Search This Blog

3.3.09

பிள்ளை பெறுவது மனுசன் செயல்னு நிருபிக்கிறார்!




பழைய மதுரை மாவட்டத் திராவிடர் கழகத்தின் செயலாளர் மறைந்த பெரியவர் திண்டுக்கல் P.K.P. பூமண்டலம். பெரிய வியாபாரக் குடும்பத்தில் பிறந்தும் பலமுறை தொழிலில் விழுந்து - அடிபட்டு - உயர்ந்தவர். பலசரக்கு வியாபாரி. சிறு குழந்தை போல் உள்ளம். அவருடைய பேரன் வயதே ஆன திண்டுக்கல் நகர தி.க. செலாளர்கள் கிருஷ்ணமூர்த்தியுடனும், மறைந்த மலர் மன்னனுடனும் நண்பர்கள் போல் சரிக்குச் சரி வாதாடுவார். அதுபார்க்க வேடிக்கையாக இருக்கும்; சாப்பாட்டுப் பிரியர் மற்றவர்களையும் சாப்பிட வைத்து உபசரிப்பதில் விருப்பமுடையவர்.

திண்டுக்கல்லில் அந்நாளில் நடைபெறும் தி.க. பொதுக்கூட்டங்கள் அனைத்தும் அவருடைய பாட்டுடன் தொடங்கிப் பாட்டுடன்தான் முடியும். எழுபது வயதிலும் ஒரு சிறு பிசிறில்லாமல் குரலை உயர்த்தி இனிமையாய்ப் பாடுவார். அண்ணாவைப் பற்றி “வங்கக் கடலோரம் எங்கள் தங்கம் உறங்குதம்மா” என்று பாடலை அவர் உருக்கமாய்ப்பாடும்போது கூட்டத்தினர் கலங்கி அழுதுவிடுவார்கள். சிலர் திரும்பவும் பாடச் சொல்லிக் கேட்பார்கள். பூமண்டலம் இல்லாத திண்டுக்கல்.. நிலவில்லாத வானம். திண்டுக்கல்லைச் சேர்ந்த பெரியவர் K.T.O.S. முத்துக் கருப்ப நாடார் இவருடைய மாமன். பெரிய உடம்பு அடிக்கடி “அய்யா நான் தி.க. அல்ல. பெரியார் தொண்டன்” என்று நினைவு படுத்தத் தவறமாட்டார். சாதாரண கடைப்பணியாளராக வேலையில் சேர்ந்து-உறவினராக முதலாளியின் நம்பிக்கையைப் பெற்று அவருடைய மகள் -ஆரியப்பூ.. அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டவர். இவருக்கு ஒரேமகள் பாரிமிட்டாய்க்கம்பெனியின் விற்பனை முகவரான இவர்கையில் எப்போதும் (தஞ்சை மாவட்டத்துக்கார்ர்கள் கையில் வெற்றிலை பாக்குப் பெட்டி வைத்திருப்பது போல்) கையடக்கமான சாக்லெட் பெட்டி வைத்திருப்பார்! பெரியாருக்கும் அவ்வப்போது தருவார்.

தந்தைப்பெரியாரின் வேனில் வழக்கமானவர்களைத் தவிர நான்,பூமண்டலம், முத்துக்கருப்பனார் மட்டுமே! பல விஷயங்களுக்குபிறகு முத்துக்கருப்பன் பெரியாரிடம் சொன்னார், “அய்யா! மாப்பிளை (பூமண்டலம்) எல்லா விஷயத்தில் உங்கள் வழியிலேதான் நடக்கிறான். அதிலே தப்பு சொல்லமுடியாது. இந்தப் புள்ளைகளைப் பெறுகிற விஷயத்திலே உங்க வார்த்தையைக் கேக்கிறானில்லே” என்று தொடங்கினார்.

பூமண்டலம் “மாமா.. மாமா அதை ஏன் இப்ப போயி… உடுங்க.. உடுங்க.. ” என்று பதறினார். முத்துக்கருப்பனார் விடவில்லை. மீண்டும் அதையே சொன்னார். பெரியார் காதை மடக்கிக்கொண்டு கேட்டார். இதே திண்டுக்கல்லில் வேறொரு கழக நண்பருக்கும் வேறோர் அனுபவம் ஏற்பட்டது மேடையில் தந்தை பெரியார் பேசத்தொடங்கு முன் குழந்தைகளைக் கொடுத்தால் இரண்டுரூபாய் அல்லது ஐந்துரூபாய் வாங்கிக்கொண்டு பெயர் வைப்பார். அன்று அப்படிக்கொண்டு வந்து கொடுத்த நண்பரின் குழந்தையை ஒரு சில நிமிடம் பார்த்துவிட்டு “சித்தார்த்தன் என்று பெயர் சூட்டுகிறேன்” என்றார் பெரியார்.

குழந்தையின் தந்தை பதற்றத்துடன் “அய்யா!.. அய்யா! இதற்கு முன்னர் பிறந்த என்பையனுக்கும் அதே பேர்தான் வச்சீங்க..இதறகும் அதேவா…” என்றார்.

“அப்படியா! என்ற பெரியார், அவரை உற்றுப்பார்த்தார். இஃது எத்தனாவது குழந்தை..” என்றார்.

தோழர் கூச்சத்தோடு நெளிந்துகொண்டே ‘இது நான்காவது’ என்றார். (குடும்பக்கட்டுப்பாடு என்ற கருத்துக்குத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கருத்தாவே பெரியார்தான். குடும்பக் கட்டுப்பாட்டை நாற்பத்து ஐந்து ஆண்டுகள் முன்னரே தொடங்கி இதை வலியுறுத்துபவர்) பெரியாருக்குக் கோபம் வந்துவிட்டது.

“போ..போ.. உனக்கெதுக்குக் கறுப்புச் சட்டை” என்று குழந்தையைத் திரும்பக் கொடுத்துவிட்டார். எல்லோரும் சமாதானம் செய்த பின்னர்ப் “பத்து ரூபாய் கொடு, உனக்கு இது அபராதம்” என்று சொல்லிப் பின்னர்க் காமராஜ் என்று பெயர் வைத்தார். இன்று தமிழ்நாட்டிலுள்ள பல காமராஜ்கள் பெரியாரால் பெயர் சூட்டப்பட்டவர்களே! அன்றைய பொதுக் கூட்டத்தின் தலைவர் பூமண்டலம்தான்! இன்று அவரே சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை! பூமண்டலத்திற்கு ஐந்து பிள்ளைகளுக்கு மேல்!

பெரியார் பூமண்டலத்தை உற்றுப் பார்த்தார். வண்டி வத்தலக்குண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பூமண்டலம் கடும் தாக்குதலை எதிர்பார்த்து “அய்யா.. அய்யா அது வந்து” என்று.. இழுத்தார்.

பெரியார் கோபிக்கவில்லை. அவருடைய தாக்குதல் வேறுமாதிரிக் கேலியாக இருந்தது.

“முத்துக்கருப்பன்..பூமண்டலம் நம்ப ஆளு இல்லியா… பக்தனெல்லாம் குழந்த கடவுள் செயல்ன்னு நம்பறாங்க இல்லியா.. அதெல்லாம் இல்லை… மனுசன் செயல்தான்னு பூமண்டலம் நிரூபிக்கிறார்” என்றார். எல்லோரும் சிரித்தார்கள். பூமண்டலம் தப்பிய மகிழ்ச்சியோடு பெரியாரின் அருகில் போய்ப் பெரிய உடம்பை வளைத்துக் கும்பிட்டு “அய்யா.. நீங்க சொல்லி நான் கேட்காத்து இது ஒன்றுதான்” என்றார்.

---------------நூல்:- "தந்தைபெரியார்,தலைவர் கலைஞருடன் கார்ப் பயணங்களில்" - பக்கம்:-81-84

2 comments:

Unknown said...

பெரியாரின் யதார்த்தமான சிந்தனைகளை இதன் மூலம் அறிய முடிகிறது. மிகச் சுவையாயன செய்திகள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு