Search This Blog

24.10.09

பணம் சேர்ப்பது முக்கியமல்ல பண்புகளைச் சேருங்கள்


நம்முடைய நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதுமே பணம் சேர்ந்துவிட்டால் எல்லாம் வந்து விடும் என்று நினைத்து, பலர் பணத்தைப் பல வழிகளிலும் சேர்ப்பதையே தம் வாழ்நாள் இலட்சியமாகக் கருதி, அதற்கு எம்முறையிலாவது முயல வேண்டுமென்றே வாழ்கிறார்கள்!

செல்வம் - வரும் வழி எப்படியிருந்தால் என்ன? பணம் சேர்ந்தால் போதும் என்ற நினைப்பில் உழன்று கொண்டு பணம் சேர்க்கும் திடீர் பணக்காரர்களுக்குக் கிடைக்கும் மரியாதை(?) பெரிதும் முகஸ்துதியாளர்கள் தரும் மரியாதையே; உண்மையான நிலைத்த புகழோ, மரியாதையோ அதனால் ஏற்படாது.

குணத்தால் உயர்ந்தால்தான் அது நிரந்தரம்; பணத்தால் உயர்ந்தால் அது தற்காலிகம் மட்டுமல்ல, அற்பனுக்குக் கிடைத்த பெருமையே!

பணத்தை தேவைக்கு மேல் சேர்த்துவிட்டு, என்ன செய்வது என்று தெரியாதவர்களுக்காகவே பெரிய துணிக்கடைகள் இருக்கின்றன போலும்!

தங்கத்தால் ஆன ஒரு பட்டுப்புடவை 40 லட்ச ரூபாயாம்! இவர்களைப் பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை! இந்தியா ஏழை நாடாம்!

பெண்களின் நகை மோகமும், பட்டுப்புடவை வியாதியும்தான் பெரிதும் அவர்களை அடிமையாக்கிடும் கருவிகள் என்றார் சரியாக தந்தை பெரியார்.

மனித ஜீவன்களுக்கு சுதந்திர, சமத்துவ வாழ்வு முக்கியம்; பதவி, பணத்திமிர் ஆடம்பரங்களைக் காட்டுவது அல்ல.

சில ஆண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? கழுத்தில் போட்டு வரும் தங்க வடக்கயிறு போன்ற சங்கிலிகளும், இடித்தால் சுவரே விழும்; மோதிரங்களும் அதிலும் விரல்கள் பத்திலும் அணியும் அழகு ஒரு அழகா? அருவருக்கத்தக்கச் செயலா_ நமக்குப் புரியவில்லை.

இப்படி பணம் சேர்த்துவிட்டு, தலைகால் தெரியாமல்_- வள்ளல் பெயரெடுக்க சிலர், புகழைத் தேடி வேட்டையாடுவோர் உண்டு. அந்தப் புகழ் போதையே அவர்களைக் கொன்று விடும் என்பது உறுதி. ஏனெனில், அவர்கள் நுனிக்கொம்பு ஏறினால் அது உயிர்க்கிறுதியா விடும் என்றாரே வள்ளுவர். உச்சாணிக் கிளைக்குப் போய்விட்டேன்; அதற்கு மேலும் ஏறப் போகிறேன் என்றால் கிளை முறிந்து உயரத்திலிருந்து பிழைக்க முடியாதவர்கள் ஆகி விடுவார்கள் என்கிறார் வள்ளுவர்!

மனிதர்களுக்குப் பண்புதான் முக்கியமே தவிர, பணத்தால் வரும் பெருமை முக்கியமாகக் கூடாது.

வலது கையில் தான் கொடுத்தது _ இடது கைக்குக்கூடத் தெரியக் கூடாது என்று நடந்து கொள்பவர்களே உண்மையான வள்ளல்கள்!

அவர்கள் விளம்பரத்தை விரும்பாத விஞ்சிய புகழுக்குரியவர்கள்!

ஆனால், தான் காலணா கொடுத்தவுடன், அதற்கு நாலணா விளம்பரம் தேவை என்று நினைப்பவர்கள் வள்ளல்கள் அல்ல; மன நோயாளிகள்!

எவ்வளவுதான் அளவுக்கு அதிகமாக பணம் ஒருவரிடத்தில் இருந்தாலும், அவரிடம் பண்பு இல்லை என்றால் அப்பெருஞ்செல்வமானது - நல்ல பசும்பால், அது வைக்கப்படும் பாத்திரத்தின் குற்றத்தால் கெட்டுவிடுவதுபோல் சீரழிந்து போய்விடும் என்கிறார் வள்ளுவர்; மிக அழகான உவமை அல்லவா?

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று

(குறள்: 1000)

ஒருவர் பணம் சேர்ப்பதில் காட்டும் அக்கறையைவிட, பண்புடையவராக இருக்க வேண்டும் என்று கருதுவதே முக்கியம்.

-------------------13-10-2009 "விடுதலை" யில் கி.வீரமணி அவர்கள் எழுதிய "வாழ்வியல் சிந்தனைகள்" கட்டுரை

0 comments: