Search This Blog

4.10.09

தமிழர்களும், ராஜ்தாக்கரேபோல் ஆகவேண்டுமா?


பாம்பே!

பாலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர் கரன்ஜோகர் வேக் அப் சிட்டி என்ற திரைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மும்பை என்பதற்குப் பதிலாக பாம்பே என்ற வசனம் ஓரிடத்தில் வந்துவிட்டதாம்!

விடுவார்களா சிவசேனா வகையறாக்கள்? பழைய பால்தாக்கரேயின் மருமகனான ராஜ்தாக்கரே (அதிகாரக் குடும்பச் சண்டையில் தனிப் பிரிவை ஏற்படுத்திக் கொண்டவர்) நவநிர்மாண் சேனா என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார் அல்லவா _ அதன் சார்பில் அந்தத் திரைப்படம் ஓடும் அரங்குகளின் முன் ஆர்ப்பாட்டங்களை அரங்கேற்றினர். சில அரங்குகளில் படம் திரையிடப்படாமல் செய்யப்பட்டது.

விளைவு? படத்தின் இயக்குநர் கரன்ஜோகர் நேரே ராஜ்தாக்கரே வீட்டுக்குச் சென்று பாம்பே என்ற சொல் இடம் பெற்றதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்; இனி இத்தகைய தவறுகள் நடக்காது என்றும் உறுதிமொழி அளித்துள்ளார்.

இதேபோன்று தமிழ்நாட்டில் நடந்திருந்தால், சோ ராமசாமிகளும், தினமணி வைத்திநாதன்களும், ஹிந்து ராம்களும், ஊடகங்களும், பார்ப்பனப் பிரமுகர்களும் எப்படியெல்லாம் எழுதியிருப்பார்கள். கருத்துகளைத் தெரிவித்திருப்பார்கள்?

இது என்ன குறுகிய வாதம்! ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பெயர்களை மாற்றுவதா? என்றெல்லாம் பூணூல் தொடையை முறுக்கி அக்தர் பாட்சா கொழுக்கட்டை என்று எட்டு வீடு கட்டி சலாம் வரிசை ஆடமாட்டார்களா? அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள கேள்வி- பதில் பகுதி, ஆசிரியர்க்குக் கடிதம் பகுதியில் கூட இதனை வெளியிடவில்லையே!

இன்னொன்று, அண்ணா மறைவையொட்டி மவுண்ட் ரோடு அண்ணாசாலை என்றும் (1969), தந்தை பெரியார் மறைவையொட்டி (1973) பூந்தமல்லி நெடுஞ்சாலை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையென்றும், அதுபோலவே, கடற்கரை நெடுஞ்சாலை (1975) காமராசர் கடற்கரை சாலை என்றும், அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தும், விளம்பரப் பலகைகளில் பெயர்களைப் பொறித்திருந்தும்கூட, தமிழ்நாட்டு ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் இன்னும் மவுண்ட் ரோடு என்றும், பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றும், பீச் ரோடு என்றும் வெளியிடுகின்றனவே. இதற்காக திராவிடர் கழகம் போராட்டம் அறிவித்த நிலையில், சென்னைப் பெருநகரக் காவல்துறை மாற்றத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டும் (14.8.1996) பல ஆண்டுகள் ஓடிய நிலையில், இன்னும் விளம்பரப் பலகைகளில்கூட மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று பழைய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளனவே.

தமிழர்களும், ராஜ்தாக்கரேபோல் ஆகவேண்டாமா? அதுபோன்ற முறையில் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டுமா?

மயிலே, மயிலே என்றால் இறகு போடாது என்ற ஒரு பழமொழிகூட நாட்டில் உண்டு.

முதலமைச்சர் அவர்கள்கூட அண்மையில், அண்ணா மேம்பாலம் என்பதெல்லாம் வாயில் நுழையாது என்று மறைமுகமாக எச்சரித்துள்ளார். மாநகராட்சி கவனம் செலுத்துமாக!

----------------- மயிலாடன் அவர்கள் 3-10-2009 "விடுதலை" யில் எழுதியுள்ள கட்டுரை

2 comments:

Suresh Kumar said...

"தமிழர்களும், ராஜ்தாக்கரேபோல் ஆகவேண்டுமா?" ///////////

யாரு நீங்க பெரிய காமெடி

அசுரன் திராவிடன் said...

அரசியல் சட்டத்திலேயே திருத்தம் செய்ய காரணமாக இருந்தவர்கள் தந்தை பெரியாரும் அவரது தொண்டர்களும்..வரலாறை படித்து விட்டு வாரும் ஒய்..அரசியல் சட்ட திருத்தத்திற்கு காரணமாக அன்றைய பிரதமர் நேரு குறிபிடுவது தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளே என்று..