பெரியாருடைய கருத்துக்களில் திரிபுவாதம் இல்லாமல்
பார்க்க வேண்டிய பெரும் பொறுப்பு எங்களுக்குண்டு
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழர்தலைவர் விளக்கவுரை
பெரியாருடைய கருத்துகளை திரிபுவாதம் இல்லாமல் பார்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆராய்ச்சி செய்பவர்களிடம் இதை எச்சரிக்கையோடு பார்க்க வேண்டியதாக இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சென்னைப் பல் கலைக்கழகத்தில் 6.2.09 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
நம்மிலே மிகப்பெரும்பாலோர் இந்தப் பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்கள் என்ற பெருமையும் தகுதியும் உடையவர்களாக அறிஞர் பெருமக்கள் இருக்கின்ற இந்த நிகழ்விலே தந்தை பெரியார் அவர்களுடைய அருட்கொடையினாலே மக்களுக்காக உருவாக்கப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அந்த அறக்கட்டளை சார்பிலே நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல்கலைக் கழகத்திற்குள்ளோ கல்லூரிகளுக்குள்ளோ ஏன் பள்ளிக் கூடம் கூட செல்லாத தந்தைபெரியார் இன்றைக்கு பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் ஆய்வுக்குரியவராக ஆகியிருக்கின்றார் என்பதே தந்தை பெரியார் அவர்களுடைய பெருமைக்கு தனிச்சான்றாகும்.
அந்த வகையிலே இன்றைக்குத் தகுதி மிக்க ஒருவர் நம்முடைய தமிழ்த் துறைப் பேராசிரியர் அவர்கள் ஒரு தன்மானப் பெரும்பேராசிரியர். சுயமரியாதை இயக்கத்தில் சேராத சுயமரியாதைக்காரர். (கைதட்டல்) அப்படிப்பட்ட ஒரு உணர்வோடு அவர்களை நினைக்கிற நேரத்திலே இதே அரங்கத்திலே மற்றவர்களைப்போல தந்தை பெரியார் அவர்களுக்கும் ஆய்வுச் சொற்பொழிவு இருக்க வேண்டுமென்று அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டார்கள்.
நீண்ட காலத்திற்கு முன்னாலே ஆய்வுச் சொற்பொழிவு பல்கலைக் கழகத்திலே இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்த நேரத்திலே ஏறத்தாழ ஒரு 30 ஆண்டுகளுக்கு மேலாக நினைத்தோம். இன்றைக்கு ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்த வந்திருக்கின்ற பல பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும், இந்திய துணைக்கண் டத்திலே தலைசிறந்த ஆற்றல் வாய்ந்த கல்வியாளராகவும் வி.சி.குழந்தைசாமி மாடல் என்ற ஒரு தனித்த மாடலை உருவாக்கி எல்லோரும் இன்றைக்கு கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நீரியல் துறையிலே மற்ற துறைகளிலே தமிழினம் பெருமைப்படக்கூடிய அளவுக்கு அவரைப் பாராட்டக்கூடிய அள வுக்கு ஆற்றலாளர்.
அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலே துணைவேந்தராக இருந்த காலத்திலே அங்கே ஒரு அறக்கட்டளையை நிறுவினோம்.
ஒரு பத்தாயிரம் ரூபாயை வைத்தாலே பெரிய அளவுக்கு வட்டி வரும். அதை அவர்களி டத்திலே கொடுத்தது. இந்த நேரத்திலே அவர்களுக்கும் நினைவிருக்கும் எங்களுக்கும் நினை விருக்கும். அதே போல சென்னைப் பல்கலைக் கழகத்திலே ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அதற்குரிய சொற்பொழிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையிலே தமிழ்த்துறையிலே தனியாக நடத்த வேண்டும் என்று நம்முடைய போராசிரியர் அய்யா அரசு அவர்கள் கேட்ட நேரத்திலே அதைப் பற்றி எங்களுடைய அறக்கட் டளை நிர்வாகக் குழுவிலே சொன்னபொழுது எல்லோரும் அதை வரவேற்றார்கள்.
ஒருமனதாக முடிவு செய்து அந்த நிகழ்ச்சி இன்றைக்கு நடைபெறக் கூடிய நல்லவாய்ப்பும், அதிலே முதலிலே சிறப்பாக தகுதிமிக்க ஒரு வரும், தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்களை விருப்பு வெறுப்பு இன்றி ஒரு அறிவியல் பார்வையோடு எல்லா வகையிலும் பார்க்க முழுத் தகுதி பெற்றவர்களாக இருக்கக்கூடிய அய்யா நம்முடைய பேராசிரியர் டாக்டர் முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இங்கே பெரியார் அறக் கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கின்றார்கள்.
அவருள் தலைசிறந்த கல்வியாளர் இருக்கின்றார் - அவருள் தலைசிறந்த நிர்வாகியிருக்கின் றார் - அவருள் பொறியாளர் இருக்கின்றார் - அவருள் நல்ல அளவுக்கு சிந்தனையாளர் இருக் கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழின உணர்வாளராக அவர்கள் இருக்கின்றார்கள். (கைத்தட்டல்)
இப்படிப்பட்ட பல் வேறு தகுதிகளை அவர் பெற்றது பெருந்தமிழ் கூறும் நல்லுலகம் சிறப் பாக அவரை அறியும் சிறப்பு. எனவே இந்த அறக்கட்டளையின் சார்பாகத் துவக்கப்படுகின்ற முதல் நிகழ்ச்சியிலே வா. செ. குழந்தைசாமி அவர்கள் இந்தச் சொற்பொழிவை நிகழ்த்துவதற் காக நாம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்காகப் பெருமைப்படுகின்றோம்.
இந்தச்சொற்பொழிவு இந்த அரங்கத்திற்குள்ளே இருக்கிறவர்களுக்காக மட்டுமல்ல. எனவே இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது.
பெரியார் அலை வரிசை என்பதன் மூலம் நாங்கள் உலகம் முழுவதும் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்.
எனவே நாளை மறு நாளுக்குள்ளாக உலகம் முழுவதும் இருக்கக் கூடிய தமிழர்கள், எல்லா நாடுகளிலும் இருக்கக் கூடிய தமிழர்கள் இந்த ஒலிப்பதிவு மூலமாக இதைக் கேட்பார்கள்.
இது புத்தகமாகவும் வரும். இது ஒரு ஆராய்ச்சிக்குரியதாக இருக்கும்.
அந்த அளவுக்கு வியப்பாக அவர்கள் பல்வேறு பணிகளுக்கிடையிலே வந்திருக்கின்றார்கள்.
அவர்கள் ஒரு செயலைச்செய்ய வேண்டும் என்று சொன்னால் எந்த முறையிலே நிகழ்த்த வேண்டுமானாலும் குறிப்புகள் எடுத்து அதற்காகப் பல மணி நேரத்தைச் செலவழித்து பல நூல்களைப் படித்து ஆராய்ந்து பேசக்கூடியவர்.
அது இல்லாவிட்டாலும் அவர்களாலே பேச முடியும். ஆனால் அவர்கள் அதை முறையாக செய்யக்கூடிய ஒரு அறிஞர் பெருமகனார் ஆவார்.
எனவே அவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி இங்கே வந்ததற்காக தமிழ்ப் பெருமக்கள் சார்பாகவும், பெரியார் அறக் கட்டளை சார்பாகவும் இந்த பெருமைகளைச் செய்வதிலே நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியடை கின்றோம்.
முதலிலே நடந்தது பல்கலைக் கழகத்தின் சார்பில். இது பெரியார் அறக்கட்டளைச் சொற் பொழிவு என்ற காரணத்தாலும் இதன் சார்பாகவும் நாங்கள் சிறப்பு செய்கின்றோம். (கைத்தட்டல்).
அதேபோல எங்களுடைய அறக்கட்டளையின் துணைத்தலைவரும் கழகத்தினுடைய பொரு ளாளருமான அன்பிற்குரிய சாமிதுரை அவர்கள், தமிழ்த்துறைத் தலைவராக இருக்கின்றவரான இந்த வாய்ப்பை மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் வழங்கக் கூடிய பேராசிரியர் அரசு அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்கிறார்கள். நம்மோடு இங்கு சிறப்பாக கருத்துகளைப்பரிமாறிக் கொண்டு சிறந்த அறிவியல் ஆய்வுரை நிகழ்த்த வந்திருக்கின்ற அய்யா டாக்டர். வா. செ. குழந்தைசாமி அவர்களே!
நம்மோடு இருக்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்த சென்னைப் பல்கலைக் கழகத்தினு டைய தமிழ்த்துறை என்பது வெறும் வகுப்புகள் நடத்தக்கூடிய துறை மட்டுமல்ல. அது ஆராய்ந்து தேய்ந்து அறிவுரைகளை வழங்கக்கூடிய செம் மாந்து இருக்கக்கூடிய ஒரு விறைப்பான துறை. அதனை ஆற்றலோடு நடத்தக்கூடிய பேராசிரியர் அய்யா அரசு அவர் களே. இங்கே வருகை புரிந்துள்ள சான்றோர் பெருமக்களே, மாணவத்தோழர்களே, தோழி யர்களே, இயக்க நண்பர்களே, பெரியார் தொண்டர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.
ஒரு பதினைந்து மணித் துளிகள் முன்னுரை என்று எனக்குக் கொடுத்திருக்கின்றார்கள். தந்தை பெரியார் அவர்களைப் பற்றி வா.செ.குழந்தை சாமி அவர்கள் பேசுவதற்கு முன்னாலே நான் அதிகமாக கருத்துகளை எடுத்துச்சொல்ல விரும்பவில்லை.
அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஒப்பாரும், மிக்காருமில்லாத ஒப்பற்ற சுயசிந்தனையாளர். அது தான் அவர்களுடைய தனிச்சிறப்பு.
நீண்ட நாட்களுக்கு முன்னாலே பகுத்தறிவாளர் கழகம் தந்தை பெரியார் அவர்களாலே உருவாக்கம் பெற்ற போது பகுத்தறிவாளர் கழகத்தினுடைய தலைவர்கள் எல்லாம் அய்.ஏ.எஸ். அதி காரிகளாக பெரிய பொறுப்புகளிலே இருந்தார்கள். அப்படி அதன் துணைத் தலைவர்களிலே ஒருவராக இருந்தவர் நம்முடைய முன்னாள் தலைமைச் செயலாளரான திரவியம் அய்.ஏ.எஸ் அவர்கள் ஆவார்கள்.
அந்தக் கலந்துரையாடல் நடந்து கொண்டிருக் கின்ற பொழுது அவர் கல்வித்துறையிலேயே செயலாளராக இருந்தார். அப்பொழுது பலஅறிஞர் பெருமக்கள் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தலைவர் உட்பட பலர் ஆய்வு செய்து பல்கலைக்கழகங்களிலே தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அறக்கட்டளைச் சொற்பொழிவு உருவாக்கலாம். என்ற பிரச்சினை வந்தபொழுது இரண்டு கருத்துகள் அப்பொழுது நிலவின. அதிலே பெரும்பாலோருக்குத் தயக்கம் இருந்தது. என்ன அந்தத் தயக்கம்என்று சொன்னால் நாம் உருவாக்கலாம்- கொடுக்கலாம். அதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பிறகு பல்கலைக்கழகங்களிலே நடக்கின்ற ஆய்வுச்சொற் பொழிவு நடக்கின்றபொழுது அந்தத் தத்துவத்தையே மாற்றிவிடக் கூடிய அளவுக்குப் பல நேரங்களிலே ஆராய்ச்சியாளர்களால்தான் செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கும். ஆகவே அதிலே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதைச் செய்வதா அல்லது செய்வது வம்பை விலைக்கு வாங்கிக் கொள்வதா? என்று ஒருவர் சொன்னார்.
அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் பெயரை நான் குறிப்பிட விரும்ப வில்லை. எல்லாம் தெரிந்தவர்கள் தான் இருந்தார்கள். பல்வேறு விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்கள் முற்றுப் பெறாமலேயே முடிந்து விட்டன. ஆனாலும் இப்பொழுது காலத்தின் நிலை இவைகள் எல்லாம் மாறியிருக்கின்றன.
பெரியாரைப் பற்றி நாம் ஆய்வு செய்கிறோம் என்று சொன்னால், எந்தத் தலைவரைப் பற்றி ஆய்வு செய்தாலும் அவர்களுடைய கொள்கை - அவர்களுடைய கண்ணோட்டம் - அவர்களுடைய பார்வை என்ன என்பதை அப்படியே கொடுப்பது தான் அறிவு நாணயமாகும்.
நமக்கு சில கருத்துகள் இருக்கலாம். நமக்கு சில மாறுபாடுகள் இருக்கலாம். மாறுபாடுகளைக் கூட நாம் சொல்லலாம்! மாறுபாடுகளைக்கூட நாம் விவாதிக்கலாம். ஆனால் அவருடைய கருத்து இதுதான் என்று திரிபுவாதம் இல்லாமல் சொல்லலாம்.
இன்றைய தலைமுறை, இளைய தலைமுறை தந்தை பெரியாரைப் புரிந்து கொள்ளக் கூடிய தலைமுறையாக வருகிறது. தந்தை பெரியார் அவர்களுடைய ஏராளமான எழுத்துகள், கருத்துகள் வருகின்றன.
ஆகவே அந்த நிலையிலே திரிபுவாதம் இல்லாமல் வரவேண்டும்.
--------------தொடரும்..."விடுதலை" 24-3-2009
Search This Blog
24.3.09
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment