Search This Blog

16.10.09

ஜாதி பேதம் இல்லாமல் வழிபாடு செய்ய அனைவருக்கும் உரிமை உண்டா?


சிவனை வழிபட குறுக்கே நந்திகளா?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் செட்டிப்புலம் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள் வழிபாடு செய்வதற்கு மற்ற ஜாதிக்காரர்கள் எதிர்ப்பும், தடையும் செய்வதால் அங்கு பிரச்சினைகள் வெடித்துக் கிளம்பியுள்ளன. காவல்துறையினரும், அவர்களின் வாகனமும் அவர்களால் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் நேரடியாகப் பேசியும், உயர்ஜாதியினர் என்று தங்களைக் கருதிக்கொண்டிருக்கிறவர்கள், அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

2009 ஆம் ஆண்டிலும், அதுவும் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்த மனப்பான்மை ஒரு சிலரிடம் இருப்பது மிகவும் வெட்கப்படத்தக்கதாகும்.

தாழ்த்தப்பட்டவர்களானாலும், பிற்படுத்தப்பட்டவர்களானாலும், பார்ப்பனர் அல்லாத முன்னேறிய ஜாதியினர் ஆனாலும், இந்து மத சாத்திரங்களின்படியும், ஏன், இந்திய அரசமைப்புச் சட்டப்படியும்கூட சூத்திரர்கள்தான். இந்த இழிவை ஒழித்துக்கட்ட முன்வராதவர்கள் தார்மீகக் கோபம் கொள்ளாதவர்கள், மட்டத்தில் உசத்தி என்கிற முறையில் சண்டை போட வீதிக்கு வருகிறார்கள் என்றால், இதன் பொருள் என்ன? இன்னும் சிந்திக்கும் தகுதியை அவர்கள் பெறவில்லை என்றுதான் பொருள்படும்.

தன்னைக் கும்பிட வரும் பக்தர்களுக்கிடையே ஏற்படும் இந்தச் சண்டை சச்சரவுகளைப் போக்கக்கூட வக்கற்ற, சக்தியற்ற நிலையில்தான் அந்தக் கோயில் சிவலிங்கம் என்ற குத்துக்கல் அடித்து வைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட பிறகாவது தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, கொஞ்சம் சிந்திக்கவேண்டாமா?

கோயிலும், பக்தியும், சடங்குகளும் இவற்றைக் கட்டிக் காக்கும் மதமும், ஜாதிகளை உண்டாக்கி அவர்களிடையே கலகத்தை மூட்டுவதற்காகத்தான் என்ற கண்ணோட்டத்திலும் சிந்திக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

கடவுள் ஒருவர்தான் என்றும், அவர்தான் மக்களை எல்லாம் படைத்தார் என்றும், கடவுளே மக்களுக்குத் தந்தை என்றும் இதோபதேசம் செய்யும் பாகவதர்களும், உபந்நியாசிகளும், சங்கராச்சாரிகளும், ஜீயர்களும், ஆன்மிகவாதிகளும், கல்கி, தினமணி, ஆனந்தவிகடன், காமகோடி, துக்ளக் வகையறாக்களும் கோயிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தை வழிபடும் பிரச்சினையில் மோதல் ஏற்பட்டு இருக்கிறதே. அதிகாரிகளால் கோயில் பூட்டப்பட்டுள்ளதே, இதற்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்?

இன்னொரு கேள்வி மிக முக்கியமானதாகும். நாகை மாவட்டத்தில், வேதாரண்ய வட்டாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன. அவற்றின் கொள்கைகள் என்ன? ஜாதி பேதம் இல்லாமல் வழிபாடு செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு என்று நினைப்பவர்கள்தானே. அரசியலை மறந்துவிட்டு அவர்கள் வகிக்கும் கட்சிகளின் கொள்கை அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒரு சுமூகமான முடிவினை எட்டுவதற்கு முயற்சிக்கக் கூடாதா?

வெறும் சட்டத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு அதிகாரத் தோரணையில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது கடைசிக் கட்டமாகத்தானிருக்க முடியும்.

அதற்கு முன்னதாக அனைத்துக் கட்சியினர் ஒன்றுகூடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்; இந்தப் பிரச்சினையில் ஒத்துழைப்புக் கொடுக்க திராவிடர் கழகம் தயாராகவே இருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் இதற்கான முயற்சியில் ஈடுபடலாமே!

கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் முதலிய ஊர்களில் பத்தாண்டுகளுக்குமேல் ஊராட்சிமன்ற தேர்தல் நடத்த முடியாதிருந்த நிலையில், அதனை மாற்றிக் காட்டிய சாதனை மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான ஆட்சிக்கு உண்டே! முதலமைச்சர் தலையிட்டால்தான் தீர்வு கிடைக்கும் என்றால், கலைஞர் அவர்கள் கண்டிப்பாகக் கவனம் செலுத்துவாரென்று நம்புகிறோம்!


-----------------------"விடுதலை" தலையங்கம் 16-10-2009

3 comments:

சரவணன். ச said...

அந்த புகைபடத்தில் உள்ள கோயில் எங்கு உள்ளது.

கோவி.கண்ணன் said...

:)

நந்தன் வழிபட தடையாக இருந்த பார்பன நந்திகளை விடுத்து கல் நந்தியைத்தான் விலக்கி வழிபட சிவன் வழிவிட்டாராம், அவரால் கூட நந்திகளை விலக்கமுடியவிலை என்று ஒரு நண்பர் மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டு இருந்தார்.

Unknown said...

சிபிஎம் கட்சி இதை முன்னெடுத்துச் சென்று, கோயிலில் நுழைய வைத்தது.அந்த வட்டாரத்தில் தி.க இல்லையா இல்லை அந்த இடம் என்ன சந்திரனிலா இருக்கிறது. தலையங்கம் எழுதும் பேர்வழி(கள்) போராட்டத்திற்கு தலைமை ஏற்று தீர்வு கண்டிருக்கலாமே. இரட்டை குவளை முறையை எதிர்த்து பெரியார் தி.க களமிறங்கியது.
சிபிஎம் உத்தபுரம் உட்பட பல
இடங்களில் தீண்டாமை கொடுமையை எதிர்த்து களத்தில்
நிற்கிறது. மெமோரியல் ஹாலுடன் தங்கள் எதிர்ப்புகளை முடித்துக் கொள்ளும் தி.க இன்றைக்கு எத்தனை இடங்களில் தலித்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கிறது.அன்று அப்படி செய்தோம் என்ற பல்லவியைப் பாட வேண்டாம்.
இன்றைக்கு என்ன செய்கிறீர்கள் என்பதுதான் கேள்வி.அரசியல் சட்டத்தில் அப்படி இருக்கிறது என்றால் திமுக ஆதரவுடன் ஆட்சி மத்தியில் நடக்கும் போது அரசியல் சட்டத்தை மாற்ற என்னென்ன முயற்சிகள் செய்யப்படுகின்றன்/
செய்யப்பட்டன.