Search This Blog

15.3.09

திராவிடர் என்பவர் தமிழரே


தோழர்களே! நான் "தமிழர்கள்" என்பது பற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியேயாகும். திராவிடம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான்! இது சரித்திர ஆராய்ச்சிக்காரர் முடிவாகும். திராவிடம் என்கின்ற பேச்சே தமிழ் வார்த்தையாகும். எப்படி எனில், திரு இடம் என்பது தான் திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக ஒவ்வொன்றுக்கும் உபயோகிப்பது வழக்கம்.


வடவர்கள் எப்படி ஸ்ரீ என்பதை ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் உபயோகிக்கிறார்களோ அதுபோல் தென்னவர்கள் திரு என்பதை உபயோகிக்கிறார்கள். திருப்பதியை திருமலை என்கிறோம். ஆருரை திருவாரூர் என்கிறோம்; ஐயாறை திருவையாறு என்கிறோம். அது போல் தமிழர் வாழ் இடம் முழுமையும் திரு இடம் - திருவிடம் என்கிறோம். இது வடமொழி உச்சரிப்பால் திராவிடமாகி விட்டது. தமிழ் என்றால் இனிமை. இனிமைக்கு மேன்மை தருவது இயற்கையல்லவா! ஆதலால் நான் யோசித்தவரை இதைத் தவிர திராவிடம் என்கின்ற வார்த்தைக்குக் காரணம் எனக்குத் தோன்றவில்லை.


நமது பண்டிதர்கள் பலர் தமிழ் என்பது த்ரமிளமாகி, திரமிழமாகி, திராவிடமாகி விட்டது என்று சொல்லுவதுண்டு. ஆனால், ஒரு வார்த்தையானது 4, 5- தடவை மாறி இருக்கும் என்பதை விட, நான் சொல்லுகிறபடி ஒரே மாற்றம் தான் ஆகியிருக்கலாம் என்பது மிகப் பொருத்தமாக இல்லையா? அது எப்படி இருந்தாலும் சரி; திராவிட நாடு, திராவிட மொழி, திராவிட மக்கள் என்பவற்றை தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் மக்கள் என்ற கருத்தில் தான் வழங்குகிறார்கள். ஆதலால், திராவிடர் என்பவர் தமிழரே ஆவார்கள். அதனாலேயே திராவிடர்கள் என்று பேசுகிறேன்.



---------------------11-01-1942 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்த பிரசங்கத்தின் சாராம்சத்திலிருந்து ஒரு பகுதி. -நூல்:-"தமிழர் தமிழ்நாடு தமிழர்பண்பாடு" பக்கம் 4-5

2 comments:

Unknown said...

தமிழர்களை திராவிடர் என்று ஏன் விளிக்கிறார்கள் என்ற சந்தேகம் நீண்ட நாளாக இருந்தது. இதைப்படித்தவுடன் அது நீங்கிவிட்டது.

தமிழ் ஓவியா said...

tamil

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி