Search This Blog
12.3.09
தாய்மையின் சின்னம் பெரியார்
“என்றென்றும் நினைவில் இருக்கக்கூடிய இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சியான தந்தை பெரியார் படத் திறப்பு விழாவில் என்னை பங்கேற்றிடச் செய்த திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் படம் இந்த மாமன்றத்தின் அரங்கத்திலே காலமெல்லாம் நிலைத்திருக்கப் போகிறது. தந்தை பெரியார் அவர்களின் படத்தின்மூலம், இந்த அரங்கம் தனது அழகுக்கு மேலும் அணிசேர்த்துக் கொள்கிறது.
இந்த அரங்கத்திலே பலருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பினைப்போல், என்னுடைய இளமைப் பருவத்தில் தந்தை பெரியாரோடு தொடர்பு கொண்டிருந்தேன் என்ற பெருமையும், உரிமையும் எனக்கும் உண்டு. அவர் ஒரு மேதை என்ற உணர்வு தான் என்னுடைய உள்ளத்தில் எப்போதும் இருந்து வந்தது. என்னுடைய அருமை நண்பர் கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் உணர்ச்சி பூர்வமாக்க் குறிப்பிட்டதை விட என்னால் அழகாகச் சொல்லிவிட முடியாது.
அவர்சொன்னார்:
“அகன்ற நெற்றி, வெள்ளிக்கம்பியொத்த தலைமுடி, மயிரடர்ந்த எடுப்பான புருவங்கள், நீண்டு வளைந்த அகன்ற மூக்கு, கூர்ந்த அறிவும், ஆளுமையும் கொண்ட பார்வை - அவர்தாம் பெரியார்”
ஒரு வழக்கறிஞர் என்ற முறையில், நான் அவரிடம் அவர் வழக்குக்காக்க் கட்டணம் பெற்றிருக்கிறேன். எளிமை வாழ்க்கைதான் அவர் எப்போதும் வாழ்ந்தது. ஆடம்பர வாழ்க்கையை அவர் வெறுத்து ஒதுக்கினார். தன்னுடைய லட்சியத்திற்காக வாழ்ந்தார். அவர் உயர்ந்த குணத்தின் சின்னமாவார்.
கனி தரும் மரம்!
அவரைப் புரிந்துகொள்வது மிக எளிது. ஆனால், அவரைப் பின்பற்றுவது கடினமானது என்பது எனக்குத் தெரியும். அவரைக் காலமெல்லாம் கனிகளைப் பூத்துக் குலுங்கும் மரத்திற்கு ஒப்பிடலாம். அந்தக் கனிகள் ஒரு சாராருக்கு மிகவும் சுவையானதாக இருக்கும்; முழு திருப்தியை அளிக்கும். மற்றொரு பிரிவினருக்கு அதிருப்தியை அளிக்கும். சுவைகள் மாறுபட்டிருப்பதே இதற்குக்காரணம். தன்னுடைய கொள்கைகளுக்ககுத் தானே உதாரணமாக இருந்த வாழ்ந்து காட்டினார். தன்னுடைய கொள்கைகளை அணுப்பிறழாது பின்பற்றிட வேண்டும் என்று தனது சக்திவாய்ந்த தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த அடிப்படையில், பெரியார் ஒரு சுதந்திர உணர்ச்சிக்காரராக விளங்கினர். மதபோதனைகள் அவரைத் திருப்திப்படுத்தவில்லை. மூட நம்பிக்கைகளும், பழமைச் சம்பிரதாயக்கோட்பாடுகளும் அவரை ஈர்க்கவில்லை. செயல்பாட்டில் அவர் நம்பிக்கை வைத்தார். காலமெல்லாம் உழைத்தார்.
தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை எவ்விதத்தயக்கமும் இல்லாமல் உச்சியின்மீது நின்று பேசுவார் இருந்து கொண்டிருக்கும் சில பழமைகளைத் துணிவோடு எவ்விதச் சுய நலமுமின்றி அவர் எடுத்துச் சொன்னது, பல கருத்து விமர்சனங்களை உருவாக்கியது. ஆனால் இப்படிப்பட்ட விமர்சனம், விவாதங்கள் மூலமாகத்தான், தன்னுடைய கொள்கைகளை, தன்னுடைய மக்கள் சமுதாயம் புரிந்துகொள்ளமுடியும் என்பது அவருக்குத்தெரியும். அவர் அப்பழுக்கற்ற ஒரு பகுத்தறிவுவாதி!
அவர் ஒருமனிதாபிமானி!
ஒரு பகுத்தறிவுவாதியாக இருப்பதால் இந்தக் கருத்துக்கு மாறானவர்களுக்கு அவர் மரியாதை தரமாட்டார் என்று அவசரப்பட்டு நினைத்து விடலாம். அவர் எவ்வளவு பொறுமையாக எதையும்சகித்துக் கொள்வார் என்பது அவரை, நெருக்கமாகத் தெரிந்தவர்களுக்குத்தான் புரியும். எனவேதான், அத்தகைய காலத்தை வென்ற ஒரு தலைவருக்கு நான் நூற்றாண்டு விழா எடுப்பதை அவசியமாக்கிக் கொண்டிருக்கிறோம். அவர் முரட்டுத்தனக்காரரைப் போலத் தன்னைத்காட்டிக் கொண்டார். ஆனால் அவர் ஒரு மனிதாபிமானி! எந்தத் தனிப்பட்டவர் மீதும், தனிப்பட்ட முறையில் அவருக்கு வெறுப்புக் கிடையாது. வன்முறையை அவர் ஆதரித்தது இல்லை. மனிதனின் சுய மரியாதையை அவர் ஆதரித்தது இல்லை. மனிதனின் சுயமரியாதையை அவர் வலியுறுத்தினார். எல்லோரும் இந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னைத் தவறான பார்வையால் எதிர்ப்பவர்களிடம் அவர் விரோதம் பாராட்டியதில்லை. தன்னுடைய செயல், பேச்சு உணர்வோடு, சிந்திக்க செய்வது அவரதுபோக்கு.
இயற்கையில் உற்பத்தியான மனிதன் நேர்மையாகவும் எளிமையாகவும் உண்மையாகவும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விஞ்ஞானப் பூர்வமான தத்துவத்தைத்தான், தனதுத முதன்மைச் சீடரான அறிஞர் அண்ணாவிடம் புகுத்தினார். அதையேதான் அண்ணா, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்று தனது தொண்டர்களிடையே வலியுறுத்தினார்.
பெரியார் தொடர்பு கொண்டிருந்த நீதிக்கட்சியும் அதற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இயக்கமும் பழைமைகளையும் மூட சம்பிரதாயங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கான அடிப்படைகளை உருவாக்கின. பிரபஞ்சத்தில் உருவான ஒவ்வொன்றும் பல்வேறு நிலைகளில் மாறுபட்டத் தன்மை உடையவைகளாக இருந்தாலும் பிரதான சகவாழ்வுக்குச் சாதிகள் ஒழிந்த சமுதாய அமைப்பை அவர் வழியுறுத்தினார். தந்தை பெரியார் அவர்களைப்போல தனித்தன்மை படைத்த தலைவர்கள் சிலருக்கு முரண்பாடுகளாகத் தோன்றலாம்; சிலருக்குக்கோபமாகத் தோன்றலாம்; சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கலாம். ஆனால், இவரது 95 ஆண்டுகால ஒளி பொருந்திய வாழ்க்கை காலத்தால் அழிக்கமுடியாத வரலாறாகும்.
தமிழக வரலாற்றில் ஓர் தனியிடம்!
குறிப்பாக, தமிழகத்தினுடைய பொன்னான வரலாற்று ஏடுகளில், வாழ்க்கைக்கு வேண்டிய புரட்சிகர சிந்தனைகளைத் தந்தை பெரியாரின் வரலாறுகள் வேண்டிய புரட்சிகர சிந்தனைகளைத் தந்தை பெரியாரின் வரலாறுகள் என்றென்றும் மின்னிக் கொண்டிருக்கிற ஏடுகளாக இருந்துகொண்டிருக்கும். பெரியார் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது உண்மையிலேயே நமக்குக் கிடைத்த பெரும் சிறப்பு. அவருடைய கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக, அவரைப் புறக்கணிக நினைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.
அவருடைய கருத்துக்களை எங்கெங்கெல்லாம், எப்படி எல்லாம் நம்மால்முடியுமோ, அந்த வகையில் பரப்புவது நமது நோக்கமாக இருக்கவேண்டும்.
ராஜாராம் மோகன்ராய் உயிரோடு வாழ்ந்த காலத்தில் எல்லோரும் தாக்கினார்கள். ஆனால், அவர் புகழ் இன்றைக்கு நிலைத்திருக்கிறது. வீரேசலிங்கத்தை வெறுத்தார்கள். ஆனால் இன்று அவர்மரியாதைக்குரியவராகிறார். அதுபோல்தான் புரட்சி சிந்தனையாளர் பெரியாரும்! அவர் தியாகப் புகழ்பெற்றுவிட்டார். மத மூடநம்பிக்கைகளை எதிர்த்து அவர் நடத்திய கிளர்ச்சியையும், வைக்கத்தில் அவர் நடத்திய போராட்டத்தையும், எதிர்கால தலைமுறை சொல்லிக்கொண்டிருக்கும். எதற்கும் அஞ்சாத துணிவு அவருடைய தனித்தன்மை. அந்தத் துணிவில், சாதி அமைப்பு முறையைத் தகர்த்து எறிவதற்கான நியாயங்கள் இருந்தன. பெரியாரின் மிகப்பெரிய சாதனைகளில், சாதி ஒழிப்பு மிக முக்கியமானது.
சமூகம், சாதி, மதம் காரணமாக சமுதாயத்தின்மீது படிந்திருந்த நோயை ஒழிப்பதில் அவர் மிகச் சிறந்த மருத்துவ நிபுணராகப் பணியாற்றினார்.
அவரது ‘குடி அரசு’ பத்திரிகை சமத்துவத்தை வலியுறுத்தியது. அதேபோல்தான், என்னுடைய மரியாதைக்குரிய இளம் நண்பர் திரு. வீரமணி அவர்கள் இப்போது பொறுப்பேற்று நடத்திவரும் “விடுதலை” பத்திரிகையும் சமத்துவத்தின் அடிப்படையில் உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டிவருகின்றது.
மனிதனுக்குச் சுயமரியாதை வேண்டும்; சுயமரியாதை பெருவதற்கான அடிப்படை உரிமைகள் வேண்டும்; நாட்டின் வளர்ச்சி இதைப் பொறுத்துத்தான் இருக்கிறது என்பதை, வெள்ளைக் கார்ர்கள் ஆட்சிக்காலத்திலேயே பெரியார் சுட்டிக் காட்டினார். ஊமைகளாகிக்கிடந்த கோடிக்கணக்கான மக்களிடம் சுயமரியாதை இயக்கம் இதைத்தான் எடுத்துக்கூறியது.
சுயமரியாதைத் தத்துவம்!
சுயமரியாதை என்பது சமூகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சிலரின் ஏகபோகங்கள் அல்ல என்றது சுயமரியாதை இயக்கம். “எல்லோரும் நமக்காக; நாம் எல்லோருக்குமாக” என்ற அடிப்படையில் தந்தை பெரியார் தத்துவத்தை உருவாக்கினார்.
தந்தை பெரியாருடைய மிக நெருக்கமான நண்பர் ஜி.டி. நாயுடு. தீர்க்கமான முடிவுகளிலிருந்து வெளிப்படும் துணிவான முடிவுகளில் அவர்கள் இருவருமே நம்பிக்கை வைத்திருந்தனர். தாம் எதைச் சொல்கிறோமோ அதில் உண்மையான நம்பிக்கை கொண்டவர் பெரியார். தன்னுடைய சிந்தனைகள் மூலம் ஏராளமானவர்களை மாற்றிய சீர்திருத்தவாதி!
1967- ஆம் ஆண்டு சென்னைச் சட்டம் 21-வது பிரிவின்படி 1955 - ஆம் ஆண்டு இந்துத் திருமணச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சுயமரியாதை திருமணத்துக்கு அங்கீகாரம் தரப்பட்டது. தந்தைப் பெரியார் அவர்களின் தொண்டினால் மட்டுமே இந்த நிலை உருவானது! இந்தத் திருமண முறை என்ன கூறுகிறது? திருமணமாகும் தம்பதிகளுக்குத் தெரிந்த எந்த மொழியிலும் உறுதி எடுத்துக்கொள்ளலாம். இன்னாரைக் கணவனாக, மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று அறிவித்து, மாலையோ, மோதிரமோ திருமணத்தின் அடையாளமாக அணிவித்தால் போதும்; அல்லது தாலி அணிவிக்கலாம்; வேறு எந்தச் சடங்குதேவை இல்லை. இவைகளில் ஏதாவது ஒருமுறையைப்பின்பற்றினாலே திருமணம் சட்டப்படிச் செல்லும். நமது மாநிலச் சட்டமன்றம் இந்தச் சுயமரியாதைத் திருமண்ச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. சம்பிரதாயச் சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவைகளை இத்திருமண முறை ஒழித்துக்கொட்டுகிறது. இதன் முழுப் பெருமைக்கும் உரியவர் தந்தைப் பெரியார்.
இப்படிப் பல்வேறு தொண்டுகளில் பெரியார் முதலிடம் பெறுகிறார். சுயமரியாதைத் திருமணமானாலும் சரி, தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைக்குப் போராடியதிலும் சரி, படிப்பறிவின்மையை ஒழிப்பதிலும் சரி, அவர் கடைப்பிடித்த முறைகள் எலாம் அன்பு, அறிவுவழி அடிப்பட்டையிலேதான்! இதன் மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு ஈடு இணையற்ற தொண்டர் என்பதை நிரூபித்துவிட்டார்.
எளிய பேச்சில் ஏற்றமிகு கருத்து!
மனித சக்திக்குத்தான் அவர் எல்லாவற்றையும்விட உயர்ந்த இடம் கொடுத்தார். மனித சக்திக்கு அப்பாற்பட்ட, யாருக்கும் தெரியாத சக்திகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவருடைய உரைகளில் வார்த்தை ஜாலங்கள் இருக்காது; எளிமை இருக்கும். மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிற கடுமை இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பே, குடிசைகள் ஒழிப்பு, மதுவிலக்கு ஒழிப்பு ஆகியவைகளைப் பற்றிச் சிந்தித்தார் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடர வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டுப் பெண்கள் அவருக்கு ‘தந்தை’ என்று கொடுத்த பட்டத்திற்குக் காரணம் என்ன? தன்னைப் பார்க்க வருபவர்கள், பெரியவராக இருந்தாலும், சிறியவராக இருந்தாலும் அவர் காட்டிய தாய்மைப் பரிவுதான்; அவருடைய சிறப்புக்களிலே இது தலையாய சிறப்பு.
அவரது கடவுள் மறுப்பு, மனிதாபிமானத் த்த்துவத்தின் அடிப்படையில் எழுந்ததாகும். கற்பனைகளைவிட, உண்மைகள் உயர்வானவை என்பதைத் தனது செயல்மூலம் நிரூபித்துக் காட்டினார்.
ஒரு சாதாரண தமிழ்நாட்டுக் குடிமகனாக இருந்து, எதிர்காலம் பற்றி அவர்த்த கணிப்புகள், எச்.ஜி வெல்ஸ் தந்த கணிப்புகளோடு ஒப்பிடக் கூடியவைகளாகும். முழுமையான பள்ளிப்படிப்பு இல்லாமை அவருக்குத் தடையாக இருந்ததில்லை. ஒரு ஆதரவாளர் கூறியதுபோல - “தன்னுடைய அறிவார்ந்த த்த்துவப்பாசறைக்கான கருவிகளை அவர் எங்கிருந்து சேகரித்தார் என்பதைக் கண்டு வியக்க வேண்டியிருக்கிறது” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது”
---------------18-11-1978 அன்று திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தில், தந்தை பெரியார் படத்தைத் திறந்துத வைத்து நீதிபதி ராம்பிரசாத்ராவ் அவர்கள் ஆற்றிய உரை -நூல்:-"நீதிபதிகள் கண்ணோட்டத்தில் பெரியார்" -பக்கம்:-5-11
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/
Post a Comment