Search This Blog
28.3.09
பெரியார் எரிமலைக்கு ஒப்பானவர்கள்
10. பெரியாரின் வரலாறு தமிழகத்தின் வரலாறு!
‘பெரியார் வரலாறு’ என்னும் அரிய நூலைக் கவிஞர் கருணானந்தம் எழுதி முடிந்திருந்தார். தமிழ்நாட்டிலே வரலாற்று நூல்கள் பஞ்சம். நூல்கள் இருக்கின்றன- உங்களுக்கெல்லாம் ‘நியூவேவ்’ எழுத்தாளர்கள் எழுதித் தள்ளுகிறார்கள். சாதாரண உணர்ச்சிகளை, மட்டரகமான உணர்ச்சிகளைக் கிண்டிக்கிளறி, வாசிப்பவர்களுக்குப் புத்தக ரூபமாகக் கொடுக்கிறார்கள்.
அதைப் படிப்பவர்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை; அதை எழுதுகிறவர்களுக்கு வேண்டுமானால் பணம் வரலாம்; சமூகத்திற்கோ, அதைப் படித்தவர்களுக்கோ எந்தவிதமான பயனும் ஏற்படவும் இல்லை; ஏற்படப் போவதும் இல்லை.
ஆனால், கெட்ட வாய்ப்பாக அந்த மாதிரி நூல்கள்தான் ஏராளம் வந்து கொண்டு இருக்கின்றன.
மகிழ்ச்சி அடைகிறேன்!
இந்த நிலையில், கவிஞர் கருணானந்தம் அவர்கள் பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி இருக்கிறார் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு முன் திரு. வீரமணி உரையாற்றினார். தமிழ் நாட்டிலே தமிழன் இன்னொரு தமிழன் பெருமையைச சுலபமாக ஒப்புக் கொள்ளமாட்டான். தமிழ்நாட்டிலே இதை ஒரு நோய் என்றுதான் கூற வேண்டும்.
இந்த மாதிரிச் சூழ்நிலையிலே, தமிழ்நாட்டிலே, தமிழன் முன்னேற்றத்றிகாக அரும்பாடுபட்டபெரியார் அவர்கள் வழைக்கை வரலாற்றைக்கவிஞர் கருணானந்தம் எழுதி முடித்திருக்கிறார் என்றால், இந்தசண் சாதனையை மகிழ்ச்சியுடன் பாராட்டத்தான் வேண்டும்.
தமிழ் நாட்டின் வரலாறு
வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்கள்: “பெரியார் வரலாறு என்பது தமிழ்நாட்டின் வரலாறு; தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு; தமிழ் மக்களின் வரலாறு; தமிழ்ச் சமுதாயத்திலே ஏற்பட்ட மறுமலர்ச்சியின் வரலாறுதான் பெரியாரின் வரலாறு.”
கிட்டத்தட்ட 95 ஆண்டுக் காலம் இந்த நாட்டிலே வாழ்ந்தவர் பெரியார்-அவரைப்பற்றி எழுதுவது என்றால் அவர்களின் வரலாற்றைக் குறிப்பிட்ட பக்கங்களில் அடக்குவது என்றால் மிகச் சிரம்மான காரியமாகும்.
பெரியார் தமிழ்ச் சமுதாயத்துக்காக உழைத்தார். பெண்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார். சமுதாயத்திலே நாலாவது மட்டம் அடிமட்டத்திலே உள்ள மக்களின் வாழ்க்கை மேம்படவேண்டும் என்று உழைத்தார். அவர் தோன்றிய காலத்திலே நமது சமுதாயம் எப்படி இருந்தது என்பதை நினைக்கும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது, சமுதாயத்திலே ஏற்பட்டு இருக்கின்ற மாற்றங்களைப் பார்க்கும்பொழுது!
உனக்குப் படிப்பு வருமா?
நாங்கள் எலாம் மாணவர்களாக அந்தக் காலத்திலே இருக்கும்பொழுது சொல்லுவார்கள். நான் படித்த பள்ளிக்கூடம் ஒரு சின்னப்பள்ளிக்கூடம்தான். “படிப்பு உங்களுக்கெல்லாம் எங்கடா வரும்” என்பார்கள். படிப்பு, தகுதி,திறமை என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கத்தான் இருக்கும்என்று நம்மவர்களே நம்பி வந்த காலமது.
படிப்பிற்கென்றே ஒரு சாதி என்று அந்தக் காலத்திலே நம்பினார்கள். இடுப்பிலே துண்டைக் கட்டிக்கொண்டு ‘ஆண்டே’ என்று சொல்லி, சமுதாயத்திலே அடிமட்டத்திலே கிடந்த அந்த மக்களைச் சமுதாயத்திலே உயர்ந்த நிலையிலே அதிகாரிகளாக ஆக்கியிருக்கிறார் பெரியார் அவர்கள்.
படிபிற்கு தகுதியே இல்லை என்றிருந்த மக்களுக்குப் போதிய சந்தர்ப்பம் வாய்ப்புக்களை உண்டாக்கி அவர்களுக்கெல்லாம் கல்வியை தந்தவர் பெரியார்.
அரசியல் சட்டம் திருத்தப்படக் காரணம்
கல்வி, உத்தியோகங்களிலே சமுதாயத்திலே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற நிலை இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் நடைமுறையில் இருந்து வந்தது.
இந்தியாவுக்கு அரசியல் சட்டம் வந்த பிறகு 1950 - இல் இது மாதிரி தமிழ்நாட்டிலே இட ஒதுக்கீடு முறைகள் இருப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம், “தமிழ்நாட்டிலே அமுலில் இருந்து வரும் வகுப்புவாரி உரிமை, அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்று தீர்ப்புக் கூறியது. மேல்முறையீட்டிலும் டில்லி சுப்ரீம் கோர்ட்டும் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பச் சரியானதுதான் என்று தீர்ப்புக்கூறியது.
ஆனால், இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட இந்தப் பெரும் அபாயத்தை உணர்ந்து முதலில் குரல் கொடுத்தவர் பெரியார் ஒருவர்தான். இந்திய அரசியல் சட்டத்திலே முதன்முதலாக திருத்தத்தைக் கொணரச்செய்த குரல் பெரியார் அவர்களின்குரல்!
வரலாறு எழுதத் தகுதிகள்
அவருடைய தொண்டுகள் சமுதாயத்தின் பல்வேறு துறைகளுக்கும் பயன்பட்டுள்ளன; அத்தகையவருடைய வரலாற்றை ஒருவர் எழுத வேண்டுமானால் அவருக்கு இரண்டுவித்த் தகுதிகள் இருக்க வேண்டும். முதல்தகுதி என்னவென்றால், பெரியார் அவர்கள் தோற்றுவித்த இயக்கத்தின் பின்னணியை உணரவேண்டும். ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று இருந்ததைத் திராவிடர்கழகமென மக்கள் இயக்கமாக மாற்றினார். அவர்கள் நடத்திய போராட்டங்கள் பலப்பல! அவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் பலப்பல! இந்தப் பின்னணியைச் சரிவரப் புரிந்ததவர்களால்தான் அவரது வரலாற்றை எழுத வேண்டுமானால் நீண்டகாலம் அவருடன் இருந்து பழகி, நேரிடையாகத்தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி எழுதினால்தான் அது உண்மையான வரலாறாக இருக்க முடியும்
இந்த இரண்டு தகுதியையும் பெற்றிருப்பவர் நமது கவிஞர் கருணானந்தம்.
கண்டனங்கள் வரும்
இந்த வரலாற்றைப்படிக்கின்றபொழுது, நமக்கு நேரிடையாகத் தொடர்புகொண்டு சம்பவங்கள் நம் நினைவுக்குவரும். இந்த நிகழ்ச்சியை, நூல் எழுதுகின்றவர் எப்படிக்கையாண்டு இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள நமக்கு ஆவல் தோன்றும்.
அத்தகைய சம்பவத்தை குறையாகவோ, மிகையாகவோ எழுதியிருந்தால் அந்தச் சம்பவத்தை நேரில் அறிந்தர்கள்மிகச் சுலபமாச் சொல்லிவிடுவார்கள். ‘என்ன புத்தகம் எழுதியிருக்கிறார்’ எறு கண்டனம் தெரிவிப்பார்கள்.
சில சம்பவங்கள்
உதாரணமாக, திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.கழகம் பிரிந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம்; இந்தச் சம்பவத்தை அறிந்தவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்; இந்த நிகழ்ச்சியை, வரலாறு எழுதியுள்ளவர் எப்படி எழுதியிருக்கின்றார் என்று அறிய ஆவல் கொள்ளுவார்கள்.
அடுத்தாற்போல, 1967- ஆம் ஆண்டிலே அண்ணா அவர்கள் பதவி ஏற்றார்கள்.
18 ஆண்டுக்காலம் பெரியாரைப் பிரிந்திருந்தவர், பதவி ஏற்றதும் திருச்சிக்குச்சென்று பெரியாரைப்போய்ப்பார்த்தார். இந்த நிகழ்ச்சியை எப்படிக்கையாண்டு இருக்கிறார் என்று அறிந்து கொள்ள நமக்கு ஆவல்-இருக்கும்; அதைச் சுவைபடவே எழுதி இருக்கிறார்.
ஈரோட்டில் ஒரு மாநாடு. அண்ணா தலைமையிலே நடைபெற்றது. அந்த மாநாட்டைப்பற்றி எப்படி எழுதியிருக்கிறார் என்று ஆவலோடு பார்த்தேன், மிகவும் சுவைபட எழுதியிருக்கின்றார். அந்த மாநாட்டிலே, “பெட்டிச்சாவியை அண்ணாவிடம் கொடுக்கப்போகிறேன்” என்று பெரியார் அவர்கள் பேசினார்கள். அதற்கு மேலாக, அண்ணா அவர்களை ஊர்வலத்தில் அமரச் செய்து, ஊர் வலத்திலே தொண்டர்போல கருஞ்சட்டை அணிந்து வீதிகளிலே நடந்தே சென்றார் பெரியார்.
படிப்பும் சுய சிந்தனையும்
சுயமாக, கூர்மையாக ஒரு விஷத்தைச் சிந்திப்பது என்பது கடினமான காரியம். அதுவும் படித்தவர்களால் அப்படிச் சிந்திப்பது மிகவும் கடினம். காரணம், படித்தவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது அவர்கள் ஏற்கனவே படித பல சங்கதிகள், அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார்; இவர இப்படிச் சொல்லியிருக்கிறார் என்ற நினைவுகள் வந்து விடும். அதனாலே, படித்தவர் பெரும்பாலோரால் சுயமாகச் சிந்திப்பது மிகவும் கடினமான காரியமாகும்
ஆனால், பெரியார் அவர்கள் எந்தப் புதகத்தையும் ஆதாரம் காட்டாமல் எதையும் சுயமாகச்சிந்தித்துத் தீர்க்கமாகச் சொல்லக் கூடியவர்.
நோபல்பரிசு
நல்ல வேளையாக பெரியார் ஆங்கிலம் படிக்கவில்லை; படித்திருந்தால் அவர் ஆங்கிலத்தைப் படித்துவிட்டு, அத்ன் மூலம் சொல்லுகிறார் என்று சொல்லுகின்றவர் இருக்கின்றார்கள்.
பெரியார் அவர்கள்மட்டும் தமிழ்நாட்டிலே பிறவாமல் இருந்து, மற்ற நாடுகளிலே பிறந்து, இத்தகைய கருத்துக்களைச்சொல்லியிருப்பாரேயானால், அவருக்குக் கண்டிப்பாக ‘நோபல் பரிசு’ கிடைத்திருக்கும் அவ்வளவு சிந்தனை மிக்க கருத்துக்களைச சொல்லி இருக்கிறார்; எழுதியிருக்கிறார்.
அப்படிப்பட்ட சுயசிந்தனையாளரின் வரலாற்றை நல்ல சுவையுடன் விறுவிறுப்புடன் , அனுபவித்துப் படிக்கும் வகையிலே, நமது கருணானந்தம் அவர்கள் இந்த நூலை எழுதி முடித்திருக்கின்றார் என்றல், அது ஒரு சிறந்த சாதனை; அவரை நாம்பாராட்ட வேண்டும்-எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அவர் இந்த நூல் மட்டுமல்ல; சிறந்த ஆராய்சிக்கட்டுரைகளை எழுத வேண்டும்; கவிதைகள் எழுத வேண்டும் என்று கூறி, அவரைப் பாராட்டுகின்றேன்! வாழ்த்துகின்றேன்!
இரண்டாவதாக, ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்த நன்னன் அவர்கள் வந்திருக்கிறார்கள்.
அதைப்பற்றி இரண்டொரு கருத்துக்களைச்சொல்ல வேண்டுமென்பது எனது விருப்பம்.
பெரியார் ஒரு எரிமலை!
எரிமலையை நீங்கள் பார்த்திருக்கலாம்; நேரில் பார்க்கவிட்டாலும், புத்தகங்கள் வாயிலாகப்படிதிருக்கலாம். எரிமலை எப்படி என்றால், குமுறி அனலைக்கக்கும். அந்த அனலைக்கக்கினால் யாரும் தாங்க முடியாது. அனல் குழம்புச் சிதறி, காலக்கிரமத்திலே ஆறி, அந்தப் பிழம்பைப் பின் கிளறிப் பார்த்தால் அதில் கனிப்பொருட்கள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
பெரியார் அவர்கள் இந்த மாதிரியான எரிமலைக்கு ஒப்பானவர்கள்.
மிகச்சிறப்பாக வாழ்ந்து வந்த ஒரு இனத்தை மதத்தின் பெயராலும் சாத்திரத்தின் பெயராலும் சாய்த்துவிட்டார்களே என்ற் ஆத்திரந்தான் பெரியாரை ஒரு எரிமலைக்கு ஒப்பானவராக ஆக்கிற்று.
வாழ்ந்தவர்கள் வாழவேண்டியவர்கள் கல்விக்கூடம் இல்லாமல் சூத்திர்ர்களாக நாலாஞ்சாதி மக்களாக ஆக்கப்பட்டு விட்டார்களே, என்ற ஏக்கம்தான், அந்த ஏக்கத்தினால் ஏற்பட்ட வேகம்தான் அவருடைய கருத்துக்கள்.
அந்தக்கருத்துப் பிழம்புகளை ஏற்க இந்த நாட்டினரால் முடியவில்லை; கருத்து பேதம் அவ்வளவு வேகமாக இருக்கிறது!
அந்தக் கருத்துக்கள் வந்து அவை ஆறி கொஞ்சநாட்கள் ஆனபிறகு அதைக் கிளறிப் பார்த்தால், அதில் அருமையான விஷயங்கள் கிடைக்கும்.
ஆய்வாளர்களால்தான்முடியும்!
அப்படிக் கிண்டிப் பார்க்கும் பொறுப்பை ஏற்று, அதில் கிடைக்கும் விஷயங்களை நாட்டு மக்களுக்கு ஏற்ற முறையில் எடுத்துச் சொல்வது என்பது புலவர் நன்னன் போன்ற ஆராய்ச்சியாளர்களால்தான்முடியும்.
அந்தக் கருத்துக்களை ஆய்ந்து துருவித் துருவி பார்த்தால்தான் அந்தக் கருத்துக்களுடைய ஆழமும் வேகமும் புரியும், இது ஆய்வாளர்களால்தான்முடியும்; பேராசிரியர் நன்னன் போன்றவர்களால்தான் முடியும் என்பது எனது மனப்பூர்வமான கருத்து.
அவர்கள் இங்கே ஆய்வுச் சொற்பொழிவு ஆற்றவந்துள்ளார்கள். “பெரியார் பண்பாட்டிற்கு ஒருதனி உவமையாளர்” என்ற தலைப்பிலே உரையாற்ற வந்திருக்கிறார்கள்.
பேராசிரியர் நன்னன் அவர்கள் எந்தக் கோணத்தில் பேச இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. பண்பாடு என்று வருகின்றபொழுது எனக்குத் தெரிந்த இர்ண்டொரு கருத்துக்களை எடுத்துச்சொல்லி, ஆய்வாளர் அவர்களுக்கு இடம் விடலாம் என்று கருதுகிறேன்.
பண்பாடு என்று சொல்லுகிறபொழுது நீங்கள் பார்க்கலாம்; வாழ்க்கையிலே நல்ல நிலையிலே இருந்திருப்பார்கள்; ஏதோ காரணத்தாலே கீழ்மட்டத்திற்கு வந்திருப்பார்கள்.அவர்களைப்பார்த்து அனுதாப்பபடுவபவர்கள் மிக்க் குறைவாக இருப்பார்கள். ஆஸ்திகவாதியாக இருந்தால் அவருடைய தலைவிதி என்பார்கள்.சாதாரணமானவர்கள் என்றால் “அய்யோ பாவம்!” என்பார்கள்.
பிறருடைய கஷ்டங்களை உணர்வதற்கே மனது பண்பட்டு இருக்க வேண்டும். இப்பொழுது சாலையிலே பார்க்கிறோம், ஏதோ ஒரு விபத்து நடக்கிறது; அய்யோ பாவம் என்கிற உணர்வு நூற்றுக்கு 98 பேருக்கு வருவதில்லை.
ஏதோ நமக்குச் சம்பந்தம் இல்லாததுபோல் போவோம். நூற்றில் ஒரு மனிதனுக்குதுதான் இரக்க உணர்வு ஏற்படுகிறது.
பெரியாரின் பண்பாடு!
சமூகத்திலே ஏற்பட்டு இருக்கிற நிலையை உணர்ந்து பரிதாப உணர்ச்சிவசப்பட்டு, அதற்காகப் பரிகாரம் காண வேண்டும் என்று கருதுகிறவர்கள் மிகவும் அரிது.
ஆனால், ஒரு சமூகமே நசிந்து போய்விட்டதே என்று பாடுபட முன்வந்தவர் பெரியாராவார்.
சமூகத்தில் ஏற்பட்டுவிட்ட தாழ்ந்த நிலையைப்போக்கிட பாடுபட வேண்டும்; தக்க பரிகாரம் காணவேண்டும் என்பது, அதற்கு ஏற்ற நல்ல பக்குவம், பண்பாடு உடையவர்களால்தான் முடியும்.
பெரியார் அவர்களிடம் அத்தகைய பண்பாடு இருந்த காரணத்தால்தான், சமூத்த்திற்கா உழைத்தார். அதுவும் எப்படிப்பட்ட சமூகம்? எந்த சமூகத்திற்கா உழைத்தாரோ அந்த சமுகமே அவருடைய உழைப்பைப் புரிந்து கொள்ளாத நிலை- அத்தகைய சமூகத்திற்காகப் பெரியார் உழைத்தார்.
பெரியார் உழைத்த மக்கள் நிலை!
நமக்காகத்தான் உழைக்கிறார் என்பதைக்கூட புரிந்து கொள்ளாத, நன்றி உணர்ச்சி காட்டாத மக்களிடம் அவர்களின் உணர்வுகளையும் மீறி, அவர்களுக்கே உழைத்தே தான் தீருவது என் கடன் பணி செய்து கிடப்பதே என்பார்களே, அதுபோல பெரியார் பிடிவாதத்துடன் உறுதி குலையாது உழைத்தார் என்றால், அவர் மனம் எவ்வளவு பண்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!
இன்றைக்கு அரசியலில் எல்லாம் பார்க்கிறோம்; அரசியல் மாறுபாடு உடையவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி எப்படியெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் பார்க்கிறோம்.
ஆனால், பெரியார் அவர்கள் எவ்வளவு கடுமையான கருத்து மாறுபாடு கொண்டவர்களையும் தனிப்பட்ட முறையில் தாழ்த்தி பேசமாட்டார்கள். ஆனால், கருத்துக்குக் கருத்துக் கடுமையாக மோதக்கூடியவர். எவ்வளவு கடுமையான கருத்துக்களை மயமாக வைத்தும் விமர்சிக்கலாம் ஆனால், தனிப்பட முறையில் தரக்குறைவாகப் பேசுவது என்பது பெரியார் அவர்களின் வரலாற்றிலே காண முடியாத ஒன்று.
அவரால் அப்படி எப்படி இருக்கமுடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவர் சிறந்த பாண்பாளர்-அவர் உள்ளம் சிறந்த பண்பட்ட உள்ளம்!
நன்றி எதிர்பாராச் செம்மல்
பெரியார் அவர்களால்பலன்பெற்றவர்கள் பலர்; அத்தகையவர்கள் எல்லாம் பிற்காலத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்? பெரியார் அவர்களிடம் பத்தாண்டுக் காலம் நெருக்கமாக இருந்தவன் நான்; அப்பொழுஎல்லாம் எங்களுக்கெல்லாம் மிகவும் ஆத்திரம் வரும். ஆனால் பெரியார் ஆத்திரப்படமாட்டார்.
பெரியாரால் ஆளாக்கப்பட்டவன்; நாட்டு மக்களுக்கு அறிவமுகமானவன்; இப்படியெல்லாம் பொதுமேடையிலே பேசுகின்றானே என்ற ஆத்திரம் நமக்கெல்லாம் வந்தாலும் பெரியாருக்கு வராது; காரணம் அவர் உள்ளம் அவ்வளவு பண்பட்டது!
தாய்மார்களை அவர் எவ்வளவு பெருமையாகப்பேசுவார்; சின்ன வயதினர்க்கும் மரியாதை காட்டுவார்!
அந்த அளவு தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு சிறந்த இலக்கணமாக வாழ்ந்த காட்டியவர் பெரியார்; அப்படிப்பட பெரியார் அவர்களைப் பற்றி ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்தப் புலவர் நன்னன் அவர்கள் வந்திருக்கிறார்கள்.
பெரியார் அவர்களின் பண்பாட்டைப்பற்றி அவர்கள் எப்படி விளக்குக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வத்ற்கு நீங்கள் எவ்வளவு ஆர்வத்துடன் வந்திருக்கிறீர்களோ, நானும் அந்த அளவு ஆர்வத்துடன் இங்கே வந்திருக்கிறேன். அவர்கள் ஆய்வுச்சொற்பொழிவை ஆற்றுமாறு உங்கள் சார்பாகக் கேட்டுக்கொண்டு, எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-----------------------கடந்த 24-12-79 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “பெரியார் வாழ்க்கை வரலாற்று நூல்” வெளியீட்டு விழா மற்றும் அருப்புக்கோட்டை கைலாசம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஆய்வுச் சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வேணுகோபால் அவர்கள் ஆற்றிய உரை.-நூல்:-"நீதிபதிகள் கண்ணோட்டத்தில் பெரியார்" பக்கம்:-60 - 70
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment