
அ.தி.மு.க. உண்ணாநிலை
பொதுத்தேர்தல் நெருங்கும்போது வந்துள்ள
மாற்றம் வரவேற்கத்தக்கது - நீடிக்கவேண்டும்
ஈழத் தமிழர்க்கு நிரந்தரப் பரிகாரம் தேவை: தமிழர் தலைவர் அறிக்கை
இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், அப்பாவித் தமிழர்கள் அங்கே காப்பாற்றப்படவேண்டும் என்பதை வலியுறுத்திடவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் நாளை மறுநாள் (9.3.2009) அன்று சென்னையில் உண்ணா விரதம் இருப்பது எனவும், அவரது கட்சியினர் மாவட்டத் தலைநகர்களில் உண்ணாவிரதம் இருப்பார்கள் எனவும், இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டிட வேண்டும் என்றும் அறிவித்திருப்பது வர வேற்கத்தக்கதேயாகும்!
இவருடைய நிலைப் பாட்டில் இது பெரும் மாற்றத்தைக் காட்டுவதா? அல்லது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமது கட்சி இதுவரை இப்பிரச்சினையில் காட்டிவந்த மெத்தனம் தமிழர்களை தமக்கு எதிராகத் திருப்பக்கூடும் என்ற அச்சத்தினாலா - என்று ஆராய்வது நியாயம் என்றாலும், இப்போது இது தேவையற்றது.
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி ஒரு மித்த கருத்துடன் முடிவு எடுத்து இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த போது, இதற்கு ஒத்துழைக்க மறுத்தார் செல்வி ஜெயலலிதா.
மனிதச் சங்கிலி, பிரதமர் சந்திப்பு, டெல்லிக்குத் தூதுக்குழு முதல்வர் தலைமையில் சென்ற போது வரவில்லை; நாடா ளுமன்ற உறுப்பினர் - தமிழ்நாட்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பிரதமரைச் சந்தித்தபோதும் அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கினார்கள். அது மட்டுமா? 18.1.2009 அன்று வெளிவந்த அ.இ.அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான - நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் கருணா நிதி - திருமாவளவன் பேசி வைத்து நாடகம் ஆடுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இலங்கை இராணு வத்திடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அப்பாவி மக்களை விடு தலைப்புலிகள் கேடயமாக்கிக் கொல்கிறார்கள் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதியும், திருமாவளவனும் பேசி வைத்து நாடகம் நடத்துகிறார்கள் என்றும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அவர்கள் கூறியுள்ளார்கள். பக்கம் 8, 18.1.2009.
அத்துடன் அந்த பேட்டியில் ஒரு கேள்வி - பதில் இதோ:-
கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப் படுகிறார்களே?
புரட்சித்தலைவி: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியாகச் சொல்லப்படுகிறது.
இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இன்று, இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல விடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் மனது வைத்தால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடங் களுக்குச் செல்ல அனுமதித்தால், இந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் சாகவேண்டிய அவசியமே இல்லை!
("நமது எம்.ஜி.ஆர்.", 18.1.2009).
- சிங்கள இராணுவத்தினர்கூட இவ்வளவு அருமையாக, அவர்களது மக்கள் கொல்லப்படுவது சகஜம் எந்தப் போரிலும் என்ற தத்துவார்த்தப் பேச்சு - விளக்கம் கூறியதில்லை.
அதுமட்டுமா?
இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப்புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம்.
போரை நிறுத்தவேண்டும் - அதன்மூலம் கருணாநிதி, விடுதலைப்புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டார்!
முதல்வரும், அவருடன் இணைந்து மற்ற தோழமை யினரும் குரல் கொடுக்க முற்பட்டபோது, அம்மை யாரின் அருள்வாக்கு கண்டுபிடிப்பு இது!
ஆங்கிலத்திலே “Better late than never” என்று ஒரு பழமொழி உண்டு.
காலந்தாழ்ந்தாகிலும் ஏதோ நடந்துவிட்டதே, அதுவரை சரிதான் என்பதே அதன் மய்யக்கருத்து!
நமது முதலமைச்சரும் வரவேற்றுள்ளார். அவருக்குள்ள பொதுக்கவலையை அது தெளிவாய்க் காட்டுகிறது!
இப்போதல்ல, அனைத்துக்கட்சிக் கூட்டம் - சில மாதங்களுக்குமுன் அவர்கள் தலைமைச் செயலகத்தில் அரசு சார்பாக - கூட்டப்பட்டபோது, அதில் கலந்துகொண்ட திரு. ராஜேந்தர் (இலட்சிய தி.மு.க. தலைவர்) கடுமையாக, கலந்துகொள்ள மறுத்தவர்களைப்பற்றிப் பேச முற்பட்டபோது, முதலமைச்சர் குறுக்கிட்டு, அவர்கள்பற்றி கடுமையாக ஏதும் கூறவேண்டாம்; அவர்கள் என்மீதுள்ள கோபத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கக்கூடும்; அவர்களும் இந்நிலைக்கு மாறுபட்டவர்களாக இருப்பார்கள் என்று நான் எண்ணவில்லை என்றார்!
சில கட்சித் தலைவர்கள் தனி ஒரு அமைப்பை ஈழத் தமிழர் பாதுகாப்புக்கென அமைத்ததுபற்றி செய்தியாளர்களிடம் வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு, இரண்டு பிரிவுகளாக நாங்கள் இருந்தாலும், கத்தரிக் கோலின் இரு பகுதிகள்போலச் செயல்படுவோம் என்று பெருந்தன்மை பொங்கக் குறிப்பிட்டார்களே!
பொதுத்தேர்தல் நெருங்கும்வேளையில் இப்படி மாற்றம் வந்தது என்றாலும்கூட, அது வரவேற்கத் தக்கது; இது நீடித்து நிலைக்கவும் வேண்டும் என்பதே நம் விருப்பமும் வேண்டுகோளும்!
அறிஞர் அண்ணா சொன்னதுபோல், நடந்தவைகள் நடந்தவைகளாகட்டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாகட்டும்!
ஈழத் தமிழரின் இன்னலுக்கு ஒரு நிரந்தரப் பரிகாரம் ஏற்பட்டு, அங்கே அமைதி திரும்பட்டும் என்பதே நமது உயிர் லட்சியம்!
--------------- "விடுதலை" -7.3.2009
0 comments:
Post a Comment