Search This Blog

15.10.09

பெண்கள் இட ஒதுக்கீடும்-திராவிடர் கழகமும்


பெண்கள் இட ஒதுக்கீடு

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்ற பிரச்சினை கடந்த 1996 ஆம் ஆண்டுமுதல் நிலுவையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும்போதும் இந்தத் தொடரில் கண்டிப்பாக அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பில் உறுதிமொழிகள் அளிக்கப்படுவதுண்டு. அவை வெற்றுச் சொற்களாக காற்றில் கரைந்தோடிச் சென்றனவே தவிர நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பல பிரதமர்களை விழுங்கியதுதான் மிச்சம். இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் (4.6.2009) உரையாற்றிய குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் அவர்கள் நூறு நாள்களுக்குள் இதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், 130 நாள்களுக்குமேல் ஆகிவிட்டன. அந்தச் சட்டம் வருவதற்கான அரும்புகூட முளையிடவில்லை.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பெண்களின் பிரதிநிதிகள் கடந்த மாதம் குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு ஒன்றினைக் கொடுத்தனர்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தொடரில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தினை எட்ட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த நிலையில் நூறு நாள்களுக்குள் மகளிர் சட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பு இல்லை என்றும் குடியரசுத் தலைவர் அந்த மகளிர் குழுவினரிடம் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரை என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், உண்மையில் மத்திய அரசு தரப்பின் கருத்தைத்தான் குடியரசுத் தலைவர் பிரதிபலிக்கிறார். அவருடைய தனிப்பட்ட கருத்தாக, உறுதிமொழியாக இதனைக் கருதமுடியாது.

அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து என்பதுகூட நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்றே! நாடாளுமன்றம் நிறைவேற்றும் ஒவ்வொரு சட்டமும் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த முடிவை ஏற்றுத்தான் நிறைவேற்றப்படுகிறதா? எத்தனையோ சட்டங்கள் வாக்களிப்புக்குப்பின் நிறைவேற்றப்பட்டதில்லையா? அப்படியிருக்கும்போது இந்தச் சட்டத்துக்கு மட்டும் ஏன் இந்த அணுகுமுறை?

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு கொண்ட பெண்களுக்கு, 33 விழுக்காடு என்பதே அநீதியாகும். இதுவரை சராசரியாக 10 விழுக்காட்டைத் தாண்டியதில்லை.

திராவிடர் கழகம் தொடக்க முதலே இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டு வருகிறது. தஞ்சையில் கடந்த 10 ஆம் தேதி கூடிய பொதுக்குழுவில்கூட இதற்கான தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியார் கூறியதுபோல ஆண்களால் பெண்களுக்கு உரிமை கிடைப்பது என்பது இயற்கைக்கு விரோதமாகவே உள்ளது. பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? என்ற வினாவை எழுப்பியவர் தந்தை பெரியார்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினையில் பெண்கள் ஆண்களைத் துணைக்கழைத்துக் கொள்ளாமல், நம்பாமல், தன் கையே தனக்கு உதவி என்ற முடிவில் வீதிக்கு வந்து போராடவேண்டும் என்று கூறுகிறது.

இந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்காத ஆட்சிக்கு, கட்சிக்கு எங்கள் வாக்குகள் கிடையாது என்று பெண்களே முன்வந்து பிரகடனப்படுத்தவேண்டும். அப்படியொரு அழுத்தத்தைக் கொடுத்தால்தான், ஆண்கள் கீழேயிறங்கி வருவார்கள்.

பெண்களுக்கு 33 விழுக்காடு இடம் கொடுத்துவிட்டால், தங்கள் தொகுதி என்னாகுமோ? என்கிற சுயநல, தன்மூப்பு எண்ணத்தில் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர் ஆண்கள்.

இந்தச் சட்டத்தில் இன்னொரு மிக முக்கியமான அம்சம் உள் ஒதுக்கீடு அவசியம் தேவை என்ப தாகும். தொடக்க முதற்கொண்டு திராவிடர் கழகம் மட்டுமே இதில் தொடர்ச்சியாக, ஒரே கருத்துடன் உறுதியாக இருந்து வருகிறது.

இதனைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்; முதலில் பெண்களுக்கான 33 விழுக்காடு சட்டம் நிறைவேற்றப்படட்டும் என்ற வார்த்தையில் மதி மயங்கிவிட்டால் அவ்வளவுதான் உயர்ஜாதி ஆதிக்கப் பெண்கள் மூன்றில் ஒரு பகுதியைப் பிடித்துவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையை அணுகும் முறைக்கும், சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் பார்க்கும் பார்வைக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.

முதலில் தமிழ்நாட்டுப் பெண்கள் இதனைப் புரிந்துகொண்டு இதனடிப்படையில் களம் இறங்கிப் போராட முன்வரட்டும்; திராவிடர் கழகம் வழிகாட்டும்!


---------------விடுதலை" தலையங்கம் 15-10-2009

0 comments: