பொதுவாக ஸ்தலஸ்தாபனங்களின் நிர்வாகத்தையும் பொறுப்பையும் உத்தேசிக்கையில் ஸ்தலஸ்தாபனங்களில் ஸ்தானம் பெறுவது தொண்டு செய்வதற்காகவா பதவியை அனுபவிப்பதற்காகவா என்பதை பெரும் பான்மையான ஓட்டர்கள் உணர்வதே இல்லை. நம்மைப் பொறுத்தவரையிலும் நாம் அதை ஒரு பதவியெனக் கருதுகிறோமேயன்றி அதை ஒரு பொது ஜன சேவையென நாம் கருதுவதேயில்லை. உதாரணமாக, எவ்வித பொது ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெற்றாலும் அங்கம் பெற்றவர் அதை ஒரு பதவியாகவே மதித்து அதைப்பிறருக்குக் காட்டிப் பெருமை அடைவதின் பொருட்டாக தம்முடைய பெயருக்குக் கீழ் அப்பதவியின் பெயரையும் அச்சடித்துக் கொள்கிறார். தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் அதை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார். அந்நியர் இவருடைய கவுரவங்களைப் பற்றிப் பேசும் பொழுதும் அதைசுட்டிக் காட்டுகின்றனர்.
அல்லாமலும் இந்தத் தேர்தல் ஸ்தானம் பெறுவதின் பொருட்டு ஆயிரம், பதினாயிரம், இருபதினாயிரம் செலவும் செய்கின்றனர் யாரைப்பிடித்தால் தாங்கள் தேர்தலில் வெற்றி பெறலாமெனக் கருதி லஞ்சம் கொடுத்து ஏஜண்டுகளையும் நியமிக்கிறார்கள் தேர்தல் காலங்களில் தங்களுக்கு எதிராக நிற்கும் அபேட்சகர்களை உண்மைக்குமாறாகவும் மனச் சாட்சிக்கு விரோதமாகவும் வேண்டுமென்றே தூஷிக்கின்றனர். தேர்தல்களில் ஸ்தானம் பெறுவதை ஒரு வெற்றி தோல்வியென மதிக்கின்றனர். தங்களால் செய்யக்கூடாத காரியங்களையெல்லாம் செய்வதாகப் பொய் பேசி ஜனங்களை ஏமாற்றுகின்றனர்.
ஓட்டர்களுக்கு நிலைமைக்குத் தகுந்த விதமாக லஞ்சம் கொடுக்கின்றனர். உண்மையில் பொது நன்மையின் பொருட்டு இவர்கள் தேர்தலுக்கு நிற்பார்களே ஆனால் இவ்வித அயோக்கியச் செயல்கள் புரிய அவர்களது மனம் ஒருப்படுமா? நூறுபேர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பின் அதில் ஒருவராவது உண்மையாளராயிருப்பாரென நம்ப இடமிருக்கின்றதா? பொது நன்மைக்குப் பாடுபடுபவர்களின் யோக்கியதை இப்படித்தானிருக்குமா?
உண்மையாக பொது ஜன சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையிருப்பின் தேர்தலில் போட்டிபோட்டு இழிவான செயல்கள் பல செய்தேதான் பொது மக்களுக்கு உழைக்க வேண்டுமா? வெளியிலிருந்து கொண்டு ஒரு நகர பரிபாலன சபையின் உள்ளிருந்து செய்யும் செயல்களைச் செய்ய முடியாதா? ஒரு நகரபரிபாலன சபையை எடுத்துக் கொண்டால் அதற்குப் பல அங்கத்தினர்களும் ஒரு தலைவரும் இருந்தால்தான் அது நடைபெறுமா?
இவர்கள் இல்லாவிடின் நகர பரிபாலன சபை நடை பெறாதா? நகர பரிபாலன சபை சட்டப்படி சிப்பந்திகளை நியமித்து விட்டு கையெழுத்துப் போடத் தெரிந்த ஒரு இயந்திர பொம்மையும் அது ஆட்டுகிறபடி தலை ஆட்டுவதற்குப் பத்துப் பூனைக்குட்டிகளையும் உட்கார வைத்து விட்டால் நகர பரிபாலன சபை இயந்திரம் ஓடுமா ஓடாதா?
நகர பரிபாலன சபையில் மனிதர்கள் சென்று உட்காருவதனாலும் அவர்களில் ஒருவருக்கொருவர் உள்ள துவேஷத்தாலும் சுய நலத்தாலும் கலகம் விளைகின்றதே அன்றி நகர பரிபாலன சபையின் நிர்வாகத்தில் கலகம் விளைவதற்குச் சிறிதும் இடமில்லை. தாலுகாபோர்டு, டிஸ்டிரிக்டுபோர்டு முனிசி பாலிட்டி, யூனியன் என்று சொல்லப்படுவது கிரமப்படி சர்க்காரார் செய்ய வேண்டிய வேலை அவர்கள் செய்வதாயிருப்பின் இவற்றிற்கென்று ஒரு தனி வரி வசூலிக்க வேண்டி வருமே என்றும் நிர்வாகத்தில் ஏதாவது குறை ஏற்பட்டால் ஜனங்களுக்கு நேராகத் தெரிந்து விடுமென்றும், சாதாரண ஜனங்கள் வெகு சுலபமாக சர்க்காரை குறை கூறி விடுவாரே என்றும் யோசித்து இவ்விதக்கஷ்டங்களினின்றும் தப்புவதற்காக தந்திரமாய் பொது ஜனங்கள் கையில் ஒப்பு வித்து விட்டார்கள். இதனால் சர்க்காருக்கு மற்றொரு லாபமும் ஏற்பட்டுப் போய்விட்டது.
அதாவது, எலெக்ஷன் என்றும் அதற்கு ஓட்டு என்றும் பல முறைகளை ஏற்படுத்தியதால் பட்டணங்களிலோ, கிராமங்களிலோ உள்ள செல்வாக்குள்ளவார்கள் ஒன்று சேராதபடி தேர்தல்களில் நின்று போட்டி போட்டு ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டு ஒற்றுமை இல்லாமல் ஊர் இரண்டு பட்டிருப்பதற்கு ஓர் அனுகூலமாகி விட்டது.
இவற்றைத் தவிர, இந்தத் தேர்தல்களினாலோ ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெறுவதினாலோ தேசத்திற்கு ஓர்வித நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகையினால் ஓட்டர்களாயிருப்பவர்கள் தாங்கள் ஓட்டுச் செய்யும் போது பொது நன்மை செய்வதற்குரியவர்கள் யார் என்று தேடிக்கொண்டு அர்த்தமில்லாது கஷ்டப்படுவதைவிட இந்தப் பதவியை வகிப்பதற்கு அந்தஸ்து உடையவர் எவர், அருகதை உடையவர் எவர், பாத்தியம் உடையவர் எவர் என்பதை யோசித்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வார்களே ஆனால், ஓட்டர்கள் தங்கள் கடமையைச் செய்தவர்களாவார்கள்.
-------------------------- "குடிஅரசு" தலையங்கம், 06.09.1925
0 comments:
Post a Comment