ஹோலிப் பண்டிகையா?
ஹோலிப் பண்டிகை என்பது வட மாநிலங்களில் கொண்டாடப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் அண்மைக்காலமாக வடநாட்டுக்காரர்கள் மத்தியில் தலையெடுத்தது. ஒருவர்மீது இன்னொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி கலாட்டாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கும் ஒரு புராணக்கதை வழக்கம்போல் இருக்கவே செய்கிறது. அதிலும் அசுரனை (திராவிடனை) சுரர்கள் (ஆரியர்கள்) அழித்ததாக வழக்கமான கட்டுக்கதைகள்தாம்.
அசுரர்களின் அரசன் ஹிரண்ய கசிபு கடுந்தவம் புரிந்து பிரம்மதேவனிடம் யாராலும் தன்னை வெற்றிகொள்ள முடியாத வரம் பெற்றிருந்தான். அந்த வரத்தின்படி அவனுக்கு பகலிலோ இரவிலோ, வீட்டினுள்ளோ, வெளியிலோ, பூமியிலோ, ஆகாயத்திலோ மரணம் வராது. அதனால் மமதை மிகுந்த ஹிரணியன் மூவுலகமெங்கும் படை யெடுத்துச் சென்று எதிர்த்தவர்களை முறியடித்து அடிமைகளாக்கி கொடுங்கோல் ஆட்சி செய்யத் தொடங்கினான். நானே இறைவன். என்னைத் தவிர யாரையும் மக்கள் வழிபடக்கூடாது என ஆணை பிறப்பித்தான். பிரபஞ்சத்தில் அனைவரும் அவனுக்குப் பயந்து, ஹிரண்ய கசிபுவே தெய்வம் என்று போற்றிப் புகழ்பாடி அவனைத் துதித்து அடிபணிந்து வாழத் தொடங்கினார்கள். அப்படி அகங்காரம் பிடித்தலைந்தவனுக்கு நேர்மாறான கணத்தோடு பிரகலாதன் என்ற மகன் பிறந்தான்.
அப்பிள்ளை கருவில் இருக்கையில் அவன் தாயைப் பார்க்க வந்த நாரத முனிவர், அவளுக்கு பகவான் ஸ்ரீமன்நாராயணனின் மகிமையை எடுத்துரைத்து, ஓம் நமோ நாராயண என்ற மகாமந்திரத்தை உபதேசித்திருந்தார். அதை கருவிலே திருவுடன் வளர்ந்த பிரகலாதனும் கேட்டதனால், பிறந்ததிலிருந்தே ஓம் நமோ நாராயண என்று சொல்லி வரத் தொடங்கினான். இது தெரிய வந்த ஹிரண்ய கசிபு மகனின் போக்கை மாற்றப் பல வழிகளிலும் முயற்சித்தான். கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அவனிடம் ஓம் நமோ நாராயண என்று ஜபிப் பதை நிறுத்திவிட்டு, ஓம் ஹிரண்யாய நமஹ என்று சொல்லுமாறு நிர்ப்பந்தம் செய்தார்கள். அவன் மசியவில்லை. அதனால் சினம் கொண்ட ஹிரண்ய கசிபு, மகனை தனது வழிக்குக் கொண்டுவர பலவிதங்களில் முயன்றான். அடித்தான், உதைத்தான், நஞ்சு கொடுத் தான், ஏன் - உயிருடன் எரிக்கவே முயன்றான். தன் உடன் பிறந்த ஹோலிகா என்ற அரக்கியை அழைத்து மகனை மாய்த்தொழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். அந்தக் கொடியவள் அதிசயமான வரத்தைப் பெற்றிருந்தாள். அவனை நெருப்பால் தீண்ட முடியாது.
தன் புகழைப்பாட மறுத்த மகனை ஹோலிகா மடியில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை மூட்டி உட்கார வைக்கப் போவதாக மிரட்டினால் பிரஹலாதன் பயத்தில் மசிந்துவிடுவான், மறுத்தால் மடிந்துவிடுவான் என எண்ணி செயலில் இறங்கினான் ஹிரண்யகசிபு. பிரஹலாதன் நெருப்பை தேர்ந்தெடுத்தான்.
என்ன ஆச்சரியம்! நெருப்பு ஹோலிகாவைச் சாம்பலாக்கியது!
பிரஹலாதன் புடம் போட்டு எடுத்த தங்கமாக திருமாலைப் புகழ்ந்தவாறே தனது அக்னிப்பிரவேசத்திலிருந்து வெற்றியுடன் மீண்டு வந்தான்.
ஹோலிகா, பக்த பிரகலாதனைக் கொல்ல முயன்று தோற்று, அவளே சாம்பலானதைக் கொண்டாடுவதுதான் ஹோலிவிழா.
இன்னும் காமனை அழித்ததாகவும் கதைகள் உண்டு. வட மாநிலங்களில் பல நாள்கள்கூடக் கொண்டாடுகின்றனர்.
இராமாயணம் ஆரியர் - திராவிடர் போராட்டம் என்றால், புராணக் கதைகள் கற்பிக்கும் பண்டிகைகள் எல்லாம் பெரும்பாலும் அசுரன் - சுரன் சண்டைகள்தாம்; முடிவில் அசுரன் வதம் செய்யப்படுவதுதான்.
இந்த ஹோலிப் பண்டிகையில் வரும் இரண்யன் என்பவன் ஆரியப் பார்ப்பனர்களின் எதிர்ப்பாளன். இதனை மய்யப்படுத்தி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகத்தை உருவாக்கினார். கழக மாநாடுகளில் நடத்தப்பட்ட துண்டு. 1971 இல் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டிலும் நடத்தப்பட்டது.
இரண்ய கசிபு கூறியதாக பாகவதத்தில் குறிப்பிடப்படும் தகவல் வருமாறு:-
இரண்யகசிபு மிகுந்த கோபம் கொண்டு தனது அரச சபையில் சூலம் கொண்ட கையனாக அமர்ந்து உதடு துடிக்க தனது தானவர்களை நோக்கி, தானவர்களே, நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். தாமதியாமல் உடனே செய்யுங்கள்.
நமக்கு சத்துருக்களும், அல்பர்களுமான தேவர்கள் (பிராமணர்கள் தான் தேவர்கள் என்பதை பின்னால் விளக்குகிறான் இரணியன்) விஷ்ணுவை யாசித்து என்னுடைய சஹோதரனைக் கொன்றார்கள்...
மகாவிஷ்ணு சிறுவன்போல் தம்மை உபாசிப்பவர்கள் இஷ்டப்படி நடப்பவர். இந்த மாதிரி புத்தியுள்ள விஷ்ணுவினுடைய கழுத்தை சூலத்தால் வெட்டி... என் கவலையை நிவர்த்திக் கொள்கிறேன்.
இந்த மகாவிஷ்ணு தேவர்களுக்கு பிராமணன் போன்றவர். அவரைக் கொன்றால் தேவர்கள் சக்தியற்றவர்கள் ஆவார்கள். ஆனதால் நீங்கள் எல்லோரும் பிராமணர்கள் நிறைந்த பூமிக்குச் சென்று தபஸ், யாகம், அத்தியயனம், விரதம்... ஆகிய இவைகளைச் செய்கின்றவர் களைக் கொல்லுங்கள்.
பிராமணர்களால் செய்யப்படும் அனுஷ்டானமே மகாவிஷ்ணுவுக்கு காரணமாக இருக்கிறது.
ஆதலால், எந்த தேசத்தில் பிராமணர்கள் நிறைந்திருக்கின்றனரோ, எந்த தேசத்தில் வேதாத்தியாயனம் செய்கிறார்களோ, எந்த தேசத்தில் வர்ணாசிரம தர்மங்கள் அதற்குரிய கர்மங்கள் அனுஷ்டிக்கப் படுகின்றனவோ, அந்த தேசத்துக்குச் சென்று, நெருப்பை வைத்துக் கொளுத்துங்கள் என்று ஆக்ஞாபித்தான்.
அதனைக் கேட்ட அசுரர்கள்... பட்டணங்கள்... ஆகியவைகளை அக்கினியை வைத்துக் கொளுத்தினார்கள். மண்வெட்டியை எடுத்து பிரகாரங்களையும், கோபுரங்களையும் பிளந்தார்கள். கோடாரியால் ஜீவிகைக்குச் சாதனமாகிற விருக்ஷங்களை வெட்டினார்கள். ஜ்வலிக்கும் கொள்ளிகளைக் கொண்டு எரித்தார்கள்.
இப்படி இரண்யகசிபின் வேலைக்காரர்கள் உபத்திரவத்தைச் செய்யும்போது தேவர்கள் ஸ்வர்க்கத்தைவிட்டு பூமியில் மறைந்து சஞ்சரித்தார்கள்.
(இஞ்சிக்கொல்லை பண்டிட் ஆர். சீனிவாச சாஸ்திரியாரால் மொழி பெயர்க்கப்பட்டு, சென்னை புரோகிரஸ் அச்சுக்கூடத்தாரால் அச்சிடப்பட்ட பாகவத புத்தகம் 7 ஆவது ஸ்கந்தம் 2 ஆவது அத்தியாயம் 715 ஆவது பக்கத்தில், 5 ஆவது வரி முதல் 746 ஆவது பக்கம் 15 ஆவது வரி வரை யில் காணப்படுவதை ஒரு சொல்கூட மாற்றாது எடுத்துப் போடப்பட்டுள்ளது).
இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆரியப் பார்ப்பனர்களுக்கு எதிராக இருந்த இரண்யன் என்ற திராவிட வீரனை - அவன் மகனையே அவனுக்கு எதிராகக் கிளப்பி, துரோகம் செய்ய வைத்து, அப்பனையே தந்திரமாகக் கொல்ல ஏற்பாடு செய்த கதைதான் இது.
தீபாவளியாக இருந்தாலும் நரகாசுரனை ஆரியர்கள் செய்த வதம்தான் அது. சூரசம்ஹாரம் என்றால், சூரபத்மனை சுப்பிரமணியன் கொன்ற கதைதான்.
இதிகாசங்களும், புராணங்களும் கூறப்படும் அசுரன், இராட்சதன், மிலேச்சர்கள், அரக்கர்கள் என்பதெல்லாம் திராவிடர்களையே குறிக்கும் என்று பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் முதல் விவேகானந்தர்வரை கூறியுள்ளதைப் புரிந்துகொண்டால், இத்தகைய பண்டிகைகளைப் பார்ப்பனர் அல்லாதார் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். பார்க்காதது மட்டுமல்ல - இத்தகைய பண்டிகைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவும் அவர்களின் தன்மான உணர்வு தயங்காது.
இன்று நேரிடையாக பார்ப்பன அல்லாதாரை சூத்திரர்கள், அரக்கர்கள் என்று சொல்லத் துணிவு இல்லாதவர்கள் இதுபோன்ற பண்டிகைகள் மூலம் மறைமுகமாக நம்மை இழிவுபடுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
-----------------" விடுதலை" தலையங்கம் 11-3-2009
Search This Blog
11.3.09
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//இன்று நேரிடையாக பார்ப்பன அல்லாதாரை சூத்திரர்கள், அரக்கர்கள் என்று சொல்லத் துணிவு இல்லாதவர்கள் இதுபோன்ற பண்டிகைகள் மூலம் மறைமுகமாக நம்மை இழிவுபடுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.//
புரிந்து கொண்டேன்.
சிறுநீர் கழிக்கறதுக்கு, போர்னோ படம் பாக்கறதுக்கு இதே மாதிரி ஆரியர்கள் ஏதாவது இதிகாசம் எழுதி வச்சி இருந்தா, அது எல்லாம் தமிழன் பண்ணலாமா, கூடாதான்னு எழுதுவீங்களா ?
இன்றைய நிலையில் ஹோலிய இதுக்காக தான் கொண்டாடறாங்களா? ஒரு கொண்டாட்டமா இளைஞர்கள் / இளைஞிகள் எந்தவிதமான ஜாதி / மத அடையாளங்கள் கூட இல்லாம கொண்டாடறாங்க. இது எல்லாம் அவங்களுக்கு சொல்லி ஜாதி / மதத்த சொல்லித்தர முயற்சி பண்றீங்களா ? தீபாவளிக்கு சொன்னீங்கனா நியாயம். ஒருவிதத்துல மக்கள் இன்னும் சாமிக்கு படையல் வச்சிட்டு கொண்டாடறாங்க. ஹோலில இந்த அடையாளங்களும் சுத்தமாவே அழிந்சுடுச்சு. அப்படி இருக்கும்போது இந்த கதைய சொல்லி. அதோட கதைய மட்டும் சொல்லிட்டு விடாம, கொண்டாடலாமா / கூடாதான்னு வேற ஒரு சில வரிகள்.
ஏன் இத கூட சுயமா மக்களுக்கு சிந்திக்க தெரியாதா ?
பப் கலாச்சாரத்த இந்து கலாசாரம்ன்னு ஏதோ கதை சொல்லி தடுக்க நினைக்கற ராம் சேனா வானர படைகளுக்கும், அதே இந்து கலாச்சாரத்த காரணம் காட்டி ஹோலி மாதிரி ஒரு கொண்டாட்டம் செய்யலாமா / கூடாதான்னு சொல்ற உங்களுக்கும் என்ன வித்தியாசம். (வன்முறை கையாளல, அத தவிர ).
தனி மனிதனுக்கு சிந்திக்கவே தெரியாதா ?
//தனி மனிதனுக்கு சிந்திக்கவே தெரியாதா ?//
கல்விக்கு அதிபதியான கடவுள் சரஸ்வதி இருக்கும் நாட்டில் தான் கைநாட்டு பேர்வழிகள் அதிகமாக இருக்கிறார்கள்.
சிந்திக்கச் சொன்னாலும் சிந்திக்காமல் கடவுள் மதம் போன்றவைகளால் மூளைக்கு விலங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாணியை காலில் மிதித்துவிட்டால் அசிங்கம் என்று நினைப்பவன் கூட சாணியை கையில் பிடித்து வைத்தால் பிள்ளையாராக பார்க்கிறார்கள்
சிந்தனை இப்படித்தான் இருக்கிறது. அதன் உண்மையை விளக்க வேண்டிய அவசிய மாகிறது
***
கல்விக்கு அதிபதியான கடவுள் சரஸ்வதி இருக்கும் நாட்டில் தான் கைநாட்டு பேர்வழிகள் அதிகமாக இருக்கிறார்கள்.
***
படிப்பறிவிற்க்கும், தனி மனித சிந்தனைக்கும் இருக்கும் வேறுபாடை நான் உங்களுக்கு சொல்ல வேண்டாம்.
****
சிந்திக்கச் சொன்னாலும் சிந்திக்காமல் கடவுள் மதம் போன்றவைகளால் மூளைக்கு விலங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாணியை காலில் மிதித்துவிட்டால் அசிங்கம் என்று நினைப்பவன் கூட சாணியை கையில் பிடித்து வைத்தால் பிள்ளையாராக பார்க்கிறார்கள்
*****
உண்மை.
****
சிந்தனை இப்படித்தான் இருக்கிறது. அதன் உண்மையை விளக்க வேண்டிய அவசிய மாகிறது
****
உண்மைன்னு நீங்க நினைக்கறத மட்டும் சொல்லுங்க. இப்படி தான் சிந்தனை செய்ன்னு சொல்றதுக்கு நீங்க யாரு ? அத தவிர, நீங்க எழுதற purpose வீணா போய்டும். அது கூட புரியாத உங்களுக்கு ?
//உண்மைன்னு நீங்க நினைக்கறத மட்டும் சொல்லுங்க. இப்படி தான் சிந்தனை செய்ன்னு சொல்றதுக்கு நீங்க யாரு ? அத தவிர, நீங்க எழுதற purpose வீணா போய்டும். அது கூட புரியாத உங்களுக்கு ?//
ஆரோக்கியமாக விவாதம் செய்யும் மணிகண்டன் அவர்களுக்கு முதலில் நன்றி.
இந்தப் பிரச்சினையில் இது சாதகம் அது பாதகம் என்று சொல்லி உங்கள் அறிவு என்ன சொல்கிறதோ அதன் படி நடவுங்கள் என்றுதான் நாங்களும் சொல்லுகிறோம்.
மதவாதிகள் சொல்வதுபோல் சிந்திக்காதே நம்பு என்று நாங்கள் சொல்லவில்லை.
நாங்கள் சொல்வதை நம்பிவிடாதீர்கள், நாங்கள் சொல்வதில் உண்மை இருந்தால் ஏற்றுக் கொண்டு அதன்படி நடவுங்கள். இல்லையென்றால் அலட்சியப்படுத்திவிட்டுப் போங்கள் என்பதுதான் எங்கள் நிலை.
சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.
மீண்டும் நன்றி
மணிகண்டன்//உண்மைன்னு நீங்க நினைக்கறத மட்டும் சொல்லுங்க. இப்படி தான் சிந்தனை செய்ன்னு சொல்றதுக்கு நீங்க யாரு ? அத தவிர, நீங்க எழுதற purpose வீணா போய்டும். அது கூட புரியாத உங்களுக்கு ?//
அதே கேள்வியைத்தான் நாங்க கேட்கிறோம்...எங்களை சிந்திக்கவேண்டாம் எல்லாவற்றையும் நம்பு என்று சொல்வதை எதிர்க்கிறோம்..நம்ப மறுப்பதற்கான காரணத்தை எழுதுகிறோம்..இழிவுகளை எழுதுகிறோம்....எல்லா பண்டிகைகளும் மனித இழிவைத்தான் வெளிப்படுத்துகின்றன...ஓனம் பண்டிகை இழிவை வெளிப்படுத்துவது தான்...
மக்கள் தெளிவு பெறவேண்டாம் என்று கூறுவதற்கு மட்டும் நீங்கள் யார்...?
இப்படி தந்தை பெரியாரும் சரி, அவருக்கு முன்பு இருந்த பகுத்தறிவாளர்களையும் பார்த்து கேள்வி கேட்டாலும் துவண்டு விடாமல் மக்களுக்காக போராடியதினால் தான் நாங்கள் எல்லாம் வெளியே வரமுடிந்தது...(இதை கண்ணியத்துடன், நன்றியுணர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்...அது அப்படியே தொடருகிறது...இன்னும் பல கோடிக்கணக்கானவர்கள் இருப்பதால்...)
Post a Comment