திராவிட மாணவர் கழகம்
தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகையில், இந்தச் சிலை திறப்பதன் மூலம் என் கருத்துகள் பரவுதற்கு வழி இருக்கிறது. என் சிலையைப் பார்க்கும்போது பார்க்கிறவர்கட்கு என்னைப் பற்றி நினைவு வராது. என் கொள்கைகளைப் பற்றித்தான் நினைப்பார்கள் என்றும், நான் பக்தி மிக்க குடும்பத்தில் பிறந்தவன். பக்திக்காக எங்கள் வீடு செலவழித்த தொகை கொஞ்சநஞ்சமல்ல- அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் ஏன் வேகமாகக் கடவுளை எதிர்க்கிறேன்? எதற்காகப் பார்ப்பனர்களை வெறுக்கிறேன் என்பதற்குக் காரணம் என்ன?
கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், காங்கிரஸ் பேராலும், காந்தியார் பேராலும் பார்ப்பனர்கள் நம்மை அழுத்தி வைத்ததால்தான் அவற்றை எல்லாம் நான் ஒழித்துக்கட்ட வேகமாக முற்பட்டேன். பெங்களூரில் காந்தியைச் சந்தித்து அவரிடமே என் கருத்தை எடுத்துச் சொன்னேன். அவர் எதையோ சமாதானம் சொல்ல முற்பட்டார். ஆனால், அவை எனக்குச் சரியாய்ப் படவில்லை. ஆனால், காந்தி நான் சொன்னதால் பிற்காலத்தில் கொஞ்சம் நினைக்க ஆரம்பித்தார். அப்படி நினைக்க ஆரம்பித்து, சொல்ல ஆரம்பித்த 80வது நாளே பார்ப்பான் அவரைத் தீர்த்துக்கட்டி விட்டான் என்று குறிப்பிட்டுக் கூறினார்கள். நானும் கடந்த 50 ஆண்டு காலமாக கடவுள் ஒழிப்புப் பிரச்சாரம் செய்து வருகிறேன். கடவுள் ஒழிக! ஜாதி ஒழிய-வேண்டும் என்று சொல்லவில்லையானால் இவர்கள் மந்திரியாக முடியுமா? இல்லா-விட்டால் ராஜாஜியிடம் தானே தவம் கிடக்க வேண்டும்.
இன்றைக்கு 14 பேர் அமைச்சர்கள்- கல்லுப்போல தமிழர்கள் - ஒருவன்கூடப் பார்ப்பான் இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளிலும் 18 பேரில் 15 பேர் தமிழர்கள். இன்னொரு இரண்டு, மூன்று ஆண்டுகளில் 18உம் தமிழர்களாகி விடுவார்கள். இன்றைக்கு ராஜகோபாலாச்சாரியையும், சங்கராச்சாரியையும் தவிர பேர் சொல்லுகிற அளவிற்கு வேறு ஒரு பார்ப்பான் இல்லையே!
நாம் கடவுள் ஒழிக மதம் ஒழிக என்று கூறியதனாலும் கடவுளைச் செருப்பால் அடித்ததனாலும் தான் இன்றைக்குப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றோம்.
இன்றைக்கு ஏற்பட்டுள்ள ஆட்சியைப்பற்றி மேடைபோட்டு எந்தக் குற்றத்தையும் எவனாலும் சுமத்த இயலவில்லை. மந்திரிகள் சொத்து சேர்த்ததைப் பற்றிச் சொன்னேன். இதே இராஜாஜியை எடுத்துக் கொள்ளுங்கள். காந்தியுடன் மாதம் 250ரூபாய் வாங்கிக் கொண்டு வாழ்ந்தவர்தானே! இன்றைக்கு இலட்சக்கணக்கில் சொத்துகள் எப்படி வந்தது? டி.எஸ்.எஸ். ராஜனுக்கு திருவேணி மலையில் 150 ஏக்கர் நிலம் எப்படி வந்தது? இதை எல்லாம் எடுத்துச் சொன்னதற்குப் பின்னர்தான் வாயடைத்துப்போனான் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளையும் அய்யா அவர்கள் எடுத்துரைத்தார்.
விழாவிற்கு கழகக் குடும்பத்தவர்கள் பலரும் வந்திருந்தனர். வேலூரில் தந்தை பெரியார் அவர்களுக்குச் சிகிச்சை அளித்த அய்யாவின் மருத்துவர்களான டாக்டர் எச்.எஸ்.-பட் அவர்களும், டாக்டர் ஏ.சி.-ஜான்சன் அவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரவு 10.30 மணி அளவில் ஈரோடு பெரியார் மன்றம் அடைந்தோம்! அங்கே ஒரு மிகுந்த அதிர்ச்சியும், துன்பமும் தரும் செய்தி எங்களுக்காகத் காத்திருந்தது!
அன்னை மணியம்மையார் அவர்களுக்கு - அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, உள்ளூர் டாக்டர் சிவராமன் அவர்களை அழைத்து, பார்த்து மருந்துகள் கொடுத்துக் காப்பாற்றியுள்ளனர் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு அய்யா விழாவில் பெற்ற மகிழ்ச்சியை இதில் விட்டுவிட்டு வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் இணைபிரியா நண்பர்கள் என்பதை உணர்த்துவது போல இருந்தது எங்களைப் போன்றவர்களுக்கு.
வேலூர் டாக்டர்களும், அம்மாவின் உடல்நிலையைப் பரிசோதித்து அய்யாவிடம் தெரிவித்து அவர்களுக்குத் தெம்பு ஊட்டினர்! எங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை விரட்டிவிட முயன்றனர்.
மேடையில் கர்ஜித்த அந்தச் சிங்கம், வீட்டில் எப்படி இச்செய்தி அறிந்து அமைதியாகிறது என்பதைப் பார்த்தபோது, ஒரு தத்துவ ஞானிக்குள்ளும் மனிதம் ஒளிந்தே இருக்கிறது! அன்னை நாகம்மையார் அவர்கள் 11-5-1933இல் ஈரோட்டில் மறைந்தபோது அய்யா அவர்கள் எழுதிய குடிஅரசு தலையங்கம் ஓர் அருமையான இரங்கல் இலக்கியம் அல்லவா? அந்த மாமனிதருக்கும் - பகுத்தறிவு மேதைக்கும், இதயத்தால் சிந்திக்கும் பழக்கம் தவிர்க்கவொண்ணாதது என்பதைக் காட்டுவதாகவே அமைந்துள்ளது! அது அவ்வப்போது தன்னை வெளியே வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வதைத் தவறாமல் செய்யும் என்ற பாடத்தை என்னைப்போன்ற சீடர்கள் - தொண்டர்கள் தெரிந்து கொண்டோம். தெளிவினையும், பயணம் தடைபடாமல் செல்ல வேண்டும் என்ற மனஉறுதியையும் பெற்றோம்.
திராவிட மாணவர் கழகம் என்ற அமைப்பு - கழகம் ஒன்றாக இருந்தபோது தோழர் தவமணி இராசன், கவிஞர் கருணாணந்தம், லட்சுமணன், போன்ற குடந்தைக் கல்லூரி மாணவர்களாலும், குடந்தையைச் சேர்ந்த திரு. கோபால்சாமி போன்றவர்கள் இணைந்து தந்தை பெரியார் அவர்களின் அனுமதி பெற்று துவங்கப் பெற்ற ஒரு கழகத்தின் துணை அமைப்பு. 1945, 46 ஆகிய ஆண்டுகளில் குடிஅரசு ஏடு (மீண்டும் துவக்கப்பட்ட நிலையில்) திராவிட மாணவர்-களைப் பெரிதும் ஊக்கப்படுத்தி, மாணவர்களை கோடை விடுமுறைப் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தி, மாணவர்களுக்கு மிகவும் உணர்ச்சி ஊட்டி, இயக்கத்திற்குப் பலம் சேர்த்தார் தந்தை பெரியார் அவர்கள்.
அறிஞர் அண்ணா அவர்களது எழுத்தும், பேச்சும் பெரிதும் இளைஞர்களை காந்தம்-போல் ஈர்த்தது! கலைஞர், நாவலர், பேராசிரியர் போன்ற பல தலைவர்கள் அவ்வியக்கத்தின் மூலமாகவே ஈர்க்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு பிற்காலத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள் என்கிற உயர்நிலை அடைந்தனர்!
திராவிடர் கழகம் 1949இல் பிரிந்த பிறகு, திராவிட மாணவர் கழகத்தில் ஈடுபட்டிருந்த மாணவத் தலைவர்களில் பலரும் தி.மு.க.வுக்குச் சென்றுவிட்டனர். எங்களைப் போன்ற சில இளைஞர்கள்தான் தந்தை பெரியார் அவர்களுடன் திராவிடர் கழகத்தில் இருந்தோம்! எண்ணிக்கை வெகுகுறைவு என்றாலும் கட்டுப்பாடாக இருந்தனர். திராவிட மாணவர் கழகத்தில் உள்ள நமது மாணவர்கள். மாணவர்கள்பால் வைத்த நம்பிக்கையே அய்யா அவர்களுக்குக் குறையக்கூடிய நிலையும் ஏற்பட்டது என்றாலும் இளைஞர்களும், மாணவர்களும் நமது இயக்க லட்சியங்களைக் கடைப்பிடித்தால்தான் பரவ வாய்ப்பு ஏற்படும் என்றும் கருதினார்கள்.
டார்ப்பிடோ ஏ.பி.ஜெனார்த்தனம் பிறகு இவரும் திமுக.,வில் சேர்ந்து, அதிமுகவிலும் சேர்கிறார்கள். அவர்கள் வழிகாட்டியாகக் கொண்டு, பல மாணவத் தோழர்களை, தெளிவான கொள்கை நிலைப்பாட்டை அறிந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இணைத்தோம்; மெல்ல மெல்ல எழுந்து செயல்பட்டது. பற்பல ஊர்களில் அமைத்தோம். பிறகு நான் கழகத்தின் செயலாளர்களில் ஒருவராக அய்யா அவர்களால் 1960இல் நியமிக்கப்பட்டதன் காரணமாக, மற்றவர்களைப் பொறுப்பாக, மெதுவாக அதனை வளர்த்து வந்தோம்!
24-9-1971 அன்று தந்தை பெரியார் அவர்கள் கீழ்க்காணும் அறிக்கையை விடுதலையில் விடுத்தார்கள்.
பெரியார் வேண்டுகோள் என்ற தலைப்பில் திராவிடர் மாணவர் கழகம் என்று தலைப்பிட்டு கையொப்பத்துடன் எழுதியதில், திராவிட மாணவர் கழகம் என்பதாக ஒரு ஸ்தாபனம் அமைக்கப்படவேண்டியது இன்று மிகவும் அவசியமாகும்.
இக்கழகம் திராவிட மாணவர்களை ஒன்றுபடுத்தவும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து முன்னேற்றமடையவும், மிகவும் தேவையானது ஆகும். நாம் சமுதாயத்தில் அதிகமாக - அதிகமான எண்ணிக்கை உடையவர்களாக இருந்தும் நமக்குரிய உரிமைகளில், சுதந்திரத்தில் 10இல், 8இல் ஒரு பங்கு வீதம்கூட அடைய முடியாதவர்களாக இருந்து வருகிறோம்.
இக்கழகம் உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் மாத்திரமல்லாமல் நம் கொள்கைகளை ஒன்றுபடுத்தி, அறிவுறுத்தி நம் நாட்டை அந்நிய ஆதிக்கம், அந்நிய கலாச்சார ஆதிக்கம் ஆகியவைகளில் இருந்து மீட்கவும் நம் சமுதாயத்தை சக்தியும், மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக மாற்ற ஒட்டுமொத்தமாக இக்கழகத்தில் பங்குகொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்று அய்யா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதை அறியும்போது இன்றைக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றன.
28.9.1971இல் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் புலவர் கோவிந்தன் அவர்கள் தலைமையிலும், என்னுடைய முன்னிலையிலும் திருவத்திபுரத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைத்து தமிழர் திருநாளான பொங்கல் அன்று திறப்பு விழாவினை நடத்திட முடிவு எடுக்கப்பட்டது.
சிலையை திருவத்திபுரம் மணிக்கூண்டுக்கு அருகில் வைப்பது என்றும், ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சிலை நிறுவும் பணியை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது. இதில் பி.கே.இராமசாமி, பாபு ஜனார்த்தனம், பா.அருணாசலம், மா.நா.இராசமாணிக்கம், வேல்சோமசுந்தரம் மற்றும் குழு உறுப்பினர்கள் துரை அருணாசலம், டி.பி.திருச்சிற்றம்பலம், ஆர்.கதிர்வேல், வி.எஸ்.கிருஷ்ணசாமி நாதன், கே.சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டு ஆக்கமும், ஊக்கமும் தந்தார்கள். அவர்களுடன் தேநீர் அருந்திய பின்பு மகிழ்வுடன் புறப்பட்டுச் சென்றோம்.
28.9.1971 அன்று மாலை திருவத்திபுரம் வாரச்சந்தைத் திடலில், நண்பர் வேல்.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழக்களில் கலந்துகொண்டு உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். சட்டப்பேரவைத் தலைவராக இருந்த அத்தொகுதி சட்டப்பேரவை (திமுக) உறுப்பினர் புலவர் கா.கோவிந்தன், சயமரியாதை வீரர் உத்திரமேரூர் ராஜகோபால் எம்.எல்.ஏ., காஞ்சி மாவட்டத் தலைவர், சி.பி.ராஜமாணிக்கம், திமுக மாவட்டச் செயலாளாக இருந்த நண்பர் பாபு.ஜெனார்த்தனம் ஆகியோரும் என்னுடன் அக்கூட்டத்தில் பேசினர்.
1-10-1971 அன்று தர்மபுரியில் அண்ணா பிறந்த நாள் விழாவுக்குச் சென்ற வாய்ப்பின்போது, தர்மபுரி நகராட்சி மன்றம் எனக்கு வரவேற்பு கொடுத்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய உள்ளூர் தலைவரும், நகர மன்றத் தலைவருமான த.வே.வடிவேலன் அவர்கள் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடை-பெற்றது!
மாலை தீர்த்தகிரியார் சதுக்கத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சி அனைத்துக்கட்சி பிரமுகர்களும் கலந்து-கொண்ட நிலையில் நடைபெற்றது. நான் முக்கியப் பேச்சாளராகக் கலந்து கொண்டேன். தி.மு.கழக நண்பர்கள் வழக்குரைஞர் கரிவேங்கடம் எம்.எல்.ஏ., சின்னசாமி எம்.எல்.ஏ., மாணிக்கம் எம்.எல்.ஏ., திமுக மாவட்டச் செய-லாளர் அரூர் எச்.எல்.முருகேசன் ஆகிய தோழர்கள் கலந்து கொண்ட அப்பொதுக்கூட்டத்திற்கு நகரமன்றத் தலைவர் த.வே.வடிவேலன் அவர்கள் கலந்து-
கொண்டர்.
----------தொடரும்
------------------------ நன்றி:- கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் அய்யாவின் அடிச்சுவட்டில் இரண்டாம் பாகம் (15) -"உண்மை" 23-3-2009
Search This Blog
23.3.09
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment