Search This Blog

18.10.09

பக்தியின் யோக்கியதை என்ன? சிந்திப்பீர் தமிழர்களே!

ஒரு கரண்டியில் இவ்வளவு நஞ்சு!

நீதிபதி தினகரனை உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கலாம் என ஆராய ஒரு குழுவை நியமித்திருப்பது ஏற்புடையதல்ல. நீதிபதி தினகரன் பேரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை யானவையா என்பதைக் காட்டிலும், அவர் குற்றச் சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறாரா என்பதே முக்கியம். கல்கி தலையங்கத்தில் இவ்வாறு எழுதுகிறது.

நமது விமர்சனம்:

இந்த ஞானோதயம் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால விஷயத்திலும், பொய் வயது புகழ் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இராமச்சந்திர அய்யர்வாள் விஷயத்திலும் ஏன் ஏற்பட வில்லையாம்?

தினகரன் சூத்திரன். மற்ற இருவரும் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணர்கள் என்பதுதானே காரணம்?

என் இலக்கு கடவுள்தான் என்ற தலைப்பில் ஒரு பேட்டி. பேட்டி கொடுத்துள்ளவர் ஓவியர் எஸ்.பூஷன்.

கேள்வி: நீங்கள் வரையும் ஓவியத்திற்கு ஆதார சக்தி எது?

ஓவியர் பூஷன்: என்னை வரைய வைப்பதே அந்த சக்திதான். ஓவியங்களை வரைவது நானில்லை. நான் வெறும் காரணி. இதை உணர்ந்து சொல்லுகிறேன்.

நமது விமர்சனம்:

அப்படி என்றால் மனித சக்தி என்பதற்கு என்னதான் அர்த்தம்?

திறமைக்கும், புகழுக்கும், சாதனைக்கும் காரணி கடவுள்தான் என்றால் இவற்றின் எதிர்மறையான செயல்களுக்கும் காரணி யார் என்ற கேள்வி எழவில்லையா?

இவர் ஓவியர். இப்படிச் சொல்லுகிறார்.


உலகப் புகழ் பெற்ற சிற்பி கணபதி ஸ்தபதி என்ன சொல்லுகிறார்?

ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்கிறார்கள் கடவுளை? அவர் எப்படி இருப்பார்ன்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அப்படி தத்ரூபமாக ஒரு கல்லில் அவரைக் கொண்டு வரமுடிகிறது? கோயிலுக்குள் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படுறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும்; அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்கமுடியும். அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்கதானே! எங்க கிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? (கல்கி 11-.6.-2006)

நமது விமர்சனம்:

கடவுள் சக்திதான் எங்களை வரைய வைக்கிறது என்கிறார் ஓவியர் எஸ்.பூஷன். கடவுளையே உருவாக்குபவர்கள் நாங்கள்தான் என்கிறார் கை தேர்ந்த சிற்பி. இரண்டுமே கல்கி ஏட்டில் வந்த பேட்டிதான். இதற்கு மேல் சிந்திக்க வேண்டியது வாசகர்கள்தான்

அசோகவனம் இன்று என்று ஒரு கட்டுரை. தேவமணி ரஃபேல் என்பவர் எழுதியுள்ளார். அவரின் இலங்கைப் பயணத்தில் சில காட்சிகள்.

மழை ஓய்ந்துவிட்டது. கோயிலை விட்டு வெளியேவந்து காரில் ஏறும்போது, தமிழ் பேசும் பள்ளி மாணவர்கள் சிலர் பாதையில் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் டேய்! குடல் போகுது, மிதித்துவிடாதே! என்று மற்றவர்களை எச்சரிப்பது கேட்டது. அது என்ன குடல்? நாமும் அருகில் சென்று குனிந்து பார்த்தோம். ஒரு அடி நீளத்தில் ராட்சச மண் புழுக்கள் பாதையில் ஊர்ந்து கொண்டிருந்தன. அந்தப் பையன்களிடம் கேட்டோம். இவற்றை ஏன் குடல் என்கி-றீர்கள்? என்று.

இது இராவணின் குடல்; சேர், மழை பெய்துவிட்டால் வெளியே வந்துவிடும் என்றார்கள். பெயர் என்ன? எனக் கேட்டோம். கல்யாண ராமன் என்றான் பையன்.

நுவரெலியாவில் நாம் பயணித்தபோது, நெடுஞ்சாலைகளைப் புதுப்பித்து வெட்டப்பட்ட மண்சரிவுகளில் ஒரு கரிய மண் அடுக்கு ஊர் முழுவதுமே இருந்தது. சில இடங்களில் மேற்பரப்பிலேயே காண முடிந்தது. இராவணன் அனுமன் வாலில் தீ வைத்ததால், அதைக் கொண்டு ஆஞ்சநேயர் ஊரையே எரித்தார் அல்லவா? அதனால் ஏற்பட்ட கரிதான் இந்தக் கரிய மண் என்கிறார்கள்.

நமது விமர்சனம்:

இராமாயணம் நடந்த கதையல்ல. ஆரிய திராவிடப் போராட்டத்தைச் சித்திரிக்கும் கதை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கற்பனைக் கதையை நிலை நாட்ட, ஆரியர்கள் தங்கள் மேலாண்மையை நிலைநாட்ட எப்படி எப்படியெல்லாம் கதை கட்டி விட்டுள்ளனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

கரிசல் மண் இலங்கையில் மட்டும்தான் உள்ளதா? உலக நாடுகளில் இல்லையா? அங்கெல்லாம் அனுமான் சென்று ஊரை எரித்தானா?

இராமாயணம் என்ற கற்பனைக் கதையை மக்கள் நெஞ்சில் என்றென்றும் பதியும்படிச் செய்ய என்னென்ன தந்திரங்களை யெல்லாம் உருவாக்கி யுள்ளார்கள்.

மயிலாடுதுறை பக்கத்தில் சீதை வாய்க்கால் என்று பெயர். அதற்கு என்ன காரணம் சொல்லுகிறார்கள் தெரியுமா? அது வழியாகத்தான் சீதை நடந்து சென்றாள் என்பார்கள். பக்கத்தில் மறையூர். இந்த ஊரில் இருந்துதான் ராமன் மறைந்து இருந்து வாலியைக் கொன்றான் என்பார்கள்.

இன்னொரு ஊர் பக்கத்தில். அதன் பெயர் கொல்லுமாங்குடி. இங்குதான் மான் உருவில் இருந்த மாரீசனை இராமன் அம்பு எறிந்து கொன்றான் என்பார்கள். இப்படி ஒவ்வொரு ஊரிலும் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதைகள்.

பார்ப்பனர்களின் பிரச்சாரத் தந்திரம் என்பதற்கு முன் கொயபல்சுகள் பிச்சை வாங்கவேண்டும். தமிழ்நாட்டில் தமிழர் நடத்தும் தொலைக் காட்சியிலேயே இராமாயணத் தொடர் வந்து விட வில்லையா?


பத்துடையீர், ஈசன் பழவடியீர்

பாங்குடையீர்! -

இது திருவெம்பாவைப் பாடல். இதில் பத்து என்றால் பக்தி என்று பொருள். இந்தப் பக்தி யிருந்தா, பத்து உங்களுக்குக் கிடைக்கும். அந்தப் பத்து என்ன?

(1) தத்துவரூபம் (2) தத்துவ தரிசனம் (3) தத்துவசுத்தி (4) ஆன்மரூபம் (5) ஆன்மதரிசனம் (6) ஆன்மசுத்தி (7) சிவரூபம் (8) சிவதரிசனம் (9) சிவயோகம் (10) சிவபோகம்.

நமது விமர்சனம்:

இந்த பத்து கிடைப்பதால் என்ன பயன்? பாரத நாடு தான் பக்திக்குப் பெயர்போன நாடாயிற்றே. இந்தப் பத்தும் கிடைத்துவிட்டதாகவே வைத்துக் கொள்வோம். அதனால் விளைந்த பயன் என்ன?

100 க்கு 77 பேருக்கு நாள் வருவாய் ரூபாய் இருபதாம். இதை வைத்துக் கொண்டு நாக்கை வழித்துக் கொள்ளலாம் -அவ்வளவுதான்! உலக அரங்கில் பொருளாதாரத்தில், வாழ்க்கைத் தரத்தில் 136 ஆவது இடத்தில் இருக்கிறதே - இந்தப் பத்தும் பத்து வழிக்கக்கூடப் பயன்படாதே!

இந்தப் பக்தி, சிவனைச் சுற்றியே வருகிறதே. கிறித்துவனின் நிலை என்ன? முசுலிமின் நிலை என்ன? இந்தப் பத்து (பக்தி), இல்லாமல் பகுத்தறிவுவாதியின் வாழ்க்கைத் தரம் என்ன தாழ்ந்து விட்டது.

பக்தியின் சின்னமான ஜெயேந்திர சரஸ்வதியைப் பார்த்த பிறகுமா பக்திப் பிலாக்கணம்?

நான் சந்நியாசம் கொண்டேன் என்று யார் சொன்னது? அதெல்லாம் ஒன்றும் கிடையாது என்று நீதிமன்றத்திலேயே சொல்லி தம்பிக்குப் பக்தியினால் திரட்டிய சொத்தை எழுதி வைத்த ரமண ரிஷியைப் பார்த்த பிறகாவது பக்தியின் யோக்கியதை என்ன என்று எடை போடவேண்டாமா?

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனனுக்கு மோட்சம் கொடுத்தானே சிவன் மாபாதகம் தீர்த்த படலம் - திருவிளையாடல் புராணம் - அந்த சிவரூபம், சிவதரிசனம், சிவபோகம் கிடைத்து என்ன பயன்?

உண்மையான பக்திக்கு அடையாளம் தாயைப் புணர்வதுதானா? தந்தையைக் கொல்வதுதானா? குன்றில் உறையும் சிங்கப் பிரான் - கன்னத்தில் காயமும், கால் மாற்றி ஆடிய பெருமானும் அலங்காரமே ஆத்ம திருப்தி என்று இன்னும் பல உண்டு. தீராத விளையாட்டு விட் டலன் சந்ததியாளர்களும் உண்டு. இவை அத்தனைச் சமயச் சாரங்களும், வெளி வந்தது கல்கி ஏட்டில்தான். - அதுவும் ஒரே ஒரு இதழிலேயே (4.-10.-2009) இவ்வளவு நச்சுக் குப்பிகள்.

ஒரு கரண்டி நஞ்சினால் ஓராயிரம் உயிர்களைக் கொல்ல முடியாதா? ஒரே ஒரு இதழில் இத்தனைப் பக்தி நஞ்சுகளையும் கொட்டியிருப்பதே யார் குடலை உருவ? யார் அறிவை முடக்க? யார் பொருளைச் சுரண்ட? யார் வயிற்றில் அறுத்து வைக்க?

எந்தக் காரணத்தை முன்னிட்டும் பக்தியின் பிடியிலிருந்து நம் மக்கள் விடுதலை பெற்றுவிடக் கூடாது; அப்படிப் பெற்றுவிட்டால், அது பார்ப்பன சமூத்தில் விழுந்த இழவாக முடியுமே!

அதற்காகத்தான் இவ்வளவு குப்பைகளும், ஒட்டடைகளும். இதைத்தான் பக்தி முற்றிய தமிழன் காசு கொடுத்து வாங்கி கண்களில் ஒத்திக் கொள்கிறான்.

இதனைப் படித்தால் கடுகு மூக்கு அளவுக்காவது கருத்து வளருமா? எள் மூன்று முனைக்காவது எழுச்சி ஏற்படுமா? ஏற்றம்தான் பிறந்திடுமா? காதொடிந்த ஊசி அளவுக்காவது வெளிச்சம் ஏற்படுமா? முனை மழுங்கிய குண்டூசி அளவுக்காவது முயற்சியும், முனைப்பும்தான் முகிழ்த்திடுமா?

இந்த முட்டாள்தனமான பார்ப்பன உலகத்தில் இருந்து நோயிலிருந்து விடுபட இதோ சில மூலிகைக் கொழுந்துகள். மூளையைப் பிடித்து ஆட்டும் மொத்த நோய்களுக்கும் கைகண்ட மாமருந்து:

"எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப்பட்டாகி விட்டன. அவை ஒவ்வொன்றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாகி விட்டது. குரங்குப் பிடியாய் இவற்றைப் பிடித்துக் கொண்டு சமய ஞானம் பேசுகின்றவர்களிடம் காலத்தைக் கழிப்பது வீண் வேலையாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

மண்ணையும், சாம்பலையும் குழைத்துப் பூசுவதே சமயமாகி விட்டது.

பார்ப்பானுக்கும், பாழாண்டிக்கும் அழுவதே தர்மமாகிவிட்டது.

கூடா ஒழுக்கங்களும், அண்டப் புரட்டுகளும், ஆகாயப் புரட்டுகளும் நிறைந்த புராணக் குப்பைகளைத் திருப்பித் திருப்பிப் படிப்பதே காலட்சேபமாகிவிட்டது.

ஒழுக்கத்தினிடத்திலும், சத்தியத்தினிடத்திலும் மக்களுக்குள்ள கவலையே அடியோடு போய்விட்டது.

பணக்காரன் ஏழையை அடிமைப்படுத்துவதே முறையாய் போய்விட்டது.

வலுவுள்ளவன் வலுவில்லாதவனை இம்சிப்பதே ஆட்சியாகி விட்டது.

தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவதே வழக்கமாகிவிட்டது.

அயோக்கியர்கள் யோக்கியர்களை உபத்திரவப் படுத்துவதே நீதியாகிவிட்டது. வலிவுடையவனாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமே இல்லாமல் போய்விட்டது.

இவற்றை சீர்திருத்த ஒரு காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? இதனால் கலகம் உண்டாகுமானால் அதற்காகக் பின் வாங்க வேண்டுமா? திருந்தினால் திருந்தட்டும்; இல்லாவிட்டால் ஒழியட்டும் என்கிற இரண்டிலொன்றான கொள்கையிலே இறங்கியிருக்கிறோம். மானம் கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டுவதல்ல."

--------------------தந்தை பெரியார் (குடிஅரசு 4-5-1930)

பரம் - ஆத்மார்த்தம், விதி அல்லது கடவுள் செயல் என்று சொல்லப்படும் இம்மூன்றையும் அழிக்கிற தைரியமும், சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள்.

-------------------------- தந்தை பெரியார் (குடிஅரசு 4-5-1930)

கையாலாகதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்ட-வன் செயல்; இவற்றை உணர முடியாதவனுக்கு தலைவிதி

தந்தை பெரியார் (குடிஅரசு 13-12-1931)

சிந்திப்பீர் தமிழர்களே!

---------------------17-10-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: