கூடிய அளவுக்கு கலைஞர் அவர்கள் செய்தார்கள் என்று சொல்லும் பொழுது உங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. அதுமட்டுமல்ல, இதே சலுகை ஓய்வூதிய தாரர்களுக்கு, பென்ஷனர்களுக்கு மூன்று மாத பென்ஷன் தர ஆணையிட்டார். பொங்கலுக்கு முன்பே பொங்கல் பரிசாக அளித்தார்கள்.
ஓய்வூதியம் பெறுகின்ற முதியவர்கள் சொன்ன செய்தி
நான் பல ஓய்வூதிய முதியவர்களை, வயதானவர்களை, பழுத்த பழங்களைப் பார்த்தேன். அவர்கள் வந்து என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்கள்.
எங்களுடைய வாழ்நாளிலே ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நான் பல ஊர்களுக்குப் பல இடங்களுக்குச் சுற்றிக் கொண்டிருக்கின்றவன். ஒவ்வொரு நாளும் காலையிலே ஒரு ஊர், மாலையிலே ஒரு ஊர், பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சாதாரண பொது நலத் தொண்டன்.
இது யாருடைய காலத்திலும் நினைக்க முடியாத ஒன்று
அந்த வகையிலே முதியவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்கள். ஓய்வு பெற்ற நாங்கள் சம்பளத்தைவிட, இப்பொழுது பென்ஷன் அதிக மாகப் பெற்றுக் கெண்டிருக்கின்றோம்.
இது யாருடைய காலத்திலும் நினைக்க முடியாத ஒன்று என்று நன்றி ததும்ப கண்களிலே நீர் வெளிப்பட அவர்கள் உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துச் சொன்னார்கள். இது எந்த மாநிலத்திலும் அளிக்காத சலுகை. அது போலவேதான் (9-2-2009 - ஆணைப் படி) 1.1.2009 முதல் ஆறு விழுக்காடு அகவிலைப்படி மய்ய அரசு அறிவித்தது என்பது செய்தி.
கலைஞரை மருத்துவமனையில் சந்தித்தேன்
இரண்டு நாட்களுக்கு முன்னாலே நான் முதலமைச்சர் கலைஞர் அவர்களை மருத்துவ மனைக்குச் சென்று சந்தித்த பொழுது என்ன கொஞ்சம்கூட இடைவெளி விடவில்லையே நீங்கள் என்று கேட்டபோது சொன்னார்.
செய்திகளை தொலைக்காட்சி வாயிலாகப் (படுத்துக்கொண்டு) பார்க்கிறார். மருத்துவமனையே இப்பொழுது தலைமைச் செயலகமாக மாறியிருக்கிறது. அவரைப் பொறுத்த வரையிலே அவர் மருத்துவம் பார்ப்பதற்காகப் போனதாகத் தெரியவில்லை. அறுவை சிகிச்சை செய்வதற்காகப் போனதாகத் தெரியவில்லை.
உடனே முதலமைச்சர் செய்த காரியம் என்ன தெரியுமா?
உங்களைப் பேன்றவர்களை ஆழமாக அங்கும் நினைத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால்தான் செய்தியைப் பார்த்தவுடனே, கூப்பிடு பேராசிரியரை, கூப்பிடு நிதித்துறைச் செயலாளரை என்று அழைத்து பேசி உடனே அறிவித்தார்கள்.
நான் கூட கேட்டேன். ஒரு 24 மணி நேர இடைவெளி கூட விடவில்லையே நீங்கள். இந்த செய்தி அரசு அலுவலர்களுக்குக் கூடப் போய்ச் சேர்ந்திருக்கிறதாகக் கூடத் தெரியவில்லை என்று சொன்னேன். அதையே உங்களுடைய தலைவர் சூர்யமூர்த்தி அவர்கள் சொன்னார்.
கோரிக்கை வைத்தா நிறைவேற்ற வேண்டும்?
மற்றவர்கள் சொன்ன பொழுது அவர் நம்ப மறுத்தார் என்பதை அவர்கள் சொன்னார்கள். அப்பொழுது சொன்னார்கள். நாம் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டுமா? மற்றவர்கள் கோரிக்கை வைத்தபிறகு தான் நிறைவேற்ற வேண்டுமா? தேவையில்லை. இது செய்ய வேண்டிய அவசியம் என்று நாம் நினைத்தால் உடனடியாகச் செய்வது தானே நம்முடைய வேலை என்று அவர்கள் மகிழ்ச்சியாகச் சொன்னார்கள்.
உங்கள் சார்பாகவும், அனைவர் சார்பாகவும் அன்றைக்கே நாங்கள் நன்றி சொல்லிவிட்டோம். எதற்காக இதைச் சொல்லுகிறோம்? நன்றியை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நன்றி தெரிவிக்க வேண்டியது நம்முடைய பண்பாடு. அந்த வகையிலே இப்படிப்பட்ட ஓர் சிறப்பான ஆட்சி அமைந்திருக்கிறது.
இந்த ஆட்சியை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள்...!
சென்ற முறை கலைவாணர் அரங்கத்திலே - தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் நடத்திய உங்களுடைய மாநாட்டிலே உங்களைச் சந்தித்தபொழுது ஒரு வார்த்தை சொன்னேன்.
இந்த ஆட்சியை விடாமல் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள் - விட்டு விடாதீர்கள். ஆட்சியாளர்களின் நன்மைக்காக அல்ல. நம்முடைய நன்மைக்காக வருங்காலச் சந்ததிக்காக. அடுத்த தேர்தல் என்பது அரசியல் கண்ணோட்டம். ஆனால் வளர்ச்சி அடையக் கூடிய சமுதாயத் திலே வளர்ந்து முன்னேற வேண்டும் என்று நினைக் கின்ற சமுதாயத்திலே இது மிக மிக முக்கியம்.
இந்த ஆட்சி என்னென்ன செய்திருக்கிறது என் பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஏற்கெனவே இருந்த ஆட்சி எப்படி எல்லாம் மற்றவர்களுக்கு கதவைச் சாத்தியது என்பது தெளிவாகத் தெரியும். ஏற்கெனவே சில பேரை பழைய ஆட்சியில் நியமித்தார்கள். நியமனம் பூர்த்தியான வுடன் பழையவர்களை வெளியே அனுப்ப வேண்டும். அவர்கள் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்திற்குப் போனார்கள்.
குறிப்பாக, போக்குவரத்துத் துறையைச் சார்ந்தவர்கள் சென்றார்கள். அப்பொழுது நீதிமன்றம் ஒரு தீர்ப்பைக் கொடுத்தவுடனே அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் வந்து முதல்வரைப் பார்த்துச் சொன்னார்கள்.
கலைஞரை - ஒரு பெரியாராகவே பார்த்தேன்
இவர்கள் எல்லாம் போன ஆட்சியில் போடப் பட்டவர்கள். இவர்கள் எல்லாம் நம்முடைய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூட அல்ல. நமக்கு மாறானவர்கள் நமக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்கள். ஆகவே இதற்கு அப்பீல் செய்ய வேண்டும் என்று சொன்ன நேரத்திலே முதல்வரைப் பார்த்தேன். அப்பொழுதுதான் அவரை ஒரு பெரியாராகவே காண முடிந்தது. அதுதான் சிறப்பானது. ரொம்ப அமைதியாகச் சொன்னார்கள். அவர்கள் வேறு கட்சிக்காரராக இருக்கலாம். நம் இனத்தைச் சார்ந்தவர்கள் தானே.
அவர்களுக்கு வேலை கொடுங்கள்
அவர்கள் வேலையிலே இருக்கக்கூடியவர்கள் தானே. அப்பீலுக்குப் போக வேண்டாம் அவர் களுக்கும் வேலை கொடுங்கள். அதுதான் சிறப்பு.
அரசு ஊழியர்கள் அத்துணைப் பேரும் நம் முடைய கட்சிக்காரர்களா? நம்முடைய கட்சி, நம் முடைய கருத்தை ஏற்காதவர்கள் கூட இருப்பார்கள். இருக்க உரிமை உண்டா? இல்லையா? ஆகவே நாம் ஏன் அதைப் பற்றிக் கவலைப்படவேண்டும்? என்று ஒரு தாயுள்ளத்தோடு, தாயினும் சாலப் பரிந்து பேசிய முதலமைச்சரை நாங்கள் அருகிலிருந்து கண்டோம். நேரிடையாக நடந்த ஒன்று. எனவே இப்படிப் பல செய்திகள் உண்டு.
------------------------தொடரும் ..."விடுதலை"-6-3-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//ஒன்றாந் தேதி என்றவுடன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய பாட்டு நினைவுக்கு வரும். 1-ஆம் தேதி என்பது சம்பள நாள். 21-ஆம் தேதியிலிருந்து கடன் வாங்கக் கூடிய நாள்.
இதுதான் அரசு ஊழியர்களுக்கு இருந்த பழைய கால வரலாறு. ஆனால் இப்பொழுது அப்படியல்ல. மொத்தமாக இந்தத் தொகையைப் பார்க்கக் கூடிய அளவுக்கு கலைஞர் அவர்கள் செய்தார்கள் என்று சொல்லும் பொழுது உங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. அதுமட்டுமல்ல, இதே சலுகை ஓய்வூதிய தாரர்களுக்கு, பென்ஷனர்களுக்கு மூன்று மாத பென்ஷன் தர ஆணையிட்டார். பொங்கலுக்கு முன்பே பொங்கல் பரிசாக அளித்தார்கள்.//
அரசு ஊழியர்களில் பெரும் பகுதியினர் கலைஞருக்கு ஆதரவு தருவது இதனால்தானா?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு
//எங்களுடைய வாழ்நாளிலே ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நான் பல ஊர்களுக்குப் பல இடங்களுக்குச் சுற்றிக் கொண்டிருக்கின்றவன். ஒவ்வொரு நாளும் காலையிலே ஒரு ஊர், மாலையிலே ஒரு ஊர், பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சாதாரண பொது நலத் தொண்டன்.
இது யாருடைய காலத்திலும் நினைக்க முடியாத ஒன்று
அந்த வகையிலே முதியவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்கள். ஓய்வு பெற்ற நாங்கள் சம்பளத்தைவிட, இப்பொழுது பென்ஷன் அதிக மாகப் பெற்றுக் கெண்டிருக்கின்றோம்.//
இலங்கைப் பிரச்சினை பற்றி கலைஞரை விமர்சிக்கும் போது ஓய்வு பெற்ற எனது உறவினர் ஒருவர் இதே கருத்தை என்னிடம் கூறினார்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி tamil
Post a Comment