
தோழர் பரதனின் அவசரம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் ஏ.பி. பரதன் அவர்கள் இந்தியாவில் உள்ள மூத்த அரசியல்வாதிகளுள் குறிப்பிடத்தக்கவர். நீண்ட பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர். அனுபவம் மிக்கவர். அவர் எதைச் சொன்னாலும் அதில் ஆழ்ந்த பொருளிருக்கும். அனுபவத்தின் வலிமையும் இருக்கும் என்றும் நம்பலாம்.
அத்தகைய ஒரு மூத்த அரசியல்வாதி தமிழ்நாடு _ கேரளா தொடர்புடைய மிக நுண்ணிய உணர்வு கலந்த பிரச்சினையில் தெரிவித்துள்ள கருத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
பல்லாயிரம் விவசாயத் தோழர்களின் 2 லட்சம் ஏக்கர் விவசாயப் பிரச்சினையில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் அவசரப்பட்டு, ஆராயாமல் கருத்துத் தெரிவித்திருக்கக்கூடாது.
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது குறித்து சர்வே எடுக்க கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரு மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இரு மாநில தலைமையும்அணை கட்டும் விஷயத்தில் தமிழக அரசு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரு மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இரு மாநில தலைமையும் அணை கட்டும் விஷயம் குறித்து பேச்சு நடத்தி, பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்.
தற்போதுள்ள அணை 113 ஆண்டுகள் பழைமையானது. எனவேதான் அதன் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரள அரசு கவலையடைந்துள்ளது. அந்த அணையை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
அப்பகுதியில் புதிய அணை கட்டும் விஷயத்தில் தமிழக அரசு, ஏன் பிரச்சினையைக் கிளப்பவேண்டும்? என்று திருவனந்தபுரத்தில் கடந்த வெள்ளியன்று (9.10.2009) செய்தியாளர்கள் மத்தியில் தோழர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்.
இதுபற்றி தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மிகவும் நாசுக்காக தோழர் பரதனின் கருத்துக்கு தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சியினரே பதில் கூறுவார்கள் என்று கூறி ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அவ்வாறு எழுதியதற்குத் தக்க காரணமும், ஆதாரமும் இருக்கின்றன.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் தோழர் டாக்டர் வே. துரைமாணிக்கம் அவர்கள், முல்லை பெரியாறு பிரச்சினை தீருவது எப்போது? என்ற தலைப்பில் ஜனசக்தி நாளேட்டில் (21.8.2009) விரிவான கட்டுரை ஒன்றினைத் தீட்டியுள்ளார்.
அந்தக் கட்டுரையில் தோழர் பரதன் அவர்களின் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் தக்க புள்ளி விவரங்களையும், தகவல்களையும் திரட்டித் தந்துள்ளார். அதில் ஒரு பகுதி இதோ:
1979 ஆம் ஆண்டு கேரள பத்திரிகையாளர் ஒருவர் அணையின் பலம் குறைவாக உள்ளதால் நீர் அதிக-மாகக் கசிகிறது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார். கேரள அரசு பிரச்சினையை எழுப்பியது. விவரமறிந்த தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் புகார் தெரிவித்தது. மத்திய அரசு கேரள அரசை விவரம் கேட்டது. அணை பலகீனமாக உள்ளது என்றும், அணையைப் பலப்படுத்திய பின்பு 152 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும், அதுவரை 136 அடி உயரத்திலேயே தண்ணீர் மட்டம் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்கள். ஒரு வல்லுநர் குழுவை அனுப்பி, ஆய்வு செய்யும்படி கோரியது. ஆய்வுக் குழுவினர் அணையைப் பார்வையிட்டு, அணை பலமாக உள்ளது என்றும், நீர்க்கசிவு அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக இல்லையென்றும், கேரளம் சந்தேகப்படுவதால், அணையில் சில வேலைகளைச் செய்யவேண்டும் என்றும் ஆலோசனை கூறியது. அந்த அடிப்படையில் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது.
சுமார் 30 கோடி ரூபாய் செலவில் வலுவான கம்பிகளைப் பதித்து, பழைய அணையின் மேற்கு பக்கத்தில் மேலும் 33 அடி அகலத்திற்குமேல் கான்கிரீட் அமைத்து, பழைய அணையோடு சேர்த்து 152 அடி உயரத்திற்குப் பலப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு செய்து முடித்துள்ளது. இந்தப் பலப்படுத்தும் பணியைச் செய்யவிடாமல் பல இடையூறுகளைக் கேரள அரசு செய்தது என்பது வருந்தத்தக்கதாகும். பலப்படுத்தும் பணி நடந்த பின்பும்கூட 152 அடி தண்ணீரைத் தேக்க கேரள அரசு சம்மதிக்கவில்லை. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. பேபி அணை என்ற சிறு பகுதி வேலை முடிகின்றவரை 142 அடி தண்ணீரைத் தேக்க கேரளம் அனுமதிக்கவேண்டுமென்று 2006 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதையும் கேரளம் அமல்படுத்தவில்லை.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவரின் குற்றச்சாற்றுக்கு அக்கட்சியின் தமிழ் மாநில விவசாய சங்கப் பொதுச்செயலாளர் மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் பதில் கூறிவிட்டார் அல்லவா!
தேவையில்லாமல் வீண் சர்ச்சையைச் செய்வது தமிழ்நாடு அரசா? கேரள அரசா? அணை பலகீனமாகிவிட்டது என்று புரளியைக் கிளப்பியது யார் என்பதையும்கூட தோழர் துரைமாணிக்கம் தெரிவித்துவிட்டார்.
தேசியக் கட்சிகளின் தலைவர்கள், ஒரு கருத்தைக் கூறும்போது குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட மாநிலக் கட்சியிடமிருந்து சரியானத் தகவலைத் தெரிந்துகொண்ட பின் கருத்துத் தெரிவிப்பது நல்லது.
-------------------"விடுதலை" தலையங்கம் 14-10-2009
1 comments:
Good analysis
Post a Comment