Search This Blog

24.3.09

கீதையில் சொன்னபடி தலையை நான் வெட்டுவேன் - நீதிமன்றத் தீர்ப்பும் - வருண்காந்தியும்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பீலிபட் தொகுதியில் மக்கள வைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட உள்ள வருண் காந்தி ஆற்றிய உரை (17.3.2009) பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்துத்துவாவை உயர்த்திப் பிடித்தும், முஸ்லிம் மக்களை அச்சுறுத்தியும், வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில் அவர் பேசியிருக்கிறார்.

இது எனது கை - காங்கிரசின் கை சின்னமான கையல்ல. இது தாமரையின் சக்தி. இது தலைகளைத் துண்டிக்கும் ஜெய் ஸ்ரீராம்! யாராவது இந்துக்களை நோக்கி விரலை நீட்டினால், யாராவது இந்துக்கள் பலவீனமானவர்கள் என்று நினைத்தால் கீதையில் சொன்னபடி அவர்கள் தலையை நான் வெட்டுவேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இன்னொரு இடத்தில் முசுலிம்களின் பெயரைக் குறிப்பிட்டும் - வன்முறையைத் தூண்டும் வகையிலும் வெறியூட்டும் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.


அந்த உரையைப் பதிவு செய்து குறுந்தகடை (சி.டி.) இணைத்து தேர்தல் ஆணையத்திற்குக் காங்கிரஸ் சார்பில் புகார் செய்யப்பட்டது.

சி.டி.யில் அடங்கியுள்ள பேச்சைக் கேட்டு, அதன் அடிப்படையில், வருண்காந்தியை வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று பா.ஜ.க.வுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

ஆனால், பாரதீய ஜனதா தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டனர். பீலிபட் தொகுதியில் வருண்காந்திதான் பா.ஜ.க.வின் வேட்பாளர்; மாற்று வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பதில் கூறியிருக்கின்றனர் (பா.ஜ.க.வின் கொள்கையே வன்முறைத் தூண்டுதல்தானே - அவர்கள் வேறு எப்படிதான் நடந்துகொள்வார்கள்?).

தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்ததோடு, தேர்தல் ஆணையர் சாவ்லாவின் செயல்பாட்டுக்கு உள்நோக்கமும் கற்பித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் நல்லுரையைச் செவிமடுத்து வருண் காந்தியைத் தேர்தலில் நிற்கச் செய்யாமல், வீண் பிடிவாதம் காட்டி அவரை நிறுத்தினால், ஒருக்கால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், அவர் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்பதுதான் உண்மை.

இதற்குப் போதிய முன் மாதிரிகளும் இருக்கின்றன. மகாராட்டிர மாநிலம் - தானே மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராம்கப்சே என்பவர் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார்.

1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் விசுவ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில், சங் பரிவாரின் தீப்பொறிப் பறக்கும் பேச்சாளர் என்று தூக்கி நிறுத்தப்படும் சத்விரித் தாம்பரா என்ற அம்மையாரும், பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமோத் மகாஜனும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்துப் பேசினர். அதுவும் தேர்தல் தொடக்கப் பிரச்சாரக் கூட்டம்தான்.

அந்தக் கூட்டத்தில் இந்த இருவரும் மதவாதத்தை முன்னிறுத்தித் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். அந்த மேடையில் பா.ஜ.க. வேட்பாளரும் வீற்றிருந்தார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 123 (3)-க்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது என்று கூறி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அகர்வால் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டதாவது:

பா.ஜ.க.வைச் சார்ந்த மகாஜன் என்பவரும், வேட்பாளர் ராம் கப்சேயும் இந்துக்களுக்கு முஸ்லிம் பகைவர்கள் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். இந்துக்களும், முஸ்லிம்களும் நண்பர்களாக வாழும் நிலையில், இரு சமூகத்தினருக்கிடையே பகைமையை உருவாக்குவாதகும். சத்பிரிதாம்பிராவும், மகாஜனும் கூட்டு சேர்ந்துகொண்டு மதவெறியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அதற்கு வேட்பாளரும் துணை போயிருக்கிறார் என்று கூறி, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வருண்காந்தியின் உரையும் இந்த அடிப்படையில் பார்க்கத் தகுந்ததாகும். எனவே, அவர் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் அந்தத் தேர்தல் செல்லத்தக்கதல்ல என்று நீதிமன்றம் கூறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில், பாரதீய ஜனதா என்பதே மத அடிப்படை வாதத்தை உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு அமைப்பாகும். அத்தகைய ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதே கூட அடிப்படையில் தவறானதும் - சட்ட விரோதமும் ஆகும் என்ற வகையில் - ஏன் சிந்திக்கப்படக்கூடாது?

------------------ நன்றி:"விடுதலை" தலையங்கம் 24-3-2009

0 comments: